Friday, April 14, 2017

திருமங்கலம்-நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் 80 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

ஏப்ரல் 14, 04:30 AM

சென்னை,

சென்னை திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் நேரு பூங்கா வரை பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தப்பாதையில் திருமங்கலம்-ஷெனாய் நகர் வரை 3.3 கி.மீ. தூரத்துக்கு இருவழி சுரங்கப்பாதையும், ஷெனாய் நகர் முதல் நேரு பூங்கா வரை 4.3 கி.மீ. தூரத்துக்கு ஒரு வழி சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சோதனை ஓட்டம் நடந்துவந்த நிலையில், மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று முன்தினம் ஆய்வுப்பணியை தொடங்கினார்.

80 கி.மீ. வேகம்

முதல் நாள் திருமங்கலம்-ஷெனாய்நகர் வரை இரு வழி சுரங்கப்பாதையில் ஆய்வு நடந்தது. 2-ம் நாளான நேற்று காலை நேரு பூங்கா முதல் ஷெனாய்நகர் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் ஆய்வு தொடங்கியது. நேரு பூங்காவில் இருந்து ஷெனாய் நகர் வரை டிராலியில் சென்று ஆணையர் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் நேற்று மாலை திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்கா வரை 7.6 கி.மீ. தூரத்துக்கு 80 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “பாதுகாப்பு ஆணையர், திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை 2 நாட்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியில் ஒரு சில மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தி உள்ளார். அந்த மாற்றங்கள் செய்த பின்னர் ஆய்வு செய்யப்பட்டு, முறையாக பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிகிறது. மே மாதம் ரெயிலை இயக்குவதற்கான போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும்” என்றனர்.

 நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவு ‘சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் என் முன் ஆஜராக வேண்டும்’

ஏப்ரல் 14, 04:30 AM

கொல்கத்தா,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ளவர், தமிழ்நாட்டின் சி.எஸ். கர்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கி‌ஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சம்மன் பெற்றும் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 31–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதிரடி உத்தரவு

இந்த நிலையில் நீதிபதி கர்ணன், நேற்று கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் கையெழுத்திட்டு அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

அதில் அவர், ‘‘மார்ச் 31–ந்தேதியன்று, எனது மனநலம் எப்படி இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் கேள்வி எழுப்பினார். அதை அவரது அமர்வில் இடம்பெற்றிருந்த 6 நீதிபதிகளும் வழிமொழிந்தனர். திறந்த நீதிமன்றத்தில் இவ்வாறு அவர்கள் கூறி என்னை அவமதித்தனர். எனவே அந்த 7 பேரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989–ன்படி குற்றவாளிகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.‘ஆஜராக வேண்டும்’

இது தொடர்பாக நீதிபதி கர்ணன், கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் அமர்வு, என்னை வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் அவமதித்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்டம், 1989–ஐ மீறிவிட்டனர். இது தொடர்பாக நான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அவர்களை கூறி உள்ளேன்.

வரும் 28–ந்தேதி காலை 11.30 மணிக்கு எனது ரோஸ்டேல் உறைவிட கோர்ட்டு (இல்லம்) முன்பாக 7 நீதிபதிகளும் ஆஜர் ஆவார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச்சட்ட மீறலுக்காக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை பற்றிய தங்களது கருத்துகளை கூறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, April 13, 2017

ஜியோவுக்கு பின்... நீரை மகேந்திரன்


தினசரி ஏதாவது ஒரு அதிரடி அறிவிப்பு, அல்லது சர்ச்சை என தன்னை ‘லைம் லைட்’டிலேயே வைத்துக் கொண்டிருப்பது பிரபலங்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆனால் அதையே நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் இதன் மூலம் சந்தையின் கவனத்தை திருப்பினால் போதும் அதிலிருந்தே ஆதாயத்தை அடைய முடியும் என்கிற நிலைமையில்தான் உள்ளன இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள்.
இண்டர்நெட் டேட்டா விஷயத்தில் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குள் நடக்கும் போட்டி சமீப காலத்தில் மிகத் தீவிர நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் அதுநாள் வரை யில் சந்தையை கையில் வைத்திருந்த நிறுவனங் கள் ஆட்டம் காணத் தொடங்கின. ஏர்டெல் நெட் நியூட்ரலிட்டி, பேஸ்புக் பிரீ பேஸிக்ஸ் உள்ளிட்ட சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் இலவச இண்டர்நெட் டேட்டா, இலவச குரல் வழி சேவை உள்ளிட்ட வசதிகளை ஜியோ அறிவித்ததும் வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ இணைப்பை பெற மணிக் கணக்கில் நின்றது நினைவிருக்கலாம்.

இதனால் இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஆர் காம், ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தன. இது தொடர்பாக டிராய், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் என பல இடங்களிலும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு புகார் அளித்தன. ஜியோ அளிக்கும் இலவச சேவையால் இதர நிறுவனங்களின் தொழில் பாதிக்கும், இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி ஏகபோகமாக ஒரு நிறுவனத்தின் வசமே செல்லும் என இந்த நிறுவனங்கள் அச்சம் தெரிவித்தன. இந்த நிலையில் ஜியோவின் இலவச சேவை போட்டியைச் சமாளிக்க இந்த நிறுவனங்களுக்கும் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் உருவானது.

டேட்டாவுக்கான சலுகை அளிப்பது தொடங்கி, நிறுவனங்களை இணைத்துக் கொள்வதுவரை இந்த நடவடிக்கைகள் அமைந்தன. ஏர்செல் - ஆர் காம், வோடபோன்-ஐடியா, ஆர்டெல்-டெலிநார் என நிறு வனங்கள் தங்களது இணைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் ஜியோ வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி ஜியோவில் இதுவரை 7.2 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக அதிகரிக்கலாம். இதன்மூலம் ஏப்ரல்-ஜூன் மாதத்துக்கான சேவைக்காக மட்டும் ரூ.4,860 கோடி வருமானத்தை ஜியோ ஈட்டியுள்ளது.

டேட்டா சலுகைகளை பொறுத்தமட்டில் ஜியோ அளித்து வரும் இலவச டேட்டாவுக்கு இணையாக இதர நிறுவனங்களின் சலுகை நிற்க முடியவில்லை. ஜியோ இலவச சேவை மார்ச் 31 வரைதான் என்கிற நிலையில், அதற்கு பின்னர் போட்டி சமநிலையில் இருக்கும் என இந்த நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால் இலவச சேவையை தொடரும் பிரைம் பிளானில் உறுப்பினராகும் காலத்தை மேலும் பதினைந்து நாட்களுக்கு நீட்டித்ததுடன், மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சேவையை தொடர்ந்துள்ளது ஜியோ. குறிப்பாக இந்த பதினைந்து நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்தால், மூன்று மாதம் இலவச டேட்டா முடிந்து நான்காவது மாதத்தில் கட்டண சேவை தொடரும் என்று பிளானை அறிவித்தது.

 ஆனால்  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய மான டிராய் இந்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை கைவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்கிறோம் என்று ஜியோ கடந்த வியாழக் கிழமை கூறியுள்ளது. ஆனால் இதுவரையில் உறுப்பினர் ஆனவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என்றும், பிரைம் உறுப்பினராக இருந்துகொண்டு ரூ.303 கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்றும் கூறியுள்ளது. ஆனால் சம்மர் சர்ப்ரைஸ் சலுகைக்கான கடைசி நாள் இன்னும் அறிவிக்கப்படாததால் ஜியோ இதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் வரை அந்த பிளானின் ரீசார்ஜ் செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் டிராயின் இந்த உத்தரவை ஜியோ ஏற்றுக் கொண்டாலும், வேறு சலுகை மூலம் அதிரடியை தொடரவும் வாய்ப்புகள் உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் இல்லாமல் தொடர்ச்சியாக இலவச சேவையை எத்தனை நாட்களுக்கு கொடுக்க முடியும் என யோசிக்கலாம். ஆனால் அது குறித்து ஜியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் ஜியோ சலுகைகளை அறிவிப்பதன் நோக்கம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி சந்தையைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். ஜியோ இந்த துறையில் 3,000 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. ஒருவேளை இந்த சலுகைகளுக்காக 100 கோடி டாலரை ஒதுக்கியிருக்கலாம்.

அதே நேரத்தில் கடந்த வாரங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 50 கோடி டாலர் சரிந்துள்ளது. ஜியோவின் தொடர்ச்சியான சலுகையால் சந்தை மதிப்பிலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுவரும் நிறுவனங்களில் ஏர்டெல் முக்கிய இடம் வகிக்கிறது.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 30 ஜிபி இலவச டேட்டா, ரூ.345க்கு தினசரி 1 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் குரல் வழி சேவை என பிளான்களை அறிவித்துள்ளது. ஏர்டெல் டூ ஏர்டெல் நெட்வொர்க்கில் ரூ.143க்கு 2ஜிபி டேட்டா என போட்டியை அளிக்கிறது. இதற்கிடையில் விரைவான நெட்வொர்க் என்று ஊக்லா நிறுவனத்தின் சான்று மூலமாக கடுமையான போட்டியையும் ஏர்டெல் ஜியோவுக்கு கொடுத்து வருகிறது. ஆனால் இந்த விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏஎஸ்சிஐ) ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. காரணம் அந்நிறுவனம் விளம்பரப்படுத்திய அளவுக்கு உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஜியோவுக்கும் ஏர்டெல் நிறுவனத்துக்கு இடையில் நடக்கும் போட்டியைவிட வோடபோன், ஐடியா நிறுவனங்களின் ஆபர்கள் போட்டியிலேயே இல்லை என்றே சொல்லலாம். வோடபோன்-ஐடியா இணைப்புக்கு பிறகு புதிய நிறுவனத்தின் பிளான்களுக்கு பிறகே ஜியோவுக்கு போட்டி உருவாகுமா என்பதை சொல்ல முடியும். இப்படியான தனியார் நிறுவனப் போட்டிகளோடு பொதுத்துறை நிறுவனங்களான எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக டேட்டாவை அளிக்கத் தொடங்கியுள்ளன.

எம்டிஎன்எல் நிறுவனம் தினசரி 2 ஜிபி டேட்டா பிளான் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியி லிருந்து ரூ.319க்கு தினசரி 2ஜிபி 3ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் குரல் சேவையையும் அறிவித் துள்ளது. மும்பை, டெல்லி வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. ரூ.339க்கு பிஎஸ்என்எல் நிறுவனமும் நாடு முழுவதும் இதேபோன்ற சலுகையை 90 நாட்களுக்கு அறிவித்துள்ளது.

டிராய் அமைப்பின் சமீபத்திய புள்ளி விவரங் கள்படி இந்தியாவில் தொலைதொடர்பு வசதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டுள்ளது. இதில் 25 சதவீத சந்தையை வைத் திருக்கும் நிறுவனமே மிகப் பெரிய நிறுவனமாக உருவாகும். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இண்டர்நெட் டிவி தொழிலிலும் இறங்குகிறது. தொலைத் தொடர்பு சேவைக்காக ரூ. 1,50,000 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலவச சலுகைக்கு தொடர்வதற்கு டிராய் உத்தரவு தற்காலிகமாக தடையாக இருக்கலாம். ஒருவேளை வாடிக்கையாளர்கள் வெளியே செல்லும்பட்சத்தில் இதைவிடவும் அதிகமான சலுகைகளை வழங்க வேண்டிய நெருக்கடி ஜியோவுக்கு உள்ளது என்று கூறுகின்றனர் சந்தை நோக்கர்கள். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சலுகை இந்த வகையிலானதுதான் என்று குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் ஜியோவின் வாடிக்கையாளர் வளர்ச்சி சீராக உயர்ந்திருந்தால் இந்த சிக்கல் இல்லை. மாதா மாதம் சலுகைகளை அளித்திருந்தால் அதன் மூலம் உருவாகும் வாடிக்கையாளர்களே நீடிப்பார்கள் என்று கிரெடிட் சூயிஸ் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ உருவாக்கிவரும் நெருக்கடி அதற்கே திரும்புவது மாத்திரமல்ல, தொடர்ச்சியாக இலவச சேவைகளை தொடர்வது இதர சேவை நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய தொந்தரவாகவே அமைகிறது. ஒப்பீட்டளவில் சந்தை மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்து நிறுவன கட்டணங்களையும் ‘டிராய்’ முறைப்படுத்த வேண்டியது அவசர அவசிய மாகும்.
- maheswaran.p@thehindutamil.co.in

மனதில் நிற்கும் மாணவர்கள் 06: ஏறுங்கய்யா பெருமாள்முருகன்

ஓவியம்: முத்து | உள்படம்: ராஜ்குமார்

தீத ஆற்றல் கொண்ட மாணவர்கள் மிகச் சில பேர்தான் இருப்பார்கள். ஆசிரியர்களின் மொழியில் சொன்னால் ‘அவர்களைக் கட்டி மேய்ப்பது கஷ்டம்.’ அவர்கள் படிப்பைப் பற்றிப் பெரிதாக அக்கறைப்படுவதில்லை. ஒரு வகுப்புகூடத் தவறாமல் வந்து உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் நிறையத் தாள்களில் நிலுவை வைத்திருப்பது வெகு சாதாரணம். ஆனால் ஆற்றலாளர்களான மாணவர்கள் வகுப்புக்கு வருவது அரிதாகவே இருக்கும். ஆனால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றாவது எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள்.

வெளியே போ!

சாதாரண மாணவர்களை வெளியே போ என்றால், அதை அவமானமாக நினைத்துப் பெரிதும் தயங்குவார்கள். இந்த ஆற்றலாளர்களுக்கு அதுவெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. “வெளியே போ” என்றால், உடனே போய்விடுவார்கள். இதில் மட்டும் ஆசிரியர் சொல்லைத் தட்டுவதில்லை. சொன்னதும் தைரியமாக எழுந்து உடனே ஒரு மாணவன் வெளியே போனால், ஆசிரியர் அதைத் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுவார். ஆசிரியர் உடனே அவன் முதுகுக்குப் பின்னால் கத்துவார். “இன்னமே என்னோட வகுப்புக்கு நீ வராத.” சிலரை அப்படி வரவே கூடாது என்று நிரந்தரமாகக் கட்டுப்படுத்தி வைத்துவிடுவதும் உண்டு.

அம்மாணவர்களே வகுப்பை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள். அவர்கள் செய்யும் சேட்டைகளை, குறும்புகளை, சொல்லும் சொற்களை சக மாணவர்களைப் போலவே ஆசிரியரும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அப்புறம் பிரச்சினையே இல்லை. வகுப்பு அப்படியொரு சந்தோஷமாகப் போகும். பேசா மடந்தைகளாக இருக்கும் மாணவர்கள் வகுப்புக்குச் சோர்வைத் தருபவர்கள். பேசுபவர்கள் சிலராவது இருந்தால்தான் வகுப்புக்குச் சுவை கூடும்.

அடங்காத தோல்வியாளர்

ஆற்றலாளர்கள் எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமானவர்கள். அவர்களுக்கு நிறைய இடம் கொடுப்பேன். என் எல்லைக்குள் அவர்களை எவ்வளவு அனுமதிக்க முடியுமோ அவ்வளவு வரைக்கும் இயல்பாக விடுவதுண்டு. விட்ட பிறகு வழிப்படுத்தலாம். “படி” என்று சொன்னால் படிப்பார்கள். ‘இதை உடனே செய்’ என்றால் ஏனென்று கேட்காமல் செய்வார்கள். நம்பிக்கையும் அன்பும் நிறைந்த மனம் கொண்டவர்கள் அவர்கள். ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்தால் மிகச் சிறப்பாக நிறைவேற்றுவார்கள். தலைமைப் பண்பை எளிதாக அடைவார்கள்.

நான் துறைத் தலைவராக இருந்தபோது பயின்ற மாணவர் ராஜ்குமார். சேட்டை என்றால் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்சினையைக் கொண்டுவருவார். பின்னணியில் இருந்துகொண்டு சிலரை இயக்கவும் செய்வார். அவர் வகுப்பு மாணவர் ஒருவரைப் பேரவைத் தேர்தலில் நிற்க வைத்துப் பெருமளவு பிரச்சாரம் செய்தார். ஆனால் தோல்விதான் கிடைத்தது. வெற்றியாளர்கள் அமைதியாகிவிடுவார்கள். தோல்வியாளர்கள் அடங்க மாட்டார்கள். வெகுண்டெழுந்து விதவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கல்லூரி முதல்வர் என்னை அழைக்கிறார் என்று தகவல் வந்தாலே “ராஜ்குமார் ஏதோ செய்துவிட்டார்” என்று அர்த்தம்.

வரம்புக்குள் வந்த குறும்பு

ஒருமுறை பெரிய பிரச்சினை ஒன்றில் அவரும் அவர் நண்பர்கள் சிலரும் சிக்கிக்கொண்டனர். கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுப்பது உறுதி என்று தெரிந்தது. இடைநீக்கம் செய்து மாதக் கணக்கில் கல்லூரிக்கு வர விடாமல் செய்வது நோக்கமாக இருந்தது. என்ன செய்வது என்று என்னிடம் வந்து நின்றார்கள். யோசனை சொன்னேன். முதல்வர் அதே பகுதியைச் சேர்ந்தவர். அவரது வீட்டுக்குப் போய்ப் பணிவாக நில்லுங்கள். அவர் பேசுவார், நீங்கள் கேட்டுக்கொண்டு நின்றால் போதும், பிரச்சினை தீர்ந்துவிடும் என்றேன். 

பாம்பின் கால் பாம்பறியும்.  அந்தப் பிரச்சினையில் என் யோசனை பலித்ததால், ராஜ்குமார் கொஞ்சம் என் கட்டுக்குள் வந்தார். அவரது ஆற்றலை ஏதாவது வழிக்குள் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு ‘இலக்கிய மன்ற’ நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்கச் செய்தேன். நன்றாகப் பாடும் திறனும் கொண்டவர். அவர் குறும்புப் பேச்சும் சேட்டைகளும் வரம்புக்குள் வந்ததால் எல்லோரும் ரசித்தனர். அவருக்கு நல்ல கவனமும் கிடைத்தது. திருப்தியாக இருந்தார்.

இப்படி ஏமாந்துபோனோமே!

இரண்டாமாண்டு படிக்கும்போதே ஊரில் ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணமும் செய்துகொண்டிருந்தார். ஆனால் அந்தத் தகவலைக் கல்லூரியில் பரவாமல் காத்துக்கொண்டார். தெரிந்த சிலர் என்னிடம் சொன்னார்கள். நான் அவரைக் கேட்டேன். திருமணம் ஆகிவிட்டது என்று உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மூன்றாமாண்டு முடித்தபோது ராஜ்குமார் எல்லாத் தாள்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரது வகுப்பு நண்பர்கள் முதுகலைப் படிப்புக்காக திருச்சி, சேலம், கோவை என்று போய்ச் சேர முயன்றுகொண்டிருந்தனர். ராஜ்குமாரிடம் மேலே படிக்க யோசனை சொன்னேன். துறை ஆசிரியர்கள் எல்லாரும் அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்.

ஒருமுறை கல்லூரிக்கு அவர் வந்தபோது ஆசிரியர்களின் ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் இடம் கொடுக்காமல் ‘சென்னை, தியாகராயா காலேஜ்ல எம்.ஏ. சேந்துட்டன்’ என்று சொன்னார். நானும் மிகவும் சந்தோஷப்பட்டு அந்தக் கல்லூரியில் பணியாற்றும் என் நண்பர் ஒருவரைச் சொல்லிப் போய்ப் பார்க்கும்படியும் நன்றாகப் படிக்கும்படியும் அறிவுரை சொன்னேன்.
எல்லாம் நல்ல பிள்ளையாகக் கேட்டுக் கொண்டார். பின்னர் விசாரித்தபோது தெரிந்தது, சென்னை தியாகராயா கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பே இல்லை என்னும் விவரம். இப்படி ஏமாந்து போனோமே என்று ஆசிரியர்கள் பேசிச் சிரித்தோம். அப்போதுதான் அவர் திருமணம் செய்துகொண்ட செய்தியும் உறுதியாயிற்று. திருமணம் செய்த பிறகு வெளியூர் போய்ப் படிக்க வாய்ப்பேது?

ஏறினேன் மகிழ்ச்சியோடு

எனினும் நல்ல ஆற்றலாளரான ராஜ்குமாரின் வால் சுருண்டுவிடவில்லை. அஞ்சல் வழியில் படித்து எம்.ஏ., பி.எட். பட்டம் பெற்றார். தொழில்துறையில் இறங்கி நல்ல சம்பாத்தியத்தோடு வளமாக வாழ்கிறார். அவர் மகன் இப்போது என் மாணவர். சமீபத்தில் தான் வாங்கிய காரைக் கொண்டுவந்து எனக்குக் காட்டிய ராஜ்குமார் ‘ஏறுங்கய்யா, ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்’ என்றார். நானும் ஏறினேன் பெருமகிழ்ச்சியோடு.

பெருமாள்முருகன், எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர். தொடர்புக்கு: murugutcd@gmail.com

நடிகர் விஷாலுக்கு ஒரு வேண்டுகோள்: இயக்குநர் தங்கர்பச்சான் உருக்கமான கடிதம்



குண்டூசி உற்பத்தி செய்பவன் கூட பொருளுக்கு அவனே விலை வைத்துக் கொள்கிறான். 130 கோடி மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்திசெய்து தரும் உழவனால், அவன் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள முடிய வில்லை.

ஒரு குடும்பம் முழுவதுமே இரவு பகலாக உழைக்கிறார்கள். அறுவடைக்குப் பின் அவர்கள் முதலீடு செய்த பணம் கூட திரும்பி வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அத்தனை பேர்களுக்கும், அவ்வளவு கால உழைப்பையும் கணக்கிட்டு அதற்கான ஊதியம், முதலீடு, அதற்குமேல் கூடுதலாக லாபம் எனச் சேர்த்து உற்பத்திப் பொருளுக்கான விலை கொடுத் தால் விவசாயிகள் எதற்காக போராடப்போகிறார்கள்?

இதைப் புரிந்துகொள்ளாமல் நடிகர் விஷால் போன்றவர்கள் ஏதோ ஒரு விவசாயியின் வங்கிக் கடனை மட்டும் அடைக்க பணம் கொடுப்பதும், விவசாயத்துக்கு உதவ நிதி திரட்டப் போகிறேன் எனச் சொல்வதும், ஒரு சினிமா டிக்கெட் கட்டணத்தில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரப் போவதாக அறிவிப்பதும் விவசாயிகளுக்கு பயனளிக்காது.

விஷால் இன்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலுமே முதன்மை பொறுப்புக்களை வகிக்கிறார். தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஒரு படம் கூட விவசாயிகளின் சிக்கலை பேச மறுக்கிறது. சில நேரங்களில் ஒன்றிரண்டு படங்கள் உருவானாலும் அவை அறிமுக நடிகர்கள் நடித்த படங்களாகவே இருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகர்களாக திகழும் நடிகர்கள் கூட ஒரே ஒரு படத்தில் கூட விவசாயிகள் குறித்து கவலைப்பட்டதில்லை.

நடிகர் விஷால் மனது வைத்திருந் தால் இந்த 15 வருடங்களில் தமிழர்களின் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று குறித்தாவது ஒரு படத்தில் நடித்திருப்பார். ஈழத் தமிழர்களின் துயரம், போராட்டம் குறித்த ’தாய் மண்’ என்னும் கதையை நான் அவரிடம் சொல்லி அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கத் தயாராக இருந்தபோதும் ஏனோ அந்தப் படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார்.
உண்மையில் விவசாயிகளின் அடிப்படை பிரச்சினை என்ன என்பதை புரிந்துகொள்ள விஷால் முயற்சி செய்ய வேண்டும். அவற்றை புரிந்துகொண்ட பிறகு, அவர்களின் பிரச்சினைகளை உங்கள் நடிப்புக் கலையின் மூலம் உலகுக்குத் தெரிய வைக்க முயற்சி செய்யுங்கள். இன்றைய திரைப்படக் கலை உலகம் முழுக்க அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையையும், சிக்கல்களையும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் கதாநாயகன் என்கிற பேரில் நடைமுறைக்கு உதவாத வன்முறைகளை விதைத்துக் கொண்டும், பெண்ணுடலை சந்தைப் படுத்தி ஆடவிட்டுக்கொண்டும் இயல்பான திரைப்படம் ஒன்றைக் கூட உருவாக்காமல் இருக்கிறீர்கள். முதலில் நீங்கள் இது பற்றி மட்டும் கவலைப்படுங்கள்.

அடுத்ததாக, தயாரிப்பாளர் களின் பணத்தில் இருந்து ஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறீர்கள். நானும் ஒரு தயாரிப்பாளன் என்கிற முறையில் கேட்கிறேன்; நீங்கள் பல படங்களில் நடித்திருக்கிறீர்கள். பல படங்களை சொந்தமாக தயாரித்திருக்கிறீர்கள். அதில், எத்தனை படங்களில் முதலீடு செய்த பணம் திரும்பி வந்திருக்கிறது? ஒருவேளை லாபம் கிடைத்திருந்திருந்தால், அது ஒரு சிலருக்குத்தான் என்பதும் உங்க ளுக்குத் தெரிந்திருக்கும். செலவு செய்த பணம்கூட திரும்பி வராமல் செத்து மடியும் விவசாயிகளின் நிலைதான் இன்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலையும்.

தயாரிப்பு செலவில் பாதிக்கும் மேல் நடிகர்களின் சம்பளத்துக்கே போய்விடுகிறது. அதனால் பல தயாரிப்பாளர்கள் நட்டப்பட்டு, திரைத்துறையைவிட்டே போய் விடுகிறார்கள். தற்கொலையும் செய்துகொண்டுவிடுகிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை லாபம் என கேட்கிற பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் சென்றுவிடுகிறீர்கள்.

உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால், நீங்கள் பதவியில் இருந்த காலத்தில் தயாரிப் பாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, நடிகர் சங்கத்தில் சம்பளக் கட்டுப்பாடுகளை உருவாக்கி, தயாரிப்பாளர்களைக் காப்பாற்றி இருக்கலாம். லாபம் வராமல் போனாலும் முதலீடு செய்த பண மாவது திரும்பிவர உத்தரவாதம் கிடைத்திருக்கும். நடிகர்கள் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் உங்களிடத்திலேயே தயாரிப்பாளர் சங்கமும் வந்துவிட்டது. கடனால் தற்கொலை செய்துகொள்பவர்கள் விவசாயிகள் மட்டுமில்லை; தயாரிப்பாளர்களும்தான் என்பது விஷாலுக்குத் தெரியாமல் இல்லை.

முதலில் நடிகர்களை ஒருங் கிணைத்து தயாரிப்பாளரே நஷ்டம் முழுவதையும் ஏற்கும் நிலையில் இருந்து விடுவிக்க லாபம் - நஷ்டம் இரண்டிலும் பங்கு வகிக்கும் புதிய நிபந்தனைகளை உருவாக்கி, அழிந்து வரும் தயாரிப்பாளரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு விவசாயிகளுக்கு உதவுவது பற்றி கவலைப்படலாம். உணவு படைத்த விவசாயியாகவும், மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக் கும் தயாரிப்பாளனாகவும் இருக் கின்ற தன்மானமுள்ளவன் என்பதால் தான் இந்த வேண்டுகோளை உங்களி டத்தில் நான் முன்வைக்கின்றேன்.

வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்?

    தியாகச்செம்மல்
    தகவல் உதவி: சுரேஷ்

அமைச்சர் விஜயபாஸ்கர் படம்: க.ஸ்ரீபரத்.
அவ்வளவு தத்ரூபமாக ஜெயலலிதாவின் படத்தை அதற்கு முன் யாரும் வரைந்திருக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வரையப்பட்டிருந்த அந்த கோலமாவு ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா அப்போது அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் யார் இந்த ஏற்பாட்டையெல்லாம் செய்தது என்று கேட்கிறார், அதற்கு இந்த ஏற்பாடுகளை மருத்துவ மாணவரான தனது மகன் அண்ணாமலையும், அவரது நண்பரும் மருத்துவ மாணவரான விஜயபாஸ்கரும் ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். அப்போது தொடங்கியது, விஜயபாஸ்கரின் அரசியல் அத்தியாயம்.

இன்று வருமான வரித் துறையின் வளையத்திற்குள் சிக்கியுள்ள விஜயபாஸ்கரின் அரசியல் வளர்ச்சி அபரிமிதமானது. புதுக்கோட்டை மாவட்டம் இராப்பூசல் கிராமத்தில் பிறந்தவர் விஜயபாஸ்கர். இவரின் தந்தை சின்னதம்பி அதிமுகவின் தீவிர விசுவாசி. அதுவே ரகுபதி அளித்த அறிமுகத்தின் போது ஜெயலலிதாவின் கவனத்தை முழுவதுமாய் பெற வாய்ப்பை அதிகரித்தது.
அதிமுக மாணவர் அணியில் இணைந்த குறுகிய காலத்தில் அதன் மாநில செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 2001-ல் முதல் முறையாக புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று இளம் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றார். 2001 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில் பெரிய அளவில் அதிகாரத்தில் வளர முடியாமல் போனாலும், கட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். குவாரி, பொறியியல் கல்லூரி என்று தனிப்பட்ட வளர்ச்சியும் விஜயபாஸ்கருக்கு சாத்தியமானது.

ஆனால் 2006-ல் சட்டமன்றத்துக்கு போட்டியிட விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் அந்த காலகட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த காரணத்தால், விஜயபாஸ்கர் பல்வேறு போராட்டங்கள், கூட்டங்கள் என கட்சிப் பணியில் தீவிரம் காட்டினார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக முதலில் வெளியிட்ட பட்டியலில் விஜயபாஸ்கருக்கு திருவெறும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் விராலி மலை தொகுதி விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டு, 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதில் முக்கியமானது தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த ரகுபதியை தோற்கடித்து விஜயபாஸ்கர் பெற்ற வெற்றியாகும்.

(அதிமுக போஸ்டர் | படம்: எல்.சீனிவாசன்)
முதல் 2.5 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக மட்டும் இருந்த விஜயபாஸ்கருக்கு 2013-ம் ஆண்டு மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்து சட்டப்பேரவையில் பேசிய அடுத்த நாளே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இருப்பினும் ஆட்சி முடியும் வரை செல்வாக்கு பெற்ற இளைய அமைச்சர்கள் பட்டியலில் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் இருந்தது.

2016-ம் ஆண்டு மீண்டும் அதிமுக அரசு அமைந்த போது விஜயபாஸ்கருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும், ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஜெயலலிதாவால் விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக விஜயபாஸ்கருக்கு எதிர் முகாமில் இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வைரமுத்துவுக்கு மாவட்ட செயலாளர் பதவி ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது. இப்போது வரை கட்சிக்குள் விஜயபாஸ்கருக்கு எந்தப் பதவியும் இல்லை.
அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்கள் முழுமையாக நடந்தவற்றை உடன் இருந்த பார்த்த ஒரே தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும்தான். மூத்த அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கூட விஜயபாஸ்கர் ஆட்களால் தடுக்கப்பட்டதாக பின்னர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார். அந்த அளவுக்கு விஜயபாஸ்கர் சசிகலா தரப்பினரிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்ற காலகட்டத்தில் அவருக்கு பதிலாக சசிகலா கட்சி, ஆட்சி ஆகிய இரு பொறுப்புகளையும் ஏற்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த ஆர்.பி.உதயகுமார் வரிசையில் விஜயபாஸ்கரும் வலுவாக தனது இடத்தை நிலை நிறுத்தினார்.
ஏற்கெனவே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி தேடி தந்த அனுபவத்தை, ஆர்.கே.நகரிலும் காட்டினார் விஜயபாஸ்கர். ஆர்.கே.நகர் தேர்தலில் இவர் காட்டிய முனைப்பு மற்ற மூத்த அமைச்சர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்கு கையாளப்பட்ட உத்திகளில் ஒன்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரின் ஆதரவைப் பெறுவது. இந்த பொறுப்பு விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டதாகவும், டிடிவி தினகரனை சரத்குமார் சந்தித்த போது, சரத்குமார் உடனேயே வந்திருந்த விஜயபாஸ்கர் முழு சந்திப்பிலும் உடன் இருந்தார்.

இந்தத் தொடர்புதான் வருமான வரித்துறையின் வளையத்திற்குள் விஜயபாஸ்கரோடு சேர்ந்து சரத்குமாரையும் நிறுத்தியது.

வருமான வரித்துறை சோதனை, பல மணி நேரங்கள் நீடித்த விசாரணையில் கேட்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகள் ஆகியவை, மருத்துவர் விஜயபாஸ்கரை கேள்வி வேள்வியில் சிக்க வைத்துள்ள நிலையில் சென்னையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அதிமுக போஸ்டர்களில் வேள்வியில் விழைந்த கேள்வியின் நாயகனே என்று டிடிவி தினகரன் புகழப்பட்டுள்ளார். கேள்வியின் நாயகன் தினகரன் என்றால் அவருக்காக வேள்வியில் விழுந்தவர் விஜயபாஸ்கரா?

NEET SUPER SPECIALITY 2017-18


ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...