Tuesday, May 2, 2017

இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க முதல் நாளில் 4,738 விண்ணப்பம்

பதிவு செய்த நாள் 02 மே 2017 01:45

சென்னை, அண்ணா பல்கலை, இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, முதல் நாளான நேற்று, 4,738 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு நடத்தும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலை மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, மாலை, 6:00 மணி நிலவரப்படி, 4,738 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

அவர்களில், ௪௮ பேர் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, ஆன்லைன் பதிவு மையம் மூலமாக விண்ணப்பித்து உள்ளனர்.மே, 31 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப பிரதியை, ஜூன், 3க்குள், அண்ணா பல்கலையில், தபாலிலோ, நேரிலோ
சமர்ப்பிக்கலாம். விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டில் சேர விரும்புவோர், உரிய ஆவணங்களுடன், அண்ணா பல்கலைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.'பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்புவோருக்கு விண்ணப்பிக்கும் தேதி, தனியாக அறிவிக்கப்படும்' என, இன்ஜி., கவுன்சிலிங் மாணவ சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பதிவு செய்த நாள் 02 மே  2017

சென்னை, இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால், டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, அரசு டாக்டர்கள், நடத்தி வரும் போராட்டம், நேற்று, 13வது நாளாக நீடித்தது. இதனால், நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். 'டாக்டர்களின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்' என, மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வில், இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. 'நீதிமன்ற உத்தரவை பொறுத்தே போராட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என, முடிவு செய்வோம்' என, டாக்டர்கள்
கூறுகின்றனர்.
முதியோர் இல்லம் அருகே மதுக்கடை கூடாதுஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 02 மே 2017

00:24 சென்னை, 'முதியோர் இல்லம் அருகிலும், மதுக்கடைகளை திறக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, அய்யம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜு தாக்கல் செய்த மனு:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும். வேறு இடங்களுக்கு மாற்றுவதாகக் கூறி, அய்யம்பாளையம் கிராமத்தில், முதியோர் இல்லம் அருகே, மதுக்கடையை திறக்க முயற்சி நடக்கிறது.

இங்கு, முதியோர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் பிரச்னைகளுக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுக்கடையை இங்கு திறந்தால், பொதுமக்கள் மட்டுமின்றி, முதியோரும் பாதிக்கப்படுவர்.
முதியோர் இல்லம் அருகே, மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை. எனவே, அய்யம்பாளையத்தில், முதியோர் இல்லம் அருகே, மதுக்கடையை திறக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மதுபான சில்லரை விற்பனை விதிகளில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே, மதுக்கடைகளை திறக்கக் கூடாது என, கூறப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட துாரத்தில் தான், மதுக்கடைகளை திறக்க முடியும்.

இந்த விதிகளில், முதியோர் இல்லம் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும், மன உளைச்சலுக்காக சிகிச்சை பெறும் முதியோர்களில், குறிப்பாக, பெண்கள் அதிகமுள்ள முதியோர் இல்லங்கள் அருகிலும், மதுக்கடைகளை திறப்பதில், வரையறுக்கப்பட்ட துாரத்தை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதிரடி.. .!
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்...
போலீஸ் உதவியுடன் மே 4ல் மனநலத்தை பரிசோதிக்க உத்தரவு


புதுடில்லி: 'கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, சி.எஸ்.கர்ணனுக்கு, வரும், 4ல், போலீஸ் உதவியுடன் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கடந்த ஆண்டு, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போது, அந்த உத்தரவை ரத்து செய்து, தானாகவே உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கினார். பின், மன்னிப்பு கேட்டு, கோல்கட்டா ஐகோர்ட்
நீதிபதியாக பொறுப்பேற்றார்.

அவமதிப்பு வழக்கு

இதனிடையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உட்பட, 20 நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார்; இதை, கோர்ட் அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், நேரில் ஆஜராக, நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆஜராக மறுத்ததால், நீதிபதி கர்ணனுக்கு எதிராக, தலைமை நீதிபதி அடங்கிய, ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, கைது, 'வாரன்ட்' பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி கர்ணன்

ஆஜரானார். தன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குதொடர்ந்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு எதிராக, தானாகவே அவதுாறு வழக்கை தொடர்ந்தார்.

இந்த நிலையில், 'நீதிபதி கர்ணன், எவ்வித நிர்வாக மற்றும் நீதித் துறை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நீக்க வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது.

இதற்கிடையே, இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, வரும், 4ல், கோல்கட்டா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழு பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் நீதிபதி கர்ணன் பங்கேற்பதை, மாநில போலீஸ் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். அதற்காக போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

கடைசி வாய்ப்பு

வரும், 8ல் மருத்துவ அறிக்கையை இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்பான, தன் தரப்பு வாதத்தையும் அறிக்கையாக அன்றைய தினம், நீதிபதி கர்ணன் தாக்கல் செய்யலாம். அவ்வாறு அவர் பதில் ஏதும் தாக்கல்செய்யாவிட்டால், அவர் கூறுவதற்கு ஏதுமில்லை என எடுத்துக் கொள்ளப்படும். வழக்கின் விசாரணை, 9ல் நடக்கும். இதனிடையில், பிப்., 8க்குப் பின், நீதிபதி கர்ணன் பிறப்பித்துள்ள எந்த உத்தரவையும், நாடு முழுவதும் உள்ள மற்ற கோர்ட்கள், தீர்ப்பாயங்கள் நிறைவேற்ற வேண்டியதில்லை.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளது.

ஒரு நீதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டே, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது, இதுவே முதல் முறை. மேலும், நீதிபதிக்கு மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளது, நீதித் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடும் விளைவை சந்திக்க நேரிடும் நீதிபதி கர்ணன் எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கோல்கட்டாவில் நிருபர்களிடம், நீதிபதி கர்ணன் கூறியதாவது: என்னை கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றால், போலீஸ், டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்வேன்.

அதற்கு முன்னதாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு, டில்லியில் உள்ள மருத்துவமனையில் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை, டில்லி போலீஸ் டி.ஜி.பி., செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சித்ரா பவுர்ணமி அன்னதானம் விண்ணப்பிக்க அழைப்பு

பதிவு செய்த நாள் 02 மே  2017

00:24 திருவண்ணாமலை'திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமி அன்று அன்ன தானம் செய்ய விரும்பு வோர், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலையில், 10ம் தேதி சித்ரா பவுர்ணமியன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர், இன்று முதல், 8ம் தேதி வரை விண்ணப்பித்து, முன் அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.

அலுவலக வேலை நாட்களில், கலெக்டர் அலுவலகத்தின், இரண்டாவது மாடியில், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனரிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, முன் அனுமதி பெற வேண்டும். காலக் கெடுவுக்கு பின் விண்ணப்பிக்கும் மனுக்கள் நிராகரிக்கப்படும்.அன்னதானம் வழங்குவோர், கிரிவல பாதையில் உணவு சமைக்கக் கூடாது. சமைத்து எடுத்து வரும் உணவை வழங்க வேண்டும். அவை தரமானதாக, துாய்மையானதாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே வழங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. இலை, தொன்னை, பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் குடிநீர் வினியோகிக்கக் கூடாது. சாப்பிடும் இடத்தில், குப்பை கூடைகள் வைக்கவேண்டும்.

அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கினால், போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வறுத்தெடுக்க போகுது கத்திரி 4ம் தேதி துவங்குவதால் உஷார்

பதிவு செய்த நாள் 01 மே  2017

23:07 சென்னை, கோடையின் உச்ச கட்டமான, அக்கினி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில், மே, 4ல் துவங்குகிறது. மே,28 வரை, வறுத்தெடுக்கும் என்பதால், பகல் நேரத்தில், வெளியில் தலை காட்டால் இருப்பது நல்லது.தமிழகத்தில், இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்தே, கோடையின் தாக்கம் துவங்கி விட்டது. காற்றின் ஈரப்பதமும் குறைந்து விட்டதால், வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், மக்கள் திணறி வருகின்றனர்.
கத்திரி வெயில் துவங்கும் முன்பே, தமிழகத்தில் பல மாவட்டங்களிலும், 40 டிகிரி செல்சியசுக்கு மேல், வெப்பம் பதிவானது.

'பகல் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம்' என, அரசே எச்சரிக்கும் விடும் அளவுக்கு, வெப்பத் தாக்கம் அதிகமாக இருந் தது. கத்திரி வந்தால், நிலைமை எப்படி இருக்குமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கத்திரி வெயில், நாளை மறுநாள் துவங்கி, 28ம் தேதி வரை நீடிக்க உள்ளது. இதனால், வெயில் வழக்கத்தை விட, வறுத்தெடுக்கும். எனவே, பகல் நேரங்களில், மக்கள், தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என, டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி, மதுரை, சேலம், வேலுார், நெல்லை, திருச்சி மாவட்டங்களில், 40 டிகிரி செல்சியசை தாண்டி, வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது
குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், 'அடுத்த சில நாட்களுக்கும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. சில இடங்களில் இயல்பை விட, 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்' என்றனர்.
ஜூன் முதல் எல்.இ.டி., பல்பு அரசு அலுவலகத்தில் கட்டாயம் 

அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு பயன்படுத்துவதை, ஜூன் மாதம் முதல் கட்டாயமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியாவில், மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியாவில், மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. ஆனால், தமிழகத்தில், குறைந்த எண்ணிக்கையில் தான், எல்.இ.டி., பல்புகள் பயன்பாடு உள்ளது.

மார்ச் முதல், செப்., வரை, மின் தேவை அதிகம் இருக்கிறது. இதனால், தொடர்ந்து அதிக மின் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எல்.இ.டி., பல்பு பயன்படுத்தினால், இப்பிரச்னையின் தீவிரம் குறையும்.
எனவே, ஜூன் மாதம் முதல், அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு கட்டாயமாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அரசு உயரதிகாரி மூலம், அனைத்து துறைக்கும் கடிதம் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முறைகேடு?

மத்திய அரசு, 'எனர்ஜி எபிசியன்ட்' என்ற நிறுவனம் மூலம், குறைந்த விலையில், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது. இந்நிறுவனம் இதுவரை, 23 கோடி பல்புகளை விற்றுள்ளது. தற்போது, மின் வாரிய, மின் கட்டண மையங்களுக்கு அருகில், இந்நிறுவனம், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது. தமிழகத்தில், எல்.இ.டி., பல்பு வாங்குவதில், முறைகேட்டை தடுக்க, அரசு, மத்திய நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 04.06.2026