Thursday, June 29, 2017

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் கிடைக்காமல் மாணவர் அவதி

பதிவு செய்த நாள்28ஜூன்
2017
23:06

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப படிவம் காலியானதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, 22 அரசு மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், சுயநிதி கல்லுாரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான, விண்ணப்ப படிவம், நேற்று காலியானது. இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் அவதிக்கு ஆளாகினர். சிலர், சென்னை மருத்துவ கல்லுாரி மற்றும் அரசு பல்நோக்கு மருத்துவ கல்லுாரியில் விண்ணப்ப படிவம் வாங்கி சென்றனர்.
இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மருத்துவ கல்வி இயக்ககம் அருகே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி உள்ளதால், அதிகம் பேர் விண்ணப்பங்கள் வாங்கி செல்கின்றனர். இதனால், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் காலியாகின. கூடுதலாக விண்ணப்பங்கள் வர வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அனைத்து வித விண்ணப்ப படிவங்களும், வழக்கம் போல கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025