Friday, June 2, 2017

ஒரு மாதமாக மீட்டர் தட்டுப்பாடு : புதிய மின் இணைப்புக்கு சிக்கல்

பதிவு செய்த நாள்01ஜூன்2017 23:17

சிவகங்கை: மின் வாரியத்தில் ஒரு மாதமாக மீட்டர்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால், புதிய மின் இணைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இலவச இணைப்பை தவிர்த்து, 2.40 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் மின் பயன்பாட்டின் அளவை கணக்கிட 'எலக்ட்ரோ மெக்கானிக்கல்' மீட்டர்களை வாரியம் வழங்கி வந்தது. இதில் பல குறைபாடு இருந்ததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சில ஆண்டுகளாக மின் அளவை துல்லியமாக கணக்கிடும் வகையில் 'டிஜிட்டல்' மீட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரை ஒன்றரை கோடி இணைப்புகளுக்கு மேல் புதிய மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பழைய மீட்டர்கள் பழுதடையும்போது, புதிய மீட்டர்களே பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், மாநிலம் முழுவதும் ஒரு மாதமாக தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் கட்டடங்கள், வணிக வளாகங்களுக்கு புதிய இணைப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பழுதடைந்த மீட்டர்களையும் மாற்ற முடியவில்லை. புதிய மீட்டருக்காக ஒரு லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ''மீட்டர்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் வந்துவிடும். சீனியாரிட்டி படி இணைப்பு கொடுக்கப்படும்,'' என்றார்.

வெயில் அளவு சரிய துவங்கியது : ஜூன் 4 முதல் பரவலாகும் மழை
பதிவு செய்த நாள்01ஜூன் 2017 23:01

தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், நாடு முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் அளவும் குறைய துவங்கி உள்ளது.தென்மேற்கு பருவமழை, மே, 30ல், துவங்கியது. அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்று வலுவாகி உள்ளதால், அக்கடலை ஒட்டிய கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா பகுதிகளில், மழை பெய்து வருகிறது. வங்ககடல் பகுதியில், தென்மேற்கு பருவமழையின் நிழற் பகுதிகளான, அசாம், மேகாலயா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும், பரவலாக மழை பெய்கிறது.தமிழகத்தில் முதற்கட்டமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் எல்லையோர பகுதிகளில் மழை துவங்கி உள்ளது. மற்ற இடங்களில், சாரல் காற்று வீச துவங்கி உள்ளது. வரும், 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலம் முழுவதும், அதிகபட்ச வெப்ப நிலையின் அளவும் குறைய துவங்கி உள்ளது. கோடையில், 44 டிகிரி செல்சியசுக்கு மேல், வெயில் எகிறிய திருத்தணியில், 41.5; வேலுாரில், 40.7; கரூர் பரமத்தியில், 40.2 டிகிரி செல்சியசாக வெயில்
குறைந்தது. அதேபோல, சென்னை உட்பட, மற்ற பகுதிகளிலும், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், வால்பாறை, பேச்சிப்பாறை, மதுரையில் 3 செ.மீ., சின்னக்கல்லார் 2; கோத்தகிரி, மருங்காபுரி, கொடைக்கானலில்,
1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை

பதிவு செய்த நாள்1ஜூன்2017 22:47

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, எம்.பில்., படிப்புக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஆறு ஆண்டுகள் மட்டும், அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எம்.பில்., படிக்க, மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க, எட்டு பேருக்கு மட்டுமே, வழிகாட்டி பேராசிரியர் செயல்படலாம் என்பது உட்பட, பல நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பல்கலைகளில் விதிகளை மீறி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதனால், அனைத்து பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கூறியுள்ளதாவது: எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பை, தொலைநிலையில் நடத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைநிலையில், ஏதாவது பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு அறிவிக்கப்பட்டால், அதில், மாணவர்கள் சேர வேண்டாம். இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை மற்றும் சில பல்கலைகளுக்கு மட்டும், தொழில்நுட்பம் இல்லாத பாடப்பிரிவுகளில், 'ரெகுலர்' படிப்பில், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

பதிவு செய்த நாள்01ஜூன் 2  2017 23:38

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர்-
பிளஸ் 2 விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம்

பதிவு செய்த நாள்01ஜூன்2017 23:24

சென்னை: 'பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள், இன்று வெளியாகும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.அதன்பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த இரண்டு நகல்களையும், நாளை முதல், 6ம் தேதி மாலை, 6:00 மணி வரை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்; ஞாயிற்றுக் கிழமை விண்ணப்பிக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பு அரசு கல்லூரிகள் 'ஹவுஸ்புல்'

பதிவு செய்த நாள்01ஜூன்2017 23:01

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில், அரசு கல்லுாரிகளின், 1,091 இடங்களும் நிரம்பின. தமிழகத்தில், 13 அரசு மருத்துவக் கல்லுாரிகள், எட்டு நிகர்நிலை பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங், மே, 7ல் துவங்கி, 31 வரை நடந்தது. இதில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்த 1,091 இடங்களும் நிரம்பின. சுயநிதி கல்லுாரி, நிகர்நிலை பல்கலைகளில் இருந்த, 1,337 இடங்களில், 1,063இடங்களே நிரம்பின. மீதம் 274 இடங்கள் காலியாக உள்ளன. இது குறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜ் கூறுகையில், ''நிகர்நிலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள காலி இடங்களை, 'நீட்' தேர்வு அடிப்படையில், அந்தந்த கல்லுாரிகள் நிரப்பிக்
கொள்ளலாம்,'' என்றார்.
4ம் தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு

பதிவு செய்த நாள்01ஜூன்2017 23:03

புதுச்சேரி: ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, 'டீன்' சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு, 1.90 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். 74 நகரங்களில், 338 மையங்களில் தேர்வு நடக்கிறது.நுழைவுத் தேர்வு, காலை, மாலை என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில், மாணவர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் எடுத்து வர வேண்டும்.

தேர்வு மையங்களில், 'சிசிடிவி' கேமராக்கள், அலைபேசியை செயல் இழக்கச் செய்யும் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு நாள் முன்னதாக தேர்வு மையங்களை உறுதி செய்து கொள்வது நல்லது. காலை, 8:00 மணியில் இருந்து தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். காலை, 9:30 மணிக்கு பிறகும், மதியம், 2:30 மணிக்கு பிறகும் தேர்வு அறையில் எந்த
காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.வரும், 19ம் தேதிக்கு முன், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., 'ரிசல்ட்' வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 15.09.2026