Saturday, December 24, 2016


செல்லாக்காசு : 50 நாட்களை நெருங்குகிறோம்... நிலைமை சரியானதா? #Demonetisation

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடை கொண்டு வரப்பட்டு இன்றோடு (23.12 2016) 45 நாட்கள் ஆகிறது. அப்பாவி மக்கள் வங்கிகள் மற்றும் ஏ. டி. எம்-களில் வரிசையில் நிற்கும் நிலை மாறவில்லை. முதலில் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்றார்கள். ஒரு வாரம் என்றார்கள், கடைசியாக 50 நாட்களில் சரியாகி விடும் என்று கூறினார்கள். தற்போது 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.இன்னும் நிலைமை சரியான பாடில்லை. பணம் இருக்கும் ஏ.டி.எம்-களைத் தேடி மக்கள் அலைகின்றனர். அதே போன்று வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை கிரடிட் ஆகாமல் பவுன்ஸ் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 500,1000 ரூபாய் மட்டும் செல்லாக்காசு ஆக மாறவில்லை. சாதாரண மனிதர்களின் வாழ்கையும் தான். இது குறித்து வங்கியிலும் ஏ.டி.எம் - களிலும் நின்றிருந்த மக்களிடம் பேசினோம்.

செக் பவுன்ஞ்ச் அவமானம் ...

எழும்பூரில் இந்தியன் வங்கி வாயிலில் காத்திருந்த ரேணுகாவிடம் பேசினோம். "கடந்த மாதம் 23-ம் தேதி காசோலை டெபாசிட் செய்தேன். இன்னும் என் கணக்கில் கிரெடிட் ஆகவில்லை. நான் மற்றவர்களுக்கு கொடுத்த செக்-கள் பவுன்ஞ்ச் ஆகிவிட்டன.கடன் கொடுக்க வேண்டியவர்கள் முன்பு கூனிக் குறுகி நிற்கின்றேன். மிக வேதனையாக உள்ளது. ஆன்லைன் ஆன்லைன் என்கிறார்கள் இதனால் பாதிக்கப்படப் போவது முதியவர்கள்தான். அவர்களைப் பற்றி யாரும் யோசிக்கவில்லையா?" என்றார்.



ஏ.டி.எம் வாசலில் நின்றிருந்த பாலகிருஷ்ணனிடம் பேசினோம்."பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி எடுத்துக் கொள்வார்கள். ஐந்தும், பத்துமாக குருவி சேர்ப்பது போன்று சேர்த்து வைத்த பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்துச் செலவு செய்யும் நாங்கள், எப்படிப் பணம் எடுக்க முடியும். கார்டில் தேய்த்து செலவு செய்யுங்கள் என்கிறார்கள். கார்டில் பணம் அதிகமாக இருந்தால்தானே தேய்க்க முடியும் பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும்" என்றார்.

என் பணத்திற்கு நானே பிச்சைக்காரன்

"என்னுடைய பணத்துக்கு என்னையே பிச்சைக்காரனாக மாற்றியுள்ளார்கள். அதுதான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. செய்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு நாள் கணக்கில் வங்கி வாசலில் காத்திருக்கிறேன். அவமானமாக உள்ளது" என்கிறார் அப்துல்காதர்.

சிங்கப்பூரில் இருந்து வந்து தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் காத்திருக்கும் விநோத்திடம் பேசினோம். "ஆயிரம் ரூபாய் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாகத் திண்டாடுகிறேன். இதுவரை பணம் எடுக்க முடியவில்லை. இந்த நிமிடம் வரை பணம் எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்"என்று கலங்கினார்.

பணம் எடுக்க வந்த செல்வியிடம் பேசினோம்."தெருத் தெருவாக காலையில் இருந்து அலைந்து கொண்டிருக்கிறேன். ஒரு ஏ.டி.எம் கூட திறக்கப்படவில்லை. திறந்துள்ள ஏ.டி .எம்-கள் வேலை செய்யவில்லை. எனது அன்றாடப் பணிகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது. வேலை பார்ப்பேனா, குடும்பத்தை பார்ப்பேனா, பணத்துக்காக அலைவேனா சொல்லுங்க" என்றார்.

அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் !

"பாரிமுனையில் உள்ள நகைக்கடைகளில் 500 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் வங்கிகளில் கிடைக்கவில்லை. மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். ஆன்லைன், ஆன்லைன் என்று சொல்கிறார்கள். அண்ணாச்சி கடையில் சரக்கு வாங்கும் எனக்கு எதுக்கு ஆன்லைன் சொல்லுங்க. முதலில் நாட்டு மக்களை வளரச் செய்துவிட்டு வங்கி கார்டுகளை வழங்குங்கள்" என்றார் வெங்கட்.

ஆன் லைன் ஆன் லைன் என்று சொல்கிறார்கள் படித்தவர்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். படிக்காத விவசாயிகளும், வேலைக்கார்களும் எப்படிப் பயன்படுத்த முடியும். அவர்கள் எங்கே போவார்கள் அவர்களுக்கு ஏது ஆன்லைன் வசதி, பாஸ்வேர்டு" என்றார் மல்ஹோத்ரா.



20 சதவிகித ஏ.டி.எம்-களே திறந்துள்ளது !

இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர்.சி பி கிருஷ்ணாவிடம் பேசியபோது,"நாட்டில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏ.டி. எம்-களில் பணம் இல்லை. ஒரு நாளைக்கு நாலாயிரம் கோடி அச்சாகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உள்ள ஏ.டி.எம்-களில் 80 சதவிகித ஏ.டி.எம் - கள் மூடப்பட்டுள்ளன. 20 சதவிகித ஏ.டி.எம்-கள்தான் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.

வரும் 30 -தேதி முதல் நிலைமை சரியாகும் என்று ஆர்.பி.ஐ சொல்லியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா? என்று தெரியவில்லை. ஆனால் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களே பணம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டச்சார்யாவே பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

பணப்பற்றாக்குறை வரும் 30-ம் தேதி முதல் சீராக வாய்ப்பில்லை. இந்தியாவில் பணத்தை அச்சடிக்க 4 அச்சகங்கள் மட்டுமே உள்ளது. இந்த அச்சகங்கள் மூலம் தேவையான 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் ஆகிவிடும்.

மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் 2,000 ரூபாய் நோட்டை ஏன் தருகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கவில்லை. 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நடைமுறையை ஏன் செயல்படுத்தவில்லை என்று நீதிபதிகளும் கேட்கவில்லை. இப்படி இருக்கிற சூழலில் நிலைமை எங்கே சரியாவது? மத்திய அரசு தனது போக்கை எப்படி மாற்றிக் கொள்ளும்" என்றார்.

50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடிவில்லை. 500 மற்றும் 1000 ரூபாய்க்கான தடை அறிவிப்பை திடீரென்று அறிவித்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோடி, அதனை சரிபடுத்தும் நடவடிக்கையை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு !

- கே.புவனேஸ்வரி

ராம மோகன ராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதி


முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் வீடு, தலைமை செயலக அலுவலகம், அவரது மகன் மற்றும் உறவினர்களது வீடு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, December 23, 2016

' ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை!' -கார்டன் கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க. 

vikatan.com

'முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்' என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருகிறது. ' அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படாமல் இருப்பதற்காக கார்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. " ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக்
ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள். சேகர் ரெட்டியின் நட்போடு ஆந்திரா, கர்நாடகாவில் தொடங்கப்பட்ட தொழில்கள், பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன. விரைவில் சி.பி.ஐ கஸ்டடிக்கு ராமமோகன ராவ் செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன" என விவரித்த தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்,

" சேகர் ரெட்டி வளைக்கப்பட்ட தினத்தில் இருந்தே தூக்கமில்லாமல் தவித்து வந்தார் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, டெல்லி வரையில் சென்று சில லாபிக்களை செய்து பார்த்தார். அவரிடம் பேசுவதற்குக்கூட டெல்லியில் உள்ள அவருடைய ஐ.ஏ.எஸ் நண்பர்கள் பயந்தார்கள். ' எங்கள் கைகளில் எதுவும் இல்லை. பிரதமர் நேரடியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்' எனப் பதில் சொல்லி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து இருண்ட முகத்தோடுதான் சென்னை வந்தார். 21-ம் தேதி காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதை அறிந்து, கார்டன் வட்டாரத்தின் 'சூத்ரதாரி' எனச் சொல்லப்படுபவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ' நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, மத்திய இணை அமைச்சர் ஒருவரைத் தொடர்பு கொண்டார் சூத்ரதாரி. போன் எடுத்துப் பேசத் தொடங்கியதுமே, ' ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை கொடுக்க முடியும். இந்த மாதிரியான விவகாரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்' எனக் கோபத்துடன் கூறிவிட்டார்.



அடுத்ததாக, பா.ஜ.கவின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் இன்னொரு சூத்ரதாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கறேள். எல்லாம் அவர் பார்த்துண்டு இருக்கார்' எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார். இறுதி முயற்சியாக, நிதித்துறை அமைச்சகத்தின் சீனியர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' ரெய்டில் கிடைத்த துல்லியமான தகவல்களைக் கொண்டுதான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நீங்கள் தொடர்பில் வந்தது தெரிந்தாலே, மத்தியில் உள்ளவர்கள் கொந்தளித்துவிடுவார்கள்' எனச் சொல்லிவிட்டார். இதன்பிறகு யாரைத் தொடர்பு கொள்வது என நொந்தபடியே விவாதித்துக் கொண்டிருந்தார் சூத்ரதாரி. 'சென்னையில் இருந்தால் தேவையில்லாமல் தன்னையும் வம்புக்கு இழுப்பார்கள்' என்பதால், நீலாங்கரையில் உள்ள 'கரன்' வீட்டில் அமர்ந்து கொண்டே ஆலோசனைகளைத் தொடர்கிறார். ராமமோகன ராவ் கைது செய்யப்பட்டால், அடுத்த குறி கார்டனை நோக்கித்தான் இருக்கும் எனவும் அச்சத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முகாமில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டும் அறிவுரைகளைக் கேட்டு வருகிறார். மிக ரகசியமாகவே அனைத்து நடவடிக்கைகளும் இருப்பதால், பிரதமரை எந்த வகையில் சந்திப்பது என்ற ஆலோசனைதான் தீவிரமாக இருக்கிறது" என்றார் விரிவாக.

" சென்னை துறைமுகத்தின் மூலம் மொலாசஸ் ஏற்றுமதியை ராமமோகன ராவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தி வருகிறார்கள். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாகவே கவனித்து வந்தார் தலைமைச் செயலாளர். கரும்பு விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் கரும்பில் இருந்து மொலாசஸ் பிரித்தெடுக்கப்படுகிறது. இதை வாங்கி லண்டனுக்கு விற்பதில் ராமமோகன ராவுக்குக் கிடைக்கும் லாபம், கணக்கில் அடங்காதது. ' புதிதாக வந்த ஒரு கம்பெனிக்கு துறைமுகத்தில் எப்படி இடம் கொடுக்கலாம்' என கப்பல் துறையில் உள்ள முக்கியமானவரிடம், துறைமுக அதிகாரிகள் சண்டைக்குப் போன சம்பவமும் நடந்தது. 'கரும்பு மொலாசஸ் பின்னணியை வருமான வரித்துறை ஆராய வேண்டும்' என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கார்டனின் அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் ராமமோகன ராவ். அதை வைத்தே, தனக்கென்று பிரமாண்ட வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அவர் மீது கைது நடவடிக்கை பாய்வது என்பது சசிகலா வகையறாக்களை நேரடியாக வளைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறார்கள். அதோடு நான்கு அமைச்சர்களின் பரிவர்த்தனைகளையும் தோண்டி எடுத்துவிட்டார்கள். அமைச்சர்கள் பிளஸ் அதிகாரிகள் என கார்டனை நோக்கியே மத்திய அரசின் கரங்கள் நீள்கின்றன" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

-ஆ.விஜயானந்த்

ரெட்டிக்கு புழல் சிறையில் 'First Class'


முறைகேடாக பணம் பரிவர்த்தனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, அவரது நண்பர் சீனிவாசலு உள்ளிட்ட ஐந்து பேருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி சிறையில் முதல் வகுப்பு கேட்டு சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி உட்பட ஐந்து பேரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புழல் சிறையில் அவர்களுக்கு முதல் வகுப்பு அறையை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. 
சவூதியில் நர்ஸ் வேலை! இவர்களுக்கு முன்னுரிமை
vikatan.com
சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன்  பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு என்ஐசியூ ((NICU), மருத்துவம் & அறுவைசிகிச்சை ((Medical & Surgical)) மற்றும் தீவிரசிகிச்சைப் பிரிவு (ICU) போன்றவற்றில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவத்துடன் 38 வயதிற்குட்பட்ட பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி, 2017 முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. பெண் செவிலியர்கள் 250 படுக்கை வசதி கொண்ட கார்பரேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் தொடர்ச்சியாக இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். சவூதி ப்ரோமெட்ரிக் (Saudi pro-metric) தேர்ச்சி மற்றும் IELTS 7 Band மற்றும் TOFEL தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவம் & அறுவைசிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.41,000 மற்றும் என்ஐசியூ/தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியத்துடன் ரூ.6,300 உணவுப்படியும், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பெண் செவிலியர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் (அறிவிக்கை எண் (Notification No.037) என தவறாமல் குறிப்பிட்டு கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், சவூதி புரோமெட்ரிக், IELTS/TOFEL போன்ற சான்றிதழ்களின் நகல்கள்
மற்றும் ஒரு புகைப்படத்துடன் omcleq0037@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களை அறிய 044-22505886/22502267/22500417 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் எண். B-0821/CHENNAI/ CORPN/1000+/ 5/ 308/84 ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டியுடன் திண்டுக்கல் ரத்தினத்துக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?

:திண்டுக்கல்:

சேகர் ரெட்டியின் கூட்டாளியான திண்டுக்கல் தொழில்அதிபர் ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள முத்துப்பட்டினம். ஆவணத்தான் கோட்டையைச் சேர்ந்த தனது தாய் மாமா தங்கராஜ் ஆதரவில் இருந்து இவர் பூவை மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். பின்னர் சர்வேயராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1980-ம் ஆண்டு திண்டுக்கல்லுக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். அப்போது ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது.

எனவே இந்த தொழிலில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது தொழில் பரந்து விரிந்தது. எனவே கடந்த 2005-ம் ஆண்டு சர்வேயர் வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தனது தொழிலை கவனிக்க தொடங்கினார். இதன் விளைவாக வீடுகள் விற்பனை, செங்கல் சூளை, மினரல் வாட்டர், கிரசர் ஆலை என இவரது தொழில் விரிந்தது.

அதன் பின்னர் மணல் குவாரி தொழிலில் இறங்கினார். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதுமணல் குவாரி தொழிலில் கொடி கட்டி பறந்த காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் படிக்காசு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போதைய அமைச்சர்களுடன் ரத்தினம், படிக்காசு ஆகியோருக்கு நெருக்கம் ஏற்பட்டதால் தென் மாவட்ட மணல் குவாரிகள் இவருக்கு கிடைத்தது.

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு குவாரி தொழில் நட்பு வட்டாரம் மாறியது. கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு மணல் குவாரி தொழிலில் கோலோட்சிய சேகர் ரெட்டி வரை விரிந்தது.

சேகர் ரெட்டி மூலம் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் திண்டுக்கல் ரத்தினத்துக்கு சப்-காண்டிராக்ட் கிடைத்தது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் கிராவல் எனப்படும் செம்மண் எடுக்கும் உரிமமும் ரத்தினத்துக் கிடைத்தது. பின்னர் இவர் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ் நிறுவனத்திலும் இணைந்தார்.

சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது புதிய 2 ஆயிரம் நோட்டுகள் லட்சக்கணக்கில் சிக்கின. இந்த நோட்டுகளை திண்டுக்கல் ரத்தினம் மாற்றிக் கொடுக்க உதவியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ரத்தினம் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் முதன்மை செயல் அலுவலராகவும் உள்ளார். இவை தவிர பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் ரத்தினத்தின் அசுர வளர்ச்சியை கண்டு முக்கிய அரசியல் புள்ளிகளே வியந்து போய் உள்ளனர். பல்வேறு தொழில்களில் கொடி கட்டி பறந்த ரத்தினம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்


சென்னை:
பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி செல்லாது என்று அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வரும் 30-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே தற்போது டெபாசிட் செய்து புதிய நோட்டு பெற முடியும். அதனால் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவும் போட்ட பணத்தை எடுக்கவும் கூட்டம் அலை மோதுகிறது.

ஆனால் வங்கிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறைந்த அளவில் பணம் விநியோகிக்கப்படுவதால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் வங்கிகளில் காத்து நின்றாலும் பணம் கிடைப்பது இல்லை. ரூ.2000, ரூ.4000 என குறைவாக மக்களுக்கு பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

மேலும் வங்கிகளுக்கு தினமும் பணம் சப்ளை செய்யப்படுவதில்லை. குறைந்த அளவு பணத்தை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை.

பணத்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் ரூ.500-க்கு மேல் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. ரூ.5000-க்கு மேல் ஒரு முறை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். மேலும் அந்த பணம் எந்த வகையில் வந்தது, இதுவரை டெபாசிட் செய்யாமல் இருந்தற்கான காரணம் என்ன என்பதை வங்கி அதிகாரிகள் இருவரிடம் உறுதி மொழியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது.

ரிசர்வ் வங்கிகளின் இந்த அதிரடி திடீர் உத்தரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் விளக்கம் கேட்டு பெறப்படும் தகவல் எழுத்து பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த நடை முறையால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று உடனடியாக விலக்கி கொள்ளப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் வரும் 30-ந்தேதிவரை பழைய ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அதற்கு எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை என்பதால் வங்கிகளில் மீண்டும் கூட்டம் அலை மோதியது.

பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதை தவிர்த்தால் 6 வேலை நாட்கள் இருக்கின்றன. பணத்தை மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நெருங்கி விட்டதால் பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பழைய நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மீண்டும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாடக் கூடியவர்கள் பணத் தேவைக்கு வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடப்பதால் வங்கிகளை மட்டுமே மக்கள் நம்பி உள்ளனர்.

இதனால் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில்காத்து நின்று பணம் பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. டிசம்பர் மாத சம்பளம் வரும் 30-ந்தேதி காலையில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன் பின்னர் அரசு ஊழியர்கள் ஒய்வூதியதாரர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 31-ந்தேதி வங்கிகள் செயல்படும் என்பதால் அன்று முதல் பணப் பிரச்சினை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பண பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மாறினால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மளிகை பொருட்கள் மற்றும் குடும்ப தேவைகளை இனி வரும் காலங்களில் ரூபாய் நோட்டுகள் பரிமாற்றத்தால் சமாளிக்க இயலாது என்பதால் தான் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற பண அட்டைகள் பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...