Thursday, August 17, 2017


ராமச்சந்திரா பல்கலையில் 2 புதிய படிப்புகள் துவக்கம்

பதிவு செய்த நாள்17ஆக 2017 02:08

சென்னை: ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், புதிதாக இரண்டு துணை மருத்துவ படிப்புகள் துவக்கப்பட்டு உள்ளன. நாட்டில் முதன் முதலாக, சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையில், பி.எஸ்சி., மெடிக்கல் மைக்ரோபயாலஜி அண்ட் அப்லைடு மாலிக்யுலர் பயாலஜி மற்றும் பேச்சுலர் ஆப் ஆக்குபேஷனல் தெரபி என்ற, இரு துணை மருத்துவ படிப்புகள் துவங்கப்
பட்டுள்ளன.'இவற்றில் சேர, விண்ணப்ப படிவத்தை, www.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 21ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மாணவர் சேர்க்கை, 24ல் நடக்கும்' என, பல்கலை தெரிவித்துள்ளது.
நாகரிக உடை அணிந்து வர பெற்றோருக்கு பள்ளிகள் அறிவுரை
பதிவு செய்த நாள்17ஆக
2017
02:06


மாணவர்களை அழைக்க வரும்போது, நாகரிகமான உடை உடுத்தி வருமாறும், ஆபாச உடைகளை தவிர்க்குமாறும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.

இவற்றில், அரசு தொடக்க பள்ளிகள், கிராமப்புறங்களில் பள்ளிகள் போன்றவற்றில், பெரும்பாலும் மாணவர்களே பள்ளிக்கு சென்று, வீடு திரும்புவர். நகர்ப்புறம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவியரை அழைத்து வர, பெரும் பாலும், பெற்றோரில் ஒருவரோ அல்லது உறவினரோ பள்ளி செல்வது வழக்கம்.

இப்படி, பள்ளிக்கு செல்லும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் உறவினர்களில் பலர், சரியான உடைகளை அணிந்து செல்வதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.

ஆண்கள், லுங்கியை, கால் முட்டிக்கு மேல் கட்டி செல்வது; அரைக்காலுக்கு மேல் டிரவுசர்கள் அணிந்து செல்வது, அழுக்கான உடைகளை அணிந்து ஒழுக்கமின்றி பள்ளிக்குள் நுழைவதாக புகார்கள் உள்ளன. பெண்களில் சிலர் அலங்கோலமாக, மாணவ மாணவியரின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும், உடை அணிந்து செல்வதாகவும் பள்ளிகள் குற்றம் சாட்டி உள்ளன.இதையொட்டி, சில அரசு மகளிர் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், பெற்றோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.'நாகரிகமான உடை அணிந்து வர வேண்டும். மாணவ மாணவியருக்கு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில், அழுக்கான, ஆபாசமான உடைகளை அணிந்து வரக்கூடாது.'லுங்கிகளை மடித்து கட்டியும், சிறிய அரைக்கால் டிரவுசர் அணிந்தும், பள்ளிக்குள் நுழையக்கூடாது' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

- நமது நிருபர் -

'ராகிங்' விவகாரம்: யு.ஜி.சி., அறிவுரை


பதிவு செய்த நாள்17ஆக
2017
00:37


'ராகிங்' பிரச்னை குறித்து, கல்லுாரிகளுக்கு, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுரை வழங்கி உள்ளது.

யு.ஜி.சி., சார்பில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

● 'ராகிங்' பிரச்னையில், கல்லுாரி விடுதியில் தங்கும் மாணவர்கள் தான், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தோற்றம், உடை, உருவத்தை வைத்து, 'ராகிங்' செய்யப்படுகின்றனர்
● ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகள் தெரியாதவர்கள், 'ராகிங்' செய்யப்படுகின்றனர். சில மாநிலங்களில், அந்த மாநில மொழி தெரியாதவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆபாச வார்த்தைகளாலும், கிண்டலான பெயர் வைத்தும், ஜூனியர் மாணவர்களை, சீனியர்கள், 'ராகிங்' செய்கின்றனர்● ஜாதி, மதம், மாநிலம் அல்லது மாவட்டம், பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையிலும், 'ராகிங்' பாதிப்பு ஏற்படுகிறது. பாலியல் ரீதியாக மாணவ, மாணவியரை வேற்றுமைப்படுத்தி, கிண்டல் செய்கின்றனர். இதில், இருபாலர் படிக்கும் கல்வி நிறுவனங்களை விட, ஒரே பாலர் படிக்கும் நிறுவனங்களில், அதிகளவு, 'ராகிங்' உள்ளதுகல்லுாரி நிர்வாகம், மாணவர்களிடம் வேற்றுமைஏற்படாமல், அவர்களை ஒருங்கிணைத்தால்,
'ராகிங்' பிரச்னை பெரும்பாலும் தவிர்க்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
தோல்வி தான் என்னை உலகளவில் சாதிக்க வைத்தது : பாராட்டு விழாவில் ஆடிட்டர் ஜி.சேகர் பேச்சு

பதிவு செய்த நாள்17ஆக
2017
00:09




விருதுநகர்: ''சி.ஏ., தேர்வில் 32 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்தேன். அந்த தோல்வி தான் இன்றைக்கு உலகளவில் சாதிக்க வைத்துள்ளது,'' என விருதுநகரில் நடந்த பாராட்டு விழாவில் ஆடிட்டர் ஜி.சேகர் பேசினார்.

உலக அளவில் கணக்குப்பதியவியல் கல்வி நிர்ணய வாரியத்தின் பசிபிக் பிராந்திய கணக்குத் தணிக்கையாளர்களின் பிரதிநிதியாக இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஆடிட்டர் ஜி.சேசகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான் போன்ற 23 நாடுகளைச் சேர்ந்த அகில உலக சர்வதேச கணக்குப்பதியவியல் கல்வி நிர்ணய வாரிய பிரதிநிதி போட்டியில், பசிபிக் பிராந்திய கூட்டமைப்பின் பிரதிநிதியாக பலருடன் போட்டியிட்டு , குறிப்பாக சீனாவைச் சேர்ந்த ஒருவரை வென்று இந்த பதவியை பெற்றுள்ளார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலாக்க ஏற்பாடு செய்தபோது அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி ஆலோசனைக் குழுவில் பணியாற்றி வருபவர். அவருக்கு விருதுநகர் வியாபாரத் தொழில் துறைச் சங்கத்தின் சார்பில் நேற்று பராட்டு விழா நடந்தது. சங்க தலைவர் யோகன், செயலாளர் முத்து, பொருளாளர் வெற்றிவேல் வரவேற்றனர். 'தலைமைசால் தணிக்கைச் செம்மல்' என்ற பட்டத்தை ஹட்சன் நிறுவன தலைவர் சந்திரமோகன் வழங்கினார். இதில் விருதுநகர் ஆடிட்டர் அசோஷியேசன், சிவகாசி ஆடிட்டர் அசோஷியேசனை சேர்ந்த ஆடிட்டர்கள் அவரை பாராட்டினர். விருதுநகரில் அவர் படித்த சுப்பையா நாடார் பள்ளியின் தலைமையாசிரியர் சுப்புராஜ் வாழ்த்தி பேசினார்.

ஆடிட்டர் ஜி.சேகர் பேசியதாவது: விருதுநகரில் படித்த பள்ளி, கல்லுாரியில் எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவரையும் நான் மறக்கவில்லை. விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நிலக்கரி அள்ளிப் போடும் கூலித் தொழிலாளியாக என் தந்தை இருந்தார். அவருடைய மாத சசம்பளம் ரூ.150. அப்போது நான் இன்ஜினியராக ஆக ஆசைப்பட்டேன். ஆனால் சூழ்நிலையால் அது முடியவில்லை. அதன்பின் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் பி.காம்., சேர்ந்தேன். என் கல்லுாரியில் உள்ள நுாலகம் தான் எனக்கு கோயில். என்னுடைய உயர்வுக்கு காரணம் அங்கிருந்த பலதரப்பட்ட புத்தகங்கள் தான். பின் சி.ஏ., தேர்வில் 32 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்தேன். அந்த தோல்வி தான் இன்றைக்கு உலகளவில் சாதிக்க வைத்துள்ளது. 32 மதிப்பெண் எடுத்ததால் ரேங்க் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. நம்மால் ரேங்க் பட்டியலில் இடம் பெற முடியாவிட்டாலும், பல மாணவர்களை ரேங்க் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என முடிவு எடுத்தேன். தற்போது வரை 17 மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஜி.எஸ்.டி., என்பது புதிய சட்டம் அல்ல, ஏற்கனவே இருந்த 17 சட்டங்களில் இருந்த உருவான ஒரு சட்டம். உலகில் எந்த அரசாங்கமும் இந்த ரிஸ்க்கை எடுக்கவில்லை, மத்திய அரசு எடுத்துள்ளது. 2002 ல் வரவேண்டியது, 2007ல் வரவேண்டியது, 2017 ஜீலையில் தான் வந்துள்ளது. கடலைமிட்டாய்க்கு 17 சதவீதம் வரியில்லை 5 சதவீதம் தான் வரி. பஞ்சாப்பில் அரிசி மாவுக்கு வரி, கோதுமை மாவுக்கு வரியில்லை. தமிழகத்தில் அரிசி மாவுக்கு வரியில்லை, கோதுமை மாவுக்கு வரி. சில மாநிலங்களில் சில வரிகள் மாறுபடும். பொரிக்கடலைக்கு வரி என்றால், வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் வரி உண்டு. அதுபோல் வருமானவரித்துறையினர் ஆய்வுக்கு வருகிறார்கள் என்றால் பயப்பட தேவையில்லை. அப்படியே வரி கட்டவில்லை என்றாலும் , அதற்கு தகுந்தற்போல் கால அவகாசம் கேட்டு கொள்ளலாம். அவர்களிடம் அடையாள அட்டை இல்லையென்றால் வீட்டிற்குள் விடத் தேவையில்லை. சட்டத்தில் குடிமக்களுக்கான உரிமைகளை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுபோல் ஒரு புது வீடு கட்டுகிறோம், கட்டியபின் வீட்டிற்குள் சென்றபின் ,சில மாற்றங்களை செய்யலாம் என நினைக்கின்றோம். ஆனாலும் ஒரு ஆறு மாதம் தங்கி பார்த்தப்பின் முடிவு செய்து கொள்ளலாம் என நினைக்கின்றோம். அதுபோல தான் ஒரு புதுச்சட்டம் வந்துள்ளது, அதில் சில மாற்றங்கள் செய்யலாம் என்றாலும், 6 முதல் 9 மாதங்கள் போனால் தான் தெரியும். சங்கத்தின் மூலம் ஜி.எஸ்.டி குறித்து கோரிக்கைகளை வழங்கியுள்ளீர்கள், இதற்கு முன் இருந்த வரிக்கும், தற்போது உள்ள வரிக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டு பார்த்து தகுந்த ஆதார ஆவணங்களுடன் வழங்கினால் , மத்திய அரசிடம் தைரியாக எடுத்து கூறுவேன். இவாறு அவர் பேசினார்.


புதுச்சேரி - ஐதராபாத் இடையே விமான போக்குவரத்து துவக்கம்
பதிவு செய்த நாள்17ஆக
2017
00:04

புதுச்சேரி: புதுச்சேரியில் முடங்கியிருந்த விமான சேவை, நான்காவது முறையாக நேற்று துவங்கியது; முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து, விமான போக்குவரத்தை துவக்கி வைத்தார்.புதுச்சேரி - ஐதராபாத் இடையே, முதல் விமானம், 76 பயணியருடன் புறப்பட்டுச் சென்றது 78 இருக்கைகள் உள்ள, 'ஸ்பைஸ் ஜெட் கியூ 400' விமானம், காலை, 10:00 மணிக்கு ஐதராபாத்தில் புறப்பட்டு, காலை, 11:20 மணிக்கு புதுச்சேரியை வந்தடைந்தது. புதுச்சேரியில் இருந்து காலை, 11:40 மணிக்கு புறப்பட்டு, பகல் 1:10 மணிக்கு, ஐதராபாத் சென்றடைகிறது. பயண கட்டணம், 2,449 ரூபாய். 'பயணியரின் வரவேற்பு மற்றும் தேவையை பொறுத்து கட்டணம் மாறுபடும்' என, விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். ஐதராபாத்திலிருந்து, புதுச்சேரி வந்த விமானத்திற்கு, இரண்டு தீ அணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சியடித்து, 'வாட்டர் சல்யூட்' கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை, திருவள்ளூர், ஈரோட்டில் மழை
பதிவு செய்த நாள்
ஆக 16,2017 16:44


சென்னை: தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் சென்னை, திருவள்ளூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையில், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, கோயம்பேடு, திநகர், நந்தனம், அடையாறு, ஆழ்வார்ப்பேட்டை, நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, திநகர், மந்தைவெளி, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, சேப்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, கோடம்பாக்கம், மேடவாக்கம், குரோம்பேட்டை மேலூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றன. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. 

ஆழ்வார்ப்பேட்டையில் டிடிகே சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அண்ணா பல்கலையிலிருந்து கோட்டூர்புரம் நோக்கி செல்லும் சாலையில் மரக்கிளைகள் சரிந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருக்கனம்மாள் சத்திரம், மதுவரவாயல், ஆதம்பாக்கம், மனப்பாக்கம், பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, போரூர், ஆதம்பாக்கம்,மனம்பாக்கம், ஆவடி பகுதிகளில் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், மொடச்சூர், புதுபாளையம், குள்ளம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. 

வேலூர் மாவட்டம் அரக்கோணம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மதுரையில், மேலூர், தும்பைப்பட்டி மற்றும் சில பகுதிகளில் மழை பெய்தது.
ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு

பதிவு செய்த நாள்
ஆக 17,2017 00:55



கோவை: கோவையில் இருந்து, இரு கன்டெய்னர் லாரிகளில், செல்லாத ரூபாய் நோட்டுகள், சென்னைக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

மத்திய அரசு, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016ல் அறிவித்தது. செல்லாத ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தவர்கள், வங்கிகளில், 'டிபாசிட்' செய்தனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படுகின்றன.

கோவையில் உள்ள அனைத்து ஆக்சிஸ் வங்கி கிளைகளில், 900 கோடி ரூபாய்க்கு, செல்லாத ரூபாய் நோட்டுகள் சேர்ந்தன. இவை, நேற்று, சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு, இரு கன்டெய்னர் லாரிகளில், இன்ஸ்பெக்டர், இரண்டு, எஸ்.ஐ., 15 ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன், எடுத்து செல்லப்பட்டன.

NEWS TODAY 28.01.2026