Thursday, June 29, 2017

புதிய பிராட்பேண்டு கனெக்‌ஷன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..! #Broadband

கார்க்கிபவா




மகன் மற்றும் மகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு ஸ்கைப் காலுக்காக காத்திருக்கும் பெற்றோரில் இருந்து வீட்டிலே புதிதாக ஸ்டார்ட்அப் தொடங்கியவர் வரை அனைவருக்கும் இணையம் தேவை. ஒவ்வொருவரின் தேவையும் வித்தியாசமானது. 10 ஜிபி என்றாலும் லைட்னிங் ஃபாஸ்ட் தேவை சிலருக்கு. கொஞ்சம் மெதுவாக இருந்தாலும், நூற்றுக்கணக்கான ஜிபி அளவில் டொரண்ட் டவுன்லோடு செய்வது சிலருக்கு வழக்கம். ஜியோவின் டேட்டா அட்டாக் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களை மட்டுமல்ல; பிராட்பேண்டு நிறுவனங்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது. 50 ஜி.பி.க்கே சொத்தை எழுதிக் கேட்டவர்கள் இப்போது 500 ஜிபி, 1000 ஜிபி என சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்து விளம்பரங்களிலும் தவறாமல் கண்டிஷன் அப்ளை ஒன்றாவது இருந்துவிடுகிறது. இந்தப் புதிர்களைக் கடந்து நமக்கான சரியான கனெக்‌ஷனை கண்டறிவது சாதாரண விஷயம் கிடையாது. பல விஷயங்களை கவனத்தில் கொள்வதுடன் இன்னும் சில விஷயங்களும் இருக்கின்றன. நீங்கள் புதிதாய் ஒரு பிராட்பேண்டு கனெக்‌ஷன் வாங்குவதாக இருந்தால் இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

யூஸேஜ் லிமிட்:

அன்லிமிட்டெட் என்ற வார்த்தைக்கு நமது நாட்டில் அர்த்தமே வேறு. அதுவும் இணையச்சேவையில் நிச்சயம் அன்லிமிட்டெட் கிடையாது. அதற்கு ஒரு கண்டிஷன் அப்ளை இருக்கும். உங்கள் பிராட்பேண்டு நிறுவனம், அப்லோடு மற்றும் டவுன்லோடு இரண்டையும் சேர்த்து லிமிட் தருகிறதா அல்லது டவுன்லோடு மட்டும் கணக்கில் கொள்கிறதா என்பதை முதலில் கவனத்தில் கொள்ளவும். எதையும் டவுன்லோடு செய்யாமல் இருப்பதாக நினைத்து, நீங்கள் பல புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். அவையெல்லாம் கணக்கில் இட்டு, 20-ம் தேதியே லிமிட் தீர்ந்ததாக ஓலை வரும். எனவே, புது கனெக்‌ஷன் எடுக்கும் போது FUP - Fair usage policy எவ்வளவு, அதில் அப்லோடு மற்றும் டவுன்லோடு எவ்வளவு என்பதைக் கவனிக்கவும்.

கண்டென்ஷன் ரேஷியோ (Contention ratio)

யூஸேஜ் லிமிட்டை பொதுவாக அனைவரும் அறிவார்கள். ஆனால், கண்டென்ஷன் ரேஷியோவை கவனித்திருக்க மாட்டார்கள். ஒரு நேரத்தில் எத்தனை பேர் இணையத்தை பகிர்கிறார்கள் என்பதைத்தான் இந்த ரேஷியோ குறிப்பிடுகிறது. இப்போதெல்லாம் கேம்ஸ் ஆட 6 வயது குழந்தைத் தொடங்கி சீரியல் பார்க்க 60 வயது பாட்டி வரை அனைவருக்கும் நெட் தேவை. எனவே, உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், ஒரு நேரத்தில் எத்தனை கருவிகளில் இணையத்தை பயன்படுத்துவீர்கள் என்பதையெல்லாம் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

வேகம்:

பிராட்பேண்டுகளில் டவுன்லோடு வேகம் என்பதும் அப்லோடு வேகம் ஒன்றாக இருக்காது. பொதுவாக விளம்பரங்களில் சொல்லப்படும் வேகம் என்பதும் நிஜத்தில் வருவதும் வேறு வேறு. டவுன்லோடு வேகத்தை மட்டுமே நம்பாமல், அப்லோடு வேகத்தையும் கவனித்து முடிவு எடுக்க வேண்டும். வாரம் ஒரு தடவையாவது இணைய வேகத்தை சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஃபைபர் கேபிள்:

இன்னமும் இந்தியாவின் பல நகரங்களுக்கு ஃபைபர் கேபிள் வரவில்லை. காப்பர் கேபிள்கள் மூலமே இணையம் வந்துகொண்டிருக்கிறது. DSL எனப்படும் இந்த டெக்னாலஜி அரதப்பழசானது. இதில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவு. புதிதாக நீங்கள் வாங்கவிருக்கும் இணையச்சேவை, ஃபைபர் டு த ஹோம் ( (FTTH) தானா என்பதை கவனிக்கத் தவறாதீர்கள். உங்கள் பகுதிக்கு இன்னமும் ஃபைபர் கேபிள் வரவில்லையென்றால், அதுபற்றி நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் கேட்டுப் பாருங்கள். விரைவில் வரக்கூடும் என்றால் காத்திருக்கலாம்.

பிராட்பேண்டு சேவை என்பது இன்னொரு சிம் கார்டு போன்றது கிடையாது. வாங்கியபின், வேண்டாமென்றால் மாற்றுவதும் எளிது கிடையாது. எனவே, கவனமாக தேர்ந்தெடுக்கவும். அதே சமயம், இருக்கும் சேவையில் பிரச்னை என்றால், மாற்றவும் தயங்க வேண்டாம். ஓர் ஆண்டுக்கு வாங்கினால், விலை குறைவு என்பார்கள். ஆனால், வாங்கிய இரண்டாவது மாதத்தில் இருந்தே பிரச்னை கொடுக்கும். கஸ்டமர் கேர்களும் கண்டுகொள்ளாது. ஏற்கெனவே ஓர் ஆண்டுக்கு பணம் செலுத்தியிருப்பதால, விலகவும் முடியாது. எனவே, மாதாந்திர பிளான்களே பெஸ்ட். சேவை சரியில்லையெனில் மாற்றிக்கொள்ள இது ஏதுவாக இருக்கும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...