Sunday, December 25, 2016

ராவ் மகனின் ரூ. 1700 கோடி துபாய் ஹோட்டலில் முக்கிய தமிழக அரசியல் தலைவருக்குத் தொடர்பு?

Oneindia Tamil

சென்னை: வருமான வரி சோதனைக்குள்ளாகி பதவியை இழந்துள்ள ராமமோகன ராவின் மகன் விவேக்குக்கு துபாயில் ரூ. 1700 கோடி மதிப்பிலான ஹோட்டல் உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிக்கு முக்கியத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதாம்.

இதுதவிர சேகர் ரெட்டி, கரூர் அன்புநாதன், பரஸ்மால் லோதா ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபடுகின்றன. இதுதொடர்பான விசாரணையை தற்போது அமலாக்கப் பிரிவு முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்திற்கு மிகப் பெரிய அசிங்கமாக, கேவலமாக வந்து சேர்ந்துள்ளார் ராமமோகன ராவ். அவரும் அவரது கூட்டாளிகள் சேகர் ரெட்டி உள்ளிட்டோரும் அடித்த பணக் கொள்ளை அனைவரையும் அதிர வைத்துள்ளது. சேகர் ரெட்டியை தூக்கிய கையோடு ராமமோகன ராவின் வீடுகள், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, அவரது மகன் விவேக்கின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள், வழக்கறிஞர் அமலநாதன் என யாரையும் விடாமல் சோதனையிட்டது வருமான வரித்துறை.



தற்போது சேகர் ரெட்டி கைதாகி சிறைக்குப் போய் விட்டார். இந்த நிலையில் தற்போது ராமமோகன ராவ் மீதான பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளது வருமான வரித்துறை. ராவ் மற்றும் அவரது மகன் விவேக், வழக்கறிஞர் அமலநாதன் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.

சோதனைகளில் மொத்தம் 900 கிலோ எடை கொண்ட ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களை 80 பேர் கொண்ட குழு தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது. இன்று வரை ஆய்வு தொடர்ந்தது. இன்றுடன் ஆய்வு முடிவடைந்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.





குறிப்பாக விவேக்குக்கு ரூ. 1700 கோடி மதிப்பில் துபாயில் மிகப் பெரிய ஹோட்டல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஹோட்டல் தொழிலில் ராவ் மகனுக்கு மட்டும் தொடர்பு உள்ளதா அல்லது அரசியல் தலைவர்கள், பிற அதிகாரிகள், வேறு பலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரணையை அமலாக்கப் பிரிவு தொடங்கியுள்ளதாம்.

மேலும் இந்த ஹோட்டலில் தமிழக அரசியல் புள்ளி ஒருவருக்கு இதில் முக்கியத் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளதாம். மேலும் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சிக்கிய கரூர் அன்புநாதனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல சேகர் ரெட்டி, அவருக்கு பணத்தை மாற்றித் தர உதவிய கொல்கத்தாவைச் சேர்ந்த பரஸ்மால் லோதா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.





அரசியல் புள்ளி, ராமமோகன ராவ், அவரது மகன், சேகர் ரெட்டி, அன்புநாதன் உள்ளிட்டோர் இந்த ஹோட்டலில் பங்குதாரர்களாக உள்ளனரா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம். இவர்களின் நெட்வொர்க்கை கண்டுபிடிக்கவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

விரைவில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து வழக்குப் பதிவு செய்து ராமமோகன ராவ், விவேக் உள்ளிட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...