Friday, June 30, 2017

'பாரசிட்டமால் மருந்துக்கே இந்த கதியா?' - ஓர் எளிய மருத்துவரின் 'ஜி.எஸ்.டி' வேதனை

ஆ.விஜயானந்த்




' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளுக்கெல்லாம் 12 சதவீத வரியைப் போட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பயன்படுத்தும் உலர் பழங்களுக்கு 2 சதவீதம் அளவுக்கு வரியைக் குறைத்துள்ளனர். ஜி.எஸ்.டிக்காக மருந்துக் கடைகள் எங்களை நெருக்குகின்றன' என்கிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதே தினத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால், மருத்துவர்களும் மருந்துக் கடை உரிமையாளர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதிலும், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து மருந்துகளுக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட இருப்பது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. " பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால், எனக்கு சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும். சாதாரண காய்ச்சலுக்குப் போடப்படும் பாரசிட்டமால் மருந்து, ஆயிரம் மாத்திரைகளை 220 ரூபாய்க்கு வாங்குவேன். இதற்காக 5 சதவீத வரியைக் கட்டி வந்தேன். இப்போது இதே பாரசிட்டமால் மருந்துக்கு நான் 12 சதவீத வரியை செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுமக்கள் எப்போதும் பயன்படுத்தும் பாரசிட்டமால் மாத்திரைக்கே, இவர்கள் கூடுதல் வரியைப் போட்டுள்ளனர். சாதாரண சத்து ஊசிக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரியைப் போட்டுள்ளனர். இந்தியாவில் 70 முதல் 80 சதவீத மக்கள், தங்கள் சொந்தப் பணத்தில் இருந்துதான் மருந்துகளை வாங்குகின்றனர் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இவர்களை ஒட்டுமொத்தமாக வதைக்கிறது ஜி.எஸ்.டி வரி" எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் புகழேந்தி.



தொடர்ந்து நம்மிடம் பேசினார். " ஜி.எஸ்.டி வரியின் மூலம் இன்சுலின் மருந்துக்கு மட்டும் வரியைக் குறைத்திருக்கிறார்கள். மீதமுள்ள 99 சதவீத மருந்துகளுக்கு 7 சதவீதம் கூடுதலாக வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் போட்டுக் கொள்ளும் குளுக்கோஸுக்கு வரி விதிப்பது எந்த வகையிலும் சரியல்ல. என்னிடம் வரும் நோயாளிகளுக்கு, சலுகை விலையில் கிடைக்கும் மருந்துகளை மிகக் குறைந்த விலைக்குத் தருகிறேன். இப்போது அவர்களிடம் கூடுதலாக வசூலிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்" என்றவர்,

" சென்னையில் நான்கு இடங்களில் மொத்தமாக மருந்துகளை வாங்குகிறேன். கடந்த சில நாட்களாக, 'மொத்தமாக மருந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என மருந்து கொள்முதல் கடைகளில் இருந்து நெருக்குகிறார்கள். ' ஜி.எஸ்.டி வர இருப்பதால், எங்களுக்கு நிறைய இழப்புகள் ஏற்பட இருக்கிறது. இந்த இழப்புகளுக்கு மருந்து நிறுவனங்கள் பொறுப்பேற்க முன்வரவில்லை. எனவே, 30 ஆம் தேதிக்குள் மருந்துகளை வாங்கிக் கொள்ளுங்கள். அதன்பிறகு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்' என்கிறார்கள். அதற்காக, பல மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை ஒரே நேரத்தில் எப்படி வாங்கிக் கொள்ள முடியும்? அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? ஒரு மாதத்துக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதன்பிறகு, இந்த வரியைக் குறைத்துவிடுவார்களா? அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசும்போது, 'ஜி.எஸ்.டியால் எங்கள் நாட்டின் வளர்ச்சி உயரும்' என்கிறார். அடித்தட்டு மக்களை வதைத்துவிட்டு, என்ன மாதிரியான வளர்ச்சியை இவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
 
மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க பணமில்லாதவர்கள், மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கிச் சாப்பிடும் நிலையும் இருக்கிறது. இந்த வரியால், அவர்கள் கூடுதல் தொகைகளைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்சுலினோடு சேர்த்து ஓரிரு மருந்துகளைத் தவிர, மற்ற அனைத்துக்கும் 12 முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட உள்ளது. மருந்து விலைகளும் தாறுமாறாக உயரப் போகிறது. இதுதான் ஜி.எஸ்.டியால் உருவாகக் கூடிய மாற்றமா? இந்த அரசு மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவில்லை. 'விலைவாசியில் பெரிய மாற்றம் வராது' என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். ஆனால், சாதாரண மக்கள் பயன்படுத்தும் மருந்துகளுக்கு இவ்வளவு வரியை விதிப்பது எந்த வகையில் நியாயமானது? தங்களின் கொள்கை சார்ந்த முடிவுகளைத்தான் ஜி.எஸ்.டி வழியாக பிரதமர் அமல்படுத்துகிறாரோ என்ற சந்தேகமும் எங்களுக்கு உண்டு" என்றார் ஆதங்கத்தோடு.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...