Friday, June 30, 2017

செய்யது பீடி நிறுவனங்களில் ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:11

செய்யது பீடி குழும நிறுவனங்களில் நேற்று, இரண்டாவது நாளாக சோதனை நடந்தது. ஐந்து மாநிலங்களில் நடந்த சோதனையில், 100 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில், செய்யது பீடி அலுவலகத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. செய்யது பீடி குழுமத்தில், செய்யது ஷரியத் பைனான்ஸ், செய்யது டிரேடிங் கம்பெனி போன்ற நிறுவனங்களும் அடக்கம். அந்த நிறுவனங்களில், நேற்று முன்தினம், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை துவங்கினர். தமிழகத்தில், சென்னை, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் என, மொத்தம், 63 இடங்களில் நடந்தது. இதில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: செய்யது பீடி குழுமத்தில், சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்தது. முதல் நாளில், நான்கு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது நாள் நடந்த சோதனையிலும், வரி ஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. 100 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம். வரி ஏய்ப்பு தொடர்பான முழு விபரங்கள், ஓரிரு நாட்களில் தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025