Thursday, July 6, 2017

துபாயில் இருந்து அமெரிக்கா செல்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லலாம்: எமிரேட் விமான நிறுவனம் அறிவிப்பு 


dinakaran

2017-07-05@ 14:39:36

துபாய்: லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் உள்ளே வெடிக்கும் விதமான வெடிபொருட்கள் ஏதேனும் பதுக்கிவைத்து கொண்டு வரலாம் என கருதியதால் அமெரிக்கா விமான பயணத்தின் போது எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வர தடை விதித்தது. இந்நிலையில் துபாய் விமான நிலையத்தில் இருந்து எமிரேட் விமானம் மூலம் அமெரிக்கா செல்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகர்நிலை மருத்துவப் பல்கலை மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
23:41

மதுரை: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு பட்டியலில், தமிழக நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளை சேர்க்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி வள்ளியூர் முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: 'நீட்' தேர்வுக்கு பின், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறை துவங்கிஉள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகள்படி, மருத்துவக் கல்லுாரிகளில் பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் அரசு, தனியார், நிகர்நிலை மருத்துவப் பல்கலைகள் உள்ளன. இவற்றில், விதிகள்படி அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையில் 15 சதவீத இடங்கள் நிரப்பப்படும். மாநில அரசு நிறுவிய மருத்துவக் கல்லுாரிகள், சிறுபான்மை மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளில், பொது கலந்தாய்வு அடிப்படையில் 85 சதவீத இடங்களை நிரப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு கையேட்டில், நிகர்நிலை மருத்துவப் பல்கலை கல்லுாரிகளில் உள்ள மருத்துவ படிப்பு விபரங்களை குறிப்பிடவில்லை.சுகாதாரத்துறை செயலர், 'நிகர்நிலை மருத்துவப் பல்கலை படிப்பிற்கான இடங்கள் பொது கலந்தாய்வில் வராது,' எனக் கூறியுள்ளார். பொது கலந்தாய்விலிருந்து, நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளை விலக்கி வைக்கும் நோக்கில் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால், 85 சதவீத இடங்களை அவர்களே பூர்த்தி செய்வதுபோல் ஆகிவிடும்.
புதுச்சேரி உட்பட அண்டை மாநிலங்களின் நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளில், பொது கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு பட்டியலில், நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளை சேர்க்க வேண்டும்.

மருத்துவப் படிப்புகள், இடங்கள், கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்களை, பல்கலை மானியக்குழு விதிகள்படி (யு.ஜி.சி.,) வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு முருகன் மனு செய்திருந்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சாமிநாதன் அமர்வு தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலர், மத்திய கேபினட் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூலை 14 க்கு ஒத்திவைத்தது.
மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம் : நிகர்நிலை பல்கலைகளுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
23:34

சென்னை: தமிழகத்தில் உள்ள நிகர்நிலை மருத்துவ பல்கலைகளில் மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி 10 நிகர்நிலை பல்கலைகள் மற்றும் தமிழக அரசு பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,க்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஜவகர்லால் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனு:

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை அரசு அமைத்துள்ள குழு நிர்ணயித்துள்ளது. நிகர்நிலை பல்கலைகளைப் பொறுத்தவரை, அரசு நியமித்த கட்டண நிர்ணயக் குழு எந்த கட்டணத்தையும் நிர்ணயிக்கவில்லை. அதனால், நிகர்நிலை பல்கலைகள் தங்கள் விருப்பம் போல் கட்டணங்களை நிர்ணயித்து கொள்கின்றன. அரசு மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2.5 லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 10 முதல் 21 லட்சம் ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகர்நிலை மருத்துவ பல்கலைகளை அரசியல் பின்னணி, செல்வாக்கு உடையவர்கள் நடத்துகின்றனர். லாப நோக்கில் தான் மருத்துவ கல்லுாரிகள் நடத்தப்படுகின்றன. வர்த்தக நோக்கில் அதிக கட்டணத்தை நிகர்நிலை பல்கலைகள் வசூலிப்பதால் தமிழக அரசுக்கு இரண்டு மனுக்களை அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நிகர்நிலை பல்கலைகளின் நிதிநிலை அறிக்கையை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை நிகர்நிலை மருத்துவ பல்கலைகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜரானார். தமிழகத்தில் உள்ள 10 நிகர்நிலை பல்கலைகளையும் வழக்கில் சேர்த்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. மனுவுக்கு பதிலளிக்கும்படி நிகர்நிலை பல்கலைகளுக்கும், தமிழக அரசு, மருத்துவ கவுன்சில், யு.ஜி.சி.,க்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 17க்கு தள்ளிவைத்தது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை கடைசி நாள்

பதிவு செய்த நாள் 06 ஜூலை
2017

00:04 சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள்.

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது. சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்து www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு மருத்துவ கவுன்சிலின் வேண்டுகோளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு




மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது.

ஜூலை 06, 2017, 03:35 AM

புதுடெல்லி,

மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த தடையை கடந்த மாதம் 12–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் கடந்த 23–ந்தேதி வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு வெளியிட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தாமதம் ஆனது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறிய கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலவில்லை. எனவே, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்டு மாதம் 28–ந்தேதிக்கு உள்ளாகவும், பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 10–ந்தேதிக்கு உள்ளாகவும் நடத்தி முடிக்கும் வகையில் அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

இதை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்த கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நீட்டித்து நடத்தி கொள்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.








Wednesday, July 5, 2017

அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு தொடக்கம்

அகில இந்திய ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்வது தொடங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதிப் பெற்றவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதற்கான முடிவுகள் ஜூலை 15 - ம் தேதி வெளியிடப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் ஜூலை 16-ம் தேதி முதல் 22-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறு கிறது. இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 8 -ம் தேதி வெளியிடப் படுகிறது. இரண்டாம் கட்ட கலந் தாய்வில் இடம் கிடைத்தவர்கள் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் மீதமுள்ள இடங்கள் ஆகஸ்ட் 16 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு, அந்தந்த மாநில அரசுகளின் ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க www.mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. வரும் 11-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

திருநங்கைகளுக்கு அனைத்துப் படிப்புகளையும் இலவசமாக வழங்கும் இக்னோ

By DIN  |   Published on : 04th July 2017 05:36 PM 
ignou

புது தில்லி: இந்தியாவின் புகழ்பெற்ற திறந்தநிலை பல்கலைக்கழகமாக விளங்கும் இக்னோவில், திருநங்கைகளுக்கு அனைத்துப் படிப்புகளையும் இலவசமாகப் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள், தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து, இக்னோவில் வழங்கப்படும் எந்த படிப்பிலும் இலவசமாக சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29ம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் கையெழுத்திட்டு வெளியான அறிக்கையில், 'பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எந்த ஒரு படிப்புக்கும், திருநங்கைகள், கல்விக் கட்டணம் இன்றி சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. திருநங்கைகளின் சேர்க்கையின் போது, மத்திய /மாநில அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ் / மருத்துவர் அளித்த சான்றிதழ் / அரசு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்றிதழ் / ஆதார் அட்டை, இன்னபிற அடையாள அட்டையை பல்கலையில் அளிக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பின் மூலமாக ஏராளமான திருநங்கைகள் பட்டப்படிப்பு பயில முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய துணை வேந்தர் ரவீந்திர குமார், ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


2014ம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவராக உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் முன்பே, இக்னோ பல்கலைக்கழகம் தனது விண்ணப்பத்தில் 3ம் பாலினத்தவர் என்ற வாய்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 20.08.2026