Tuesday, February 28, 2017

Names for Madras varsity V-C shortlisted

The three-member search committee for University of Madras Vice-Chancellor met on Monday for over three hours and short-listed 10 names. A member said by next week, the names would be handed over to the Governor-Chancellor, Ch. Vidyasagar Rao.
As many as 60 candidates had applied for the post.
இப்பவே தகிக்கிறது வெயில்! : 'ஜில்' பானங்கள் விற்பனை தூள்

கோவை : இப்போதே வெயில் வாட்டி எடுப்பதால், கோவையில் கம்பங்கூழ், தர்பூசணி, இளநீர், நன்னாரி சர்பத் விற்பனை அதிகரித்துள்ளது.
வழக்கமாக, ஏப்ரல், மே (பங்குனி, சித்திரை) மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், குளிர் காலமான பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்துகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் வாட்டுகிறது. காலை, 10:00 மணியை தாண்டியதும், வெயில் தகிக்க ஆரம்பிக்கிறது; மாலை, 3:30 வரை வாட்டி எடுக்கிறது.வேலை நிமித்தமாக நகருக்குள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வாகனத்தில் செல்வோர் வாடி வதங்குகின்றனர். ஆசுவாசப்படுத்திக் கொள்ள, குளிர்பானங்கள் அருந்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நகர்ப்பகுதியில் ஆங்காங்கே கம்பங்கூழ், நீர் மோர், நன்னாரி சர்பத், கரும்பு ஜூஸ், தர்பூசணி, இளநீர், நுங்கு, பதனீர் விற்கும் கடைகள் உருவாகி உள்ளன. இவற்றின் விற்பனை காலநிலைக்கு ஏற்ப அதிகரித்து வருகிறது.கம்பங்கூழ் 15 ரூபாய், நீர் மோர் 10 ரூபாய், நன்னாரி சர்பத் 15 ரூபாய், சோடா சர்பத் 20 ரூபாய், கரும்பு ஜுஸ் 15 ரூபாய், தர்பூசணி பிளேட் 15 ரூபாய், இளநீர் 20 ரூபாய், பதனீர் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீ விலையை விட அதிகமாக இருந்தாலும், யாரும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. தாகம் தணிக்க குளிர்பானங்களையே நாடுகின்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'நன்னாரி சர்பத் விற்பனை, குளிர்காலத்தில் மட்டும் 'டல்'லடிக்கும். கம்பங்கூழ், கரும்பு ஜூஸ் போன்றவற்றை எந்த காலகட்டத்திலும் அருந்துவதற்கு பொதுமக்கள் பழகி விட்டனர். 'திண்டிவனம் மற்றும் ஆந்திராவில் இருந்து தர்பூசணி பழங்கள் தருவிக்கப்படுகின்றன. வெயில் கொளுத்துவதால், தர்பூசணி சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை விற்கிறோம். மே வரை விற்பனை சூடுபிடிக்கும்' என்றனர்.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் 'பயோ டாய்லெட்' பொருத்தும் பணி தீவிரம்; பிளாட்பார்ம்களில் மூக்கை பிடித்து செல்வதற்கு விமோசனம்!


கோவை : கோவை - ராமேஸ்வரம் ரயிலில், 'பயோ டாய்லெட்' வசதி முழுமையடைந்துள்ள நிலையில், இதர எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இவ்வசதியை விரிவுபடுத்தும் பணி, கோவையில் தீவிரமாக நடந்து வருகிறது. பசுமை ரயில் பாதை திட்டத்தால், பிளாட்பார்ம் பயணிகள் மூக்கை பிடித்து செல்வதற்கு விமோசனம் கிடைத்துள்ளது.

ரயில் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, ரயில்வே ஸ்டேஷன்களும், ரயில் பெட்டிகளும் நவீனமயமாக்கப்பட்டு வருவது ஒருபுறம் இருப்பினும், ரயில் கழிவறையிலிருந்து வெளியேறும் மனிதக் கழிவுகளால் பிளாட்பார்ம் பயணிகள் மூக்கை பிடித்து செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது.நீண்டதுார ரயில்களில் பயணிகள் கழிவறையை பயன்படுத்துவது அதிகம் என்பதால், பெட்டிகளில் தண்ணீர் காலியாவதுடன், தண்டவாளங்களிலும் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க, 'இக்கோ பிரண்ட்லி பயோலஜிக்கல் டாய்லெட்' இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவுசெய்தது.

அதன்படி, ராமேஸ்வரம் - மானாமதுரை இடையிலான ரயில்பாதை மனிதக் கழிவுகள் வெளியேறாத நாட்டின் முதல் பசுமை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 'துாய்மை இந்தியா' திட்டத்தின்படி, ரயில் பெட்டிகளில் இந்த 'பயோ டாய்லெட்' வசதி ஏற்படுத்தப்பட்டு பசுமை வழித்தடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் நடந்த குடியரசு தின விழாவில், 35 பெட்டிகளில் ஏற்கனவே, 140 'பயோ டாய்லெட்' பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த, கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, கோவை - ராமேஸ்வரம் பசுமை ரயில் உட்பட, பல்வேறு ரயில்களில், 120 பெட்டிகளில், 'பயோ டாய்லெட்' வசதிகள் விரைவில் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை ரயில்வே ஸ்டேஷனை பொறுத்தவரை தினமும் இயக்கப்படும், 72 ரயில்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், குறுகிய துார ரயில்கள் தவிர, வட இந்தியா வரை செல்லும் நீண்ட துார எக்ஸ்பிரஸ் ரயில்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன் பணிமனையில் ரயில்களில் 'பயோ டாய்லெட்' பொருத்தும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. முதற்கட்டமாக, கோவை - ராமேஸ்வரம் ரயிலில் இந்த வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதர எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருவதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழி பிறந்துள்ளது.

இதுகுறித்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சின்னராசு கூறுகையில், ''கோவை - ராமேஸ்வரம் ரயில் பெட்டிகளில் 'பயோ டாய்லெட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏ.சி., ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் படிப்படியாக, 'பயோ டாய்லெட்' வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

விசேஷ தொழில்நுட்பம்!
'பயோ டாய்லெட்' எனப்படும் இந்த உயிரி கழிவறையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ளது. இந்த கழிவறைகளில் ஆறு கட்டமாக மனிதக் கழிவுகள் மக்கச் செய்யப்படுகிறது. சூற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பயணிகள் கழிப்பறையில் போடும் மதுபாட்டில்கள் போன்றவற்றால், அவை செயலிழக்க வாய்ப்புள்ளதாக பராமரிப்பு பொறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆறு மாத குழந்தை விற்பனை : மதுரையில் 5 பேர் கைது

மதுரை: மதுரையில், ஆறு மாத குழந்தையை, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனகா, 34. இவருக்கு, ஆறு மாதத்திற்கு முன், ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான, இரண்டாவது கணவர் பிரிந்து சென்ற நிலையில், குழந்தையை வளர்ப்பதில், கனகாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து அவருக்கு பழக்கமான, 57 வயது பெண்ணிடம் கனகா தெரிவித்தார். குழந்தையை அவனியாபுரத்தைச் சேர்ந்த, 33 வயது நபர் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடியில் ரத்த வங்கி நடத்தி வரும், 39 வயதுடையவரிடம், 2.50 லட்சம் ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது. அவர், ஆண் வாரிசுக்காக குழந்தையை சட்டவிரோதமாக 'தத்து' எடுத்து உள்ளார். இந்நிலையில், தன் குழந்தையை சிலர் விற்று விட்டதாக போலீசில் கனகா புகார் செய்தார். இது தொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 
போலீசார் கூறுகையில், 'கனகா சம்மதத்தோடு தான் குழந்தை விற்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு பேர் மூலம் குழந்தை விற்கப்பட்டுள்ளதால், கனகாவுக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை.
'இதனால் அவர், புகார் தெரிவித்திருக்கலாம். முதற்கட்டமாக, ஐந்து பேரை கைது செய்துள்ளோம். தேவைப்பட்டால், கனகாவையும் கைது செய்து விசாரிப்போம்' என்றனர்.

தெற்கு ரயில்வேயில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்

DINAMALAR 

சென்னை: கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து தமிழகம் வழியாக, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு, அந்தியோதயா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து, நேற்று துவங்கியது.ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, டில்லி ரயில் பவனில் இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், அந்தியோதயா ரயில் போக்குவரத்தை நேற்று துவக்கி வைத்தார். இந்த ரயில், தமிழகத்தில் ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, கோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.இந்த ரயிலின் வழக்கமான போக்குவரத்து, ஹவுராவில் இருந்து, மார்ச் 4ம் தேதியிலிருந்தும், எர்ணாகுளத்தில் இருந்து, மார்ச் 7ம் தேதியிலிருந்தும் துவங்குகிறது.

இந்த ரயில் போக்குவரத்து குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக, இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத, 16 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதுதவிர, ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்கா நகரிலிருந்து தமிழகத்தின் திருச்சிக்கு, ஹம்சபர் என்ற முழுவதும், 'ஏசி' வசதி செய்யப்பட்ட, வாராந்திர ரயில் போக்குவரத்து சேவையும் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில், தமிழகத்தின் சேலம், நாமக்கல், கரூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
தமிழை கொலை செய்யும் தமிழ் படங்கள் - சமூக ஆர்வலர்கள் வேதனை

தமிழுக்கு ஏற்பட்ட வறட்சியால், தமிழ் படங்களே தமிழே கொலை செய்து வருகின்றன. வாயில் நுழையும் வார்த்தைகள் எல்லாம், படங்களின் தலைப்பாக மாறுவது, கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜென்டில்மேன், லவ் டுடே என, தமிழ் படங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் கலாசாரம் அதிகரித்தது. 'தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே, படங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்' என்ற நடைமுறை, தி.மு.க., ஆட்சியில் அமலானது. 
தமிழா, இல்லையா குழப்பம்:

ஜில்லா, மிருதன், கெத்து, கபாலி, ஜில் ஜங் ஜக், மெட்ராஸ் உட்பட, பல படங்களின் பெயர்கள், தமிழா, இல்லையா என, சர்ச்சை எழுந்து, வரி விலக்கு கிடைப்பதிலும் சிக்கல் உருவானது. சமீப காலமாக, சேதுபதி, போக்கிரிராஜா, மனிதன், கொடி, படிக்காதவன், பொல்லாதவன் என, பழைய படங்களின் பெயர்களே, புதிய படங்களுக்கு சூட்டப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், தற்போது வாயில் நுழையும் வசனத்தையும், தலைப்பாக மாற்றி வருகின்றனர். த்ரிஷா இல்லைனா நயன்தாரா, தலையில் ஏண்டா எண்ணெய் வைக்கல, கெட்ட பையன் சார் இவன், குரங்கு கையில பூமாலை, நாளை முதல் குடிக்க மாட்டேன் என, இப்பட்டியல் நீள்கிறது. 

இது குறித்து, தமிழ் ஆர்வலர்கள் கூறியதாவது: கனவு வாரியம் போன்ற தமிழ் படங்கள், சர்வதேச அளவில் விருது வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், தமிழ் படங்களுக்கான அடையாளம் மற்றும் கலாசாரமும் குறைந்து வருகிறது. தமிழ் படங்களில் இடம் பெறும், 70 சதவீத பாடல் மற்றும் வசனங்கள், 'தமிங்கிலீஷ்' ஆகவே உள்ளன.
மக்களை எளிதில் சென்றடையும் சினிமா போன்ற தளங்களை, தமிழின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளத்திற்கும் பயன்படுத்த வேண்டும். தற்போதைய நிலை நீடித்தால், அடுத்த தலைமுறைக்கு, திருக்குறள் கூட புரியாமல் போய்விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

டுபாக்கூர் 'இ - டிக்கெட்' முகவர்களிடம் உஷார் : ரயில் பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., எச்சரிக்கை | Dinamalar

கோவை: அனுமதியற்ற, 'இ - டிக்கெட்' முகவர்கள் அதிகரித்து உள்ளதாக எச்சரித்துள்ள, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், 'போலி முகவர்கள் பற்றி ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் புகார் அளிக்கலாம்' என, அறிவுறுத்தி உள்ளது. 

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை, 2005 முதல் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆன்மிகம், சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்களுக்கு, சிறப்பு ரயில்களில் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
முன்பதிவு

ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, உணவும் முன்பதிவு செய்து கொள்வது இத்திட்டத்தின் சிறப்பம்சம். தவிர, மாநிலம் முழுவதும், ஐ.ஆர்.சி.டி.சி., அனுமதி பெற்ற, 1,000 முகவர்கள் மூலமும் இதர ரயில்களுக்கு, இ - டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பணம் சம்பாதிக்கும் நோக்கில், போலி டிக்கெட் முகவர்கள் அதிகரித்து வருவதாக, சமீப காலமாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. எனவே, பயணி யர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் குறிப்பிடப்பட்ட முகவர்களிடம் மட்டும் இ - டிக்கெட் பெற்று, ஏமாறுவதை தவிர்க்கலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனுமதியற்ற டிக்கெட் முகவர்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் அதிகம் வருகின்றன. இத்தகைய நபர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கில் தாங்களாகவே, 'யூசர் ஐடி' ஒன்றை உருவாக்கி, பயணிகளையும், ரயில்வே நிர்வாகத்தையும் ஏமாற்றுகின்றனர். 

டிக்கெட்டுக்கு, 500 ரூபாய் வரை கமிஷன் பெற்று ஏமாற்றுவதாகவும் புகார்கள் வருகின்றன. இத்தகைய நபர்களிடம் பெறப்படும் டிக்கெட்டுகள் செல்லத்தக்கதல்ல; டிக்கெட் கட்டணமும் திரும்பக் கிடைக்காது.

நடவடிக்கை

பயணிகள், www.irctc.com என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட முகவர்களை மட்டுமே டிக்கெட் பெறுவதற்கு தொடர்புகொள்ள வேண்டும். அனுமதியற்ற முகவர்கள் குறித்து ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

NEWS TODAY 18.12.2025