Friday, March 31, 2017

தமிழக விவசாயிகளுக்கும் உதவ வேண்டும்
மீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், உத்தரபிரதேசத்தில் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற தணியாத வேட்கையில், பா.ஜ.க. பல வாக்குறுதிகளை அளித்தது. அதிலொன்று, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடனை ரத்து செய்வோம்’ என்ற வாக்குறுதியாகும். மக்கள் இமாலய வெற்றியை பா.ஜ.க.வுக்கு அளித்தனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், உத்தரபிரதேச அரசு விவசாய கடன்களை ரத்துசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

 இதிலென்ன ஆச்சரியம் என்றால், இந்த கடன்சுமையை மத்திய அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய விவசாய மந்திரி ராதாமோகன் சிங் பாராளுமன்றத்திலேயே உடனடியாக அறிவித்து விட்டதுதான். உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் விவசாய கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரவில்லை. வாழ்வா, சாவா என்றநிலையில், கடன்சுமையில் தத்தளிக்கும் தமிழக விவசாயிகளும் அதைத்தான் கேட்கிறார்கள்.

டெல்லியில் கடந்த 17 நாட்களாக விவசாய சங்கத்தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் 84 விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். ‘‘விவசாயிகள் பெற்ற பயிர்கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும். தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அணைகட்டி கொண்டிருப்பதை தடுக்கவேண்டும்.

 நடுவர்மன்ற தீர்ப்புப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி பங்கீட்டு ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்கவேண்டும். தமிழகத்துக்கும், மற்ற மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பிரச்சினைகளை விரைந்து தீர்க்கவேண்டும். நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றிட வேண்டும். விவசாய விளைபொருட்களுக்குரிய விலை கிடைத்திடவேண்டும். வறட்சி நிவாரண நிதியாக தமிழக அரசு கோரும் ரூ.40 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்’’ என்பது உள்பட பலகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது பிரதமர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றவகையில் கழுத்தில் மண்டை ஓடுகளை தொங்கவிட்டும், அரை நிர்வாண கோலத்திலும், கையில் திருவோடுகளை ஏந்திக்கொண்டும், மொட்டைஅடித்தும், ஒரு விவசாயியை சடலமாக கிடத்தியும், பிரதமர் மோடியின் உருவத்தை அணிந்தும், எலி, பாம்புக்கறியை வாயில் வைத்தும், தியானம் செய்தும் பல்வேறுவிதமான போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் அவர்களை சந்தித்தனர். ஜனாதிபதியிடம் அழைத்துக்கொண்டு போனார்கள். மத்திய மந்திரிகளிடமும் அழைத்துச்சென்று கோரிக்கை விடுக்க வைத்தனர். ஆனால், பலன் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. வடகிழக்குப்பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் பொய்த்துப்போன நிலையில், கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் தமிழ்நாடு வாடிக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடே வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கே தமிழகம் முழுவதும் விவசாயிகள் உள்பட அனைத்து மக்களும் மிகமிக கடுமையாக தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், மத்திய அரசாங்கம் இன்னமும் உதவிக்கரம் நீட்டவில்லை. ஏற்கனவே தமிழக அரசு வறட்சிக்காக மட்டும் ரூ.39 ஆயிரத்து 565 கோடி வேண்டும் என்று கேட்டநிலையில், வார்தா புயல் நிவாரணத்துக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் சேர்த்து மத்திய அரசாங்கம் வெறும் ரூ.2,096 கோடியே 86 லட்சம் மட்டும் கொடுத்திருப்பது, வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

 டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார்கள் என்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, உத்தரபிரதேசத்தின்மீது கொண்டுள்ள கரிசனத்தைபோல், தமிழகத்தின் மீதும் இரக்கம்காட்டி உதவி செய்யுங்கள் என்பதுதான் தமிழக விவசாயிகளின் கோரிக்கை. எல்லா மாநிலங்களும் மத்திய அரசாங்கம் என்ற தாயின் குழந்தைகள் என்றவகையில் பாரபட்சம் காட்டுவதை விட்டுவிட்டு, மிகவும் நலிந்து போயிருக்கும் தமிழ்நாடு என்ற குழந்தைமீது அதிக கவனம் செலுத்தவேண்டியதுதான் மத்திய அரசாங்கம் எனும் தாயின் கடமையாகும்.

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...