Tuesday, December 27, 2016



அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்! ராம மோகன ராவ் ஆவேசம்


வருமான வரித்துறை சோதனை குறித்து தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் விளக்கம் அளித்து வருகிறார்.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகன் விவேக், உறவினர்கள் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் மதிப்பிலான ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராம மோகன ராவை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் ராம மோகன ராவ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, நான் மனம் திறந்து பேச விரும்புகிறேன். சில முக்கிய தகவல்களை சொல்ல விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருமான வரித்துறை சோதனை மூலம் தலைமைச் செயலகத்தை காப்பாற்ற அரசு தவறிவிட்டது. இந்த சோதனை அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல். வருமான வரித்துறையினர் சோதனையின் போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன். தலைமைச் செயலாளரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது அரசியல் சட்ட விரோதம்.

எனது மகன் விவேக் தனியாகத்தான் வசித்து வருகிறார். எனது மகனுக்கும், தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறையினர் சர்ச் வாரன்ட்டில் எனது பெயர் இல்லை. என் மகனுக்கான வாரன்ட்டை வைத்து என் வீட்டுக்கு வந்தது ஏன்? என் மகனுக்கான வாரன்ட்டை வைத்து தலைமைச் செயலகம் சென்றது ஏன்? எந்த ஆவணத்தையும் வருமான வரித்துறையினர் எடுத்துச் செல்லவில்லை. மகள், மனைவிக்கு சொந்தமான 45 சவரன் நகைகளே இருந்தன. ரூ.1,12,320 லட்சம் மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். தேடுதலுக்கான வாரன்ட்டில் எனது மகன் பெயர் மட்டுமே இருந்தது. வெள்ளியாலான சாமி சிலைகளை மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். எனது மகனுக்கான வாரன்ட்டை வைத்து தலைமைச் செயலகம் சென்றது ஏன், ஜெயலலிதா இருந்தால் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் நுழைய முடியுமா.

ஜெயலலிதாவிடம் பலமுறை பயிற்சி பெற்றிருக்கிறேன். துணை ராணுப்படையினருக்கு எனது அறையில் என்ன வேலை. தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர். மாநில அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எந்த மரியாதையும் இல்லை.

எனது உயிருக்கு ஆபத்து

துப்பாக்கி முனையில் நுழைந்து என் வீட்டில் சோதனை செய்தனர். என்னை சிலர் குறிவைத்துள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் தலைமைச் செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் நிர்வாக ரீதியாக எந்த தவறும் நடக்கவில்லை. ஜெயலலிதா வழிநடத்துதலின் பேரில் 7 மாதமும் செயல்பட்டேன். நான்தான் இன்னும் தலைமைச் செயலாளராக உள்ளேன். தமிழக அரசு பணியிடை மாற்றம் உத்தரவை தர தயங்குகிறது. 32 ஆண்டு அனுபவம் உள்ள அரசு அதிகாரியை இப்படித்தான் நடத்துவதா. மக்களுக்கு எல்லாம் தெரியும். நான் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

படம்: ஆ.முத்துக்குமார்

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...