Wednesday, August 30, 2017


மருந்து வாங்க பணமின்றி எஸ்.ஐ., தவிப்பு

பதிவு செய்த நாள்29ஆக
2017
23:01




சேலம்: உடல் நிலை பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும், எஸ்.எஸ்.ஐ., மருந்து வாங்க கூட பணமின்றி, தவிக்கிறார். சேலம், தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி, 57. ஓமலுார் சப் டிவிஷனில், சிறப்பு ரோந்து வாகனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பூங்கொடி, 43. இவர்களுக்கு, 23 - 27 வயதில் மூன்று மகள்கள். ஒரு மகன். மூத்த பெண் திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பெற்றோருடன் வசிக்கிறார். இரண்டாவது பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இவருக்கு, செப்., 12ல் திருமணம் நடக்க உள்ளது.

மகளின் திருமண செலவு : ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 2012ல் பணி காரணமாக மதுரை சென்றார். அங்கு பணியின்போது, மயங்கி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். கடந்த ஜூலை, 30ல், ரத்த அழுத்தம் அதிகரித்து மயங்கி விழுந்தார்.சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆப்பரேஷன் முடித்தும், நினைவு திரும்ப வில்லை.

இரண்டாவது மகள் திருமணத்துக்கு வைத்திருந்த, பணத்தை மருத்துவமனையில் செலவு செய்துள்ளனர். தற்போது, மருந்து வாங்க கூட, உறவினரின் உதவியை நாட வேண்டிய நிலை உள்ளது.

இன்சூரன்ஸ் பலனில்லை : இதுகுறித்து, நேற்று முன்தினம் இரவு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை, ஓமலுார் போலீசார் நல்லதம்பியை சந்தித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், அரசு, மாவட்ட போலீஸ் சார்பில் உதவுவது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், அவருக்கு உதவ நினைப்பவர்கள், 94981 68093 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இதுகுறித்து, கண்ணீர் மல்க அவரது மனைவி பூங்கொடி கூறியதாவது: போலீசில், 35 ஆண்டுகளுக்கு மேலாக, கணவர் நேர்மையாக பணிபுரிகிறார். ஆறு ஆண்டுகளாக, எங்கள் சம்பளத்தில் பெரும் தொகை, மருத்துவ செலவுக்கே போய்விட்டது. போலீசில், கணவருக்கு வழங்கிய ஸ்டார் நியூ ெஹல்த் இன்சூரன்ஸ் கார்டு, எந்த விதத்திலும் பயன்தரவில்லை. முதல்வரும், போலீஸ் உயர் அதிகாரிகளும், என் கணவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் பழனிசாமியின் மாவட்டமான சேலத்தில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் பணிபுரிந்தவரின் குடும்பம், சிக்கலான நிலையில் உள்ளதால், முதல்வர் உதவ வேண்டும் என, மாவட்ட போலீசார் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
போலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம் : எம்.பி.பி.எஸ்., 'சீட்'டுக்கு கொடுத்த விவகாரம்

பதிவு செய்த நாள்29ஆக
2017
22:59


சென்னை: வெளி மாநில மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனரா என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் படி,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைதீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
இதில், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில மாணவர்கள் சிலர், போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பித்து, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, திண்டி வனத்தைச் சேர்ந்த, அரசு வழக்கறிஞர், அம்ஜத் அலி மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த, தீனதயாளன், சென்னை மாநகர போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:

கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தமிழக மருத்துவ கல்லுாரிகளில் சேர, போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பித்து, சட்ட விரோதமாக, மாநில ஒதுக்கீட்டில்,எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றது தெரிய வந்து உள்ளது.

அது குறித்து, கேரளாவை பூர்வீகமாக உடைய மாணவி உட்பட, ஒன்பது பேரிடம் விசாரணை நடக்கிறது.

இவர்களை போல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி இருப்பிடம் மற்றும் ஜாதி சான்றிதழ்கள் சமர்ப்பித்து, இடம் பெற்று இருப்பதாக, தீனதயாளன் என்பவர் புகார் அளித்துள்ளார்.அதுபற்றி, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் அடிப்படையில், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிரம்பின இடங்கள்

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில்,அரசு இடங்களில், பழங்குடியினர் இடம் தவிர்த்து, அனைத்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களும் நிரம்பின.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 24ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. ஐந்து நாட்களில், அரசு மற்றும் சுயநிதி அரசு மருத்துவகல்லுாரிகளில் உள்ள, 3,284 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 468 பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பின.

இந்நிலையில், நேற்றைய கவுன்சிலிங்கில், ஆதிதிராவிடர் ஒ
துக்கீட்டில் இருந்த, எம்.பி.பி.எஸ்.,இடங்கள் நிரம்பின. இந்த பிரிவில், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், இரண்டு எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

பழங்குடியினர் பிரிவில் சில இடங்கள் காலியாக உள்ளன. பி.டி.எஸ்., படிப்பில், ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இடங்களை தவிர, அனைத்து இடங்களும் நிரம்பின.

இன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. கவுன்சிலிங், செப்., 1ல், நிறைவடைகிறது.
சொந்த ஊருக்கு உடல்கள் வர 10 நாட்களாகும் : லண்டனில் சாலை விபத்தில் மூவர் இறந்த விவகாரம்


பதிவு செய்த நாள்29ஆக
2017
22:43


காஞ்சிபுரம்: லண்டனில் விபத்துக்குள்ளாகி இறந்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூவரின் உடல்களை கொண்டு வர, பத்து நாட்களாகும் என, தெரிய வந்துள்ளது. விரைந்து அவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள மண்டப தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 63. இவரது மகன் மனோரஞ்சன், 35, தன் மனைவி சங்கீதாவுடன், 30, சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், 'விப்ரோ' எனும் இந்திய நிறுவனத்தில் ஓர் ஆண்டு ஒப்பந்த பணிக்காக, மனைவி சங்கீதாவுடன் கடந்த ஜனவரி மாதம் மனோரஞ்சன் லண்டன் சென்றுள்ளார்.
லண்டனை சுற்றிப்பார்க்க தன் தந்தை பன்னீர்செல்வம், தாய் வள்ளி, அத்தை தமிழ்மணி, மாமா அறச்செல்வம் ஆகியோரை மனோரஞ்சன் அழைத்துள்ளார்.
அதன் படி, 18ம் தேதி நான்கு பேரும் லண்டன் சென்றுள்ளனர்.
மனோரஞ்சனின் அத்தை தமிழ்மணி, மாமா அறச்செல்வம் ஆகியோர் டில்லியில் வசித்துள்ளனர். லண்டன் சென்ற நான்கு பேரும், அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து வந்தனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை, 3:00 மணிக்கு, வெம்பிளே என்ற இடத்திற்கு மினி பஸ் ஒன்றில் பயணம் செய்த போது, இரண்டு கன்டெய்னர் லாரிகள் இவர்கள் சென்ற மினி பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில், மினி பஸ்சில் இருந்த பன்னீர்செல்வம், அவரது தங்கை தமிழ்மணி, 50, தங்கையின் கணவர் அறச்செல்வம், 58, ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அதே மினிபஸ்சில் இருந்த, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேரும், மினி பஸ்சை ஓட்டிய, கேரளாவைச் சேர்ந்த, பென்னி என்பவரும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில், மனோரஞ்சன், அவரது மனைவி சங்கீதா, பன்னீர்செல்வத்தின் மனைவி வள்ளி ஆகியோர் படுகாயமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை காஞ்சிபுரத்திற்கு கொண்டு வர, பன்னீர்செல்வத்தின் சகோதரர், சண்முகசுந்தரம், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதை தொடர்ந்து, உடல்களை கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அருகே திருமழிசையில் வசித்து வரும் பன்னீர்செல்வத்தின் மருமகன் சங்கரன், லண்டன் செல்ல, 'விசா' கிடைத்திருக்கிறது. உறவினர்களின் உடலையும், காயமடைந்த அனைவரையும் அழைத்து வர இன்று அவர் லண்டன் புறப்படுகிறார்.
அதுபோல, டில்லியில் வசிக்கும் தமிழ்மணியின் மகன் அருண் என்பவர், 'விசா' கேட்டு விண்ணப்பித்துள்ளார். 

லண்டனில் பணியாற்றி வரும் மனோரஞ்சனின் மனைவி சங்கீதாவின் சொந்த ஊர் குடியாத்தம். இந்த ஊரிலிலிருந்து, சங்கீதாவின் சகோதரர்களான வெங்கடசுப்ரமணியம் மற்றும் வெங்கட நாராயணமூர்த்தி ஆகியோரும் லண்டன் செல்ல, 'விசா' கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
விசா கேட்டுள்ள உறவினர்கள், லண்டன் சென்று, இறந்தவர்களின் உடலையும், காயமடைந்த உறவினர்களையும் பாதுகாப்பாக அழைத்துவர இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் சென்று உறவினர்களை மீட்டு, உடல்களை கொண்டு வர, ௧௦ நாட்கள் ஆகும் என்கின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிப்பதால், ஒரு வாரத்திற்குள் உடல்களை கொண்டு வரலாம் என, எதிர்பார்க்கிறோம். யாரும் எதிர்பாராத நிலையில் நடைபெற்ற இந்த விபத்து வேதனையளிக்கிறது.

சண்முகசுந்தரம், பன்னீர்செல்வத்தின் சகோதரர், காஞ்சிபுரம்
கனமழையால் மிதக்குது மும்பை : முடங்கியது இயல்பு வாழ்க்கை
பதிவு செய்த நாள்29ஆக
2017
20:49



மும்பை: நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை, இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும், மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது, மும்பை நகர மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும், சமீபகாலமாக மழை பெய்து வருகிறது.

தலைநகர் மும்பையில், கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய மழை, நேற்று காலை வரை, விடிய விடிய பெய்தது. இதனால், மும்பையின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த, 34 மணி நேரத்தில், சத்திரபதி சிவாஜி ரயில் நிலைய பகுதிகளில், 268 மி.மீ. மழையும், கலாபாவில், 218 மி.மீ., மழையும் பதிவானது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல சாலைகளில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மும்பையின் முக்கிய போக்குவரத்தான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது; பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த, 2005ல் மும்பையில் பெய்த கனமழைக்கு இணையான அளவு, தற்போது மழை பெய்து வருவதாக, மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளுக்காக, தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மேலும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்தும், மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியிருப்பதாலும், அவசியமிருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும்படி, மாநில அரசும், மும்பை மாநகராட்சி யும் எச்சரித்துள்ளது. நிலைமைக்கு ஏற்ப விடுமுறை விடும்படி, நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மறக்க முடியாத 2005 : கடந்த, 2005, ஜூலை, 27ல், மும்பையில், 944 மி.மீ., மழை பெய்தது; இதுவே நாட்டில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை. அதற்கு முன், 1910, ஜூலை, 12ல், மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில், 838 மி.மீ., மழை பதிவானதே சாதனையாக இருந்தது.

மும்பையில், தொடர்ந்து பெய்த மழையில், 108 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர், காரில் இருந்தபோது, வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். மும்பைக்கு மிகப் பெரிய பாதிப்பை, 2005ல் பெய்த கனமழை ஏற்படுத்தியது.
பழனி, பன்னீருக்கு நடிகர் செந்தில் சவால்

பதிவு செய்த நாள்29ஆக
2017
22:20

சென்னை: ''வேட்டி கட்டிய ஆண் மகனாக இருந்தால், பதவியை ராஜினாமா செய்து, தேர்தலில் நின்று, வெற்றி பெற்று காட்டுங்கள,'' என, முதல்வர் பழனிசாமிக்கு, நடிகர் செந்தில் சவால் விடுத்துள்ளார்.

தினகரன் ஆதரவாளரான நடிகர் செந்தில், நேற்று அளித்த பேட்டி:அ.தி.மு.க., என்ற கோட்டையை, ஜெ., கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின்னும், நன்றாகவே இருந்தது. 

ஆனால், சகுனிகள் சிலர், அணி அணியாக பிரிந்து, கட்சியை கோமா நிலைக்கு தள்ளி விட்டனர். இதற்கு, சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர், தினகரன் தான்.ஜெயலலிதாவுக்கு ஆரம்ப கட்டத்தில், பல்வேறு அபாயங்கள் ஏற்பட்டன. அதை உடன் இருந்து பாதுகாத்தவர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தான். தர்மயுத்தம் எனக் கூறி பணம், பதவிக்காக நடித்து, ஜெயலலிதா பெயரையே கெடுக்கின்றனர். பழனிசாமியையும், பன்னீர் செல்வத்தையும் தேர்ந்தெடுத்தது சசிகலா தான். வேட்டி கட்டிய ஆண் மகனாக இருந்தால், பழனி சாமியும், பன்னீர்செல்வமும் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
குழப்பம்!  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ளதமிழக அமைச்சர்கள் இரட்டை இலையைமீட்க யோசனை கேட்பதில் தடுமாற்றம்

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த பிரமாண வாக்குமூலங்களை திரும்பப் பெறு வதா, வேண்டாமாஎன்பது குறித்து, டில்லியில் யாரிடம் யோசனை கேட்பது என்ற குழப்பத் தில், தமிழக அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்.





கட்சிக்குள் ஏற்பட்டுள்ளஉச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இரட்டை இலைச் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்பதில், அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்ட துவங்கியுள்ளனர். தமிழகத் தில், அ.தி.மு.க., வில், தினமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தேர்தல் ஆணை யத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., என்பது, இன்னும் இரண்டு அணிகளாகவே பார்க்கப்படுகிறது.

சசிகலா தலைமையிலான அம்மா அணி, மற்றொன்று, பன்னீர்செல்வம் தலைமையி லான புரட்சித்தலைவி அம்மா அணி. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது, இப்படித்தான், இரு தரப்பையும்அங்கீகரித்திருந்தது, தேர்தல் ஆணையம்.

இருவருமே எதிர்ப்பு

இருதரப்புமே, தாங்கள்தான் உண்மையான, அ.தி.மு.க., என்பதை நிரூபிக்க, லட்சக்கணக் கில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. அவை அனைத்துமே, தேர்தல்ஆணையத்தின், 'அண்டர்கிரவுண்ட்' வளாகத்தில் காகித மூட்டை களாக குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் தான், பழனி சாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. இதன்பின், ஓரளவுக்கு நிலைமை சரியாகும் என நினைத்ததற்கு பதிலாக, குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

துவக்கத்தில், பழனிசாமி, சசிகலாவை ஆதரித் தார்; பன்னீர்செல்வம் எதிர்த்தார். இப்போது நிலைமை மாறி, இருவருமே சசிகலாவை எதிர்க்கின்றனர்.'இரு தரப்பும் இணைந்ததை அங்கீகரிப்பதா வேண்டமா; இவர்கள் கூட்டும் பொதுக்குழு சட்ட ரீதியிலானதா' என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தபின் தான், நிஜமான, அ.தி.மு.க., யார் என்ற

கேள்வியே எழும்.மேலும், தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை,இந்த மூன்று தரப்பை தவிர, நான்காவது தரப்பும் உள்ளது; அது தான் தீபா தலைமையிலான அணி.

பிரச்னை துவங்கியதில் இருந்தே, தீபாவும், தன்னை ஒரு தரப்பாக, தேர்தல் ஆணையத்தில் சேர்த்துள் ளார். எனவே, சட்ட ரீதியில், இவ்வளவு பிரச்னை களுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் எடுக்கப் போகும் முடிவை, யாரும் அவ்வளவு எளிதாக கணித்துவிட இயலாது.

இந்த சூழ்நிலையில்தான், நேற்று தமிழக அமைச்சர் கள்,ஜெயகுமார், சண்முகம், தங்கமணி மற்றும் மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் டில்லி வந்தனர்.தேர்தல் ஆணையத்திற்கு செல்லப் போகின்றனர் என்ற செய்தி பரவிய நிலையில், திடீர் திருப்பம் நடந்தது. இவர்கள் அனைவரும், மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமனைச் சந்தித்தனர். அந்த ஆலோ சனைக்கு பின், நேராக, பார்லிமென்ட் விரைந்தனர்.

அங்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட அனைவரும் ஆலோசித்தனர். கீரியும், பாம்பு மாக, பேட்டிகள் தந்து கொண்டிருந்த நிலையில், நீண்டநாட்களுக்கு பின், தம்பிதுரை, ஜெயகுமார் ஆகியோரோடு, மைத்ரேயனையும் பார்த்து, பலரும் ஆச்சரியப்பட்டனர்.

முடிவெடுக்க கூடாது

இருப்பினும், 'பிரமாணபத்திரங்களை தற்போதைய சூழ்நிலையில் வாபஸ் வாங்கினால், அது சசிகலா தரப்புக்கு ஆதரவாக திரும்பலாம்' என, சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.எனவே, இதுகுறித்து அரசியல் ரீதியான ஆலோசனைகளைப் பெறவே, மத்திய அமைச்சர்களை, அ.தி.மு.க.,வினர் சந்தித்த தாக தெரிகிறது.இந்த விஷயம் தொடர்பாக, யாரிடம் ஆலோசிப்பது என்ற தடுமாற்றம், தமிழக அமைச்சர் களிடம் உள்ளது.

இதற்கிடையே, தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தியும், முன்னாள் எம்.பி., அன்பழகனும், தேர்தல் ஆணையம் வந்தனர். இவர்கள், 'எங்களைக் கேட்காமல், இரட்டை இலைச் சின்னம் உட்பட, தற்போதுள்ள பிரச்னை குறித்து முடிவெடுக்க கூடாது' என,தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து விட்டுச் சென்றனர்.

தீவிரம் ஏன்?


தமிழக அமைச்சர்கள், டில்லியில் முகாமிட்டுள்ளது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டால், தினகரன் அணியில் உள்ளவர்கள், தங்கள் பக்கம் வந்து விடுவர் என, முதல்வர் பழனிசாமியும்,

துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நினைக்கின்றனர்.

பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாதென, தேர்தல் கமிஷன் அறிவித்தால், தினகரன் நியமனமும் செல்லாததாகி விடும்; கட்சிக்கும், சசிகலா குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலை உருவாகி விடும் என்பது, இவர்களது நம்பிக்கை.இதனால், தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி, இரட்டை இலை சின்னத்தை மீட்பதில், தமிழக அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அரசியல்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெட்லியுடன் சந்திப்பு

நேற்று மாலை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லியை, அ.தி.மு.க.,வினர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின், நிருபர்களிடம் பேசிய, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ''தமிழகத்திற்கு கூடுதல் நிதி கேட்டு நிதியமைச்சரை சந்தித்தோம்,'' என்றார்.'

'கையில் ஒரு பேப்பரைக் கூட எடுத்து செல்லா மல், கூடுதல் நிதி கேட்டு, நிதி அமைச்சரை சந்தித்ததாக கூறுகிறீர்களே' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். டென்ஷனான, தம்பிதுரை, ''கோரிக்கை மனுக்களை எல்லாம், முன்பே கொடுத்தாகி விட்டது,'' என்றார்.

'மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்' என, நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை,''அவர், வர்த்தக துறை அமைச்சர்; அதனால், அவரை சந்தித்தோம்,'' என்றார்.இதற்கிடையே, செய்தி யாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஜெயகுமார், ''எங்களை பார்க்க, தேர்தல் ஆணையர், நேரம் ஒதுக்கவில்லை என, ஊடகங்களில் தகவல், தவறானது; அப்படி எதுவும் இல்லை,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -
புளுவேல்' விளையாட்டில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள் !

பதிவு செய்த நாள்29ஆக
2017
22:34

சென்னை:''உயிர் பலி வாங்கி வரும், 'புளூவேல்' ஆன் - லைன் விளையாட்டில், குழந்தைகள் சிக்கி விடாமல் இருக்க, பெற்றோர், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர், செந்தில்குமார் கூறியதாவது:ரஷ்யாவில், 2013ல், அறிமுகப்படுத்தப்பட்ட, 'புளூ வேல்' எனப்படும், ஆன் - லைன் விளையாட்டு, உலகம் முழுவதும் பரவி உள்ளது. தற்போது, இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளுக்கு, அதிகாலை, 4:20 மணிக்கு எழுந்து நடக்க வேண்டும்; உயரமான மொட்டை மாடியில் நிற்க வேண்டும்.கத்தி மற்றும் பிளேடால், திமிலங்கம் போன்று கை, கால்களில் வரைய வேண்டும் என, 50 விதமான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இறுதியாக, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த விளையாட்டில் சிக்கி, குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள், பலியாகி வருகின்றனர். சென்னையில், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும், புளூவேல் ஆன் - லைன் விளையாட்டில், குழந்தைகள் சிக்கி கொள்ளாமல் இருக்க, பெற்றோர் மற்றும் பள்ளிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகளை உளவியல் ரீதியாக அணுகி, அவர்களுடன் மனம் விட்டு பேசினால், இந்த விபரீத விளையாட்டில் இருந்து மீட்டு விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 11.07.2026