Friday, June 2, 2017


வெயில் அளவு சரிய துவங்கியது : ஜூன் 4 முதல் பரவலாகும் மழை
பதிவு செய்த நாள்01ஜூன் 2017 23:01

தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், நாடு முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் அளவும் குறைய துவங்கி உள்ளது.தென்மேற்கு பருவமழை, மே, 30ல், துவங்கியது. அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்று வலுவாகி உள்ளதால், அக்கடலை ஒட்டிய கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா பகுதிகளில், மழை பெய்து வருகிறது. வங்ககடல் பகுதியில், தென்மேற்கு பருவமழையின் நிழற் பகுதிகளான, அசாம், மேகாலயா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும், பரவலாக மழை பெய்கிறது.தமிழகத்தில் முதற்கட்டமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் எல்லையோர பகுதிகளில் மழை துவங்கி உள்ளது. மற்ற இடங்களில், சாரல் காற்று வீச துவங்கி உள்ளது. வரும், 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலம் முழுவதும், அதிகபட்ச வெப்ப நிலையின் அளவும் குறைய துவங்கி உள்ளது. கோடையில், 44 டிகிரி செல்சியசுக்கு மேல், வெயில் எகிறிய திருத்தணியில், 41.5; வேலுாரில், 40.7; கரூர் பரமத்தியில், 40.2 டிகிரி செல்சியசாக வெயில்
குறைந்தது. அதேபோல, சென்னை உட்பட, மற்ற பகுதிகளிலும், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், வால்பாறை, பேச்சிப்பாறை, மதுரையில் 3 செ.மீ., சின்னக்கல்லார் 2; கோத்தகிரி, மருங்காபுரி, கொடைக்கானலில்,
1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை

பதிவு செய்த நாள்1ஜூன்2017 22:47

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, எம்.பில்., படிப்புக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஆறு ஆண்டுகள் மட்டும், அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எம்.பில்., படிக்க, மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க, எட்டு பேருக்கு மட்டுமே, வழிகாட்டி பேராசிரியர் செயல்படலாம் என்பது உட்பட, பல நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பல்கலைகளில் விதிகளை மீறி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதனால், அனைத்து பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கூறியுள்ளதாவது: எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பை, தொலைநிலையில் நடத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைநிலையில், ஏதாவது பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு அறிவிக்கப்பட்டால், அதில், மாணவர்கள் சேர வேண்டாம். இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை மற்றும் சில பல்கலைகளுக்கு மட்டும், தொழில்நுட்பம் இல்லாத பாடப்பிரிவுகளில், 'ரெகுலர்' படிப்பில், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

பதிவு செய்த நாள்01ஜூன் 2  2017 23:38

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர்-
பிளஸ் 2 விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம்

பதிவு செய்த நாள்01ஜூன்2017 23:24

சென்னை: 'பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள், இன்று வெளியாகும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.அதன்பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த இரண்டு நகல்களையும், நாளை முதல், 6ம் தேதி மாலை, 6:00 மணி வரை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்; ஞாயிற்றுக் கிழமை விண்ணப்பிக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பு அரசு கல்லூரிகள் 'ஹவுஸ்புல்'

பதிவு செய்த நாள்01ஜூன்2017 23:01

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில், அரசு கல்லுாரிகளின், 1,091 இடங்களும் நிரம்பின. தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகள், எட்டு நிகர்நிலை பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங், மே, 7ல் துவங்கி, 31 வரை நடந்தது. இதில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்த 1,091 இடங்களும் நிரம்பின. சுயநிதி கல்லுாரி, நிகர்நிலை பல்கலைகளில் இருந்த, 1,337 இடங்களில், 1,063இடங்களே நிரம்பின. மீதம் 274 இடங்கள் காலியாக உள்ளன. இது குறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜ் கூறுகையில், ''நிகர்நிலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள காலி இடங்களை, 'நீட்' தேர்வு அடிப்படையில், அந்தந்த கல்லுாரிகள் நிரப்பிக்
கொள்ளலாம்,'' என்றார்.
4ம் தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு

பதிவு செய்த நாள்01ஜூன்2017 23:03

புதுச்சேரி: ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, 'டீன்' சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு, 1.90 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். 74 நகரங்களில், 338 மையங்களில் தேர்வு நடக்கிறது.நுழைவுத் தேர்வு, காலை, மாலை என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில், மாணவர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் எடுத்து வர வேண்டும்.

தேர்வு மையங்களில், 'சிசிடிவி' கேமராக்கள், அலைபேசியை செயல் இழக்கச் செய்யும் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு நாள் முன்னதாக தேர்வு மையங்களை உறுதி செய்து கொள்வது நல்லது. காலை, 8:00 மணியில் இருந்து தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். காலை, 9:30 மணிக்கு பிறகும், மதியம், 2:30 மணிக்கு பிறகும் தேர்வு அறையில் எந்த
காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.வரும், 19ம் தேதிக்கு முன், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., 'ரிசல்ட்' வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


எஸ்பிஐ.,ன் புதிய சேவை கட்டணம் : 10 அம்சங்கள்

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல்

ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும். 5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.6. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.8. செக் புக் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட

புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

NEWS TODAY 25.07.2026