Friday, June 2, 2017

ஜூன் 02, 03:00 AM
தலையங்கம்
ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர்



ஆங்கிலத்தில், ‘‘ஆல் ரோட்ஸ் லீட் டூ ரோம்’’ என்பார்கள். அதாவது எல்லாவழிகளும் ரோமாபுரியை நோக்கியே என்பதுதான் அதன்பொருள். அதுபோலவே, அனைத்துக்கட்சிகளின் பார்வையும் இப்போது ஜனாதிபதி தேர்தலை நோக்கியே இருக்கிறது. ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சுதந்திர இந்தியாவின் 13–வது ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்காளத்தில் இருந்து முதல்முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது பதவிகாலம் ஜூலை மாதம் 25–ந்தேதியோடு முடிவடைகிறது. எனவே, 14–வது ஜனாதிபதி அதற்குமுன்பு தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். ஜனாதிபதி தேர்தல் என்பது மிகவும் வித்தியாசமான தேர்தல் ஆகும். ஜனாதிபதியை எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள். இதில், ஓட்டுபோடும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை எலக்ட்டோரல் காலேஜ் அல்லது தேர்வுக்குழு என்பார்கள்.

நாட்டில் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 120 எம்.எல்.ஏ.க்களும், 776 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தேர்ந்தெடுப்பார்கள். இதில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். இதுபோல, ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், 1971–ம்ஆண்டு கணக்கெடுப்பின்படி, அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையால் வகுத்து, மீண்டும் அதனை ஆயிரத்தால் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கையே எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பாகும். தற்போது ஜனாதிபதி தேர்தலில் மொத்த ஓட்டுமதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில், ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால், 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 ஓட்டுகள் தேவை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5 லட்சத்து 37 ஆயிரத்து 614 ஓட்டுகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 230 ஓட்டுகளும் இருக்கிறது. அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி கட்சி, இந்திய லோக்தள கட்சி ஆகிய கட்சிகளுக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 38 ஓட்டு மதிப்பு இருக்கின்றன. இதில், பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கே ஓட்டுபோடும் என்பதால் நிச்சயமாக பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் சோனியா காந்தி தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றாக உட்கார்ந்து அவர்கள் ஆதரவோடு ஒரு வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து இருக்கிறார்கள். இந்தநிலையில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறியிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது. அனேகமாக 3 வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அதில் ஒருவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டு இருக்கிறது என்று அரசியல் உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருதரப்புமே யாரை மனதில் வைத்திருக்கிறார்கள் என்பது ரகசியமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி. இதில் பா.ஜ.க. வேட்பாளர், எதிர்க்கட்சி வேட்பாளர் என்று நிறுத்தி தேர்தல் நடத்தி, யார் வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்று பார்க்காமல், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த உணர்வோடு போட்டியின்றி ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற பெயரை இந்தியா பெறவேண்டும் என்பதே எல்லா மக்களின் ஆசையாகும். அந்தவகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுக்க ஆளுங்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உட்கார்ந்து முடிவெடுத்து தேர்தலை தவிர்க்கவேண்டும். ஜனாதிபதி என்பவர், அவர் பதவி ஏற்றவுடன் எந்த கட்சியையும் சாராதவர் என்பதால், இந்த தேர்தலுக்கு கட்சி சாயம் பூசாமல் எல்லோரும் ஒன்றாக கைகோர்த்து 14–வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...