Saturday, September 16, 2017

தினமலர்' செய்தி எதிரொலி: மாணவிக்கு குவியும் உதவி
பதிவு செய்த நாள்
செப் 16,2017 00:25



சேலம்: கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த ஏழை மாணவி தவப்பிரியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும், உதவிகள் குவிந்து வருகின்றன.

சேலம் மாவட்டம், ஆறகளூரைச் சேர்ந்தவர் தவப்பிரியா, 19; சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், அக்ரி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பதாக, 'தினமலர்' நாளிதழில், 13ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, பல்வேறு தரப்பினர், மாணவியின் தந்தை, ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர்.

நேற்று வரை, 1.65 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கத்தார், துபாய் ஆகிய நாடுகளில் வசிப்போர், ஆன் - லைன் மூலம், பணம் செலுத்தி உதவியுள்ளனர். அண்ணாமலை பல்கலை நிர்வாகமும், தவப்பிரியாவின் படிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, ஆறுமுகம் மொபைலுக்கு தொடர்பு கொண்டு, 'மகளின் படிப்புக்கு உதவி செய்து, உயர்கல்வி படிக்க வைக்கிறேன். அவரை, நேரில் வந்து சந்திக்க சொல்லுங்கள்' என, தெரிவித்துள்ளார்.
வங்கியில் ரூ.150 கோடி மோசடி செய்த ஜேப்பியார் மகள், மருமகன்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

2017-09-16@ 00:17:01




சென்னை: போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.150 கோடி மோசடி செய்ததாக ஜேப்பியார் மகள், மருமகன்கள் உட்பட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை கழிப்பட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜேப்பியார் ஷீலா (49). இவர், சென்ைன மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘நான் ஜேப்பியாரின் இரண்டாவது மகள். ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர். இந்த அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் ஆயிரம் விளக்கில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.150 கோடி கடனாக பணம் பெறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேப்பியார், மரிய ஜூலி மற்றும் அவரது கணவர் மரிய ஜான்சன், ஜேப்பியாரின் மூன்றாவது மகள் ரெஜினாவின் இரண்டாவது கணவர் முரளி, புனித ஜோசப் கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் பாபு மனோகர், மகள் ஜெசி பிரியா ஆகிய 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் கமிஷனர் உத்தரவுபடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 5 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 5 பேர் மீதும் கூட்டு சதி மற்றும் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் பண மோசடி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜேப்பியாரின் இரண்டாவது மகள் ஷீலா கடந்த ஜூன் 29ம் தேதி சொத்துக்காக தன்னை வீட்டிலேயே சிறை வைத்ததாக தாய் மற்றும் சகோதரிகள் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் கூத்து: ஆட்டோ டிரைவருக்கு 'ஹெல்மெட்' அபராதம்
பதிவு செய்த நாள்16செப்
2017
01:29




கோவை: கோவையில் ஆட்டோ டிரைவர் 'ஹெல்மெட்' அணியவில்லை என்று, எஸ்.ஐ., அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாகன சோதனை:

கோவை, ஆலாந்துறையை சேர்ந்தவர் கருணாகரன், 40. இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த, 13ம் தேதி மாலை சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காருண்யா நகர் போலீஸ் எஸ்.ஐ., சங்கரநாராயணன், ஆட்டோவை நிறுத்தினார். பின், கருணாகரனிடம் லைசன்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார்.

அபராதம்:

அதன்பின், 'ஹெல்மெட்' அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ஆட்டோ டிரைவர் கருணாகரனுக்கு, 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அபராதம் விதிக்கப்பட்ட சார்ஜ் ஷீட், 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டோ டிரைவருக்கு 'வித்-அவுட் ஹெல்மெட்' என கூறி, அபராதம் விதித்தது வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறுதலாக...

கோவை எஸ்.பி., மூர்த்தியிடம் கேட்டபோது, ''சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட எஸ்.ஐ.,யிடம் விசாரிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர், சீருடை இல்லாமல் வாகன ஓட்டி வந்துள்ளார். அதற்காகத் தான், 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அதில், 'யூனிபார்ம்' என்பதற்கு பதிலாக, 'ஹெல்மெட்' என்று தவறுதலாக எழுதிவிட்டார். அந்த 'சார்ஜ் ஷீட்' தான் வைரலாகி வருகிறது. 'ஹெல்மெட்' அணியாததற்கு, 100 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும்'' என்றார்.
ரயில் நிலையங்களில் ஏ.டி.எம்.,

பதிவு செய்த நாள்16செப்
2017
00:13

சென்னை : சென்னை ரயில்வே கோட்டத்தில், முக்கிய நிலையங்களில், பயணியரின் வசதிக்காக, வங்கி ஏ.டி.எம்., வைக்க ரயில்வேயால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னை சென்ட்ரலில், ஐந்து இடங்களிலும், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், வில்லிவாக்கம், திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், பெரம்பூர், செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் நிலையங்களிலும், வங்கி, ஏ.டி.எம்.,கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரி கூறியதாவது: முக்கிய ரயில் நிலையங்களில், வங்கி, ஏ.டி.எம்.,கள் அமைக்க, ஒப்பந்த அடிப்படையில், இடம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. இடவசதி மற்றும் வாடகை விபரங்களும் தெரிவிக்கப்பட்டு, வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பருக்குள், இந்த நிலையங்களில், ஏ.டி.எம்.,கள், அமைக்க, ஏற்பாடு நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


ராமச்சந்திரா கல்லூரிக்கு, 'ஸ்வச்சதா' விருது
பதிவு செய்த நாள்16செப்
2017
00:13

சென்னை : போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரிக்கு, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் பிரிவில், மத்திய அரசின், 'ஸ்வச்சதா' விருது வழங்கப்பட்டு உள்ளது.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி உள்ள பசுமை சூழல், துாய்மை, தண்ணீர் வசதி, கழிப்பறை, நவீன சமயலறை போன்ற காரணங்களால், மத்திய அரசின் ஸ்வச்சதா விருது வழங்கப்பட்டுள்ளது.தொழில் நுட்ப பிரிவில், மூன்றாவது இடத்துக்கான பரிசை, டில்லியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வழங்கி கவுரவித்தார்.இந்த விருதை, பல்கலை ஆய்வுத்துறை தலைவர், தியாகராஜன், பாதுகாப்பு மற்றும் வசதிகள் குழு துணை தலைவர், ஸ்ரீதர் ஆகியோர் பெற்றனர்.
கிரிக்கெட் சிறப்பு ரயில்கள்
பதிவு செய்த நாள்16செப்
2017
00:13

சென்னை : சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில், நாளை, இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடப்பதால், சென்னை கடற்கரை - திருமயிலை - வேளச்சேரி இடையே, மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இச்சிறப்பு ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, 17ம் தேதி, பகல், 12:30 மணிக்கு புறப்பட்டு, சேப்பாக்கத்திற்கு, 12:40 மணிக்கும்; திருமயிலைக்கு, 12:49 மணிக்கும் சென்றடையும்.திருமயிலையில் இருந்து, மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டு, சேப்பாக்கத்திற்கு 1:10 மணிக்கும், கடற்கரை நிலையத்திற்கு, 1:20 மணிக்கும் சென்றடையும்.சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, இரவு, 10:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், 10:40 மணிக்கு சேப்பாக்கத்திற்கும், 11:15 மணிக்கு வேளச்சேரிக்கும் சென்றடையும்.வேளச்சேரியில் இருந்து, இரவு, 11:20 மணிக்கு இயக்கப்படும் ரயில், சேப்பாக்கத்திற்கு, 11:50 மணிக்கும், கடற்கரை நிலையத்திற்கு, இரவு, 12:05 மணிக்கும் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
'குரூப் - 4' பதவியில் 4,682 பேர்

பதிவு செய்த நாள்16செப்
2017
00:08


சென்னை: அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 4'ல் அடங்கிய, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ ஆகிய பதவிகளுக்கு, 2016, நவ., 6ல் தேர்வு நடந்தது.

இதன் முடிவு, 2017, பிப்ரவரியில் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலை, 17 முதல், செப்., 6 வரை கவுன்சிலிங் நடந்தது. இதில், 2,708 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. தட்டச்சர் பதவிக்கான கவுன்சிலிங்கில், 1,582 பேருக்கும், 'ஸ்டெனோ நிலை - ௩' பதவிக்கான கவுன்சிலிங்கில், 392 பேர் என, மொத்தம், 4,682 பேருக்கு, ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கு, அந்தந்த அரசுத்துறைஅலுவலகங்கள் மூலம், பணி நியமன உத்தரவு வழங்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கு, விரைவில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TO DAY 16.07.2026