Thursday, May 3, 2018

தந்தையின் குடிப்பழக்கத்தால் நெல்லை மாணவன் தற்கொலை

Added : மே 03, 2018 03:10



திருநெல்வேலி:டாக்டராகும் லட்சியத்துடன், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் விரக்தியடைந்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 'மதுக்கடைகளை இனியாவது மூடவேண்டும்' என, அவர் எழுதிய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி மாடசாமி. இவரது மகன், தினேஷ் நல்லசிவன், 18. பிளஸ் 2 தேர்வு முடித்து, 'நீட்' தேர்வுக்காக பயிற்சி பெற்றார்.தினேஷின் தாய், இசக்கி யம்மாள் சில ஆண்டுக்கு முன் இறந்தார். பின், மாடசாமி இரண்டாவதுதிருமணம் செய்து கொண்டார்.

தினேஷ், மதுரையிலுள்ள பெரியப்பா வீட்டில் தங்கி, 10ம் வகுப்பு படித்தார். பின், நாமக்கல்மாவட்டம் தனியார் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதினார்.தினேஷின் தம்பி இசக்கிராஜா 13, தங்கை தனுஸ்ரீ, 11, ஆகியோர் சொந்த ஊரில் வசிக்கின்றனர். கூலி வேலைக்காக மாடசாமி கேரளா சென்று விட்டார்.தந்தையின் குடிப்பழக்கத்தால் தினேஷ் விரக்தியில் இருந்தார்.மதுரையில் தங்கி இருந்த அவர், நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே ரயில்வே மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடலை மீட்ட போலீசார் சோதனை செய்த போது, சட்டைப்பையில் இருந்து கடிதத்தை எடுத்தனர். அதை வைத்து அவர், தினேஷ் என தெரிந்தது.
கடிதத்தில், 'அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்து போனதற்கு அப்புறமாவது நீ குடிக்காமல் இரு. நீ குடிப்பதால், எனக்கு கொள்ளி வைக்காதே. இதுதான், என் ஆசை. அப்போதுதான், என் ஆத்மா சாந்தியடையும்.இனியாவது பிரதமரும், முதல்வரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லையென்றால், நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன்' என, எழுதியுள்ளார். தினேஷ் உடல் கே.ரெட்டியபட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மதுக்கடைக்கு விதி விலக்கா
நெடுஞ்சாலை அருகே, 500 மீட்டருக்குள் உள்ள மதுக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, பல கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், தினேஷ் தற்கொலை செய்துகொண்ட பாலத்தின் அருகே உள்ள, மதுக்கடை மூடப்படவில்லை.இந்த கடையில், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், 'பார்' நடத்துகிறார். இதனால், விதிவிலக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவன் இறப்புக்கு பிறகும் மதுக்கடை அடைக்கப்படவில்லை; விற்பனை கனஜோராக நடந்தது.
கடிதம் அனுப்பும் போராட்டம்

Added : மே 03, 2018 03:01

சென்னை:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில், டாக்டர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க பொருளாளர், பெருமாள் பிள்ளை கூறியதாவது:சுகாதாரத் துறையில், தேசிய அளவில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. இதற்கு காரணமான டாக்டர்களுக்கு, சம வேலைக்கான ஊதியத்தை அரசு வழங்கவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலருக்கு, மொபைல் போனில், குறுஞ்செய்தி அனுப்பும் போராட்டம் நடத்தினோம்.

இதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழக முதல்வருக்கு, கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நேற்று நடந்த போராட்டத்தில், முதல்வருக்கு, 1,000 கடிதங்கள் அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலை அதிகாரிகள், 'சஸ்பெண்ட்'

Added : மே 03, 2018 02:47

சென்னை:தமிழக மீன்வள பல்கலையின், இரண்டு அதிகாரிகள், முறைகேடு புகாரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீன்வள பல்கலையில், 2017ல், பதிவாளர் பொறுப்பு வகித்த, பேராசிரியர் ரத்னக்குமார் மற்றும் மீன் வள பல்கலையின், எஸ்டேட் அதிகாரி, வி.வெங்கடேசன் ஆகியோர் மீது, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர், அனந்தபத்மநாபன் புகார் அளித்துள்ளார்.

புகாரில், ரத்னக்குமாரும், வெங்கடேசனும், தங்கள் பதவிக்காலத்தில், கட்டுமான பணிகளில் முறைகேடு செய்து உள்ளதாக தெரிவித்துஇருந்தார்.இந்த புகாரின் மீது, பல்கலை நிர்வாகம், நடத்திய விசாரணையில், முறைகேடுக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
எனவே, விரிவான விசாரணை நடத்தும் வகையில், தற்போது, மீன்வள பல்கலையின், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்ப தலைவராக உள்ள, ரத்னக் குமார் மற்றும் மாநில சுகாதார சங்கத்தில் பணியாற்றும், வெங்கடேசன் ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தற்போதைய பதிவாளர், சீனிவாசன் பிறப்பித்து உள்ளார்.
நாளை மறுநாள் பால் கிடைக்காது: முகவர்கள் நல சங்கம் அறிவிப்பு

Added : மே 03, 2018 02:22

சென்னை:'வணிகர் தினமான, மே, 5ல், பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், முதல்நாளே பாலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர், பொன்னுசாமி கூறியதாவது:தமிழகத்தில், மே, 5 வணிகர் தினத்தை முன்னிட்டு, வணிகர்கள் அனைவரும், தங்களின் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளனர்.இதனால், பால் முகவர்கள், அன்றைய தினம், ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து, 100 சதவீத பாலை கொள்முதல் செய்து, அவற்றை இருப்பு வைத்து, வினியோகிப்பது இயலாத காரியம்.எனவே, பால் முகவர்கள், 5ம் தேதி, பால் நிறுவனங்களிடம் இருந்து, 50 - 60 சதவீத பாலை கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

இதனால், அன்று, பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பாலை, முதல் நாளே, முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்து கொள்வது நல்லது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கக் கூட்டம், மாநில தலைவர், எஸ்.பி.சொரூபன் தலைமையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மே, 5ல், தமிழகம் முழுவதும் உள்ள, 15 லட்சம் மளிகைக் கடைகளை மூடுவது எனவும், சில்லரை வணிகத்தை மீட்க வணிகர்கள் உறுதி ஏற்கும் நாளாக, வணிகர் தினம் கொண்டாடுவது எனவும், கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரஜினி, கமலுக்கு கல்லூரிகளில் தடை

03.05.2018

சென்னை : நடிகர் கமல், ரஜினி நிகழ்ச்சிகளின் எதிரொலியாக, கல்லுாரிகளில் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.



மக்கள் நீதி மையத்தின் தலைவர், நடிகர் கமல், பல்வேறு கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் விழாக்களில் பங்கேற்கிறார். இந்த விழாக்களில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அவர், மத்திய - மாநில அரசுகளை விமர்சித்தும், அரசியல் கட்சிகளை விமர்சித்தும், பல்வேறு கருத்துகளை பரப்பி வருகிறார்.

அதேபோல், நடிகர் ரஜினியும், ஒரு பல்கலை விழாவில் பங்கேற்று, தான் துவங்க உள்ள அரசியல் கட்சி குறித்து பேசினார்.

இதுகுறித்து, ஆளுங்கட்சியினர் தரப்பில், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கல்லுாரிகளில் அரசியல் பேசும் நிகழ்ச்சிகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா, அனைத்து மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்லுாரிகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்போர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், தாங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் கொள்கைகளை, தங்கள் உரைகளில் பேசி வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகள், மாணவர்களின் கல்விக்கு

இடையூறாக அமையும். மாணவர்களின் மனப்பான்மை பாதிக்கப்படும்.

கல்லுாரிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், தங்களின் அரசியல் கொள்கைகள், பிற இயக்கங்களின் கருத்துகளை, மாணவர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறான விழாக்களுக்கு, கல்லுாரிகள் அனுமதி தரக்கூடாது. இதுகுறித்து, மண்டல கல்லுாரி இணை இயக்குனர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'கல்லூரியின் பெயரை மாற்ற அனுமதியில்லை'

Added : மே 03, 2018 04:14


புதுடில்லி:தயாள் சிங் கல்லுாரியின் பெயர் மாற்றத்தை அனுமதிக்க, மத்திய அரசு மறுத்துள்ளது.டில்லி பல்கலையின் கீழ், தயாள் சிங் கல்லுாரி என்ற பெயரில், காலை மற்றும் மாலை நேரகல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மாலை நேர தயாள் சிங் கல்லுாரியின் பெயரை, 'வந்தே மாதரம் தயாள் சிங் கல்லுாரி' என, கல்லுாரி நிர்வாகம் மாற்றியது; இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான,பிரகாஷ் ஜாவடேகர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கல்லுாரியின் பெயர் மாற்றத்தை அனுமதிக்க முடியாது. இரண்டு கல்லுாரிகளையும் வேறுபடுத்திக் காட்ட, 'ஏ' அல்லது 'பி' எனக் குறிப்பிடலாம். பார்லிமென்டில் அனுமதி பெறாமல், கல்லுாரி பெயரை மாற்றிய கல்லுாரி நிர்வாகம் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோகுலம் ஆஸ்பத்திரி தலைவருக்கு பாராட்டு விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு 
 
03.05.2018


 
 கோகுலம் ஆஸ்பத்திரி தலைவருக்கு நடந்த பாராட்டு விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

மே 02, 2018, 05:00 AM

சேலம்,


சேலம் கோகுலம் ஆஸ்பத்திரியின் 30 ஆண்டுகால சிறந்த மருத்துவ சேவைக்காகவும், நூற்றுக்கணக்கான மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளமைக்காவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்தமைக்காகவும் கோகுலம் ஆஸ்பத்திரியின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் கே.அர்த்தனாரிக்கு பாராட்டு விழா சேலம் கே.எம்.பி. திருமண மண்டபத்தில் நடந்தது.

இதற்கு பாராட்டுக்குழு தலைவர் சாரதி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் தலைவர் பாரத்குமார் வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும் போது, மருத்துவ தர்மத்தை கடைபிடித்து சேவையாற்றுகிற டாக்டர்களை இந்த உலகம் மிக உயர்வாக மதிக்கும். டாக்டர் அர்த்தனாரி சேலம் பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர் என்றார்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அர்த்தனாரி மற்றும் மருத்துவமனை இயக்குனர்களான ரங்கசாமி, முத்துராஜன், செல்லம்மாள், சரஸ்வதி துரைசாமி, செல்வராஜ், சுகுமார், சையத் சயீப், தெய்வநாயகி சண்முகசுந்தரம் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா, திரிவேணி குரூப் தலைவர் பாலசுப்பிரமணியன், கே.பி.என்.குரூப் தலைவர் நடராஜன், எஸ்.கே. குரூப் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், சி.டி.என். முத்துராஜா, கே.எம்.பி. கிரானைட்ஸ் தலைவர் பாஷா, மஹேந்ரா கல்வி நிறுவனங்கள் செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், மேரி பேலஸ் பன்னீர்செல்வம், ராசி குரூப் தலைவர் ராமசாமி, சரவணபவன் குரூப் தலைவர் சிவராமன், சேலம் மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன், கே.பி.சேகர், சேலம் ஆட்டோமெக் தலைவர் செல்லமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

NEWS TODAY 23.04.2026