Thursday, September 14, 2017

மாவட்டத்தில் வெளுத்து கட்டியது மழை
பதிவு செய்த நாள்13செப்
2017
23:21

அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டையில் நேற்று அதிகாலை முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதில் பூக்கடை பஜாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அருகில் உள்ள தெருக்களில் வெள்ளம் தேங்கியது. பஜார்களில் உள்ள பிரதான மெயின் வாறுகால்களில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை நீர் செல்ல வழியின்றி, ரோட்டில் தேங்கி, வெள்ளக் காடாக உள்ளது. 

இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மழை பெய்தவுடன் பூக்கடை பஜார் பகுதிகளில் அதிக அளவில் மழை வெள்ளம் தேங்குவது வாடிக்கையாகி விட்டது.
இப்பகுதிகளில் உள்ள வாறுகால்களை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகாசி: சிவகாசியில் கடந்த ஒருவாரமாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் நிலங்களை உழவு செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை முதல் சிவகாசி நகர், திருத்தங்கல், கிராமப்புறங்களில் சாரல் மழை பெய்தது. இரவு வரை மழை நீடித்தது. விட்டு விட்டு மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். ஒரு வாரமாக தொடர் மழையின் எதிரொலியாக
பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது போல் விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.
ராமநாதபுரத்தில் ரூ.200 க்கு அலைபேசி : அலைமோதிய மக்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்13செப்
2017
22:53

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் 200 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு அலைபேசி வழங்கிய கடையை நோக்கி மக்கள் திரண்டதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.ராமநாதபுரம் சாலைத்தெருவில் 'சென்னை மொபைல் போன் ஷோரூம்' நேற்று திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சலுகையாக 200 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு போன் வழங்குவதாக அறிவிக்கபட்டது. இதனால் நேற்று காலை 8:00 மணியிலிருந்தே அந்த கடையை நோக்கி மக்கள் படை எடுக்க துவங்கினர். ஒரு சிலருக்கு 200 ரூபாய்க்கு அலைபேசி வழங்கப்
பட்டது. இந்த தகவல் நகர் முழுவதும் பரவிய தால், அந்தப்பகுதியில் அதிகளவில் மக்கள் திரண்டனர். இதனால் சாலை தெருவில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

கூட்டத்தினை சமாளிக்க முடியாத நிறுவனத்தினர் கடையை அடைத்து விட்டனர். கடைக்காரர்களால் டோக்கன் பெற்றவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் கடை திறக்காததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
மருத்துவமனை ஊழியர்கள் போராடினால் நடவடிக்கை
பதிவு செய்த நாள்13செப்
2017
22:15

சென்னை: 'மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறது. உயர் நீதிமன்ற தடை, அரசு எச்சரிக்கையையும் மீறி, போராட்டம் நடக்கிறது.

இதில், சுகாதாரத் துறை ஊழியர்கள் பங்கேற்கவும், அவசர கால விடுப்பு தவிர, விடுமுறை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''ஊழியர்களுக்கு அவசரகால விடுப்பு தவிர, பிற விடுப்புகள் வழங்கப்படாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல், தமிழக அரசுக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கோவையில் வலுவிழக்கும் போராட்டம் : பணிக்கு திரும்பிய 2,000 ஆசிரியர்கள்

பதிவு செய்த நாள்13செப்
2017
22:00


கோவை: போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, நடவடிக்கை எடுக்கும் பணிகள் தீவிரமடைவதால், கோவை மாவட்டத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணிக்கு திரும்பியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 11ம் தேதியில் இருந்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. காலாண்டுத் தேர்வு நடப்பதால், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்றம் தடையை மீறியும், போராட்டங்கள் நடப்பதால், நேற்று, கல்வித் துறை சார்பில், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்'வினியோகிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 5,162 ஆசிரியர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அளித்து, 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பில் உள்ளோரின் சான்றிதழ்களின், உண்மைத் தன்மையை ஆய்வு செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி மாணவர்களை கொண்டு தேர்வு நடப்பதால், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இதனால், போராட்ட களத்தில் பங்கெடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, சரிய துவங்கிஉள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், ''மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், படிப்படியாக பள்ளிக்கு திரும்புகின்றனர்.குறிப்பாக, 7ம் தேதி, 5,162 ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய நிலவரப்படி, தொடக்கக் கல்வித் துறையில், 2,242 பேர்; உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 758 பேர் மட்டுமே விடுப்பு எடுத்து உள்ளனர்,'' என்றார்.
உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
பதிவு செய்த நாள்13செப்
2017
23:32

போபால்: மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்கு பள்ளிகளில், மாணவர் வருகையை பதிவேட்டில் குறிக்கும் போது, மாணவர்கள், 'உள்ளேன் ஐயா' என, கூறுவது வழக்கம். இனி, உள்ளேன் ஐயாவுக்கு பதிலாக, 'ஜெய்ஹிந்த்' என, கூறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

வரும், நவ., 1 முதல், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதற்கு முன், சத்னா மாவட்டத்தில், அக். 1 முதல் இது சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. ''ஜெய்ஹிந்த் என்று கூறுவதன் மூலம், மாணவர்கள் இடையே தேசப்பற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தை,'' என, ம.பி., பள்ளிக்கல்வி அமைச்சர் விஜய் ஜா தெரிவித்தார்.அதே நேரத்தில், அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விமர்சித்து வருகின்றன.

'வங்கி துறையில் 5 ஆண்டுகளில் 30 சதவீத வேலை இழப்பு ஏற்படும்'

பதிவு செய்த நாள்13செப்
2017
22:44


புதுடில்லி: 'இயந்திரமயமாக்கல் அதிகரிப்பால், வங்கித் துறையில், அடுத்த,
ஐந்தாண்டுகளில், 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிட்டி குரூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல்
அதிகாரி, விக்ரம் பண்டிட், ஓரிகான் என்ற முதலீட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார். 

சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:

இயந்திரமயமாக்கல் மற்றும் செயற்கை அறிவு
சார் மேம்பாட்டால், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. பலர் வேலையை இழக்க நேர்ந்தது. தற்போது தான், அந்தத் துறை, அதில் இருந்து மீண்டு வருகிறது.

வங்கி சேவையில், இயந்திரமயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால், வங்கிகளின் செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பொறுப்புகள் மைய அலுவலகத்தில் குவிக்கப்படாமல், பகிர்ந்து அளிக்கப்படும்.
'பேக் ஆபிஸ்' எனப்படும், பின்புல பணிகள் எல்லாம் கணினி
மயமாகி விடும். இதுபோன்று பல முன்னேற்றங்கள் ஏற்படுவதால், வங்கித் துறையில், அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, என்றார்.
14.5 மீட்டர் நீளமுள்ள பஸ் சென்னைக்கு இயக்கம்
பதிவு செய்த நாள்13செப்
2017
22:32




பெங்களூரு: நாட்டின் மிக நீளமான, 'ஐராவத் கிளப் கிளாஸ்' பஸ், பெங்களூரில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

பெங்களூரு விதான் சவுதா முன்பகுதியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, போக்குவரத்து துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா, உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, போக்குவரத்து துறை அதிகாரிகள், வெள்ளை கொடி காட்டி, 23 பஸ்களை துவக்கி வைத்தனர். நாட்டிலேயே மிகவும் நீளமான பஸ் இதுவாகும். இதன் நீளம், 14.5 மீட்டர். இதில், 51 இருக்கைகள் உள்ளன. ஒரு பஸ்சின் விலை, 1.07 கோடி ரூபாய். இப்பஸ்சில், மூன்று 'டிவி, ஏசி', ஒவ்வொரு இருக்கையிலும், 'சார்ஜிங்', ஆட்டோ கியர் டிரான்ஸ்மிஷன், 410 குதிரை சக்தி இன்ஜின் ஆகிய வசதிகள் உள்ளன. முதற்கட்டமாக, இந்த பஸ்கள், பெங்களூரிலிருந்து சென்னை, மைசூரு, விராஜ்பேட்டை, மடிகேரி, கோழிக்கோடு, விஜயவாடா, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மங்களூரு - மும்பை ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளன.

போக்குவரத்து துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா கூறுகையில், ''நாட்டிலேயே மிக நீளமான பஸ்கள் வைத்துள்ள மாநிலம் என்ற பெருமை, கர்நாடகத்துக்கு கிடைத்துள்ளது. மிகச்சிறந்த போக்குவரத்து சேவை வழங்கும் மாநிலங்களில், முன்னணியில் உள்ளது,'' என்றார்.

NEWS TO DAY 16.07.2026