Tuesday, March 7, 2017

கோடி கணக்கில் ஏமாற்றியவரை விட்டுவிட்டு, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?


புதுடில்லி: ‛‛கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியவர்கள் வெளிநாட்டில் சுகமாக வாழும் போது, சேலை திருடியவருக்கு ஓராண்டு சிறையா?'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வியெழுப்பினார்.

ஐதராபாத்தை சேர்ந்த எலியா என்பவர் 5 சேலைகளை திருடியாதாக அம்மாநில போலீசார் ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்தனர். ஆனால் இது வரை அவர் எந்த வித விசாரணையும் இன்றி சிறையிலேயே இருந்து வருகிறார். வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

சேலை திருடியவருக்கு 1 வருடம் சிறையா?

இதை எதிர்த்து அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கேகர் கூறுகையில் ‛‛ கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றியவர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, 5 சேலை திருடியவர் விசாரணையின்றி சிறையில் இருக்கிறார்'' என தெலுங்கானா போலீசிற்கு கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதி கேகர் கோடி கணக்கான பணத்தை கடனாக பெற்று விட்டு வெளிநாட்டில் வாழும் விஜய் மல்லையாவின் பெயரை சொல்லாமல் அவர் சுதந்திரமாக இருப்பதை சுட்டிக்காட்டி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

ஜெ.வீட்டு பணிப்பெண் எங்கே?" - ஓ.பி.எஸ் வீட்டில் விடிய விடிய ஆலோசனை!





ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து வருகிறார். சென்னை அடையாறு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ஆலோசனைக் கூட்டம் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "நேற்று இரவிலிருந்து இப்போ வரைக்கும் கூட்டம் நடந்துட்டு இருக்கு. கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'அப்போலோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை மத்திய-மாநில அரசுகள் விளக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், பேசியதாகவும் சிலர் சொல்வது தவறு. அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கல'ன்னு சொன்னாரு.

உடனே மாஃபா பாண்டியராஜன், 'ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்' என்றார். மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை, 'ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டு மயக்கமடைந்த காரணத்தால்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று சொன்னார். உடனே பொன்னையன், 'ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதை நேரில் பார்த்த பணிப்பெண்ணை இதுவரையில் காணவில்லை. அவர் இருக்கும் இடமும் தெரியல'ன்னு சொன்னாரு." எனக் கூறினார்.

- ந.பா.சேதுராமன்

ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்டபோது...” - மர்மம் உடைக்க வருகிறது சி.பி.ஐ
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சில இருண்ட பக்கங்கள் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இருக்கும் 12 எம்.பி-க்கள் கடந்த 27-ம் தேதி அன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ‘குற்றவாளியை நெருங்கி விட்டோம்’ என்கிறார் பி.ஹெச்.பாண்டியன். தமிழக அரசியல் மீண்டும் இப்போது ஜெயலலிதா மரணத்தையொட்டிய கொந்தளிப்பில் இருக்கிறது.

27 கேமராக்கள் நிறுத்தப்பட்டன!

ஜனாதிபதியைச் சந்தித்த எம்.பி மைத்ரேயனிடம் பேசினோம். “செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என்று மட்டும் சொன்னார்கள். அதன் பிறகு, 75 நாள்கள் யாரையும் பார்க்கவிடாமல் தடுத்துவிட்டு, திடீர் என அவர் இதயத் துடிப்பு முடக்கத்தால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறினார்கள். இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ‘பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்’, ‘இட்லி சாப்பிடுகிறார்’ என்று சொல்லிவிட்டு, அவருக்கு ‘செப்டிசீமியா’ என்ற நோய் இருப்பதாக அடுத்து அறிக்கைவிட்டது எதனால்? சசிகலாவைத் தவிர யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை. செப்டிசீமியா இருந்தாலும் ஒரு சிலரையாவது உரிய பாதுகாப்புக் கவசங்களுடன் அறைக்குள் அனுப்பியிருக்கலாம். அதைத் தவிர்த்தது ஏன்? ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அப்போலோவில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப் பட்டுள்ளன. ஏன் அப்படிச் செய்யப்பட்டது?

சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘இனிமேல் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஒப்புதலோடு நிறுத்தினோம்’ என்று சொல்லியுள்ளார்கள். யாருடைய ஒப்புதலோடு சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன என்பது பொதுமக்களுக்குத் தெரிய வேண்டாமா? இத்தகைய சந்தேகங்களைத் தொகுத்து ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளோம். ‘சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்’ என்று கேட்டோம். ஜனாதிபதியும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நாங்கள் சொன்னதை கவனமாகக் கேட்டார். சில விவரங்களைக் குறித்துக்கொண்டார். விரைவில் சி.பி.ஐ விசாரணை குறித்த அறிவிப்பு வெளியாகும். ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளியே கொண்டுவரும் வரை ஓயமாட்டோம்” என்றார் மைத்ரேயன்.



விரைவில் சி.பி.ஐ விசாரணை!

அ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் குழு ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னால், மத்திய அரசின் ஒப்புதலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘‘ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதாவைப் பார்க்க வருவதாக இரண்டு முறை மோடி சொன்னார். இரண்டு முறையும் தடுத்தார்கள். எனவே, உள்விஷயங்களை மோடியும் அறிவார். மேலும், சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றத் துடிப்பதை மோடி ரசிக்கவில்லை. உத்தரப் பிரதேச தேர்தல் முடிந்த பிறகு, தமிழக அரசியலில் மோடியின் பார்வை இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் இந்தச் சந்திப்பு” என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. இரண்டு மாதங்களில் இதற்கான வேலைகள் ஆரம்பம் ஆகும் என்றும் சொல்கிறார்கள்.

அப்போலோவுக்கு கொண்டுவரும்போதே...

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வருகிறார்கள் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனும், அவரின் மகன் மனோஜ் பாண்டியனும். முன்னாள் எம்.பி-யான மனோஜ் பாண்டியனைச் சந்தித்தோம். அவர் தனது சந்தேகங்களை அடுக்க ஆரம்பித்தார்.

‘‘அப்போலோ மருத்துவமனை தந்த ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் அறிக்கையில், ‘அவர் கீழே விழுந்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்து உள்ளார்கள். அப்படியானால், ‘அவர் எங்கே, எப்படி கீழே விழுந்தார்? அவராக விழுந்துவிட்டாரா? அவரை யார் தள்ளிவிட்டது? எதற்காகத் தள்ளிவிட்டார்கள்? அதற்கு என்ன நோக்கம்?’ என்பதை விளக்க வேண்டும்.

போயஸ் கார்டனில் இருந்து டி.எஸ்.பி ஒருவர்தான் அப்போலோவின் 1066 என்ற ஆம்புலன்ஸ் எண்ணுக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். அந்த ஆம்புலன்ஸ், போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்ததும், ஜெயலலிதா அதில் ஏற்றப்பட்டதுமான காட்சிகள் கொண்ட சி.சி.டி.வி பதிவுகள் எங்கே? அப்போலோ மருத்துவமனையில் இருந்து சென்ற ஆம்புலன்ஸில்தான் ஜெயலலிதா அழைத்துவரப்பட்டார் என்றால், அவருடன் பயணம் செய்தவர்கள் யார், யார்? ஆம்புலன்ஸில் செல்லும் அளவுக்கு சீரியஸ் என்றால், ஆம்புலன்ஸ் உடனே புறப்படாமல் தாமதம் செய்யப்பட்டது ஏன்?

போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் சென்ற அடுத்த சில மணி நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் வெளியே, உள்ளே, இரண்டாம் தளம் ஆகியவற்றில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்? அப்போலோவில் கேமராக்கள் அகற்றப்பட்டாலும், போயஸ் கார்டன் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் உள்ளன. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஏன் இதுவரை வெளியிடவில்லை? எது எதற்கோ அறிக்கை விடுபவர்கள், இதற்கு பதில் சொல்லி அறிக்கை விடாததன் மர்மம் என்ன?



ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாந்தாராம், 2016 மே மாதமே ‘உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் சரியில்லாமல் இருப்பதால் பக்கவாதம் வரப்போகிறது’ என்று எச்சரித்துள்ளார். அதன்பிறகு அவரை போயஸ் கார்டன் பக்கமே அனுமதிக்காத மர்மம் என்ன? 2016-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பித்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் மாதம் வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நிறைய மர்மங்கள் புதைந்தது கிடக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் அவரது உடலில் சர்க்கரை அளவு உச்சபட்ச நிலையில் இருந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சைகள் அளித்தார்கள்?

2015-ம் ஆண்டு மே மாதமே ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மத்திய அரசு அனுமதியோடு அவரை சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ‘பாரா ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்’ சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தது. ஆனால், அந்தப் பயணத்தை ரத்து செய்தது யார்?

அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட உணவுகள் சோதனை செய்யப்பட்டு தரப்பட்டதா? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாள்களில், அவரைக் காண வந்தவர்கள் பற்றிய விவரங்களை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதனை மறைக்கக் காரணம் என்ன? தமிழகத்தில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைத்தேர்தல்களின்போது, ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. அந்தக் கைரேகை பெறப்பட்டபோது மருத்துவர்கள் பாலாஜியும், ஜான் ஆபிரஹாமும் இருந்துள்ளார்கள். ‘இதே போன்று வேறு பத்திரங்களிலும் கைரேகை பெறப்பட்டதா?’ என்ற விவரங்களை பாலாஜியிடம் விசாரிக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், ‘உயிர் இருந்தும் உடல் இயக்கம் செயல் இழந்துவிட்டதால், சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன’ என்று கூறப்பட்டுள்ளது. சிகிச்சைகளை நிறுத்துவதற்கு அனுமதி கொடுத்தது யார்? உடலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்வதற்கே ரத்த பந்தங்களின் அனுமதி தேவை என்று இருக்கும்போது, ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையை நிறுத்துவதற்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள்? எக்மோ உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ள யாரிடம் கையெழுத்து வாங்கினார்கள்? ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவரின் உடல் எடை 47 கிலோ குறைந்துள்ளது. அதற்குக் காரணம் என்ன?

வெளிநாட்டு மருத்துவர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க வந்தபோது, சசிகலா மட்டுமே உடன் இருந்துள்ளார். தமிழ் மட்டுமே தெரிந்த சசிகலா, தமிழே தெரியாத வெளிநாட்டு மருத்துவர்களோடு எவ்வாறு உரையாடினார்?



வாஸ்து சீனிவாசன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அதிரடி மாற்றங்களைச் செய்து, அந்த அறையை இருட்டாக ஆக்கியது ஏன்? ஜெயலலிதாவுக்கு மருந்து கொடுக்கக்கூட, நல்ல நேரம் பார்த்துக் கொடு்த்த தவற்றைச் செய்தது ஏன்?

- இப்படி பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எங்களைப் பொறுத்தவரையில் அவர் அப்போலோவுக்கு அழைத்து வரப்பட்டபோதே மர்மமான நிலைமையில்தான் இருந்துள்ளார் என்று தெரிகிறது. இந்த ரகசியங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவோம்” என்கிறார் மனோஜ் பாண்டியன்!

எய்ம்ஸ் மருத்துவர்கள் புலம்பல்!

எய்ம்ஸ் மருத்துவக்குழு அப்போலோ வந்து, ஜெயலலிதாவின் நிலையைப் பார்த்துவிட்டு டெல்லிக்குக் கிளம்பியபோது அடித்த கமென்ட்டை இப்போது சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை ‘It is a secret service, not a medical service’ என்று அந்த மருத்துவர்கள் சொன்னார்களாம்.

2011-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உதவியாக ஒரு நர்ஸை அனுப்பியுள்ளார். ஆனால், அவர் சில மாதங்களில் இங்கிருந்து அனுப்பப்பட்டார். அப்போதே மோடி, “உங்களுக்கு அளிக்கப்படும் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்” என்று ஜெயலலிதாவிடம் அறிவுறுத்தி உள்ளார். ‘‘அதையும் இந்த சம்பவங்களையும் முடிச்சுப் போட்டுப் பாருங்கள்’’ என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

எப்போதும் வரலாம்!

அப்போலோ மருத்துவமனை, ‘ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ஐந்து கோடி ரூபாய்’ என்று சொல்லியிருந்தது. ஆனால், அவருடைய சிகிச்சை செலவு 7.8 கோடி ரூபாய் என்கிறார்கள். அதில் உணவுச் செலவு மட்டும் 30 லட்ச ரூபாய் என்று கணக்குக் காட்டியுள்ளார்கள். ‘‘30 லட்சம் ரூபாய்க்கு உணவுச்செலவு என்றால் தினமும் யார் யாரெல்லாம் அங்கு இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்’’ என்று ஜனாதிபதியிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ‘சி.பி.ஐ வரும்போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமாரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயலலிதாவுடன் இருந்த சிவகுமார், சமீப காலமாக எங்கும் தலைகாட்டவில்லை. இதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. மருத்துவமனையில் சசிகலாவின் நிழலாக இருந்தவர், அவருடைய உதவியாளர் கார்த்திகேயன். அவருக்கும் அனைத்தும் தெரியும்’’ என்கிறார்கள் இவர்கள்.

‘சி.பி.ஐ., எந்த நேரத்திலும் வந்து வளைக்கலாம்’ என்று சொல்கின்றன டெல்லி தகவல்கள்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

தகிக்கும் தமிழகம்... தாகத்தில் தவிக்கும் மக்கள்...! நிலவரம் புரிகிறதா தமிழக முதல்வரே..?!




தமிழகத்தில் குடிநீர், விவசாயம் இரண்டுக்கும் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள், பராமரிப்பின்றித் தூர்ந்துபோய் இருக்கின்றன. அதே நேரத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் தமிழக மக்கள் தவித்து வருகின்றனர். ஆங்காங்கே பல தொண்டு நிறுவனங்களும், மக்கள் பிரதிநிதிகளும் நீர்நிலைகளை தூர்வாரிப் பராமரித்து வருகின்றனர். இந்தச் சூழலில் நீர்நிலைகளைப் பராமரிக்க 'குடிமராமத்து' என்ற பழங்கால முறையினை தமிழக அரசு கையில் எடுத்திருக்கிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் சிறிய நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. குடிமராமத்து எவ்வளவு தூரத்துக்குப் பயன் அளிக்கும்?

365 நாட்களும் பராமரிப்பு

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் 1837-ம் ஆண்டு வரை குடிமராமத்து முறையில் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. கால்வாய் மணியம் என்ற பெயரில் ஒரு வாய்க்காலுக்கு ஒரு மணியக்காரர் இருப்பார். ஒரு குடும்பத்துக்கு இருவர் வீதம் குடிமராமத்துப் பணிகளில் மக்கள் ஈடுபடுவார்கள். ஏரி மட்டுமின்றி வரத்து கால்வாய் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்வார்கள். இதனால் ஏரியில் தண்ணீர், இருந்தாலும் இல்லாவிட்டாலும் 365 நாட்களும் பராமரிப்பு இருக்கும். குடிமராமத்து மூலம், ஏரிகள் கிராமத்தின் உயிர்நாடியாகவே இருந்தன. அரசின் திட்டம் பலன் அளிக்குமா?

தனியாரிடம் விடக்கூடாது

பண்டைய காலத்தில் மக்கள் பங்களிப்புடன் நீர்நிலைகளில் குடிமராமத்து மேற்கொள்ளப்பட்டது. நீர்நிலைகளில் அரசின் ஆதிக்கம் தொடங்கியபோதுதான் குடிமராமத்து முற்றிலும் தடைபட்டுப்போனது. இப்போது 10 லட்சம் ரூபாய்க்கு உள்பட்ட பணிகளை மட்டுமே மக்களைக் கொண்டு குடிமராமத்து செய்யப்படும் என்று அரசு கூறி உள்ளது. இதுகுறித்து தஞ்சை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசியபோது, "குடிமராமத்துப் பணிகள் என்பது 1963-ம் ஆண்டுவரை செம்மையாக நடந்தது. நீர்நிலைகள் பராமரிப்பு என்பதில் அரசியல் நுழைந்த பிறகு, ஒப்பந்தக்காரர்கள் கையில் போனபிறகு குடிமராமத்து முறை இல்லாமல் போய்விட்டது.

நீர்நிலைகளை பராமரிக்கிறோம் என்ற பெயரில் எந்த ஒரு தனியாரிடமும் ஒப்பந்தம் இல்லாமல், மக்களைக் கொண்டு செம்மையாக செய்தால் நீர்நிலைகளில் மிகக் குறைந்த அளவிலான நீரைக் கூட சேமிக்க முடியும். இப்போது குடிமராமத்து பணிகளைச் செய்ய வேண்டும் எனில், 1950 ஆண்டுக்கு முன்பு உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி உள்ள நீர்நிலைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

தன்னார்வ முயற்சிகள்

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கனமழை பெய்தபோதும் அப்போது கிடைத்த மழை நீர் சேமிக்கப்படவே இல்லை. காரணம் சென்னையைச் சுற்றி இருக்கும் நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாததும், பராமரிக்கப்படாததும்தான். இதை உணர்ந்த தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளை தாங்களாகவே தூர்வாரி வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பனிடம் பேசினோம். "பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளைப் பாதுகாக்க களம் இறங்கி உள்ளன. விகடன் குழுமத்தின் சார்பில் படப்பை அருகில் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. குடிமராமத்துப் பணிகளின்போது ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளும்படி விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கலாம். அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளை அனுமதிக்கக் கூடாது. அதே போல 100 நாள் வேலைத் திட்டத்தில் குடிமராமத்துப் பணிகளைச் செய்யக்கூடாது" என்றார்.



ஆக்கிரமிப்புகளை என்ன செய்வீர்கள்

நீர்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது நல்ல விஷயம்தான். ஆனால், இப்போது நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர், ஜனகராஜனிடம் பேசினோம். "நீர்நிலைகளைப் பராமரிப்பதில் அரசுக்கு திடீரென ஞானோதயம் வந்திருக்கிறது. இப்போது ஏரியில் பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தொழிற்பேட்டைகள் இவையெல்லாம்தான் இருக்கின்றன. குடிமராமத்து செய்யப்போகும் அரசு இதையெல்லாம் என்ன செய்யப்போகிறது. குடிமராமத்தின்போது ஏரியின் வரத்துக்கால்வாய், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மற்றபடி குடிமராமத்து என்பது ஒரு மாற்றத்துக்கான விஷயம்தான்" என்றார்.

தமிழகம் தண்ணீர் இன்றி தவிப்பதற்கு நீர் நிலைகள் பராமரிப்பு மோசமான நிலையில் இருப்பதுதான் காரணம். தமிழகம் தகிப்பது ஆட்சியாளர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், மக்களைத் தவிக்க விட்டுவிட்டு அரசு மெளனமாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

- கே.பாலசுப்பிரமணி

ஃபேமிலி டாக்டர் சரி. .. ஃபினான்ஷியல் டாக்டர் தெரியுமா? #NeedToKnow

நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரைப் பார்க்கிறோம். அதேமாதிரி நிதி சார்ந்த விஷயத்திலும் ஃபினான்ஷியல் டாக்டரை அணுகுகிறோமோ என்றால் 100-க்கு 99% இல்லை. எப்படி நமது உடல் நலன் மீது நாம் அக்கறை காட்டுகிறோமோ, அதைப்போல நம் வாழ்க்கையை வளமாக்க நிதி சார்ந்த விஷயத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுவது வாழ்க்கைக்கு நல்லது.



நிதி சார்ந்த விஷயத்தைப் பொறுத்தவரை நாமாகப் பல விஷயங்களைக் கற்றறிந்து முதலீடுகளை மேற்கொண்டு அதன் மூலம் வருமானம் சம்பாதிப்பது அல்லது வருமான வரியை மிச்சப்படுத்துவது என்பது கடினமான காரியம். ஆனால், நிதி ஆலோசகருக்கு அந்தத் துறை சார்ந்த அறிவு அதிகம். ஆனால், நம்மில் பலபேர் `அவரு சொன்னாரு, இவரு சொன்னாரு' எனச் சொல்லியே தவறான மற்றும் மோசடி முதலீட்டுத் திட்டங்களில் பணத்தைக் கொட்டுகின்றனர். இறுதியில் முழு பணத்தையுமே இழக்கின்றனர். பங்குச்சந்தையில் ஆத்திச்சூடி கூடத் தெரியாதவர்கள் கூட `தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம். 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்' என ஆசை வார்த்தைகளுக்கு ஏமாந்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழக்கிறார்கள். ஆகையால் பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமில்லை, பணத்தை இழக்காமல் மற்றும் மிச்சப்படுத்தவும் நிதி ஆலோசகர்கள் அவசியம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

குழந்தைகளின் கல்வி, மகளின் திருமணம், வீடு கட்டுதல், ஓய்வுக் காலம், வருமான வரி, வரி சேமிப்பு என நம் வாழ்க்கையில் ஆறு முதல் அறுபது வரை பல நிதி சார்ந்த விஷயங்களைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. நம்மிடம் கட்டுக் கட்டாக பணம் இருந்தாலும், கையில் சுத்தமாக பணமே இல்லை என்றாலும் நிதி சார்ந்த தேவைகள் உருவாகித்தான் வருகிறது. ஆனால், நம் ஊரில் நிதி ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பல நிதி ஆலோசகர்கள் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அணுகுமுறை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல விஷயங்களைக் கவனித்து அதன்பின் ஆலோசனைகளைக் கேட்பதே சிறந்தது. ஆகையால் சிறந்த நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுக்க ஒரு சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம். உங்களுக்காக...

நிதி ஆலோசகர் தகுதி!

நல்ல நிதி ஆலோசகரைக் கண்டுபிடிப்பது சற்று கடினமான விஷயம். எப்போதும் நமக்குத் தெரிந்த, நம்பத் தகுந்த யாராவது ஒருவர், நிதி ஆலோசகரைச் சிபாரிசு செய்தால், அவரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. இல்லையெனில் நிதி ஆலோசகரின் கல்வி, அனுபவம் மற்றும் எந்த மாதிரியான முதலீட்டுச் சாதனங்களை வழங்கி வருகிறார் போன்றவற்றை விசாரித்து நம்பிக்கையின் அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், வருமான வரி என நிதி சார்ந்த எந்தச் சந்தேகமாக இருந்தாலும், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பவராக இருக்க வேண்டும். நமக்குத் தெரியாத பல கேள்விகளைக் கேட்போம். அந்தக் கேள்விகளை, நமது நிலைமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஆலோசனை வழங்க வேண்டும். மொத்தத்தில் எப்போது போன் செய்தாலும், போனை எடுப்பவராக இருக்க வேண்டும்.

அனுபவம்?

நிதி ஆலோசனை வழங்கும் நபருக்கு அனுபவம் இருக்கிறதா என்பதை அலசி ஆராய வேண்டியது அவசியம். அவர் என்ன படித்து இருக்கிறார்? எத்தனைப் பேருக்கு நிதி ஆலோசனை வழங்கி வருகிறார்? யார் யாருக்கு ஆலோசனை வழங்குகிறார் என்பதோடு மட்டுமில்லாமல், அவரிடம் ஆலோசனை கேட்பவருடைய முகவரி அல்லது போன் நம்பர் கேட்டு வாங்கி, அவருடைய கருத்துகளையும் கேட்டறிந்து அதன் பிறகு அவரைத் தேர்ந்தெடுக்கலாம்.

நிதி ஆலோசகரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாச்சு, அவ்வளவு தான் கடமை முடிந்தது என நினைக்கக்கூடாது. அவர் என்ன செய்கிறார்? எந்தெந்த திட்டங்களில் முதலீட்டினை மேற்கொள்கிறார்? அவர் மேற்கொண்டுள்ள முதலீட்டின் வருமானம் வருகிறதா அல்லது நஷ்டம் வருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். குறுகிய காலத்தில் நஷ்டம் என்றால் கவலையடையத் தேவையில்லை. ஆனால், நீண்ட காலத்தில் அது தொடரக் கூடாது. மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவரை நேரில் சந்தித்து கலந்தலோசிக்க வேண்டும்.

கட்டணம்!

நிதி ஆலோசனையைப் பொறுத்தவரை கமிஷன் மற்றும் நிரந்தரக் கட்டணம் என பல்வேறு வழிமுறைகளில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பொதுவாக ஆலோசனைகள் என்றாலே மக்கள் அதை இலவசமாக எதிர்பார்க்கிறார்கள். வெறும் ஆலோசனைக்குப் பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய் என்றால் பெரும்பாலும் யாரும் தர முன்வருவதில்லை. ஆனால், நீண்ட கால அடிப்படையில் 10%, 12%-க்கு மேல் வருமானம் வரும்போது ஒரு சதவிகிதம் என்பது எல்லாம் பெரிய தொகையும் இல்லை, பெரிய பாதிப்பும் இல்லை.

ஆனால், நிதி ஆலோசகர் நிர்ணயிக்கும் கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும். உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் ஒரு சதவிகிதம் வசூலிக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுடைய ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் 1% கட்டணம் என வசூலிக்கப்படும். சில பேர், ஒவ்வொரு ஆண்டும் ரூ.20,000 என ஒரு குறிப்பிட்ட தொகையை நிரந்தரமாக நிதி ஆலோசனையாகக் கேட்டு பெறுவார்கள். இந்த கட்டணத்தைப் பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 3,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வசூலிப்பவர்களும் இருக்கிறார்கள்.

நல்ல ஃபினான்ஷியல் டாக்டர்!

நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வதைப் பொறுத்தவரை, செபி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலோசகர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஆலோசகருடைய பெயர் மற்றும் மற்ற விவரங்கள் அடங்கி இருக்கும். அவரைத் தொடர்பு கொண்டு அவர் மீது நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் அவரிடம் நிதி ஆலோசனையைத் தொடரலாம். இல்லையெனில் உங்களுக்கு நம்பகமானவரிடம் நிதி ஆலோசனையைத் தொடரலாம். எவ்வளவு கட்டணம் செலுத்துகிறோம் என்பதைவிட, சரியான முதலீட்டுச் சாதனங்களில் முதலீடு செய்கிறோமா என்பதே முக்கியம். எப்படி உங்கள் ஃபேமிலி டாக்டரை நம்பிக்கையாக அணுகுகிறீர்களோ, அதைப்போல நல்ல ஃபினான்ஷியல் டாக்டரைத் தேர்ந்தெடுத்துப் பயனடையலாமே.

2g...3g...4g...5g தெரியும்? அதன் வித்தியாசங்கள் என்ன தெரியுமா?..

உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவை முதன் முதலில் வெளிவந்தபோது இருந்த பரபரப்பைவிட, ரிலையன்ஸ் தனது ஜியோ சிம்களின் மூலம் இலவச 4G சேவையை அறிமுகப்படுத்தியபோது ஏற்பட்ட பரபரப்பு தான் அதிகம். இந்தியா முழுவதும் தற்போது பத்து கோடி மக்களுக்கு மேல் ஜியோ சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 4G என்பது மிக விரைவான நெட்வொர்க் சேவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதற்கு முந்தைய 3G அல்லது அதற்கும் முன்னால் பயன்படுத்தப்பட்ட 2G நெட்வொர்க்குகளுக்கும், 4G நெட்வொர்க்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா? G என்பது GENERATION என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன. அதனைப் பற்றிய அலசலே இந்த தொகுப்பு.



1G சேவை :

G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது. அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.

2G சேவை :



பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இதுதான். இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின. இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2G தான். இதில்தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன. இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை.

3G சேவை :

2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது. 3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. நம் இந்திய நாட்டுக்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001-ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது. வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகுதான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாக தான்.

4G சேவை :



3G சேவையைவிட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009-ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது. அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலைத் தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை. ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.

5G :

4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வரவிருக்கிறது 5G சேவை. இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

- ம. சக்கர ராஜன்
.

ஃபேஸ்புக்கில் முதன்முறையாக 'Dislike' ஆப்ஷன்...!

FB


வெகு நாட்களாக ஃபேஸ்புக் பயனர்கள் எதிர்பார்க்கும் அப்டேட் என்றால் அது 'Dislike' ஆப்ஷன்தான். ஃபேஸ்புக்கில் சமூக வலைதளங்களில் போடப்படும் ஒரு போஸ்டுக்கு 'டிஸ்லைக்' கொடுப்பதற்கான அப்டேட் வராதா என்று பலர் நினைத்திருக்கலாம். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இது தெரியாமல் இல்லை. எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று இதுநாள் வரை அதற்கான அப்டேட் கொடுக்காமல் இருந்தார்கள். தற்போது, 'மெஸன்ஜர்' அப்பில் மட்டும் இந்த வசதியை அறிமுகம் செய்யவுள்ளது ஃபேஸ்புக்.

உலக அளவில் கிட்டத்தட்ட 100 கோடி பேர் மெஸன்ஜர் பயன்படுத்துகிறார்கள். மெஸன்ஜரில் இந்த 'டிஸ்லைக்' அப்டேட் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் அந்த அப்டேட்டை கொடுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்புதான், ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஒரு போஸ்ட்டுக்கு, பல வகை 'எமோஜி' ரியாக்‌ஷன் கொடுக்கும் வண்ணம் அப்டேட் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், 'டிஸ்லைக்' ரியாக்‌ஷன் அப்டேட் கொடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி ஃபேஸ்புக் நிறுவனம், 'நாங்கள் மெஸன்ஜரை பயன்படுத்துவதற்கு இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த புது அப்டேட்டும் அதைப் போன்ற ஒன்றுதான்.' என்று தெரிவித்துள்ளது.

விரைவில், ஃபேஸ்புக்கில் பதியப்படும் ஒரு போஸ்டுக்கு 'டிஸ்லைக்' கொடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...