Saturday, March 3, 2018

கனவு ஆசிரியர்!

By ஆம்பூர் எம். அருண்குமார் | Published on : 03rd March 2018 01:39 AM |

இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய கனவு ஆசிரியராகத் திகழ வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கனவு ஆசிரியர் என்பவர் ஆசிரியர் சமுதாயத்தில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ வேண்டியவராவார். மாணவர்களைத் தன்னுடைய பிள்ளையாக கருதி அந்த மாணவர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்று அவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்கி, அவர்களுடைய தேடல்களுக்கு வடிகாலாக அமைந்திருப்பவரே 'கனவு ஆசிரியர்'.
கல்வித்துறை போன்று வேறு எந்த துறைக்கும் ஒரு சமூகத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய பொறுப்பும், கடமையும் இல்லை. நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு நல்ல ஆசிரியரால்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.

குடும்பமும், பள்ளியும் மாணவர்களுக்குத் நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தரும்போதுதான் அவர்கள் கல்வியில் சிறந்த நிலையை அடைய முடியும். வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். தமது குடும்பத்தில் ஒருவராக மாணவரைக் கருதும் ஆசிரியரால்தான் அந்த மாணவருக்குத் தேவையான கல்வியை சரியாக வழங்க முடியும்.
தவறு செய்வது மனித இயல்பு. பல சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும், பள்ளி வளாகத்திலும் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அவ்வாறு மாணவர்கள் தவறு செய்யும்போது அதை அவர்களுக்கு உணர்த்தி அவர்களைத் திருத்த வேண்டும். சிறிய குற்றங்களைப் பெரிதாக சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தால் விளைவுகள் வேறுவிதமாக மாறிவிடும். அதே சமயம் மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்துவிட முடியாது, கூடவும் கூடாது. மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர் சமுதாயம் நல்ல, உயர்ந்த நிலை அடைந்திருந்தால் நிச்சயமாக அதற்கு காரணமாக இருப்பது ஆசிரியர் சமுதாயமே ஆகும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பவர்களாக இருக்க வேண்டும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு முன்னதாக ஆசிரியரை வைத்துள்ளோம். பெற்றோர்கள் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குத் தருகிறார்கள். ஆனால் உலகத்தையே மாணவர்களுக்குத் தருகிறார் ஆசிரியர். இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர் பணியை சேவைப் பணியாக கருதாமல், வணிக ரீதியிலான பணியாக கருதிப் பலரும் பணிபுரிந்து வருகின்றனர்.

தாயாக, தந்தையாக இருக்கின்ற ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை தருவன. தன்னுடைய குழந்தையாக பாவிக்க வேண்டியவரே தடம் மாறிச் செல்கின்றாரே! அத்தகைய ஆசிரியர்கள் ஒட்டுமொத்த ஆசிரியர் பணிக்கே இழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு நல்வழிகாட்டுவது, அவர்களுடைய திறமைகளைக் கண்டறிந்து வெளிக் கொணர்வது, இவற்றையெல்லாம் செய்யாவிட்டாலும், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே தவறான வழியில் செல்கிறார்கள்.

இன்றைய திரைப்படங்கள், சமூக ஊடகங்களால் மாணவர்கள் அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி மிகவும் அவசியமானதாக உள்ளது. தற்போதைய கல்வி முறையில் ஒழுக்கக் கல்வியைச் சேர்த்து மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும்.
மாணவரின் தவறான செயல் ஒரு ஆசிரியரை பாதிக்காது. ஆனால் ஒரு ஆசிரியரின் தவறான செயல் ஒரு சமூகத்தையே தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

ஆசிரியரின் நடத்தைதான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் ஆசிரியர்களின் நடத்தை, செயல்பாடுகளின் மூலம் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்லாமல், சிறந்த பண்பாடு, ஒழுக்கம், சமூகத் தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். அதனால் ஆசிரியர் பல்துறை வல்லுநராக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
ஆசிரியர் கல்வியை மட்டும் வழங்குவதில்லை; மத, மொழி, ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து, அனைவரையும் மாணவர்கள் மதிக்க கற்றுத் தருபவர்கள் ஆசிரியர்கள்.

கற்பித்தல் என்பது ஒரு வகையில் கண்டறியும் கலையாகும். பலருக்குத் தங்களின் பலம் எதுவென்று கூடத் தெரிவதில்லை.
நல்ல ஆசிரியர்கள், மாணவர்களின் தனித்திறனை, பலத்தைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை விதைத்து வாழ்க்கையில் முன்னேற உதவுகிறார்கள்.

ஆசிரியர்கள் அறிவுக் கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். சமூகத்தில் அனுபவம் என்ற வெளிக்காற்றை மாணவர்களுக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள். அறியாமை இருட்டைத் திறந்து அறிவு என்ற ஒளி தருபவர்கள். ஆசிரியர்கள் தங்களுடைய பெரும் கடமையை உணர்ந்து செயல்பட்டு மாணவர்களின் கனவு ஆசிரியர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அண்ணா பல்கலையில் 3வது பதவியும் காலி

Added : மார் 03, 2018 03:31

அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த, ராஜாராமின் பதவிக்காலம், மே, 2016ல் முடிந்தது; இதுவரை, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.அடுத்தடுத்து இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டும், துணைவேந்தரை தேர்வு செய்யவில்லை. இதையடுத்து, மூன்றாவது குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, புதிதாக விண்ணப்பங்களை பெற்று, இறுதி பட்டியல் தயாரித்து வருகிறது.துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், பதிவாளர் கணேசன், இரண்டு ஆண்டுகளாக, நிர்வாக பணிகளை கூடுதலாக கவனித்து வந்தார். அவரது பதவிக்காலம், இரண்டு மாதங்களுக்கு முன் முடிந்தது. இருப்பினும், பேராசிரியரான அவருக்கு, தற்போது பதிவாளர் பணி, தற்காலிகமாக, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பல்கலையின் மூன்றாவது முக்கிய பதவியான, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமாவின் பதவிக்காலம், இன்றுடன் முடிகிறது. அவருக்கு பதில், வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.அண்ணா பல்கலையின் மூன்று முக்கிய பதவிகளும் காலியாகி உள்ளதால், நிர்வாகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், விரைவில், துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் மற்றும் இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -
சங்கர மடத்தின் 70வது மடாதிபதிவிஜயேந்திரர் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடத்தின், 70வது மடாதிபதியாக, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பொறுப்பேற்று கொண்டதாக, சங்கர மடம் அறிவித்துள்ளது. மேலும், மடத்தின் இளைய மடாதிபதி தேர்வு, இப்போதைக்கு இல்லை என, மடத்தின் மேலாளர் சுந்தரேஸ்வரர் ஐயர் தெரிவித்தார்.

காஞ்சி சங்கர மடத்தின், 69வது மடாதிபதியான ஜெயேந்திரர், வயோதிகம் காரணமாக, உடல்நலக்குறைவால், கடந்த மாதம், 28ல் காஞ்சிபுரத்தில் முக்தியடைந்தார். சங்கர மடத்தில், அவர் உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 'இளைய மடாதிபதியான விஜயேந்திரர், சங்கர மடத்தின் மடாதிபதியாக



பொறுப்பேற்று கொண்டார்; இளைய மடாதிபதி தேர்வு இப்போதைக்கு இல்லை,'' என, சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேஸ்வர ஐயர், நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.

14 வயதில் துறவு:

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் உள்ள தண்டலம் கிராமத்தில், 1969, மார்ச் 13ல் பிறந்தார். இயற்பெயர், சங்கரநாராயணன். சிறு வயதிலேயே, வேத பாட சாலையில், வேதங்களை திறமையாக படித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில், அவரது தந்தை முக்குள்ள கிருஷ்ணமூர்த்தியின் பாடசாலையில் வேதம் படித்தார். அங்கு, வேத காவியங்கள் மற்றும் பிற நுால்களையும் படித்தார்.

தன், 11வது வயதில், மஹா பெரியவரை, மஹாராஷ்ராவில் சந்தித்து ஆசி பெற்றார். 1983 மே 29ல், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், அவருக்கு சந்நியாசம் வழங்கப்பட்டது. அன்று முதல், 'ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்' என, அழைக்கப்படுகிறார்.

ரேஷன் கடையில் பொருள் வாங்கவிரல் ரேகை பதிவு கட்டாயம் 
 
03.03.2018

ரேஷன் கடைகளில், 'பயோமெட்ரிக்' எனப்படும், விரல் ரேகை பதிவு வாயிலாக, பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் முதல், இத்திட்டத்தை அமல்படுத்த, உணவு துறை முடிவு செய்துள்ளது.




தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; மற்ற பொருட்கள், குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. இதனால், கடை ஊழியர்கள், விற்பனை செய்தது போல, பதிவேட்டில் பதிந்து, முறைகேடாக, வெளிச்சந்தையில் விற்கின்றனர்.

இந்த விபரம், கார்டுதாரர்களுக்கு தெரிவதில்லை. இதனால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டு, பொருட்கள் விற்பனை, இருப்பு என, அனைத்து விபரங்களும், அதில் பதிவு செய்யப்படுகிறது. விற்பனை விபரம், கார்டுதாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தி வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள், பொருட்கள் வாங்காமல், எஸ்.எம்.எஸ்., வந்தால், உடனே புகார் அளிக்கலாம்.

இருப்பினும், பாதிக்கப்படுவோர், புகார் அளிக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், ரேஷன் முறைகேட்டை கட்டுப்படுத்த முடியாமல், அதிகாரிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில், மத்திய அரசு, பயோமெட்ரிக் எனப்படும், விரல் ரேகை பதிவு வாயிலாக, ரேஷன் பொருட்களை வழங்கும்படி, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளை அறிவுறுத்தியது.

இதையடுத்து, ரேஷன் கடைகளுக்கு, பயோமெட்ரிக் கருவி வழங்குவதற்கான அறிவிப்பை, 2017ல், சட்டசபையில், முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். ஆனால், அத்திட்டத்திற்கான நிதியை ஒதுக்காமல், நிதித்துறை இழுத்தடித்தது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில், பயோமெட்ரிக் கருவி பொருத்தி, அதன் வாயிலாக, பொருட்கள் வழங்குவதற்கு, தமிழக அரசு, தற்போது, அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 34 கோடி ரூபாய் செலவில், பயோமெட்ரிக் கருவிகள் வாங்குவதற்காக, விரைவில், இணையதள, 'டெண்டர்' கோரப்பட உள்ளது. டெண்டர் பணிகளை கண்காணிக்க, ஓரிரு தினங்களில், தனி குழு ஏற்படுத்தப்படும்.

ஏற்கனவே, ஸ்மார்ட் கார்டுக்காக, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' விபரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதனால், பயோமெட்ரிக் கருவி வந்த பின், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள், கடைக்கு வந்தால், அவர்களிடம், விரல் ரேகை பதிவு செய்யப்படும். கருவியில், விரல் ரேகை விபரம், ஏற்கனவே உள்ள ஆதார் கைரேகையுடன் ஒத்து போனால், பொருட்கள் வழங்கப்படும்.

எனவே, இனி, ரேஷன் கார்டு எடுத்த வர வேண்டிய அவசியம் இல்லை. இதனால், தகுதி உடையவர்கள் மட்டுமே, பொருட்கள் பெற முடியும். ஏப்., மே மாதங்களில், இதுதொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பணிகளை முடித்து, ஜூன் முதல், இத்திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மானியம் ரூ.5,500 கோடி! :

தமிழக அரசு, ரேஷன் பொருட்களுக்காக, உணவு மானியமாக, ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. அரிசி கார்டு வைத்திருப்பவர்கள், ரேஷன் பொருட்கள் வாங்க விருப்பம் இல்லை எனில், பொது வினியோக திட்ட இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' என்ற மொபைல் போன் செயலியில், அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதி உள்ளது. இருப்பினும், பொருட்கள் வாங்காத, வசதி படைத்தவர்கள், தங்கள் வீட்டு வேலையாட்களை வாங்கி கொள்ள கூறுகின்றனர். பயோமெட்ரிக் வந்தால், இனி, அவ்வாறு செய்ய முடியாது என்பதால், ரேஷன் முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப்படும்.
சாட்டை சுழற்றுகிறார் கவர்னர் புரோஹித்;துணைவேந்தர்களுக்கு அவசர அழைப்பு 

03.03.2018

உயர்கல்வித் துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பது குறித்து, கவர்னர் மாளிகையில், இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், பல்கலை துணைவேந்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், துணைவேந்தர் நியமனம், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் நியமனம், பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்குவது, பிஎச்.டி., வழங்குவது உட்பட, பல்வேறு பணிகளில் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. இதை வெளிச்சமிட்டு காட்டுவது போல்,


கோவை பாரதியார் பல்கலையில், பேராசிரியர் பணிக்கு, தலா, 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பேரம் பேசிய விவகாரம், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்கலை துணைவேந்தர் கணபதி, கையும் களவுமாக பிடிபட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பாரதியார் பல்கலை அதிகாரிகள் மற்றும் உயர்கல்வி அதிகாரிகளை அழைத்து, ஒரு மாதத்திற்குப் பின், கவர்னர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், பல்கலைகளின் வேந்தரான கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பல்கலைகளின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, அவசர ஆலோசனை கூட்டத்தை அறிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் தர்பார் அரங்கில், இன்று காலை, 10:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில், 20 பல்கலைகளின் பிரதிநிதிகள், பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில், ஊழல், முறைகேடுகளை களைந்து, தரமான உயர்கல்வி நிறுவனங்களாக மாற்ற, துணைவேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பல்கலைகளின் ஓராண்டு நடவடிக்கை குறித்த, கோப்புகளை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
பெரியார் பல்கலையில் அடிதடி, மல்லுக்கட்டு : பேராசிரியர்களின் மோதலால் மாணவர்கள் அதிர்ச்சி

Added : மார் 03, 2018 03:31

சேலம்: சேலம் பெரியார் பல்கலை, இயற்பியல் துறை பேராசிரியர்கள், செருப்பால் அடித்துக்கொண்டு, ஆபாச வார்த்தைகளில், சண்டையிட்ட சம்பவம், மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலையில், கடந்த, 2004 டிசம்பரில், குமாரதாஸ், 2005 மார்ச்சில், அன்பரசன் ஆகியோர், இணை பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். அன்பரசன் ஏற்கனவே அரசு நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்ததால், 2009 ஜனவரியில், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். பெரியார் பல்கலையில், இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் சேர்ந்திருந்தாலும், 2010 டிசம்பரில் தான், குமாரதாஸ் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு இயற்பியல் துறை தலைவராக இருந்த கிருஷ்ணகுமாருக்கு, டீன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால், குமாரதாஸ் துறைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இதில், உடன்பாடில்லாத அன்பரசன், பல்வேறு புகார்களை கூறி வந்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. துறை வருகை பதிவேட்டில், அன்பரசன் தனது சீனியாரிட்டியை குறிப்பிட்டு, கையொப்பம் இட்டுள்ளார். இதுபோல் இனி செய்யக்கூடாது என, குமாரதாஸ் மெயில் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பேசுவதற்காக, குமாரதாஸ் அறைக்குள், நேற்று காலை, அன்பரசன் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலில் முடிந்துள்ளது. ஆபாச அர்ச்சனை, செருப்பில் தாக்கிக்கொண்டது என அப்பகுதி களேபரமானது. இதையடுத்து, குமாரதாஸ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்பரசன் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார். இச்சம்பவம், பெரியார் பல்கலை மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்த்துறையிலும் இதே பிரச்னை பெரியார் பல்கலையில், 2004ல், இணை பேராசிரியர்களாக, பெரியசாமி, தமிழ்மாறன் ஆகியோர் பணியில் சேர்ந்தனர். பெரியசாமி, போலி அனுபவ சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தமிழ்த்துறை தலைவர், மாதையன், 2013 ல் ஓய்வு பெற்றார். அப்பணியிடத்துக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. அதில், புதிதாக விண்ணப்பித்து, பேராசிரியராக பெரியசாமி பணியில் சேர்ந்தார். இதனால், தொடர் பணிக்காலத்தை கணக்கிட்டு, தனக்கு துறைத்தலைவர் பொறுப்பு வழங்க வேண்டும் என, தமிழ்மாறன் கோரி வருகிறார். ஆனால், தொடர்ந்து பெரியசாமியே தலைவராக இருந்து வருகிறார்.

அச்சம் ஏன்? கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக, பலரும் தொடர்ந்து துறைத்தலைவராக இருந்து வருகின்றனர். பல்கலை மானியக்குழு விதிமுறைப்படி, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, துறைத்தலைவர் பொறுப்பு, சுழற்சி முறையில் வழங்கியிருப்பின், இப்பிரச்னை எழுந்திருக்காது. துறைத்தலைவர் பொறுப்பு, வேறு ஒருவருக்கு போனால், தங்கள் ஊழல், முறைகேடு, தகுதியின்மை வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில், பல துறைத்தலைவர்கள் இதை தடுத்து வருகின்றனர்.

விமானம் ரத்தால் பயணியர் அவதி

Added : மார் 03, 2018 03:25

சென்னை: கொச்சிக்கு இயக்கப்படும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர். ஜெர்மன் நாட்டின், பிராங்க்பர்ட் நகரிலிருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:10க்கு, சென்னை வந்து, மீண்டும், அதிகாலை, 1:50 மணிக்கு, பிராங்க்பார்ட் செல்லும், லுாப்தான்சா ஏர்லைன்ஸ் விமான சேவை, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.பயணியருக்கு முன்பே, தகவல் கொடுக்கப்பட்டதால், அவர்கள், விமான நிலையம் வந்து காத்திருக்கவில்லை சென்னையில் இருந்து, கொச்சிக்கு, நேற்று காலை, 7:40, பிற்பகல், 2:05 மற்றும் இரவு, 8:40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய, 'கோ ஏர்' விமான சேவைகள், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணியர்சிரமத்திற்கு ஆளாகினர்.

Issuing of driving licence and registration certificate online begins across State

  Issuing of driving licence and registration certificate online begins across State The move comes after Chief Minister C. Joseph Vijay’s a...