Tuesday, March 7, 2017


ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்டபோது...” - மர்மம் உடைக்க வருகிறது சி.பி.ஐ
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சில இருண்ட பக்கங்கள் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இருக்கும் 12 எம்.பி-க்கள் கடந்த 27-ம் தேதி அன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ‘குற்றவாளியை நெருங்கி விட்டோம்’ என்கிறார் பி.ஹெச்.பாண்டியன். தமிழக அரசியல் மீண்டும் இப்போது ஜெயலலிதா மரணத்தையொட்டிய கொந்தளிப்பில் இருக்கிறது.

27 கேமராக்கள் நிறுத்தப்பட்டன!

ஜனாதிபதியைச் சந்தித்த எம்.பி மைத்ரேயனிடம் பேசினோம். “செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என்று மட்டும் சொன்னார்கள். அதன் பிறகு, 75 நாள்கள் யாரையும் பார்க்கவிடாமல் தடுத்துவிட்டு, திடீர் என அவர் இதயத் துடிப்பு முடக்கத்தால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறினார்கள். இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ‘பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்’, ‘இட்லி சாப்பிடுகிறார்’ என்று சொல்லிவிட்டு, அவருக்கு ‘செப்டிசீமியா’ என்ற நோய் இருப்பதாக அடுத்து அறிக்கைவிட்டது எதனால்? சசிகலாவைத் தவிர யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை. செப்டிசீமியா இருந்தாலும் ஒரு சிலரையாவது உரிய பாதுகாப்புக் கவசங்களுடன் அறைக்குள் அனுப்பியிருக்கலாம். அதைத் தவிர்த்தது ஏன்? ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அப்போலோவில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப் பட்டுள்ளன. ஏன் அப்படிச் செய்யப்பட்டது?

சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘இனிமேல் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஒப்புதலோடு நிறுத்தினோம்’ என்று சொல்லியுள்ளார்கள். யாருடைய ஒப்புதலோடு சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன என்பது பொதுமக்களுக்குத் தெரிய வேண்டாமா? இத்தகைய சந்தேகங்களைத் தொகுத்து ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளோம். ‘சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்’ என்று கேட்டோம். ஜனாதிபதியும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நாங்கள் சொன்னதை கவனமாகக் கேட்டார். சில விவரங்களைக் குறித்துக்கொண்டார். விரைவில் சி.பி.ஐ விசாரணை குறித்த அறிவிப்பு வெளியாகும். ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளியே கொண்டுவரும் வரை ஓயமாட்டோம்” என்றார் மைத்ரேயன்.



விரைவில் சி.பி.ஐ விசாரணை!

அ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் குழு ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னால், மத்திய அரசின் ஒப்புதலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘‘ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதாவைப் பார்க்க வருவதாக இரண்டு முறை மோடி சொன்னார். இரண்டு முறையும் தடுத்தார்கள். எனவே, உள்விஷயங்களை மோடியும் அறிவார். மேலும், சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றத் துடிப்பதை மோடி ரசிக்கவில்லை. உத்தரப் பிரதேச தேர்தல் முடிந்த பிறகு, தமிழக அரசியலில் மோடியின் பார்வை இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் இந்தச் சந்திப்பு” என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. இரண்டு மாதங்களில் இதற்கான வேலைகள் ஆரம்பம் ஆகும் என்றும் சொல்கிறார்கள்.

அப்போலோவுக்கு கொண்டுவரும்போதே...

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வருகிறார்கள் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனும், அவரின் மகன் மனோஜ் பாண்டியனும். முன்னாள் எம்.பி-யான மனோஜ் பாண்டியனைச் சந்தித்தோம். அவர் தனது சந்தேகங்களை அடுக்க ஆரம்பித்தார்.

‘‘அப்போலோ மருத்துவமனை தந்த ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் அறிக்கையில், ‘அவர் கீழே விழுந்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்து உள்ளார்கள். அப்படியானால், ‘அவர் எங்கே, எப்படி கீழே விழுந்தார்? அவராக விழுந்துவிட்டாரா? அவரை யார் தள்ளிவிட்டது? எதற்காகத் தள்ளிவிட்டார்கள்? அதற்கு என்ன நோக்கம்?’ என்பதை விளக்க வேண்டும்.

போயஸ் கார்டனில் இருந்து டி.எஸ்.பி ஒருவர்தான் அப்போலோவின் 1066 என்ற ஆம்புலன்ஸ் எண்ணுக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். அந்த ஆம்புலன்ஸ், போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்ததும், ஜெயலலிதா அதில் ஏற்றப்பட்டதுமான காட்சிகள் கொண்ட சி.சி.டி.வி பதிவுகள் எங்கே? அப்போலோ மருத்துவமனையில் இருந்து சென்ற ஆம்புலன்ஸில்தான் ஜெயலலிதா அழைத்துவரப்பட்டார் என்றால், அவருடன் பயணம் செய்தவர்கள் யார், யார்? ஆம்புலன்ஸில் செல்லும் அளவுக்கு சீரியஸ் என்றால், ஆம்புலன்ஸ் உடனே புறப்படாமல் தாமதம் செய்யப்பட்டது ஏன்?

போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் சென்ற அடுத்த சில மணி நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் வெளியே, உள்ளே, இரண்டாம் தளம் ஆகியவற்றில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்? அப்போலோவில் கேமராக்கள் அகற்றப்பட்டாலும், போயஸ் கார்டன் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் உள்ளன. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஏன் இதுவரை வெளியிடவில்லை? எது எதற்கோ அறிக்கை விடுபவர்கள், இதற்கு பதில் சொல்லி அறிக்கை விடாததன் மர்மம் என்ன?



ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாந்தாராம், 2016 மே மாதமே ‘உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் சரியில்லாமல் இருப்பதால் பக்கவாதம் வரப்போகிறது’ என்று எச்சரித்துள்ளார். அதன்பிறகு அவரை போயஸ் கார்டன் பக்கமே அனுமதிக்காத மர்மம் என்ன? 2016-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பித்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் மாதம் வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நிறைய மர்மங்கள் புதைந்தது கிடக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் அவரது உடலில் சர்க்கரை அளவு உச்சபட்ச நிலையில் இருந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சைகள் அளித்தார்கள்?

2015-ம் ஆண்டு மே மாதமே ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மத்திய அரசு அனுமதியோடு அவரை சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ‘பாரா ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்’ சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தது. ஆனால், அந்தப் பயணத்தை ரத்து செய்தது யார்?

அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட உணவுகள் சோதனை செய்யப்பட்டு தரப்பட்டதா? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாள்களில், அவரைக் காண வந்தவர்கள் பற்றிய விவரங்களை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதனை மறைக்கக் காரணம் என்ன? தமிழகத்தில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைத்தேர்தல்களின்போது, ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. அந்தக் கைரேகை பெறப்பட்டபோது மருத்துவர்கள் பாலாஜியும், ஜான் ஆபிரஹாமும் இருந்துள்ளார்கள். ‘இதே போன்று வேறு பத்திரங்களிலும் கைரேகை பெறப்பட்டதா?’ என்ற விவரங்களை பாலாஜியிடம் விசாரிக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், ‘உயிர் இருந்தும் உடல் இயக்கம் செயல் இழந்துவிட்டதால், சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன’ என்று கூறப்பட்டுள்ளது. சிகிச்சைகளை நிறுத்துவதற்கு அனுமதி கொடுத்தது யார்? உடலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்வதற்கே ரத்த பந்தங்களின் அனுமதி தேவை என்று இருக்கும்போது, ஜெயலலிதாவுக்குச் சிகிச்சையை நிறுத்துவதற்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள்? எக்மோ உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ள யாரிடம் கையெழுத்து வாங்கினார்கள்? ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவரின் உடல் எடை 47 கிலோ குறைந்துள்ளது. அதற்குக் காரணம் என்ன?

வெளிநாட்டு மருத்துவர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க வந்தபோது, சசிகலா மட்டுமே உடன் இருந்துள்ளார். தமிழ் மட்டுமே தெரிந்த சசிகலா, தமிழே தெரியாத வெளிநாட்டு மருத்துவர்களோடு எவ்வாறு உரையாடினார்?



வாஸ்து சீனிவாசன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அதிரடி மாற்றங்களைச் செய்து, அந்த அறையை இருட்டாக ஆக்கியது ஏன்? ஜெயலலிதாவுக்கு மருந்து கொடுக்கக்கூட, நல்ல நேரம் பார்த்துக் கொடு்த்த தவற்றைச் செய்தது ஏன்?

- இப்படி பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எங்களைப் பொறுத்தவரையில் அவர் அப்போலோவுக்கு அழைத்து வரப்பட்டபோதே மர்மமான நிலைமையில்தான் இருந்துள்ளார் என்று தெரிகிறது. இந்த ரகசியங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவோம்” என்கிறார் மனோஜ் பாண்டியன்!

எய்ம்ஸ் மருத்துவர்கள் புலம்பல்!

எய்ம்ஸ் மருத்துவக்குழு அப்போலோ வந்து, ஜெயலலிதாவின் நிலையைப் பார்த்துவிட்டு டெல்லிக்குக் கிளம்பியபோது அடித்த கமென்ட்டை இப்போது சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை ‘It is a secret service, not a medical service’ என்று அந்த மருத்துவர்கள் சொன்னார்களாம்.

2011-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உதவியாக ஒரு நர்ஸை அனுப்பியுள்ளார். ஆனால், அவர் சில மாதங்களில் இங்கிருந்து அனுப்பப்பட்டார். அப்போதே மோடி, “உங்களுக்கு அளிக்கப்படும் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்” என்று ஜெயலலிதாவிடம் அறிவுறுத்தி உள்ளார். ‘‘அதையும் இந்த சம்பவங்களையும் முடிச்சுப் போட்டுப் பாருங்கள்’’ என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

எப்போதும் வரலாம்!

அப்போலோ மருத்துவமனை, ‘ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ஐந்து கோடி ரூபாய்’ என்று சொல்லியிருந்தது. ஆனால், அவருடைய சிகிச்சை செலவு 7.8 கோடி ரூபாய் என்கிறார்கள். அதில் உணவுச் செலவு மட்டும் 30 லட்ச ரூபாய் என்று கணக்குக் காட்டியுள்ளார்கள். ‘‘30 லட்சம் ரூபாய்க்கு உணவுச்செலவு என்றால் தினமும் யார் யாரெல்லாம் அங்கு இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்’’ என்று ஜனாதிபதியிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ‘சி.பி.ஐ வரும்போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமாரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயலலிதாவுடன் இருந்த சிவகுமார், சமீப காலமாக எங்கும் தலைகாட்டவில்லை. இதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. மருத்துவமனையில் சசிகலாவின் நிழலாக இருந்தவர், அவருடைய உதவியாளர் கார்த்திகேயன். அவருக்கும் அனைத்தும் தெரியும்’’ என்கிறார்கள் இவர்கள்.

‘சி.பி.ஐ., எந்த நேரத்திலும் வந்து வளைக்கலாம்’ என்று சொல்கின்றன டெல்லி தகவல்கள்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...