Thursday, June 29, 2017

போலி பணி ஆணை தயாரித்து மோசடி : தலைமை செயலக 'மாஜி' ஊழியர் கைது
பதிவு செய்த நாள்28ஜூன்
2017
23:10

விருத்தாசலம்: அரசு வேலையில் சேர்ப்பதாக, போலி பணி ஆணை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட, தலைமை செயலக முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளான். உடந்தையாக இருந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட, நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், பாளையங்கோட்டை, வடக்கு பாளையத்தை சேர்ந்தவன் ராஜேந்திரன்; மாத்துார் அரசு பள்ளி ஆசிரியர். 'சஸ்பெண்ட்' இவனது மைத்துனர் செல்வகாந்தி, 45; தலைமை செயலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்த இவன், போலி பணி ஆணை தயாரித்து மோசடி செய்ததாக, ஓராண்டுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டான்.இவர்கள் இருவரும், பால் அந்தோணிராஜ், 39, என்பவரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதை நம்பிய, பால் அந்தோணிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேர், அரசு வேலைக்காக, மொத்தம், 21.50 லட்சம் ரூபாயை, ராஜேந்திரனிடம் கொடுத்தனர்.இதையடுத்து, பால் அந்தோணிராஜ் உள்ளிட்ட, எட்டு பேருக்கும், அரசு வேலைக்கான பணி ஆணைகளை, ராஜேந்திரன், செல்வகாந்தி ஆகிய இருவரும் வழங்கினர். எட்டு பேரும் பணியில் சேர சென்ற போது, அவை போலி என, தெரிய வந்தது. இது தொடர்பாக, ஏப்ரல் 28ல், ஆசிரியர் ராஜேந்திரன், அவனது மனைவி காந்திமதி, மகள் ராஜபிரியா, மைத்துனர்கள் செல்வகாந்தி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது, பால் அந்தோணிராஜ் புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவு : போலீசார் வழக்கு பதியாததால், விருத்தாசலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாஜிஸ்திரேட் ஜெயகுமார் உத்தரவின்படி, ராஜேந்திரன் உட்பட ஐந்து பேர் மீது, விருத்தாசலம் போலீசார், 10ம் தேதி வழக்குப் பதிந்தனர். இவர்களில், செல்வகாந்தியை, நேற்று காலை கைது செய்தனர். ஆசிரியர் ராஜேந்திரன் உட்பட, நான்கு பேரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025