Thursday, November 9, 2017


அரசு மருத்துவமனை காலி பணியிடங்கள் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கு நியமன உத்தரவுகள் வழங்கியது, அவர்கள் பணியில் சேர்ந்தது மற்றும் காலி பணியிடங்கள் குறித்த அறிக்கையை, சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், வெங்குளம் ராஜு, 'கீழக்கரை, ஏர்வாடி அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், லேப் டெக்னீசியன்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை கோரி சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். 
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் இதரக் காலிப் பணியிடங்களை நிரப்ப மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், ராதாகிருஷ்ணன், தாக்கல் செய்த அறிக்கை:
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம், ஐந்து ஆண்டுகளில், 22 ஆயிரத்து, 358 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 
சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதியில், 106 உதவி மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களுக்கு, நவம்பரில், தற்காலிக தேர்வு பட்டியல் வெளியாகும். 744 சிறப்பு அறுவை சிகிச்சை உதவி டாக்டர் பணியிடங்களுக்கு, நவம்பர் இறுதியில், தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். 
பொது மருத்துவர் பணியிடங்களுக்கு, 1,223 நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
பொது சுகாதார நோய் தடுப்பு பிரிவில், 105; ஊரக சுகாதாரத்துறையில் 758; மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் 296, மருத்துவ அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. 1,740 நர்ஸ் பணியிடங்களில், 1,170 இடங்கள், டிசம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும். 2,163 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
பாராமெடிக்கல் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால்,பணி நியமனங்கள் தடைபட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சுகாதாரத்துறை செயலரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, இதுவரை எத்தனை பணியிடங்களுக்கு, நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன, 
அவர்களில் எத்தனை பேர் பணியிடங்களில் சேர்ந்துள்ளனர் மற்றும் அதற்கு பிந்தைய காலிப் பணியிடங்கள் குறித்த அறிக்கையை, சுகாதாரத்துறை செயலர், நவ., 29ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மல்லையாவுக்கு கடைசி வாய்ப்பு







புதுடில்லி: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜராகாததால், பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கைகளை துவங்க, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடைசி வாய்ப்பாக, டிச., 18ல் ஆஜராக, மல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பல்வேறு வங்கிகளில், கடன் வாங்கி மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டதால், விஜய் மல்லையா, ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றான்.
அவனை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, பிரிட்டனுக்கு, மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், மல்லையா மீதான, அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கு, டில்லி தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, 'பலமுறை, 'சம்மன்' அனுப்பியும், மல்லையா ஆஜராகவில்லை' என, மத்திய அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 'மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கைகளை, உடனடியாக துவக்குங்கள்; ஆஜராக, மல்லையாவுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிச., 18ல், மல்லையா, ஆஜராக வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோடு தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் ரூ.8 லட்சம் அபேஸ்

ஈரோடு: பெண் டாக்டர் போல் குரலை மாற்றி பேசி, எட்டு லட்சம் ரூபாயை, மருத்துவமனையில் இருந்து பெற்று சென்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு, பெருந்துறை ரோட்டில், சுதா மருத்துவ மனை உள்ளது. இதன் நிர்வாக அதிகாரி, டாக்டர் தனபாக்கியம். இவர் நேற்று முன்தினம், சொந்த வேலையாக, கோவைக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, மருத்துவமனையின் கேஷியரை போனில் தொடர்பு கொண்டு, டாக்டர் தனபாக்கியத்தின் குரலில் பேசி, 'நான் ஒருவரை அனுப்புகிறேன். அவரிடம், எட்டு லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்புங்கள்' என, கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில், மருத்துவமனைக்கு காரில் வந்த ஒருவர், கேஷியரிடம், டாக்டர் தனபாக்கியம் அனுப்பியதாக கூறி, எட்டு லட்சம் ரூபாயை வாங்கிச் சென்றார். டாக்டர் தனபாக்கியம், நள்ளிரவு மருத்துவமனை திரும்பினார்.
அப்போது, மர்ம நபர், எட்டு லட்சம் ரூபாயை நுாதன முறையில், ஏமாற்றி வாங்கிச் சென்றது தெரிந்தது. வீரப்பன்சத்திரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நுாதன மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்துள்ளது.
டி.எஸ்.பி., சண்முகம் கூறுகையில், ''மருத்துவமனையில் இருந்த, கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்து வருகிறோம். மருத்துவமனையில், ஏற்கனவே பணியாற்றியவர் இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம்.
''பெண் ஊழியர்களுக்கும், கேஷியருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். விசாரணை நடக்கிறது,'' என்றார். 

90வது பிறந்த நாளை கொண்டாடினார் அத்வானி


90வது பிறந்த நாளை கொண்டாடினார் அத்வானி
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான, எல்.கே.அத்வானி, நேற்று, 90வது பிறந்த நாளை, 90 பார்வையற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார்.
முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான, எல்.கே.அத்வானிக்கு, நேற்று, 90வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, பிரதமர், நரேந்திர மோடி உள்ளிட்ேடார் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் ஆகியோரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
''மிகப் பெரிய அரசியல் வித்தகர். தன் கடின உழைப்பால் பிறரில் இருந்து வேறுபட்டவர்; நாட்டிக்காகவே உழைத்தவர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, ராஜ்நாத் சிங், முதல் ஆளாக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், ஆனந்த் குமார், ஜயந்த் சின்ஹா உட்பட பலர் நேரில் சென்று, அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தன், 90வது பிறந்த நாளை, 90 பார்வையற்ற குழந்தைகளுடன், தன் வீட்டில், அத்வானி கொண்டாடினார். பல்வேறு கட்சித் தலைவர்கள், பல துறை சார்ந்தவர்கள், பா.ஜ., தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பயணியை தாக்கிய விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு

புதுடில்லி: பயணியை தாக்கிய, தனியார் விமான நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. டில்லி விமான நிலையத்தில், அக்., 15ல், இண்டிகோ நிறுவன விமானத்தில் செல்ல, பயணி ஒருவர் வந்தார். விமானத்தில் ஏறுவதற்காக, விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில், பயணி ஏறினார். அப்போது, அவரை, விமான நிறுவன ஊழியர்கள் தடுத்தனர். இதையடுத்து, பயணிக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பயணியை கீழே தள்ளிய ஊழியர்கள், அவரது கழுத்தை பலமாக அழுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தை, மொபைல் போனில் படம் பிடித்த பயணி ஒருவர், அதை, சமூக வலைதளங்களில், 22 நாட்களுக்கு பின் வெளியிட்டார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், கஜபதி ராஜு கூறுகையில், ''பயணியை, விமான நிறுவன ஊழியர்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது. 

''இது குறித்து, விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம், அறிக்கை கேட்டுள்ளேன். பயணியை தாக்கிய ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், ஜெயந்த் சின்ஹா கூறுகையில், ''இது பற்றி, இண்டிகோ நிறுவனத்திடம் அறிக்கை கேட்டுள்ளேன்,'' என்றார்.

இதற்கிடையே, நடந்த சம்பவத்துக்கு, மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ நிறுவனம், 'பயணியை தாக்கிய ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளது.

சோழன் எக்ஸ்பிரஸ் பெட்டியில் மாற்றம்



சென்னை: சோழன் எக்ஸ்பிரஸ்ரயிலில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 'சேர் கார்' பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
சென்னை எழும்பூர் - திருச்சி இடையே, பகல் நேரத்தில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது, 10 பெட்டிகள், படுக்கை வசதியுடன் இயக்கப்படுகிறது.
'பகல் நேர ரயிலில், படுக்கை வசதி பெட்டிகள் தேவையில்லை; இதற்கு பதிலாக, முன்பதிவு, சேர் கார் பெட்டிகள், இணைத்து இயக்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி, இந்த ரயிலில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில், ஐந்து பெட்டிகள், முன்பதிவு, 'சேர் கார்' பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இவ்வசதி, 2018 ஜன., 20 முதல் அமல்படுத்தப்பட உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பி.எஸ்சி., நர்சிங் இன்று கவுன்சிலிங்

சென்னை: பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது. பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 8,381 இடங்கள் உள்ளன. இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. இவற்றில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில், 879 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், இன்றும், நாளையும், சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதில், மாணவியர் மட்டும் பங்கேற்கலாம்.

NEWS TODAY 03.07.2026