Thursday, February 2, 2017

காமராஜர் பல்கலை முறைகேடுகள் : லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்குமா?

'காமராஜர் பல்கலை ஊழல் புகார்கள் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலையில் துணை வேந்தர், பதிவாளர் இல்லாத நிலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான விஜயன், கூடுதல் பொறுப்புடன் நிர்வாகத்தை கவனிக்கிறார். உயர் கல்வி செயலர் கார்த்திக் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவினர், மேற்பார்வை செய்கின்றனர்.பல்கலை நிர்வாகத்தில், அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், பல்கலை நிர்வாகத்தை சீரமைக்க முடியாமல், உயர் கல்வித் துறை திணறி வருகிறது. 

இது குறித்து, 'நெட், செட்' பேராசிரியர்கள் சங்கத்தின் பொது செயலர் நாகராஜன் கூறியதாவது: காமராஜர் பல்கலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விதிமீறல்கள் நடக்கின்றன. துணை வேந்தர், பதிவாளர் பதவி காலியான பின், இந்த விதிமீறல்கள் மேலும் அதிகரித்துள்ளன. பேராசிரியர் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை என, நிதி தணிக்கை ஆணையமே கண்டனம் தெரிவித்துள்ளது. அதை சரிசெய்ய வேண்டிய நேரத்தில், விதிகளை மீறி, பல ஆசிரியர்களுக்கு, சி.ஏ.எஸ்., என்ற ஊக்க ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமனத்திலும், கல்வித் தகுதி, திறமை இல்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி, தொகுப்பூதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு, சமீபத்தில் ஊக்க ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. துணை வேந்தரே கையெழுத்திட தயங்கும் கோப்புக்கு, பொறுப்பு அதிகாரியால், ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதுபோல் பல்கலை நிர்வாகம் சென்றால், நிதி பற்றாக்குறை அதிகரித்து, அண்ணாமலை பல்கலை போன்று, பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். இது குறித்து, கவர்னருக்கும், உயர் கல்வி செயலருக்கும், பல முறை மனு அளித்துள்ளோம். அதன்மீது, தமிழக அரசு விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் அலுவலக அதிகாரிகள் உடந்தையா? : காமராஜர் பல்கலையில் நடந்த முறைகேடுகள் குறித்து, கவர்னர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன. ஆனாலும், கவர்னர் அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற சந்தேகம், கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பதால், வித்யாசாகர் ராவிடம் பிரச்னைகளை கொண்டு செல்லாமல், கவர்னர் அலுவலகத்தில் உள்ள, துணை செயலர்கள் மறைக்கின்றனரா என்றும், அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயர் கல்வி செயலரே பொறுப்பு! : மதுரை காமராஜர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை ஆசிரியர் மன்றமான, 'மூட்டா' பொதுச்செயலரும், கல்லுாரி, பல்கலை ஆசிரியர்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளருமான, சுப்புராஜ் கூறியதாவது: காமராஜர் பல்கலை குறித்து, அரசுக்கும், கவர்னருக்கும் புகார்கள் அளித்துள்ளோம். துணை வேந்தர் இல்லாத நிலையில், நிர்வாக முறைகேடுகளை, உயர் கல்வி செயலர் தான் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு, உயர்கல்வி செயலரே முழு பொறுப்பு. புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, பல்கலை ஊழல் குறித்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
நுழைவு தேர்வுக்கு தனி அமைப்பு : நுழைவு தேர்வுக்கு தனி முகமை

உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் விதத்தில், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தேசிய தேர்வு முகமை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: தரமான உயர் கல்வி, தற்போது முக்கிய தேவையாக உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில், உயர் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தனியாக, தேசிய தேர்வு முகமை உருவாக்கப்படும். சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உட்பட, மத்திய அரசின் பிற நிறுவனங்கள், நிர்வாகத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றன. 

அதேசமயம், உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேர்வில், கல்வியின் தரத்தை கவனத்தில் கொள்ள, தனி அமைப்பு தேவைப்படுகிறது; இதற்காகவே, தேசிய தேர்வு முகமை உருவாக்கப்படுகிறது. அதுபோலவே, தரமான கல்வி மற்றும் புதிய பாடத் திட்டங்களில், கவனம் செலுத்தப்படும்; நாடு முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளில், புதிய கல்வி முறையை அமல்படுத்த பரிசீலித்து வருகிறோம். இணையதளங்கள் மூலம், தானாக பயிலும், மத்திய அரசின், 'ஸ்வயம்' திட்டத்தின் கீழ், 350 பாட வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும். 

பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்லுாரிகளின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டு, தரவரிசை பட்டியல் வழங்கப்படும்; அதன் அடிப்படையில் கல்லுாரிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கல்வியாளர்கள் வரவேற்பு : மத்திய பட்ஜெட்டில், நுழைவுத் தேர்வுக்கு, தனி முகமை அமைக்கும் அறிவிப்பை, கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்: நுழைவுத் தேர்வுகளை நடத்த, தனியாக ஒரு அமைப்பு வேண்டுமென, பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் கோரினர். அதன்படி, தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட்டு உள்ளது.இதில், அரசியல் குறுக்கீடுகள் இன்றி, தேர்வுகளை நடத்த வேண்டும். அனைத்து பாடத் திட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், தேர்வு நடத்த வேண்டும். 

'கல்விக்கடனின் உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும்' என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கு லட்சம் ரூபாயில் இருந்து, கல்விக் கடன் உயர்த்தப்படவில்லை. திறன் அடிப்படையிலான தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கவோ, ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.டி., போன்று, பொருளியல், வணிகவியல் தொடர்பான, தேசிய கல்வி மையம் குறித்த அறிவிப்புகளோ இல்லை. அஜீத் பிரசாத் ஜெயின், கல்வியாளர் மற்றும் சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர்: பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது. இது, கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும். இதுவரை, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்த பல நுழைவுத் தேர்வுகள், தேசிய தேர்வு மையம் மூலம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.இ., அமைப்பு மற்றும் பள்ளிகளுக்கு, சுமை குறையும் என்பதால், அவை, மாணவர் நலனில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். 

என்.பசுபதி, பொதுச்செயலர், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம்: 'பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சீரமைக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, யு.ஜி.சி.,யின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. உயர் கல்வியின் தரத்தை இன்னும் உயர்த்த, பல்வேறு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், மத்திய பல்கலைகள் கூடுதலாக திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. தேசிய அளவில் உயர் கல்வியில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, இன்னும் பல திட்டங்களை அறிவித்திருக்கலாம். கல்லுாரிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து, கட்டுப்பாடுகளும் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இவ்வாறு கல்வியாளர்கள் கூறினர்.

Wednesday, February 1, 2017

மத்திய பட்ஜெட் 2017 - 2018: முக்கிய அம்சங்கள்


2017- 2018 பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று (புதன்கிழமை) காலை 11.08 மணியளவில் தாக்கல் செய்தார். முதன்முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வருமான வரி விகிதம் 10%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும்.
* பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக ரூ.1.84 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளது.
'அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் வெளிப்படைத்தன்மை'

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அரசியல் கட்சிகள் இனி ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாக பெற முடியும். இதுநாள் வரை ரொக்கமாக ரூ.20,000 வரை நன்கொடை பெறலாம் என்ற நடைமுறை இருந்தது. அதேவேளையில் அரசியல் கட்சிகள் காசோலை மூலமாகவோ டிஜிட்டல் பரிவர்த்தனையின் மூலமாகவோ நன்கொடை பெறத் தடை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்கப் பண பரிவர்த்தனைக்கு கெடுபிடி:

ரூ.3 லட்சத்துக்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக மேற்கொள்ள முடியாது. கறுப்புப் பண ஒழிப்புக்கான சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின்படி இந்த நடைமுறை அமல்படுத்தப்படவிருக்கிறது. இதற்கு ஏற்ப வருமான வரிச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்படும்.

டிஜிட்டல் பொருளாதாரம்:

ஊழலை ஒழிக்கவும், நிதிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் டிஜிட்டல் பொருளாதாரம் உதவும். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
மாபெரும் டிஜிட்டல் புரட்சிக்கான ஆரம்பப்புள்ளியில் இந்தியா இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் 'பீம்' செயலி, போனஸைப் பரிந்துரை செய்யும் திட்டம் மற்றும் வணிகர்களுக்கு 'கேஷ் பேக்' திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
125 லட்சம் மக்கள் பீம் செயலியைப் பயன்படுத்தினர். இந்த வருடம் மட்டும் கூடுதலாக 10 லட்சம் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2017-ல் 20 லட்சம் ஆதார் சார்ந்த பிஓஎஸ் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும்.

சாமானியர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறுவது ஏராளமான பயன்களை அளிக்கும். ஆர்பிஐயின் பழைய கட்டண ஒழுங்குமுறை வாரியம் புதிதாக மாற்றியமைக்கப்படும்.
* 1.5 லட்சம் துணை சுகாதார மையங்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும்.
ஏழைகளின் உடல்நலத்தைக் காக்கும் வகையில் அரசு ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்துள்ளது. 2025-க்குள் காசநோய் முழுமையாக ஒழிக்கப்படும்.

ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் புதிதாக இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் நிதியுதவி ரூ. 52,393 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும்.

* தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் விநியோகிக்க வழிவகை செய்யப்படும்.

ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக் கட்டணம் ரத்து:

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்படும். 2017 - 18 நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,31,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் ரூ. 51,000 கோடி அரசு பங்களிப்பாக இருக்கும். இந்த நிதியாண்டில் 3,500 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே இருப்புப் பாதை அமைக்கப்படும். கடந்த ஆண்டு 2,800 கி.மீ. ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. 7,000 ரயில் நிலையங்கள் சூரிய மின் திட்டத்தின் கீழ் இயக்கப்படும். ரயில்வே வாரியத்தின் செலவினங்கள், ரயில்வே சேவை மீதான சமூக எதிர்பார்ப்புகள், சேவை தரம், ரயில்வே துறை எதிர்கொள்ளும் போட்டி ஆகியனவற்றின் அடிப்படையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

உயர் கல்விக்கு நிதியுதவி:

உயர் கல்வியில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். யுஜிசியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அங்கீகாரம், தரவரிசை மற்றும் தன்னாட்சி அந்தஸ்தின் அடிப்படையில் கல்லூரிகள் அடையாளம் காணப்படும்.

இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்கில் இந்தியா' திட்டம் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நாடு முழுக்க 100 சர்வதேச இந்திய திறன் வளர் மையங்கள் நிறுவப்பட உள்ளன.

ஜவுளித்துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ஏற்கெனவே ஒரு சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல தோல் மற்றும் காலணி துறைகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

கிராமப்புற மேம்பாடு:

கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வரும் மார்ச் 2018-க்குள் அனைத்து கிராமப்புறங்களிலும் மின் வசதி செய்து தரப்படும். நாடு முழுவதும் ப்ளூரைடு பாதிப்புள்ள 28,000 குடிநீர் ஆதாரங்கள் அடுத்த 4 ஆண்டுகளில் சுத்தப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். கிராமப்புற சுகாதாரம் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் பலமடங்கு அதிகரித்துள்ளது. கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்:

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 55% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் (2016 - 2017) பெண்கள் பங்களிப்பு 40% ஆக இருந்தது. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். 100 நாள் வேலைதிட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேளாண் துறைக்கான அறிவிப்புகள்:

இந்த நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 4.1% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ராபி பருவத்தில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் ஏக்கர் கணக்கு அதிகம். 2017 - 18 நிதியாண்டில் விவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் வருவாயை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது. நீர்ப்பாசனத்துக்காக ரூ,40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆண்டின் இறுதியில் 50,000 கிராம பஞ்சாயத்துகள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும். நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனமாக ரூ.5000 கோடி ஒதுக்கப்படுகிறது.
2017 - 2018 பட்ஜெட் 10 முக்கிய கருப்பொருள்:

2017 - 18 மத்திய பட்ஜெட் 10 முக்கிய கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்தார்.
1. விவசாயிகள் நலன் 2. கிராமப்புற மக்கள் நலன் 3. இளைஞர் மேம்பாடு 4. ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை பேணுதல் 5. உட்கட்டுமான மேம்பாடு 6. வலுவான நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதித்துறை 7. பொது சேவை 8. பொறுப்புகளை துரிதமாக செயல்படுத்துதல் 9. நேர்மையானவர்களுக்கு ஏற்ற வரிவிதிப்பு 10. விவேகமான நிதி மேலாண்மை ஆகிய 10 கருப்பொருளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
* வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க புதிய திட்டம் வகுக்கப்படுகிறது.

* உற்பத்தித் துறையில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக 9-வது இடத்தில் இருந்தது. இந்திய பொருளாதாரம் வியத்தகு சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது.
* கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்திருக்கிறது.
பண மதிப்பு நீக்கம் நீண்ட கால பலனைத் தரும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை சாத்தியமாக்கும். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். பல காலமாக நடந்துவந்த வரி ஏய்ப்பை பண மதிப்பு நீக்கம் தடுத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் ஊழல் குறைந்திருக்கிறது.

நல்ல நோக்கங்கள் தோற்பதில்லை என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. அதன்படி கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையான பண மதிப்பு நீக்கம் ஒரு போதும் தோல்வியடையாது. பண மதிப்பு நீக்கத்தின் மூலம் ஜிடிபி உயரும், வரி வசூல் அதிகரிக்கும்.

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இரண்டு இலக்கத்தில் இருந்த பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காலை 11.08 மணியளவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 3-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. முதல் நாள் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அவையில் குழப்பம்:

இன்று காலை அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அறிவிப்பு ஒன்றை வாசித்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "வழக்கமாக அவை உறுப்பினர் மறைந்தால் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு. ஆனால், இன்று 2017 - 2018 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது என ஏற்கெனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் திட்டமிடப்பட்டதால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கு பதிலாக நாளை அவை ஒத்திவைக்கப்படும் என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன் கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடும் அமளிக்கு இடையே பட்ஜெட்டை காலை 11.08 மணிக்கு அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

முதன்முறையாக..

மக்களவையில் 2017-2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11.08 மணிக்கு தாக்கல் செய்தார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல முதல்முறையாக பிப்ரவரி 28-க்குப் பதிலாக பிப்ரவரி 1-ம் தேதியே பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டரில் பதிலளிக்கிறார் ஜேட்லி:

பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, "மக்களவையில் புதன்கிழமை பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். அதைத் தொடர்ந்து பட்ஜெட் தொடர்பாக ட்விட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவ நுழைவுத் தேர்வு : தமிழக அரசின் சட்டம் மாணவர்களை திசைதிருப்புகிறதா?- தொல்.திருமாவளவன் கேள்வி

மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்த தமிழக அரசின் சட்டம் மாணவர்களை திசை திருப்பு முயற்சியா என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ‘'2017ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டம்' என்ற பெயரில் புதிய சட்டத்துக்கான மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. அதுபோலவே முதுநிலைப் படிப்புகளுக்கான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் இயற்றப்படுவதால் தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதவேண்டியதில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான சட்டம் மத்திய அரசால் முதலில் அவசர சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு பின்னர் கடந்த ஜூலை 2016 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகியுள்ளது. இந்திய மெடிக்கல் கவுன்சில் (திருத்த) சட்டம் 2016 என அழைக்கப்படும் அந்த சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

மத்திய அரசின் அதிகார பட்டியலில் உள்ள 66 ஆவது பிரிவு உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. அந்த அதிகாரத்தின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையிலும்தான் மத்திய அரசால் நீட் நுழைவுத் தேர்வுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு சட்டத்துக்கு திருத்தம் செய்தோ அல்லது அதற்கு முரணாகவோ மாநில அரசு சட்டம் இயற்றினால் அது செல்லுபடியாகாது. எனவே, நுழைவுத் தேர்வு தேவையில்லை என இப்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் ரத்தாவது உறுதியென சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, இந்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்பு தமிழக அரசு அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறவில்லையா ? அல்லது அவர் தமிழக அரசைத் தவறாக வழி நடத்துகிறாரா ? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

தற்போதுள்ள சேர்க்கை முறை கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர உதவியாக இருக்கிறது என்பதுபோல சிலர் பேசுகின்றனர். அது தவறு என்பதை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் புள்ளிவிவரம் எடுத்துக்காட்டுகிறது. 2014-15 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் வெறும் 37 பேர்; 2015-16 ஆம் ஆண்டில் அது 24 ஆகக் குறைந்துவிட்டது. மருத்துவப் படிப்பில் 95% இடங்களை தனியார் பள்ளி மாணவர்களே பெறுகிறார்கள். பள்ளிக் கல்வியும் மருத்துவக் கல்வியும் பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் என்ற நிலையை மாநில அரசு உருவாக்கிவிட்டு, கிராமப்புற மாணவர்களுக்கு உதவவே சட்டம் கொண்டுவருகிறோம் என்பது ஏற்புடையதல்ல.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்தாமல், பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு அக்கறை காட்டாமல், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் குரல் கொடுக்காமல் இப்படி சட்டங்களை நிறைவேற்றுவது மாநில அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதற்காக மட்டுமே பயன்படும். இதை நம்பி தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகாமல் இருந்துவிட்டால் அவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும்.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் எனக் கூறுகிற மாநிலங்களுக்கு விலக்களிக்கும் விதமாக இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

திமுக எம்எல்ஏவை புகழும் ஓபிஎஸ்; பேரவைத் தலைவரை பாராட்டும் ஸ்டாலின்: சட்டப்பேரவையில் அரசியல் நாகரிகம் தொடருமா? எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்


தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23-ம் தேதி தொடங்கிய 2017-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளும் அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் நடந்துகொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் - பாஜக எம்பிக்கள் கடுமையாக மோதிக் கொள்வார்கள். ஆனால், சற்றுநேரத்தில் நாடாளுமன்ற உணவகத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவார்கள். அரசு நிகழ்ச்சிகளிலும், திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு நட்பை வெளிப்படுத்துவார்கள். மற்ற மாநிலங்களிலும் இதேநிலைதான்.

ஆனால் தமிழக அரசியல் களத்தில் எதிரெதிராக இருக்கும் திமுக, அதிமுக வைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறை யிலும் எதிரிகளைப் போல நடந்து கொள்வார்கள். சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் போன்ற அரசு அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகளில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டா லும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

அதிமுகவினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் திமுகவினரும், திமுகவினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் அதிமுகவினரும் கலந்து கொண்டாலோ, அதிமுக - திமுக பிரமுகர்கள் பேசிக் கொண்டாலோ அதுதான் மறுநாள் தமிழக பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வரும். இதுதான் தமிழக அரசியல் கலாச்சாரமாக இருந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் சட்டப்பேரவை உணவகத்தில் கூட அதிமுக - திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக தேநீர் அருந்தியதையோ, சாப்பிட்டதையோ யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி தமிழகத்திலும் அரசியல் நாகரிகம் துளிர்க்க ஆரம்பித்துள்ளது.

2017-ம் ஆண்டுக்கான பேரவையின் முதல் கூட்டத் தொடர் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் உரையுடன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. எப்போதும் இல்லாத வழக்கமாக பேரவை உள் வளாகத்திலும், உணவகத்திலும் அதிமுக - திமுக எம்.எல்.ஏ.க்கள் சகஜமாக பேசிக் கொள்வதைக் காண முடிந்தது.

24-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் துணிவைப் பாராட்டி பேசினார். மீண்டும் 27-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. கேள்வி நேரம், பூஜ்ய நேரம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களில் அதிமுக - திமுக எம்.எல்.ஏ.க்கள் நடந்துகொண்ட விதம் அரசியல் நாகரிகத்துக்கு வித்திடுவதாகவே இருந்தது.
முன்பெல்லாம் கேள்வி நேரத்தின் போது கூட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவைச் சீண்டுவார்கள். திமுக தலைவர் கருணாநிதியை மறைமுகமாக தாக்குவார்கள். திமுகவினர் எதிர்த்தால் யாருடைய பெயரையும் உறுப்பினர் குறிப்பிடவில்லையே என அமைச்சர்கள் சமாளிப்பார்கள். பதிலுக்கு திமுகவினரும் சீண்டுவார்கள்.

பூஜ்ய நேரம் என்பது முக்கியப் பிரச்சினைகளையும், கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானங்களை எழுப்பும் நேரம் என்பதால் எப்போதும் அனல் பறக்கும். கடந்த 5 ஆண்டுகளில் பூஜ்ய நேரத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் இருந்ததில்லை. விவாதங்களின்போது திமுக தலைவரின் குடும்பத்தை அதிமுகவினரும், அதிமுக தலைவரின் குடும்பத்தை திமுகவினரும் விமர்சிப்பார்கள்.
ஆனால், இந்தக் கூட்டத் தொடரில் தனிப்பட்ட தாக்குதல்கள், சீண்டுதல்கள் இல்லை. பேரவைத் தலைவரை அடிக்கடி ஸ்டாலின் பாராட்டுவதைப் பார்க்க முடிகிறது. திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசினால் அது கூச்சல் குழப்பத்தில்தான் முடியும். பலமுறை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், கடந்த 27-ம் தேதி ஜெ.அன்பழகன் பேச்சை கேட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “மிகுந்த பொறுப்புடன் அமைதியாக சொல்ல வேண்டியதைப் பதிவு செய்தார். நாம் எதிர்பார்த்தது போலவே சட்டப்பேரவை நடந்து வருகிறது'' என பாராட்டினார். முன்பெல்லாம் இதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சென்னை கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கலந்து மீன்கள் செத்து மிதப்பது குறித்து திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி கேள்வி எழுப்பினார். அவரை முழுமையாக பேச வேண்டும் திமுகவினர் கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், பூஜ்ய நேரத்தில் திமுக உறுப்பினர்கள் 3 பேருக்கு வாய்ப்பளித்த பேரவைத் தலைவருக்கு நன்றி என்றார். அதனைத் தொடர்ந்து அப்பிரச்சினை குறித்து விளக்கமாக பேச ஸ்டாலினுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை இப்படி இணக்கமாக சென்று கொண்டிருப்பதை மூத்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியத்துடனும், மகிழ்வுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இதற்கு வேட்டு வைப்பதுபோல நேற்று ஸ்டாலின் பேசும்போது, திமுக உறுப்பினர்களும், அமைச்சர்களும் மோதிக் கொண்டனர். இதனால் மீண்டும் துளிர்த்த அரசியல் நாகரிகம் தொடருமா என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டேவிடம் கேட்டபோது, “கடந்த சில நாட்களாக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்கும்போது காமராஜர், அண்ணா காலத்தை நினைவுபடுத்துகிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நேரங்களில் காரசாரமான விவாதங்கள் இருந்தாலும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் பேசுகின்றனர். இந்த ஆரோக்கியமான போக்கு எப்போதும் தொடர வேண்டும்'' என்றார்.

நீட் தேர்வு நிலையை தெளிவுபடுத்துக: மாணவர்களை நட்டாற்றில் விடக்கூடாது- ராமதாஸ் அறிக்கை


நீட் தேர்வுக்கு முன்பாக நீட் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக தமிழக மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை நட்டாற்றில் தள்ளிவிடும் பாவத்தை தமிழக அரசு செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பாதுகாப்பதற்கான இந்த முன்வரைவு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்படுகிறது.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (NEET) விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, அத்தேர்வுக்கான அட்டவணையை, தேர்வு நடத்தும் அமைப்பான, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டிருக்கிறது. மே மாதம் 7-ஆம் தேதி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்காக ஜனவரி 31-ஆம் தேதி முதல் மார்ச் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றே தொடங்கி விட்ட நிலையில், தமிழக அரசின் அறிவிப்பை நம்பி விண்ணப்பிக்காமல் இருந்து விடலாமா? அல்லது குறைந்தபட்ச பாதுகாப்பு கருதி இத்தேர்வுக்கு விண்ணப்பித்து வைக்கலாமா? என்ற குழப்பம் 12-ஆம் வகுப்பு மாணவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

ஒருவேளை குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடாக மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்து வைத்தாலும் கூட அது பெயரளவிலான நடவடிக்கையாகவே இருக்கும். ஏனெனில், தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகின்றன. அதுவரை நுழைவுத்தேர்வுக்கு மாணவர்களால் தயாராக முடியாது. பொதுத் தேர்வு முடிவடைந்த பின்னர், நுழைவுத் தேர்வுக்கு 35 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் நுழைவுத் தேர்வுக்கு ஆயத்தமாக முடியாது. எனவே, இன்றைய சூழலில் பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்புவது தான் தீர்வாகும்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும், அது செல்லத்தக்க சட்டமாக மாறுவதற்கு இன்னும் பல படிகளை கடக்க வேண்டும். மருத்துவமும், மருத்துவக் கல்வியும் பொதுப்பட்டியலில் இருப்பதால் இதுதொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களுக்கு இடையில் முரண்பாடு இருந்தால் மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும். மாநில அரசின் சட்டம் பொருளற்றதாகிவிடும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்டம் மத்திய அரசின் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் -1956க்கு எதிராக இருப்பதால், இந்த இரு சட்டங்களில் எது செல்லுபடியாகும் என்ற வினா நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டால் மத்திய அரசின் சட்டத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பளிக்கப்படும். அதேநேரத்தில் தமிழக அரசின் சட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால் அது செல்லத்தக்க மாநில சட்டமாகி விடும்.

அத்தகைய அந்தஸ்தை தமிழக நீட் சட்டம் பெறுவது சாதாரணமான ஒன்றல்ல. மத்திய சுகாதாரத் துறை, சட்டத்துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டால் தான் தமிழக சட்டம் செல்லத்தக்கதாக மாறும். இதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைய கடந்த காலங்களில் பல மாதங்கள் ஆகியிருக்கின்றன. இப்போதும் அதேபோன்ற நிலை ஏற்பட்டால், தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு அழிந்து விடும். அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தமிழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவசர சட்டத்துக்கு ஒரு நாளிலும், நிரந்தர சட்டத்துக்கு ஒரு வாரத்திலும் ஒப்புதல் வாங்கியதைப் போல, நீட் சட்டத்துக்கும் மத்திய அரசின் ஒப்புதலையும், குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற முடியும். ஆனால், அதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் மிகக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடம் பேச்சு நடத்தி தான் தமிழக அரசு பெற்றது. அதேபோல், நீட் சட்டத்திற்கும் அனுமதி பெறுவதற்காக மத்திய அரசிடம் பேச்சு நடத்தி கொள்கை அடிப்படையில் ஒப்புதல் பெற்றிருக்கிறதா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும். நீட் தேர்வுக்கு முன்பாக நீட் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக தமிழக மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை நட்டாற்றில் தள்ளிவிடும் பாவத்தை தமிழக அரசு செய்யக்கூடாது.

ரூ.2.5 - 5 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 5% வரி குறைப்பு: வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

இணையதளச் செய்திப்பிரிவு

தனி நபர் வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10%-ஆக இருந்த வருமானவரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது என்று பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய சூழலில் மாத வருமானம் பெறுபவர்கள் மீது அதிக வரிச்சுமை இருந்து வருகிறது. எனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தப் பிரிவினர் தங்கள் வரிச்சுமையைக் குறைக்க எதிர்பார்க்கின்றனர். 

எனவே தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு இதுவரை 10% வரி விதிக்கப்பட்டு வந்தது, இது இனி 5% ஆக குறைக்கப்படுகிறது. இதனால் வரி செலுத்தும் பிரிவுக்குள் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரூ.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.12,500 பயன் கிடைக்கும்.

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டிவருபவர்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. 80சி பிரிவின் கீழ் விலக்குகள் அதிகரிக்கப்படவில்லை, எனவே வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. ரூ.1 கோடிக்கும் மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோருக்கான 15% கூடுதல் வரி தொடர்கிறது. 

வரிவருவாயைக் கண்காணிக்க அரசு தரவு பகுப்பாய்வு முறையை பயன்படுத்துகிறது. நேரடி வரி வருவாயில் நிகர இழப்பு ரூ.20,000 கோடி, மறைமுக வரியில் இழப்புகள் எதுவும் இல்லை

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...