Friday, February 2, 2018

புதிய மருத்துவக் கல்லூரி தமிழகத்திற்கு வருமா?

Added : பிப் 02, 2018 03:01

'மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 24 மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றை, தமிழகத்திற்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

பார்லிமென்டில் நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில், 'புதிதாக, 24 மருத்துவக் கல்லுாரிகள் துவக்கப்படும். மூன்று லோக்சபா தொகுதிக்கு, ஒரு மருத்துவக் கல்லுாரி அமையும் வகையில், மருத்துவக் கல்லுாரிகள் விரிவாக்கம் செய்யப்படும்' என, நிதி அமைச்சர், அருண் ஜெட்லி அறிவித்தார்.
நாட்டிலேயே அதிகமாக, தமிழகத்தில் தான், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. சென்னையை தொடர்ந்து, தென் மாவட்டங்களிலும், பல் மருத்துவக் கல்லுாரி ஒன்று துவக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளையை துவக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, புதிய மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றாவது, தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரிகள் இல்லை. அதனால், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றை, இந்த மாவட்டங்களில் துவக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

- நமது நிருபர் -
திருச்சி - ஈரோடு மின்மய பாதை: இன்று சோதனை

Added : பிப் 02, 2018 02:58

சென்னை: மின் மயமாக்கப்பட்டுள்ள, திருச்சி - ஈரோடு இடையேயான ரயில் பாதையில், இன்றும், நாளையும், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சோதனை நடத்துகிறார்.

இதையொட்டி, நாளை திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, ஈரோடு வரை, அதிவேக ரயிலை இயக்கி, சோதனை நடத்துகிறார். அதனால், நாளை மதியம், 2:00 முதல், இரவு, 7:00 மணி வரை, இந்த ரயில் பாதையை, பொதுமக்கள் கடந்து செல்லக்கூடாது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரூ.1,000 மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ்.. கிடைக்குமா? விரக்தியின் விளிம்பில் பயணியர்

Added : பிப் 02, 2018 01:55



தமிழக அரசு, தாறுமாறாக பஸ் டிக்கெட் கட்டணத்தை ஏற்றிய நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்பட்டு வந்த, விருப்பம் போல பயணம் செய்யும், 1,000 ரூபாய், மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ், தொடர்ந்து வழங்கப்படும் என, அமைச்சர் அறிவித்திருந்தார். இதை ஏற்க அதிகாரிகள் மறுப்பதால், இந்த மாதம், 1,000 ரூபாய் பஸ் பாஸ் கிடைக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில், ஜன., 20ம் தேதி முதல், 65 சதவீதம் வரை, டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், அரசு, ஜன., 29ல், 8 சதவீதம், கட்டண குறைப்பு செய்தது.

கூடுதல் செலவு:

அதே நேரம், நீண்ட துாரம் இயக்கப்பட்ட மாநகர பேருந்துகளின் சேவைகளை நிறுத்திவிட்டு, 'லிங்க் சர்வீஸ்' எனப்படும், இணைப்பு பேருந்துகளை இயக்கும், புதிய யுக்தியையும், மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.இதனால், நெடுந்துாரத்திற்கு, ஒரே பேருந்தில் பயணித்தோர், இனி, இரண்டு, மூன்று பேருந்து களில் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால், வருமானத்தின் பெரும்பகுதியை, பேருந்து கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இதுபோன்ற பயணியருக்கு, ஒருநாள் மட்டும் விருப்பம் போல் பயணம் செய்யும், 50 ரூபாய் பயணச்சீட்டு, 1,000 ரூபாய்க்கான, மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ், ஆகியவை, பெரிதும் கைகொடுக்கும். கட்டண உயர்வுக்கு பிறகு, இந்த சலுகை கட்டண பஸ் பாஸ்களை, மாநகர போக்குவரத்து கழகம் நிறுத்தி உள்ளது. ஏற்கனவே, மாதாந்திர பாஸ் பெற்றுள்ளோர், வரும், 15ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.

அரசு அறிவிப்பு:
இந்நிலையில், பல்வேறு போராட்டங்களின் எதிரொலியாக, கட்டண குறைப்பு செய்த, மாநகர போக்குவரத்து கழகம், விருப்பம் போல பயணிக்கும், 1,000 ரூபாய், மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ்களை, தொடர்ந்து வழங்க இருப்பதாக, தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், 1,000 ரூபாய் பஸ் பாஸ் திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.ஆனால், அதிகாரிகள், அமைச்சரின் உத்தரவை ஏற்க மறுப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது, தாறுமாறாக உயர்ந்துள்ள கட்டணத்தில், 1,000 ரூபாய் பாஸ் வழங்கினால், பெரும்பாலான பயணியர், அந்த பாஸ் பெற முயற்சிப்பர்.இதனால், மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, கணிசமாக வருவாய் குறையும் என, அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும், சலுகை கட்டண பாஸ் விலையை உயர்த்த, பரிந்துரைகளை வழங்கி இருப்பதாகவும் தெரிகிறது.

இது சம்பந்தமான ஆலோசனைகள் நடந்து வருவதால், இம்மாதம், சலுகை கட்டண பஸ் பாஸ் கிடைக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது.ஒவ்வொரு மாதமும், 10 முதல், 21ம் தேதி வரை, பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் நிலையில், புதிய பாஸ் வழங்குவது குறித்து, இதுவரை எந்த அறிவிப்பையும், மாநகர போக்குவரத்து கழகம் வெளியிடவில்லை.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து துறை அமைச்சரோ, செயலரோ எங்களுக்கு எந்தவித அறிவிப்பையும் வழங்கவில்லை. ஏற்கனவே, 1,000 ரூபாய் பஸ் பாஸ் சேவையை, அதே கட்டணத்தில் தொடர வேண்டும் என, போக்குவரத்து துறை அமைச்சர் வலியுறுத்தியதாகவும், அதை, உயர் அதிகாரிகள் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனால், கூடுதல் கட்டணத்திற்கு, மாதாந்திர பஸ் பாஸ் வழங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.ஆலோசனைஒரு நாள் பஸ் பாசை, பலரும் முறைகேடாக பயன்படுத்துவதால், 'ரீசார்ஜ்' செய்யும் வகையிலும், மெட்ரோ ரயிலிலும் பயன்படுத்தும் வகையிலும், 'ப்ரீ பெய்டு' பாஸாக வழங்க திட்டமிட்டு உள்ளோம்.அதை, உரிமையாளர் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்காக விண்ணப்பிக்க, செயலிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட வேண்டும். அனைத்து திட்டங்களும், ஆலோசனையில் தான் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thursday, February 1, 2018

நாகேஷ் எனும் நகைச்சுவைத் திலகம்!

Published : 31 Jan 2018 12:59 IST

வி.ராம்ஜி



வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால்தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்படியானவர்களே வெற்றிபெற்று, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்... நாகேஷ்! எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து 'ஐகான்'... அடையாளம்... நாகேஷ் எனும் மகாகலைஞன்!

இயற்பெயர் குண்டுராவ். ஆனால் பெயருக்கும் அவர் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் 'பேசாம சர்க்கஸ் கம்பெனில சேர்ந்துடு. அதுக்குத்தான் லாயக்கு இந்த ரப்பர் உடம்பு' என்று பேசிய கேலியையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை அவர். பின்னாளில், அந்த மைனஸ் பாயிண்ட் உடம்பையே, ப்ளஸ் பாயிண்டாக்கிக் கொண்ட அவரின் மேனரிஸங்கள்... பாடி லாங்வேஜ்கள்... மிகப் பெரிய கைத்தட்டலையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தன.


'சினிமால நடிக்கறதுக்கு ஒரு முகவெட்டு இருக்கணும்' என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். நாகேஷுக்கு முகம் முழுக்கவே அம்மைத் தழும்புகள். ஆரம்பத்தில்... நடிக்க சான்ஸ் கேட்ட கம்பெனிகளெல்லாம், முகத்தைப் பார்த்தே கிண்டலடித்தன. 'வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா' என்றெல்லாம் கேட்டு நக்கலடித்தார்கள். இதற்காகவெல்லாம் துவண்டு போகவில்லை நாகேஷ். செருப்பும் உடலும் தேயத் தேய... சினிமா கம்பெனிகளைத் தொடர்ந்து படையெடுத்தார். ஜெயித்தார்.

சினிமாவில் ஒரு ஹிட் கொடுத்தால் போதும், அவர்களின் பின்னாலேயே சினிமா உலகம் ஓடும் என்பார்கள். ஒருகட்டத்தில், சினிமாவில் ஜெயித்த நாகேஷின் பின்னால், எல்லாக் கம்பெனிகளும் ஓடின. இதில், அவரை கிண்டலடித்து அனுப்பிய கம்பெனிகள்தான் முதலில் வந்தன.

கவிஞர் வாலியும் நாகேஷும் அறை நண்பர்கள். இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்து, பாட்டெழுத அவரும் நடிக்க இவருமாக அலைந்தார்கள். இருவரில் ஒருவரிடம் காசு இருந்தால் போதும் என்று வாழ்ந்தார்கள். பின்னாளில், இருவருமே அவரவர் துறையில் கோலோச்சினாலும் வறுமையைத் தொடரவில்லை. ஆனால் நட்பை தொடர்ந்தார்கள்.

அதேபோல், 'வாடாபோடா' பேசிக்கொள்கிற நட்பு, பலம் வாய்ந்தது என்பார்கள். இயக்குநர் பாலசந்தருக்கும் நாகேஷுக்குமான நட்பு 'வாடாபோடா' ரகம்தான். சொல்லப்போனால், பாலசந்தரை, 'பாலு' என்று கூப்பிடும் ஒரே சினிமாக்கார நண்பர் நாகேஷ்! அதேபோல் நாகேஷ் - ஸ்ரீதர் நட்பும் அப்படித்தான்! இன்னொரு விஷயம்... ஸ்ரீதரும் பாலசந்தரும் நடிகர், நண்பர் என்பதையெல்லாம் தாண்டி, நாகேஷ் எனும் கலைஞனின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவரை ரசித்து ரசித்து கேரக்டர்கள் கொடுத்து, கதைக்கு உரமூட்டினார்கள். நாகேஷ்... அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி உயிரூட்டினார்.

அதேபோல், நெகடிவ் ரோல்களில் நடித்தவர்கள், ஒருகட்டத்தில் காமெடி ரோலும் பண்ணுவார்கள். ஆனால் காமெடி ரோல் பண்ணுகிறவர், அதுவும் டாப் ஒன்னில் இருக்கிறவர், நெகடிவ் கேரக்டர் செய்தால் எடுபடுமா. எல்லோருக்கும் பிடிக்குமா. எடுபட்டது. பிடித்தது. அந்த வைத்தியைப் பார்த்து, அவரின் செயல்களைப் பார்த்து கோபப்படாதவர்களே இல்லை. மோகனாம்பாளுக்கும் சண்முகசுந்தரத்திற்கும் கொடுத்த குடைச்சல்களை, வைத்தி நாகேஷைத் தவிர யார் பண்ணினாலும் அது வில்லத்தனமாகியிருக்கும். நெகடிவ் கேரக்டராக மட்டுமே இருந்திருக்காது.

சிவாஜி அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்டிவிடமாட்டார். அதேசமயம் அவரின் பாராட்டை பார்வையாலேயே வெளிப்படுத்திவிடுவார் என்பார்கள். 'திருவிளையாடல்' படத்தில், அந்தப் புலவரும் தருமியும் பேசி நடித்த காட்சி. படமாக்கி முடித்ததும், 'டேய் நாகேஷ்' என்று அழைத்தபடி ஓடி வந்த சிவாஜிகணேசன், அப்படியே தூக்கிவிட்டாராம். 'இந்த சீன்ல நீதாண்டா ஹீரோ. பிரமாதப்படுத்திட்டே...' என்று புகழ்ந்தார் என்று இயக்குநர் ஏ.பி. நாகராஜன் நாகேஷை சிலாகிக்கும் போது, சிவாஜியின் பாராட்டையும் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீதர், பாலசந்தருக்கு இணையான அன்பையும் காதலையும் நாகேஷின் மீது வைத்திருப்பவர் கமல்ஹாசன். சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களிலெல்லாம் நாகேஷ் எனும் கலைஞனைப் புகழ்ந்து வியப்பார்; வியந்து புகழ்வார். அதனால்தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கொஞ்சம் விலகியிருந்த நாகேஷை, 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வில்லனாக்கியிருந்தார் கமல். அதுவும் எப்படி, நான்கு பேரில் நாகேஷ்தான் மெயின் வில்லன்.

இயல்பாகவே நகைச்சுவை இருந்தால்தான், நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதிக்கமுடியும். 'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பு. இடைவேளையின் போது, உணவருந்திக் கொண்டிருந்தார்கள். தட்டில் உள்ள சிக்கனை, போல்க் எனப்படும் குச்சியைக் கொண்டு குத்திக் குத்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கமல். நாகேஷ் சாப்பிட்டே முடித்துவிட்டார். கையலம்பிவிட்டு கமலிடம் வந்த நாகேஷ்... 'என்ன இவ்ளோ குத்தியும் கோழி சாகலையா இன்னும்' என்று சொல்ல, மொத்த யூனிட்டும் வெடித்துச் சிரித்தது.

'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'எதிர்நீச்சல்', 'எங்கவீட்டுப்பிள்ளை', 'சாது மிரண்டால்', 'அன்பே வா', 'வேட்டைக்காரன்', 'கலாட்டா கல்யாணம்', 'ஊட்டி வரை உறவு', 'காதலிக்க நேரமில்லை', 'அவ்வை சண்முகி', 'நம்மவர்'... என இன்னும் இன்னும் மாஸ்டர் பீஸ் படங்களையெல்லாம் சொல்லலாம். ஆனால் தேவையில்லை... ஏனென்றால்... நாகேஷே ஒரு 'மாஸ்டர் பீஸ்' தான்!

நகைச்சுவை எனும் பதார்த்தங்களைப் பார்த்துப் பார்த்து சப்ளை செய்த அந்த நாகேஷ்... எப்போதுமே ஒல்லிதான்... அதேசமயம் அவரின் நடிப்பு எப்போதுமே பிரமாண்டம்தான்!

இன்று ஜனவரி 31-ம் தேதி நகைச்சுவைத் திலகம் நாகேஷ் நினைவு நாள்.
காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை: நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக் கல்லூரிகள்

Published : 01 Feb 2018 12:09 IST

புதுடெல்லி,



காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவிகள் | கோப்புப் படம்.

2018-19ம் நிதி காசநோயாளிகளுக்காக மாதம் ரூ.500 உதவித் தொகை ஒதுக்கப்படும், 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார்.. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.

1. காச நோயாளிகளுக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு

2. ஒவ்வொரு 3 தொகுதிகளுக்கும் ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும்.

3. நாடுமுழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்.

4. ரூ.1200 கோடியில் சுகாதார மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 50 கோடி மக்கள் பயன் அடைவார்கள்.

5. காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை

6. ரூ.50 ஆயிரம் கோடியில் உடல்நலக் காப்பீடு திட்டம்

வருங்கால வைப்பு நிதியில் சலுகை: பட்ஜெட்டில் பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Published : 01 Feb 2018 15:22 IST

புதுடெல்லி



தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பெண்கள் சம்பளத்தில் இருந்து செலுத்தும் தொகை 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சலுகை இந்த அறிவிப்பு அமலுக்கு வந்தபின் புதிதாக பணியில் சேரும் பெண்களுக்கே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று (வியாழன்) தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெண்கள் பயன்பெறும் வகையில் சில அறிவிகப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பெண்கள் சம்பளத்தில் இருந்து செலுத்தும் தொகை 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்கள், ஆண்கள் என அனைவருமே 12 சதவீதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்க வேண்டும். இதில் பெண்களுக்கான பங்களிப்பு தொகை 8 சதவீதமாக பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பணி வழங்கும் நிறுவனங்கள் தற்போது செலுத்தும் பங்கு தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.

இதன் மூலம் பெண்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு தற்போதை உள்ளதை விடவும் இனிமேல் சற்று கூடுதலாக இருக்கும். எனினும் புதிதாக பணியில் சேரும் பெண்களுக்கே இந்த திட்டம் பொருந்தும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறு ஆறுதல்:நிலையான கழிவு திட்டம் மீண்டும் அறிமுகம்

Published : 01 Feb 2018 13:19 IST

புதுடெல்லி



வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் மத்திய பட்ஜெட் இருக்கும் நிலையில், சின்ன ஆறுதலாக 1976-ம் ஆண்டு கைவிடப்பட்ட நிலையான கழிவுத்திட்டத்தை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்த நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டு இருந்த முறையே தொடர்வதாக நிதி அமைச்சர் ஜேட்லி அறிவித்தார்..

இதன்படி, ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்ற முறையே தொடரும்.

அதேசமயம், கடந்த 1974ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான கழிவுத் திட்டத்தை மீண்டும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். 2006ம் ஆண்டு வரை இருந்த இந்த திட்டத்தை ப.சிதம்பரம் நீக்கினார்.

நிலையான கழிவு திட்டம் என்றால் என்ன?

நிலையான கழிவு திட்டம் என்றால் ஒட்டுமொத்த வருமானத்தில் குறிப்பிட்ட அளவு நமது உறவினர்களுக்கும், மருத்துவத்துக்கும் செலவு செய்வதற்கு கணக்கு காட்டத் தேவையில்லை.

அந்த வகையில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையான கழிவுத் திட்டம் மூலம் வருமான வரி செலுத்துபவர்கள் ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் வரை கணக்கு காட்டிக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள், கார்கள் வைத்திருப்போர் பெட்ரோல், டீசல் போட்டதாகவும் கணக்கு காட்டலாம், குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்ததாகவும் ரூ.40 ஆயிரம் வரை வரிசெலுத்தாமல் கணக்கு காட்டலாம்.

NEWS TODAY 14.02.2026