Friday, September 15, 2017

விவாதக் களம்: மறைக்கத் தேவையில்லை மாதவிடாயை!

Published : 10 Sep 2017 09:45 IST





பாளையங்கோட்டை பள்ளி மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, ‘மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்?’ என்று கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். வீடுகளில் இருந்துதான் மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்று பலரும் எழுதியிருந்தார்கள். ஆண்கள், பெண்களைப் போகப் பொருளாக மட்டும் நினைக்காமல் அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்றும் சிலர் எழுதியிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...

சமீபத்தில் ஒரு மருந்துகடைக்குச் சென்றபோது நீண்ட நேரமாக ஒரு பெண்பிள்ளை தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்த ஆண்கள் சென்றதும் நாப்கினை ஒரு வித கூச்சத்தோடு கேட்டு வாங்கினாள். “இதற்கு ஏன் இவ்வளவு தயங்கி நிற்கிறாய்” எனக் கேட்டேன். “அப்படிக் கேட்டால் வெட்கமே இல்லாமல் கேட்கிறது என சொல்லிவிடுவார்களோ என்ற பயம்” என்று சொன்னாள். அந்தப் பெண்னை நினைத்து வருத்தப்படுவதா அல்லது இந்தச் சமுதாயத்தைப் பார்த்து வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை.

இந்தச் சமூகத்தில் புகைப்பிடிக்க எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. அடித்துப் பிடித்து மதுவை வாங்கிக் குடித்துவிட்டு விழுந்து கிடக்க வெட்கப்படுவதில்லை. பொது இடம் என நினைத்துச் சிறுநீர் கழிக்க வெட்கப்படுவதில்லை. பெண்களை கேலி செய்யவும், பெண்களை இழிப்படுத்தும் பாடல்களைப் பாடவும், படமாக எடுக்கவும், காசு பண்ணவும் எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் மற்றவர்கள் முன்னிலையில் நாப்கினை வாங்கினால் வெட்கம் கெட்டவள் அப்படித்தானே? இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும் நாங்கள்?

கழிவறையே இல்லாத பள்ளியில் சிறுநீர் கழிக்காமல், மாதவிலக்கு நேரங்களில் துணிமாற்றக்கூட முடியாத நிலையில் தொடர்ந்து பத்து மணி நேரம் பளிளியில் என்னைப்போல லட்சகணக்கான பெண்கள் இன்னமும் அவதிப்பட்டுக்கொண்டும், வேதனை அனுபவித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதை நினைத்து நம் சமுதாயத்தில் இதற்குக் காரணமான துறை அதிகாரிகளும், பள்ளி, கல்லூரி ஆகியவற்றை நடத்தும் நிர்வாகிகளும்தான் வெட்கப்பட வேண்டும். வாழ்வில் தானும் முன்னேற வேண்டும் என நினைக்கும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் மனிதர்கள் வெட்கப்பட வேண்டும்.

- எஸ். ஆனந்தி, உறையூர்.

பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். பெண்ணை மதித்துப் பழக ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 60 வயதிலும் பெண்களுக்குப் புத்திமதி சொல்வதில் ஆர்வம் காட்டும் ஆண் சமூகம் திருந்த வேண்டும். வீட்டுக்கு ஒதுக்குப் புறத்தில் பெண்களை ஒதுக்கி வைப்பவரும் ஒரு பெண் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமே.

- வசந்தி, மதுரை.

மாதவிடாய் குறித்து வளரிளம் பருவப் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. இது ஒரு சாதாரணமான இயற்கை நிகழ்வு என்பதை இருபாலருக்குமே புரியவைத்து விட்டால் ஆண் குழந்தைகள் இவற்றைத் தவறான வழியில் சென்று அறிந்துகொள்வது தடுக்கப்படும். அதோடு பெண்களின் பிரச்சினைகளையும் அவர்கள் கொஞ்சம் அனுசரனையோடு அணுகுவார்கள்.

- ஜே .லூர்து,மதுரை.

பள்ளிகளில் கழிப்பறைகளும் தண்ணீர் வசதியும் உண்டா என்பதைக்கூடப் பார்க்காமல் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் ஆரம்பிக்கிறது நமது அலட்சியம்.

மாதவிடாய் காலத்தை எப்படிக் கடக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாத ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள் படும் வேதனைதான் மிகவும் கொடுமையானது. அதுவும் அரசுப்பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய முறையான கழிப்பிடங்கள் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும்.

- ஆர்.ஏ. தீபனா, களியனூர்.

இன்றைய நவீன காலகட்டத்திலும் பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. அது மாதாமாதம் இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு நிகழ்வு என்பதைப் படித்தவர்கள்கூட ஏற்க மறுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் இது குறித்த முறையான புரிதல் இல்லை. அத்தகைய புரிதலை அவர்களிடம் ஏற்படுத்தும் தெளிவு நம்மிடம் இன்னும் ஏற்படவில்லை.

பல பெண்களால் இன்றும் கடைகளில் கூச்சப்படாமல் வெளிப்படையாக நாப்கின் வாங்க முடிவதில்லை. ஏதேனும் விசேஷங்களுக்கு ‘இந்தக் காரணத்தால்’ வரக் கூடாது என்று சொல்லும்போது அந்தப் பெண்ணின் உணர்வைப் பெண்களே புரிந்துகொள்வதில்லை. முதலில் பெண்கள் இந்த விஷயத்தை இயல்பாகக் கடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களது ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே மாதவிடாய் நேர சிரமங்களை எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். அந்த நாட்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர்களை எப்படிப் புரிந்து கொண்டு உதவ வேண்டும் என்பதையும் அம்மாதான் சொல்லித் தரவேண்டும்.

பள்ளிகளில் வளரிளம் பருவ பெண்களுக்கு மாதவிடாய், நாப்கின் உபயோகிப்பது, அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும். உபயோகித்த நாப்கின்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அகற்றுவது என்பதையும் அவசியம் கற்றுத்தர வேண்டும்.

ஆடைகளில் கறைபடுவது பெரிய குற்றம் இல்லை. இதை இனியாவது அனைவரும் உணர வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள ஒரு இளந்தளிர் அநியாயமாக உதிர்ந்து விட்டதுதான் வேதனை.

- தேஜஸ்,கோவை.
உனக்கு மட்டும்: ஒருநாள் கூத்து!

Published : 10 Sep 2017 09:42 IST




மூன்று முறை பஜ்ஜி, சொஜ்ஜி பரிமாறியது எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை. ஆனால், நான்காவதாக வந்தவர்களைப் பிடித்துப்போகவே ஒருவழியாக என் திருமணம் உறுதியானது. அதுவரை சும்மா சும்மா திட்டிக்கொண்டிருந்த அம்மா, ஒளித்துவைத்திருந்த அன்பையெல்லாம் என் மீது காட்டினார். டாமும் ஜெர்ரியுமாக இருந்த நானும் தங்கையும் உற்ற தோழிகள் ஆனோம். அப்பாவோ பட்ஜெட் பார்க்காமல் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார். தோழிகளுடன் ஷாப்பிங், வருங்காலக் கணவருடன் போனில் அரட்டை என்று நாட்கள் இனிமையாகக் கடந்தன.

ஊர்ப் பெருமைக்காகத் தன் சக்திக்கு மீறிச் செலவு செய்வதால், அப்பாவுக்குப் பணக் கஷ்டம் இருந்திருக்கும்போல. அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைத் தவிர்த்துத் தனியாகப் பேச ஆரம்பித்தது கொஞ்சம் புதிதாக இருந்தது. தங்கள் கஷ்டங்களை என்னிடம் மறைக்க முயல்வது புரிந்தது. திடீரென்று என் வீட்டிலேயே நான் அந்நியப்பட்டதுபோல் தோன்றியது.பினேன்.

தங்கை என்னை இறுக அணைத்தவாறு தூங்கினாள். திருமண நாள் நெருங்க நெருங்க அவளது இறுக்கத்தின் அளவு கூடியது. அம்மா எப்போதும் இல்லாத வகையில் தன் இல்லற வாழ்வைப் பற்றி என்னிடம் அதிகம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். அந்தரங்க விஷயங்களும் அதில் உண்டு.

திருமணத்துக்கு முந்தைய நாளே உறவினர்கள் வர ஆரம்பித்தனர். வீடு களைகட்ட ஆரம்பித்தது. ஆனால், அப்பா முகம் மட்டும் கொஞ்சம் வாடியே இருந்தது. ஏதோவொன்று என் மனதை அழுத்தியது. முந்தைய நாள் இரவு முழுவதும் அறிவுரைகள் அள்ளி வீசப்பட்டன. தூக்கம் கண்ணை அழுத்தும் நேரத்தில், ‘மணப்பெண்ணைச் சீக்கிரம் ரெடியாகச் சொல்லுங்க’ என்ற குரல் கேட்டது.

அதிகாலை நான்கு மணிக்குக் குளிக்கச் சொன்னார்கள். குளித்துவிட்டு வந்த பிறகு, பியூட்டி பார்லரிலிருந்து வந்த பெண்கள், ஒப்பனை என்ற பெயரில் இரண்டு மணிநேரம் பாடாய்ப்படுத்தினார்கள். ஒரு வழியாக ஒப்பனை முடிந்ததும் கண்ணாடியைப் பார்த்து அதிர்ந்துபோனேன். அடையாளம் தெரியாத அளவு உருமாறி இருந்தேன்!

அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் நீர்கோத்ததைப் பார்த்த அம்மா, “அழக் கூடாது கண்ணு. நாங்கள் அடிக்கடி வந்து உன்னைப் பார்ப்போம், தைரியமா இருக்கணும்” என்று அடுக்கிக்கொண்டே போனார். அம்மாவைப் பார்த்துக் கோபத்தில் கத்த வாய் திறக்கும் நேரத்தில், “மேடம் ஸ்மைல் ப்ளீஸ்” என்று போட்டோகிராபர் சொன்னார்.

அவருக்கு மனதில் பி.சி.ஸ்ரீராம் கனவு இருக்கும்போல. தலைகீழான நிலையைத் தவிர அனைத்து நிலைகளிலும் என்னைப் படம் எடுத்துத் தள்ளினார். சாம்பார் மணம் மூக்கைத் துளைத்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. தாலி கட்டி முடிக்கும்வரை எதுவும் சாப்பிடக் கூடாது என்று பசியில் மண்ணள்ளிப் போட்டாள் பாட்டி. மணமேடைக்குச் செல்லும்போது தெரியாமல் மிதிப்பதுபோல், பாட்டியின் காலை மிதித்துவிட்டுச் சென்றேன்.

மேடைக்கு அருகில் செல்லச் செல்ல கூச்சம் அதிகரித்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விஜய் சேதுபதியைப்போல், மாப்பிள்ளை என்னைப் பார்த்து “ப்ப்பா… யாருடா இந்தப் பொண்ணு” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொள்வாரோ என்ற பயம் வேறு இருந்தது. ஆனால் நான் ‘ப்ப்ப்பா’ என்று சொல்லும் அளவுக்கு (லிப்ஸ்டிக் மட்டும்தான் பாக்கி) அவர் மணமேடையில் இருந்ததைப் பார்த்ததும், சரி நாமே பரவாயில்லை என்கிற நிலைக்குத் திரும்பினேன்.


மேடையில் நான் அருகில் அமர்ந்ததும், மாப்பிள்ளை வெட்கத்தில் சற்று நெளிந்தார். அதைக் கவனித்த என் தங்கை, என்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். மேடையில் பெரிய புகை மண்டலம் உருவாகியிருந்தது. கண் மை முகத்தில் பரவிவிடும் என்பதால் கண்ணைக் கசக்கவும் முடியவில்லை. கழுத்தில் தொங்கிய மாலை வேறு மிகவும் பாரமாக இருந்தது. தலை நிமிரக்கூட முடியாமல் குனிந்தே இருந்தேன். ஒருவழியாக என் கணவர், எனக்குத் தாலிகட்டி முடித்துவிட்டார். அப்பாடா இனி சாப்பிடப் போகலாம் என்று நினைத்தால், வாழ்த்துச் சொல்வதற்காக நின்ற நீண்ட வரிசையைப் பார்த்ததும் தலைசுற்றியது.

பசியும் தூக்கமும் வாட்ட, அப்போது பார்த்து முதுகு அரித்தது. இங்கிதம் கருதி சொரிந்துகொள்ள முடியாமல் தவித்தேன். இந்தக் கடுப்பில் பி.சி.ஸ்ரீராம் கனவுக்காரர் வேறு, வாழ்த்த வந்தவர்களைப் போகவிடாமல், “இப்படிப் பாருங்க, கொஞ்சம் திரும்பி நில்லுங்க, முகத்தைத் திருப்புங்க” என்று என் டென்ஷனைக் கூட்டினார். சிறிது நேரத்தில் நான் ரோபோட் மாதிரி, அவர் சொல்லாமலேயே வாழ்த்த வந்தவர் கையைப் பிடித்து, அவரைப் பார்த்துத் திரும்பி, முகத்தைச் சற்றுத் தாழ்த்தி, கேமரா பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தேன்.

வாழ்த்துப் படலம் முடிந்தபின், சாப்பிட அழைத்துச் சென்றார்கள். சாப்பிடும்போது அப்பா, அம்மாவைத் தேடினேன். அவர்கள் அங்கு இல்லை. தங்கையிடம் அவள் சாப்பிட்டுவிட்டாளா என்று கேட்டேன். அந்தப் பொழுதில்தான் நான் முதன்முறையாகப் பெரிய மனுஷி (ஆன்ட்டி!) போல உணர்ந்தேன். “நீ சாப்பிடுக்கா, நான் அம்மாவுடன் சாப்பிடுகிறேன்” என்றவளை, அதட்டி என்னுடன் அமர்ந்து சாப்பிடவைத்தேன். தங்கையைத் தவிர என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம், எனக்குப் புதியவர்களாக இருந்தனர்.

இனிமையாகப் பேசினாலும், நன்றாகவே கவனித்தாலும், இன்று காலைவரை எனக்கென்று இருந்த அந்த பந்தம், கண்முன்னே விலகிச் செல்வது தெரிந்தது. தங்கை கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டேன். கண்ணில் நீர் மல்க, என்னைப் பார்த்தவண்ணம், அவளும் என் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் வகையில், ஏதோ முக்கிய வேலை இருப்பதுபோல் அப்பா அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அம்மா அழுகையை அடக்கியவாறு ‘பொறுமை’ பற்றிய கடைசி நிமிட அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். ‘நேரமாச்சு போலாமா’ என்று அத்தை வந்து அழைக்க, விடைபெறும் முன் அம்மாவைக் கட்டிப்பிடித்தேன். அம்மாவின் விசும்பல் கேட்டதும், நானும் அழ ஆரம்பித்தேன். என் தங்கை ஓடிவந்து எங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். என் காதில், “அழாதே, கண் மை கலைந்துவிடும்” என்று அழுதபடியே சொன்னாள். அப்பா கண்ணைத் துடைத்தவாறு தள்ளி நின்றுகொண்டிருந்தார். அவரை இப்படிப் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை.

எல்லோரிடமும் விடைபெற்று, காரில் ஏறும்பொழுது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தின் மனநிலைதான் இருந்தது. “காரின் ஏசியை அணைத்து ஜன்னலைத் திறக்கலாமா? எனக்கு மூச்சுமுட்டுகிறது” என்று கேட்டேன். சரி என்று சொல்லி ஜன்னலைத் திறந்துவிட்டார். முகத்தை வருடிய குளிர்ந்த காற்று, சற்று இதமாக இருந்தது. என் கணவர் ஆறுதலாக என் கையை மென்மையாகப் பற்றினார். அப்பாவுடனான என் முதல் பயணம் நினைவுக்குவர, கண்ணை மூடியவண்ணம் கணவரின் தோளில் சாய்ந்தேன்.

- திவ்யா, சென்னை.


நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்

தோழிகளே, நெருங்கிய நண்பர்களிடம்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாமல் இப்படி எத்தனையோ விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கலாம். அவற்றையெல்லாம் இறக்கிவைக்கத் தோள் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உற்ற தோழியிடம் மனச் சுமையை இறக்கிவைத்த நிம்மதி உங்களுக்கும், உங்கள் அனுபவத்தில் இருந்து பாடம் கற்கும் வாய்ப்பு அடுத்தவர்களுக்கும் வாய்க்கலாம் அல்லவா? தயங்காமல் எழுதுங்கள், அனைத்தையும் பேசுவோம்.

முகவரி

பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002.

மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முயற்சி: முதல்வர் உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தகவல்

Published : 15 Sep 2017 08:03 IST

சென்னை



அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதாக தங்களிடம் முதல்வர் உறுதியளித்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருபிரிவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒரு பிரிவினர், தற்போதைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் உள்ளனர். முதல்வர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். இந்நிலையில் அப்பிரிவைச் சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன் (தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர்), பெ.இளங்கோவன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர்), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் கே.மணிவாசகன் உள்ளிட்டோர் நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.


இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் இல்லாமல் இருப்பின் அக்டோபர் மாதத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இல்லையென்றால் 20 சதவீத இடைக்கால நிவாரணம் அளிக்கப்படும் என்று முன்பு முதல்வர் அளித்திருந்த அதே உறுதிமொழியை இப்போது மீண்டும் அளித்துள்ளார். அதேபோல், சிபிஎஸ் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு எந்த சூழ்நிலையிலும் காலநீட்டிப்பு செய்யப்படாது. முடிந்தவரை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

எனவே, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கள் போராட்டத்தை அக்டோபர் வரை தள்ளிவைத்துவிட்டு பொறுமை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கணேசன் கூறும்போது, “கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய ஊதிய விகிதம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை செப்டம்பர் 30-ம் தேதி கிடைத்ததும் நடவடிக்கை எடுப்பதாகவும், சிபிஎஸ் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை நவம்பர் 30-ம் தேதி கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். அதை ஏற்றுத்தான் எங்களின் போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளோம்” என்றார்.

இரா.சண்முகராஜன் கூறும்போது, “கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜாக்டோ-ஜியோவின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரக் கூடியவர் முதல்வர்தான். அவர் கொஞ்சம் அவகாசம் கேட்டுள்ளார். அந்த வகையில்தான், ஜனநாயகத்தின் அடிப்படையில் அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

வேலூர் சி.எம்.சி பற்றி தெரியாத 6 விஷயங்கள்!

வேலூர் சி.எம்.சி
'மருத்துவர் ஆவதற்கு நீட் மட்டும் தகுதி அல்ல; சேவை மனப்பான்மையும் வேண்டும்' எனக் கூறி மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்த, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் செயல்பாட்டை சமூக ஆர்வலர்கள் வரவேற்கின்றனர். " இன்று நேற்றல்ல, 100 ஆண்டுகாலமாக மருத்துவப் படிப்பில் தனக்கான சுய அடையாளத்தோடு செயல்படுகிறது வேலூர் சி.எம்.சி" என்கின்றனர் மருத்துவர்கள். 
ஐடா ஸோபியா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்மணியால் 1900-ம் ஆண்டில் நர்சிங் பள்ளியாகத் தொடங்கப்பட்டது வேலூர் கிறிஸ்துவக் கல்லூரி. 'தன்னைப் போலவே நிறைய பெண்களை மருத்துவப் பணிக்குக் கொண்டு வரவேண்டும்' என்ற நோக்கில் அவர் உருவாக்கியதுதான் இந்தப் பள்ளி. 1918-ம் ஆண்டில் இங்கு எல்.எம்.பி (லைசன்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டது. 1942-ல் எம்.பி.பி.எஸ் படிப்பை அளித்து வந்தனர். தற்போது எம்.பி.பி.எஸ், நர்சிங் உள்பட 179 வகையான படிப்புகள் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்காக மாணவ சமூகமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தது வேலூர் சி.எம்.சி மட்டும்தான். 
வேலூர் சி.எம்.சி
இந்தியாவின் டாப் ரேங்கிங் கல்வி நிறுவனங்களில் ஒன்றான, வேலூர் சி.எம்.சி பற்றி வெளியில் தெரியாத சில விஷயங்களைப் பார்ப்போம். 
ஐடா1. பெண்களுக்காக செயல்பட்ட முதல் மருத்துவக் கல்வி நிறுவனம் என்னும் பெருமையை தன்னகத்தே கொண்டது வேலூர் சி.எம்.சி. தொடக்க காலங்களில் 100 சதவிகித மருத்துவக் கல்வி இடத்தையும் பெண்களுக்கே வழங்கியது சி.எம்.சி. இதற்குக் காரணம், அந்தக் காலகட்டங்களில் ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பினார் ஐடா. பிரசவ மரணங்களைத் தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டு ம் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது. 
2.  100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட இக்கல்வி நிறுவனத்தில் 1918-47 வரை பெண்களை மட்டுமே மருத்துவ மாணவர்களாக சேர்த்துக்கொண்டிருந்துள்ளனர். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பன போன்ற மூட நம்பிக்கைகள் உலவிய காலத்தில், ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கிக் காட்டியது வேலூர் சி.எம்.சி. 
3. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்ட போதும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கியது இக்கல்லூரி. இன்றளவும் மாணவிகளே இங்கு அதிகம் படிக்கின்றனர்.  
4. ’நீட்’ நுழைவுத்தேர்வு முறையை பலவித ஏற்றத்தாழ்வுகளுடன் இன்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் இந்தியாவிலேயே முதன்முறையாக 1970-ம் ஆண்டிலேயே அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு முறையையும் நேர்முகத் தேர்வு முறையையும் அறிமுகப்படுத்தியது வேலூர் சி.எம்.சி. இதன் நுழைவுத்தேர்வு வழிமுறைகளைத்தான் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் கடைபிடித்துவருகின்றன.  
5. மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது, இரண்டரை நாள்கள் சில அடிப்படைத் தேர்வுகளை நடத்துகிறது வேலூர் சி.எம்.சி. மாணவர்களின் தனித்தன்மையை பரிசோதிக்கும் வகையிலும் மருத்துவ சேவைக்கு அவர்கள் தகுதியானவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் தேர்வு முறை அமைந்திருக்கிறது. இதில் மாணவர்களின் பதிவு எண்ணுக்குப் பதிலாக டம்மி எண்கள் கொடுக்கப்படுகின்றன. எந்த மாணவர் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது. உலகின் சிறந்த தேர்வு முறையாக வேலூர் சி.எம்.சி-யின் அணுமுகுறையைச் சொல்கின்றனர். முதன்முதலில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்த வேலூர் சி.எம்.சிக்கு கடந்த ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்ட நிலையில், வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி மட்டும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் துணிச்சலான முடிவை அறிவித்துள்ளது. 
6. இந்தியாவில் 20 மருத்துவமனைகளை நிர்மானித்து, அந்த மருத்துவமனைகளுக்கான சிறந்த மருத்துவர்களை உருவாக்கி அனுப்பி வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்டுக்கு வெறும் 3,000 ரூபாய் கல்விக் கட்டணம் கொண்ட இந்நிறுவனத்தில் படிக்கத் தேர்வு செய்யப்படும் ஒருவர், 3 ஆண்டுகள் கிராமப்புற சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகின்றனர். இதுபோன்ற ஒப்பந்த முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை வேலூர் சி.எம்.சியையே சாரும். 
“அடித்தட்டு மக்களுக்கான மருத்துவர்களை உருவாக்குவதே ஒரே பணி” என்ற கொள்கையுடன் இதுவரையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகள் பாரம்பர்யம் நிறைந்த இக்கல்வி நிறுவனத்தின் 100-ம் ஆண்டு விழா வருகிற 2018-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மாணவர்கள் நிரம்பி வழிவார்களா என்ற கேள்விக்குறியோடு சி.எம்.சி மருத்துவக் கல்லூரி வளாகத்தை வலம் வருகின்றனர் மாணவர்கள்.
 

போராட்டங்களும், நீதிமன்றங்களும்... ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் என்ன சொல்கிறார்?

இரா.தமிழ்க்கனல்




பணமுடக்கம், ஜிஎஸ்டிக்கு அடுத்து நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருகின்றன. ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் இணைந்த போராட்டமும் இதில் அடக்கம். இந்தப் போராட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம்வரை சிலர் போக, சில நீதிபதிகளின் அதிரடித் தீர்ப்புகளும்வெளியாகின.

அரசமைப்புச் சட்டத்தின்படி நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகள், தீர்ப்புகளைத் தவிர, நீதிபதிகள் சிலர் வாய்மொழியாகத் தெரிவிக்கும் கருத்துகள் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தடைவிதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பாதிக்காதபடி நடத்தலாம் என்று கூறியது. அதையடுத்து, அரசு ஊழியர் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அதிக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் போராடக்கூடாது என்றெல்லாம் குறிப்பிட, அது சர்ச்சையாகி உள்ளது.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான போராடும் உரிமையை கூடாது என நீதிபதி கூறுவதற்கு சட்ட முகாந்திரம் உள்ளதா என்பது எழுத்தாளர்கள், கலைஞர்கள், உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இது குறித்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கேட்டோம். சட்டரீதியான விசயங்களை நம்மிடம் அவர் விவரித்தார்.

“ஜி.எஸ்.மணி என்ற வழக்குரைஞர், நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என்று ஒரு பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் போட்டார். இந்தப் போராட்டங்கள் சில அரசியல் கட்சிகளின் ஆதாயங்களுக்காக நடத்தப்படுவதாகக் கூறினார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், கடந்த 8ஆம் தேதி ஓர் உத்தரவு பிறப்பித்தது.

முதலில், நீட் தேர்வை எதிர்த்த போராட்டம் வேண்டாம் என்று கூறும் திரு. ஜி.எஸ். மணியின் கோரிக்கையில், அரசியல் ஆதாயம் இல்லையா? மத்திய அரசும் மாநில அரசும் கோருவது அதைத் தானே?

உச்ச நீதிமன்றம், மேற்சொன்ன இடைக்கால உத்தரவில், அமைதியான முறையில் போராடும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் வழங்கி இருப்பதால், வன்முறையின்றி போராடலாம் என்று கூறியது. ஆனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாதபடி நீட் தேர்வை எதிர்த்த போராட்டங்கள் நடத்தலாம் என்றும் சட்டம் ஒழுங்கு பாதிக்கையில் அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, இந்திய மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. குறிப்பாக, பிரிவு 19(1) (ஏ), கருத்துசுதந்திரத்தை வழங்குகிறது. 19(1)(பி), ஆயுதமின்றி அமைதியாகக் கூடுவதற்கான உரிமையை வழங்குகிறது. அதாவது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று மக்கள் கூடி கருத்துகளை அமைதியான வழியில் தெரிவிக்கும் உரிமையை, அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்குகிறது.

ஆனால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 19(2) கருத்துரிமைக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அத்தகைய கட்டுப்பாடுகளில், அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுவது என்னவென்றால், பொது ஒழுங்கை (public order) குலைக்கும்வகையில், கருத்துச்சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.

அரசமைப்புச் சட்டம், சட்டம் ஒழுங்கை (law and order) பாதிக்கும்நிலை இருந்தால், கருத்துரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று ஏதும் கூறவில்லை. அதற்கு மாறாக பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காமல் கருத்துச்சுதந்திரம் இருக்கவேண்டும் என்கிறது.
சட்டம் ஒழுங்கு என்பது வேறு, பொது ஒழுங்கு என்பது வேறு. சட்ட ஒழுங்குப் பிரச்னை என்பது மிகச் சாதாரணமானது. அதைக் கூறி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்க முடியாது. ஆனால் பொது ஒழுங்குக்கு பாதிப்பை உண்டாக்கும்வகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்த அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

பொது ஒழுங்குக்குக் குந்தகம் என்பதை விளங்கிக்கொள்ள, மூன்று உதாரணங்களைப் பார்க்கலாம்.

அரியானாவில் குர்மீத் ராம் ரகிம்சிங் சாமியார் வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு நீதிபதி தனி ஹெலிகாப்டரில் செல்லும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருந்தது. பொதுச்சொத்துக்கு மிகுந்த சேதம் ஏற்படுத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அதாவது பொது ஒழுங்கு (public order) பாதிக்கப்பட்டது. இம்மாதிரி பொது ஒழுங்கு பாதிக்கப்படும்போது, ஒருவர், அரசமைப்புச்சட்டம் கருத்துரிமையை அடிப்படை உரிமையாக வழங்குகிறது என்றும் மேற்சொன்னபடியான பொது ஒழுங்கை பாதிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்றும் கூறமுடியாது. பொது ஒழுங்கை பாதிக்கும் அந்த மாதிரியான கூட்டங்களை, போராட்டங்களைத் தடுக்க அரியானா அரசும் முன்வரவில்லை. எவரும் உயர் நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ அணுகி, இப்படிப்பட்ட பொது ஒழுங்கை பாதிக்கும் கூட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று கோரவும் இல்லை.

இரண்டாவதாக, முன்னர் கன்னையாகுமார் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் விசாரிக்கச் சென்ற மூத்த வழக்கறிஞர்களையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களையும் பேராசிரியர்களையும் உச்ச நீதிமன்றத்திலிருந்து 500 அடி தொலைவே உள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இந்துத்துவாவாதிகள் தாக்கியபோது, உச்ச நீதிமன்றமோ டெல்லி உயர் நீதிமன்றமோ ஏதும் செய்யவில்லை. நீதிமன்றத்திலேயே தாக்குதல் நடத்துவது பொது ஒழுங்குக்குக் குந்தகம் இல்லையா?

மூன்றாவதாக, 2002-ல் குஜராத்தில் அப்பாவி இந்துக்கள் கோத்ரா ரயிலில் தீவைத்து எரிக்கப்பட்ட பின், அவர்களின் சடலங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்றதை அடுத்து, சுமார் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பொதுச்சொத்துக்களுக்கு இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இது, பொது ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. எனவே, கருத்துரிமை எனும் பெயரால் அப்படி ஒரு பிண ஊர்வலத்தை நடத்தமுடியாது.

ஆனால் அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கைப் பற்றி கீழ்வரும் உச்ச நீதிமன்ற வழக்கு தெளிவாக்கும்.

இந்து பத்திரிகைக் குழுமமானது, ‘ஒரே ஒரு கிராமத்திலே’ எனும் தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தது. அத்திரைப்படம், அரசமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறது; இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று காரணம் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் இத்திரைப்படத்தைத் திரையிடுவதற்கான அனுமதிச் சான்றை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இம்மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில், அரசமைப்புச் சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும் கருத்துச்சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது என்றும் அந்த அடிப்படை உரிமையை எந்த அரசும் சட்டம் ஒழுங்கு எனக் காரணம்கூறி பறிக்கமுடியாது என்றும் அப்படிப் பறிக்கமுயன்றால் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் அரசின் அச்செயலை ரத்துசெய்வதுடன் அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையைத் தூக்கிப்பிடிக்கவேண்டும் என்றும் கூறியது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, நீட் எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக, வன்முறையின்றி, அறவழியில், காந்திய வழியில் நடைபெறுகிறது. மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், தமிழக அரசு அமைதிவழியில் போராடுபவர்களை வழக்குப்போட்டு கைதுசெய்யப் பயன்படுத்திக்கொள்கிறது. தமிழக அரசின் செயல், உச்ச நீதிமன்றம் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ வழக்கில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்கு விரோதமானது.

ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01-01-2016 முதல் ஊதியத்தைத் திருத்தி கூடுதல் ஊதியம் அளித்த்தைப் போல, பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையைத் திருப்பி அளிக்கவேண்டும் என்றும் அமைதியான வழியில் வன்முறையின்றிப் போராடுகின்றனர்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1) (சி), சங்கம் வைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக வழங்குகிறது. சங்கம் வைக்க அடிப்படை உரிமையை அளித்துவிட்டு, அமைதியாகக்கூடப் போராடக்கூடாது என்றால் அது பெரிய மோசடித்தனம், அல்லவா?

போராட்டம் தொடர்பாக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வேறு. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என்ன தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம். தண்டனையை எதிர்த்து ஊழியர்கள் உயர் நீதிமன்றத்துக்குத்தான் வரவேண்டும். எனவே போராட்டத்தைப் பற்றி உயர் நீதிமன்றம் நடுநிலைமை வகிக்கவேண்டும்; போராட்டம் பற்றி கருத்து ஏதும் சொல்வது சரியாகாது.

போராட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கருத்துக் கூறினால், ஊழியர்களுக்கு நீதிமன்றத்தின் மீது எப்படி நம்பிக்கை உண்டாகும்? ஆனால் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். போராட்டத்தில் வன்முறை ஏதும் இருக்கக்கூடாது.

ஒரு முறை, பாரத் பெட்ரோலியம் நிறுவன வேலைநிறுத்தம் நடந்தபோது, நீதிபதி சந்துருவிடம், போராட்டம் சட்டவிரோதம் என அறிவிக்குமாறு வழக்கு வந்தது. அதற்கு உனக்குத் துணையாக வராது என அவர் தீர்ப்பு கூறிவிட்டார். என்னிடம் நெய்வேலி என்.எல்.சி. போராட்டத்தின்போது இப்படியொரு மனு வந்தபோது, போராடும் தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் கேட்டு உத்தரவிட்டு, இரண்டு வாரத்துக்கு விசாரணையைத் தள்ளிவைத்தேன். ஆனால் அதிகாரிகள் தரப்பில், பெஞ்சுக்குச் சென்று போராட்டத்துக்குத் தடை வாங்கிவிட்டார்கள். அந்த உத்தரவை 10 ஆயிரம் தொழிலாளர்களும் எதிர்த்தார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து அவமதிப்பு வழக்கா போடமுடியும்? எனவே, அரசமைப்புச் சட்டத்தின்படி பொது ஒழுங்கு கெடாதபடி நீதிமன்றங்கள் அக்கறை செலுத்துவது பொருத்தம்” என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொன்னார், நீதிபதி ஹரிபரந்தாமன்.

அவருடைய வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தின் மீதான அக்கறையையும் மரியாதையும் வெளிப்படுத்துகின்றன.

பொங்கலுக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு இன்று தொடக்கம்


By DIN  |   Published on : 15th September 2017 02:55 AM 
trains

வரும் ஆண்டு (2018) பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (செப். 15) காலை முதல் தொடங்கப்படவுள்ளது.
வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வெள்ளிக்கிழமை முதல் ரயில் பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஏராளமானோர் ஜனவரி 12 ஆம் தேதியே சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 15) முதல் முன்பதிவு மேற்கொள்ளளலாம். அதேபோல ஜனவரி 13 ஆம் தேதி ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்பவர்கள் செப். 16(சனிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.
பயணிகளின் வசதிக்காக 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது. இதேபோல், பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது.


நாட்டின் தூய்மையான கல்வி நிறுவனங்கள்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் தமிழகம் முன்னிலை


By DIN  |   Published on : 15th September 2017 01:52 AM  |  
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட நாட்டிலுள்ள தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் 12 இடங்களைப் பிடித்துள்ளன.
இதுகுறித்து அந்தத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற நாடு முழுவதிலும் இருந்து 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
அவற்றில் 174 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின் முடிவில் முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
முதல் 50 இடங்களில் அரசு கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட இடம்பெறவில்லை. எனவே, அதற்கென்று தனி ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறோம் என்றார் ஜாவடேகர்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் என 4 பிரிவுகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன.
தூய்மையான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் பின்வருமாறு:
ஹரியாணா மாநிலம், சோனிபட் நகரில் உள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகப் பிரிவில் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 12 கல்வி நிறுவனங்கள்:
கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஈரோடு), அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் (கோவை), எஸ்என்ஆர் சன்ஸ் கல்லூரி (கோவை), கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோவை), ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (சென்னை), ஆர்எம்டி பொறியியல் கல்லூரி (சென்னை), ஆர்எம்கே பொறியியல் கல்லூரி (சென்னை), விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (திருச்செங்கோடு), விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி (திருச்செங்கோடு), ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை), காமராஜ் பல்கலைக்கழகம் (மதுரை), அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) ஆகிய நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.

    NEWS TO DAY 16.07.2026