Thursday, June 29, 2017

தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் திருப்பதி நடைபாதை பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு ரத்து



வார இறுதி நாட்களில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு வழங்குவது பரிசோதனை முறையில் வருகிற 7–ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 29, 2017, 04:30 AM

திருமலை,

வார இறுதி நாட்களில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு வழங்குவது பரிசோதனை முறையில் வருகிற 7–ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.திருப்பதி திருமலையில் குடிகொண்டிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து செல்கின்றனர். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு என 2 மலைப்பாதைகள் வழியாக திருமலைக்கு நடந்து செல்லலாம்.

நடைபாதை பக்தர்கள் சாமி தரிசனம் (திவ்ய தரிசனம்) செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இதனால் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்ட மற்ற தரிசனங்களில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து நடைபாதை பக்தர்களின் எண்ணிக்கையை வார இறுதி நாட்களில் கட்டுப்படுத்துவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கே.எஸ்.சீனிவாச ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–இந்த கோடைகாலத்தின்போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திருமலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். குறிப்பாக மலைப்பாதை வழியாக வார இறுதி நாட்களில் நடந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட்டது.

முன்பு கருட சேவை மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களின் போது தான் மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை இதுபோல் அதிகமாக இருக்கும்.

தற்போது சாதாரண நாட்களிலேயே தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். எனவே, திவ்ய தரிசன பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு வழங்குவதை அடுத்த மாதம்(ஜூலை) 7–ந்தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பரிசோதனை ரீதியில் ரத்து செய்யப்படுகிறது.எனினும், நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

திருமலைக்கு பக்தர்கள் அதிகம் திரண்டு வரும் நேரங்களில் அவர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் தேவஸ்தானத்தின் அனைத்து துறையினரும் நல்ல முறையில் அளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards  The University Grants Commissio...