Friday, June 30, 2017

குடும்பத் தலைவி என்பவள் வெறும் மனைவி, தாய் மட்டுமல்ல: நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு 



சென்னை: ஒரு குடும்பத் தலைவி என்பவள் வெறும் மனைவி, தாய் மட்டுமல்ல.. அவள்தான் அந்த குடும்பத்தின் நிதியமைச்சர், கணக்காளர் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

2 குழந்தைகளுக்குத் தாயாகவும் குடும்பத் தலைவியாகவும் இருந்த மாலதி, கடந்த 2009ம் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தில், அந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து புதுச்சேரி மின்சார வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தனது தீர்ப்பை அளித்தது.

மாலதியின் மரணத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரிய அவரது கணவரின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும், இந்த தீர்ப்புக்கான தனது விளக்கத்தையும் அளித்தது. அதில், உலக அளவில், குடும்பத் தலைவி என்பவளது சம்பளமற்ற வேலை எப்போதுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது இன்னும் விவாதத்துக்குரியதாகவே உள்ளது.

இந்தியாவில் குடும்பத் தலைவி என்பவர் வெறும் மனைவி மற்றும் தாய் என்பதோடு நின்றுவிடவில்லை. அதற்கும் மேல் எத்தனையோ பணிகள் உள்ளன.

மாலதி ஒரு மனைவியாக இருந்துள்ளார்.

அன்பு தாயாகவும் இருந்துள்ளார். அதற்கும் மேல், அந்த குடும்பத்தின் நிதியமைச்சரும் அவர்தான். அவள் சமையல் வேலையையும் கவனித்திருப்பார். கணக்காளராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

குடும்ப நிர்வாகம், வருவாய் மற்றும் செலவினத்தை கவனிப்பது, கணவருடன் இணைந்து குடும்பத்தை நிர்வகிப்பது என்ற பணிகளையும் அவர் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில், ஒரு கணவர் தனது வாழ்க்கைத் துணையை இழந்துள்ளார். இரண்டு குழந்தைகள் தன் தாயை இழந்து, அவளிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பையும் இழந்துள்ளது.

மாலதியின் மரணத்தால், அந்த கணவருக்குக் கிடைக்க வேண்டிய கவனிப்பு பறிபோனது. அவரது வாழ்க்கை கேள்விக்குறியானது.

இவற்றையும் ஒரு மனிதனின் மரணத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளது.

அதோடு, மாலதியின் மரணத்துக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று கூறியிருந்த வாதத்தை முற்றிலும் நிராகரித்துள்ள நீதிமன்றம், மின்சார கோளாறுகளுக்கு எந்த வகையிலும் தனிமனிதர்கள் பொறுப்பேற்க முடியாது. மின்சார பகிர்மான கேபிளில் வந்த அதிகப்படியான மின்சாரத்தை கவனிக்காமல் விட்டது மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற தன்மைதான் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

2009ம் ஆண்டு மாலதி மின்சாரம் தாக்கி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் அவரது கணவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், மாலதி வெறும் குடும்பத் தலைவியாகவே இருந்துள்ளார். இதனால் அவருக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று கூறி புதுச்சேரி மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நேற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தீர்ப்பினை பதிவு செய்துள்ளது.

இந்த தீர்ப்பு, நடந்து கொண்டிருக்கும் பல வழக்குகளுக்கும், எதிர்காலத்தில் தொடரப்படும் வழக்குகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...