Friday, June 2, 2017



எஸ்பிஐ.,ன் புதிய சேவை கட்டணம் : 10 அம்சங்கள்

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல்

ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும். 5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.6. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.8. செக் புக் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட

புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.
வங்கி டூ வங்கி மாற வசதி

பதிவு செய்த நாள்02ஜூன்
2017
01:06




வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறியதாவது: தற்போது, மொபைல் போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்தின் சேவைக்கு, வாடிக்கையாளர்கள் மாறும் வசதி உள்ளது. இதே போல, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்கி வாடிக்கையாளர்களும், அவர்களது கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு பொதுத் துறை வங்கிக்கோ அல்லது தனியார் வங்கிக்கோ மாற, வழிவகை செய்வது பற்றி, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. வங்கிகளில், தற்போது வாடிக்கையாளர் கணக்கு எண்ணுடன், 'ஆதார்' கார்டு எண் இணைக்கப்பட்டு வருகிறது. அதனாலும், மொபைல் போன் வழி பணப் பரிவர்த்தனை பிரபலமாகி வருவதாலும், இது சாத்தியமாகும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
- நமது நிருபர் -
சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் பற்றிய தீ 37 மணி நேர போராட்டத்துக்கு பின் அணைக்கப்பட்டது.

37 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் தீப்பிடித்த கட்டிடம் இன்று இடிக்கப்படுகிறது

ஜூன் 02, 2017, 05:45 AM
சென்னை

சென்னை தியாக ராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 7 மாடிகளை கொண்ட சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கும் பணி

இதையடுத்து தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, அசோக்நகர், வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை உள்பட 12 நிலையங்களில் இருந்து 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ‘எப்.54-எச்.டி.டி.’ எனும் 170 அடி உயரமுள்ள ராட்சத உயிர் காக்கும் ‘ஸ்கை லிப்ட்’ வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

முதலில் கடையின் மேல் தளத்தில் உள்ள கேண்டீனில் தங்கி இருந்த 14 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ‘போர்ம் காம்பவுண்ட்’ எனும் ரசாயன கலவையையும், பின்னர் தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இதற்காக கடையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சுவர்களில் துளை போடப்பட்டு, உஸ்மான் சாலை மேம்பாலத்தில் நின்று தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இரவு முழுவதும் எரிந்தது

தீயணைப்பு வீரர்கள், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடினார்கள். அதிகாரி மீனாட்சி விஜயகுமார் அவர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கினார்.

ஆனாலும் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இதனால் தரைத்தளத்துக்கு கூட வீரர்களால் செல்ல முடியவில்லை. தொடர்ந்து கட்டிடம் தீயின் பிடியில் இருந்ததால், அதன் உறுதித்தன்மை கேள்விக்குறி ஆனது. இதனால் இரவு முழுவதும் கட்டிடத்தை குளிர்விக்கும் வகையில், கட்டிடம் முழுவதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இடிந்து விழுந்தது

இந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் இரவு 12 மணிக்கு மேல் கட்டிடத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் கட்டிடத்தில் இருந்து சிறிது தூரம் பின்வாங்கிச் சென்றனர். அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. கண்ணாடிகளும் பெயர்ந்து விழுந்தன.

நேற்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த இரும்பு கூரைகள் சரிந்தன. அந்த சமயத்தில் கட்டிடத்தில் விரிசல் அதிகமானது. அடுத்த 2 நிமிடங்களில் கட்டிடத்தின் உள்பகுதி அப்படியே சீட்டுக்கட்டு போல பயங்கர சத்தத்துடன் சரிய தொடங்கியது. மேல் தளத்தில் இருந்து 3-வது தளம் வரை இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் தூசியுடன் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

வெளியேறினார்கள்

கட்டிடம் இடிந்து விழுந்ததும் தீயின் வேகம் குறையும் என்று நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கட்டிடத்தின் முன்பகுதி காலை 7 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் முன்பகுதியில் உள்ள கம்பி தடுப்புகள், சிலாப்புகள் பெயர்ந்து விழுந்தன. கண்ணாடிகள் சாலையில் விழுந்து உடைந்து நொறுங்கின. இதனால் கட்டிடத்தின் முன்பகுதியும் இடிந்து விழலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி ஜவுளிக்கடைக்கு மிக அருகில் உள்ள ‘விஜி பிளாட்ஸ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களை, வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். 20 வீடுகளை கொண்ட அந்த குடியிருப்பில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே தங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து மற்றவர்களும் அங்கிருந்து வெளியேறி தங்கள் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு சென்றனர்.

ரூ.300 கோடி சேதம்

நேற்றுமுன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு பற்றிய தீ நேற்று மாலை 5.30 மணி அளவில் முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 37 மணி நேரம் போராடி தீயை அணைத்து உள்ளனர். என்றாலும் கட்டிடத்தின் உள்ளே சில இடங்களில் புகைந்து கொண்டே இருந்தது.

இந்த பயங்கர தீ விபத்தில் கடையில் இருந்து துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு ரூ.300 கோடிக்கும் மேல் இருக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று இடிக்கப்படுகிறது

நேற்று மாலை கடைக்கு பின்புறம் உள்ள வாகன நிறுத்தத்தில், கட்டிட இடிபாடுகளை கொண்டு 20 அடி உயரத்துக்கு தற்காலிக மேடு அமைக்கும் பணி நடந்தது. கட்டிடத்தின் மீதமுள்ள பகுதிகளையும் இடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கட்டிடத்தை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற இருப்பதால், பாதுகாப்பு பணிக்காக அந்த பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய செய்திகள்

குடிபோதையில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற ரஷிய பயணி
ஜூன் 02, 2017, 04:30 AM

புதுடெல்லி,

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு ஒரு விமானம் பறந்து வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் வந்த ரஷிய பயணி அலெக்சாண்டர் சமோக்வலவ் அதிக குடிபோதையில் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் கதவை திறக்க முயன்றார். இதனால் விமான சிப்பந்திகளும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமரச்செய்தனர்.

இது குறித்து டெல்லியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார். அந்த விமானம் டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய போது அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு படை வீரர்கள், ரஷிய பயணியை பிடித்து சென்றனர். பின்னர் அவர் டெல்லி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தினர். இதையடுத்து விமானத்தில் பயணிகளுக்கு இடையூறாகவும், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்டதாக ரஷிய பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மயில்கள் செக்ஸ் உறவு கொள்வது இல்லையா? நீதிபதி கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஜூன் 02, 2017, 04:30 AM

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதி மகேஷ் சந்திர சர்மா நேற்று முன்தினம் பசு பராமரிப்பு மையம் பற்றிய வழக்கில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்து ஒரு தீர்ப்பை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘‘ஆண் மயில் வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியத்தை கடைப்பிடிக்கிறது. அது பெண் மயிலுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகி பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது அதனால் தான் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இந்த கருத்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆண் மயிலும், பெண் மயிலும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுமா என்பது குறித்து அறிந்துகொள்ள கூகுள் இணையதளத்தை இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் மொய்த்தது தனிக்கதை.

பலர் நீதிபதியின் கருத்து குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து தள்ளிவிட்டனர்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, ‘‘பசு ஆக்சிஜனை உள்ளே எடுத்துக்கொள்கிறது; ஆக்சிஜனை வெளியிடுகிறது. மயில் பிரமச்சாரி; நமது நீதிபதி அய்யாவிடம் இருந்து வந்துள்ள அறிவார்ந்த வார்த்தைகள் இவை. நமது பாடப்புத்தகங்களை திருத்துங்கள்’’ என கிண்டல் செய்துள்ளார்.

ராகுல் ரவுஷான் என்பவர், ஒரு ஆண் மயில், பெண் மயிலிடம் ‘‘நாம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வோம்’’ என்று கூறியதாகவும், அதற்கு பெண் மயில், ‘‘இல்லை... இல்லை.. நாம் நண்பர்களாக இருப்போம்’’ என பதில் சொன்னதாகவும், அதைக் கேட்டு ஆண் மயில் அழுததாகவும், உடனே பெண் மயில் கர்ப்பம் தரித்து விட்டதாகவும் டுவிட்டரில் வசன நடையில் சித்தரித்துள்ளார்.
தேசிய செய்திகள்

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு : டி.டி.வி. தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன்

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரனை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜூன் 02, 2017, 04:45 AM

புதுடெல்லி,

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரனை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.டி.டி.வி.தினகரன் கைது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தினகரன், மல்லிகார்ஜூனா, சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.நிபந்தனை ஜாமீன்

தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது, அவர்களுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் நீதிபதி பூனம் சவுத்ரி நேற்று தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கினார். அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 14 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில் 11 பக்கங்கள் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா தரப்பு வக்கீல்கள் முன்வைத்த வாதங்கள் குறித்து விரிவாக கூறப்பட்டு உள்ளது. மீதி 3 பக்கங்களில் நீதிபதி தன்னுடைய கருத்தையும் முடிவையும் தெரிவித்து உள்ளார்.

நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–சதிச்செயல்

ஜாமீன் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் போது இந்த வழக்கு குறித்து எந்த விதமான முன் முடிவுகளையும் பாரபட்சமான அணுமுறைகளையும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் வழக்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சாட்சியங்கள் குறித்த விரிவான ஆய்வை தவிர்க்க வேண்டி இருக்கிறது.

இந்த வழக்கில் விரிவான முறையில் விசாரணை நடக்கும் போது இவை அனைத்தையும் ஆழமாக ஆராய வேண்டிய தேவை உள்ளது. டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. என்னுடைய பார்வையில், இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது சதிச்செயல் நடைபெற்றது என்ற அனுமானத்தை அளிக்கிறது.

ஆனால் அனுமானங்களில் அடிப்படையில் சதிச்செயல் தொடர்பான குற்றத்தை நிரூபிக்க முடியாது. வலுவானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தடயங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த குற்றச்செயல் நிரூபிக்கப்பட வேண்டும்.தடை இல்லை

மேலும் மனுதாரரை இனி எந்த வகையான காவலிலும் வைத்து விசாரிக்க தேவை இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவுகள் அடங்கிய குறுந்தகடு ஏற்கனவே போலீசாரால் கைப்பற்றப்பட்டு உள்ளது. தினகரனின் செல்போன் கைப்பற்றப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து இனி கைப்பற்ற வேண்டியது எதுவும் இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் அ.தி.மு.க. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர். சமூகத்தில் மிகவும் ஆழமான வேர்களை உடையவர். மேலும் இந்த வழக்கில் லஞ்சம் அளிப்பதாக ஆசை காட்டப்பட்ட அல்லது லஞ்சம் பெறுவதாக கூறப்படும் நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த வழக்கின் தகுதி குறித்து இப்போதைக்கு எந்த கருத்தையும் பதிவு செய்யாமல், மேலே கூறப்பட்டுள்ள வி‌ஷயங்கள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்யும் போது மனுதாரர் தினகரனுக்கு ஜாமீன் வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை.ரூ.5 லட்சம்

எனவே, அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்ட தினகரன் சொந்த ஜாமீன் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இருவர் பிணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரத்தையோ, சாட்சியங்களையோ அவர் கலைக்கக் கூடாது. கோர்ட்டின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கண்ட இதே நிபந்தனைகளுடன் மல்லிகார்ஜூனாவையும் ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.இன்று விடுதலை?

பிணைத்தொகை செலுத்துவது உள்ளிட்ட மற்ற சட்ட ரீதியான நடைமுறைகள் நிறைவு பெற்று தினகரனும், மல்லிகார்ஜூனாவும் திகார் சிறையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தினகரன் தரப்பு வக்கீல் சி.பரமசிவமும், தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனும் தெரிவித்தனர்.
ஜூன் 02, 03:00 AM
தலையங்கம்
ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர்



ஆங்கிலத்தில், ‘‘ஆல் ரோட்ஸ் லீட் டூ ரோம்’’ என்பார்கள். அதாவது எல்லாவழிகளும் ரோமாபுரியை நோக்கியே என்பதுதான் அதன்பொருள். அதுபோலவே, அனைத்துக்கட்சிகளின் பார்வையும் இப்போது ஜனாதிபதி தேர்தலை நோக்கியே இருக்கிறது. ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சுதந்திர இந்தியாவின் 13–வது ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்காளத்தில் இருந்து முதல்முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது பதவிகாலம் ஜூலை மாதம் 25–ந்தேதியோடு முடிவடைகிறது. எனவே, 14–வது ஜனாதிபதி அதற்குமுன்பு தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். ஜனாதிபதி தேர்தல் என்பது மிகவும் வித்தியாசமான தேர்தல் ஆகும். ஜனாதிபதியை எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள். இதில், ஓட்டுபோடும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை எலக்ட்டோரல் காலேஜ் அல்லது தேர்வுக்குழு என்பார்கள்.

நாட்டில் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 120 எம்.எல்.ஏ.க்களும், 776 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தேர்ந்தெடுப்பார்கள். இதில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். இதுபோல, ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், 1971–ம்ஆண்டு கணக்கெடுப்பின்படி, அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையால் வகுத்து, மீண்டும் அதனை ஆயிரத்தால் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கையே எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பாகும். தற்போது ஜனாதிபதி தேர்தலில் மொத்த ஓட்டுமதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில், ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால், 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 ஓட்டுகள் தேவை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5 லட்சத்து 37 ஆயிரத்து 614 ஓட்டுகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 230 ஓட்டுகளும் இருக்கிறது. அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி கட்சி, இந்திய லோக்தள கட்சி ஆகிய கட்சிகளுக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 38 ஓட்டு மதிப்பு இருக்கின்றன. இதில், பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கே ஓட்டுபோடும் என்பதால் நிச்சயமாக பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் சோனியா காந்தி தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றாக உட்கார்ந்து அவர்கள் ஆதரவோடு ஒரு வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து இருக்கிறார்கள். இந்தநிலையில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறியிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது. அனேகமாக 3 வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அதில் ஒருவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டு இருக்கிறது என்று அரசியல் உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருதரப்புமே யாரை மனதில் வைத்திருக்கிறார்கள் என்பது ரகசியமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி. இதில் பா.ஜ.க. வேட்பாளர், எதிர்க்கட்சி வேட்பாளர் என்று நிறுத்தி தேர்தல் நடத்தி, யார் வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்று பார்க்காமல், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த உணர்வோடு போட்டியின்றி ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற பெயரை இந்தியா பெறவேண்டும் என்பதே எல்லா மக்களின் ஆசையாகும். அந்தவகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுக்க ஆளுங்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உட்கார்ந்து முடிவெடுத்து தேர்தலை தவிர்க்கவேண்டும். ஜனாதிபதி என்பவர், அவர் பதவி ஏற்றவுடன் எந்த கட்சியையும் சாராதவர் என்பதால், இந்த தேர்தலுக்கு கட்சி சாயம் பூசாமல் எல்லோரும் ஒன்றாக கைகோர்த்து 14–வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...