Saturday, May 5, 2018

டார்ஜிலிங் செல்ல 'குளுகுளு' ரயில்

Added : மே 05, 2018 00:27

கோவை: கேரளாவில் இருந்து, வரும், 18ம் தேதி டார்ஜிலிங் புறப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., கோடைகால 'ஏசி' சிறப்பு ரயிலுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் கோடைகால சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், வரும், 18ம் தேதி டார்ஜிலிங், கேங்டாங் செல்ல, முதல் வகுப்பு பெட்டிகள் இரண்டு, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நான்கு, மூன்றாம் வகுப்பு பெட்டிகள் கொண்ட, 'ஏசி' சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயில் கொச்சி, பாலக்காடு, ஈரோடு, சேலம், சென்னை மற்றும் விஜயவாடா வழியாக விசாகப்பட்டினம் செல்கிறது.தொடர்ந்து, ஆந்திர மாநிலம் அரக்கு பள்ளத்தாக்கு, போரா குகைகள், சிக்கிம் மாநிலம் கேங்டாக், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 12 நாட்களை உள்ளடக்கிய சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு, 46 ஆயிரத்து, 200 ரூபாய் கட்டணம். வாகன வசதி, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. விபரங்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655; 98409 02919 ஆகிய எண்களிலும் www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.
ரயில் முன்பதிவுக்கு புதிய வசதி

Added : மே 05, 2018 00:38

புதுடில்லி: 'ஐ.ஆர்.சி.டி.சி., 'இ - வாலட்' பயனாளர்கள், இனி, 'ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட் ஆப்' மூலம், ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்' என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்து உள்ளது.ஐ.ஆர்.சி.டிசி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் வலைதளத்தில், 'இ - வாலட்' எனப்படும், மின்னணு பணப்பை வசதிக்காக, பதிவு செய்ய வேண்டும். இ - வாலட்டில், தங்களுடைய வங்கிக் கணக்குகளை இணைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட் ஆப் மூலம், ரயில் டிக்கெட்களை, பயணியர் முன்பதிவு செய்யலாம். இந்த ஆப் மூலம், 'ஓலா' டாக்சி சேவையையும் பெற முடியும். 'ஐ.ஆர்.சி.டி.சி., புட் ஆன் டிராக் ஆப்' மூலம், ரயில் பயணியர் உணவை, 'ஆர்டர்' செய்யலாம். உணவு வாங்கியதற்கு, 'பில்' கொடுக்கப்படாவிட்டால், அந்த உணவை, பயணியர் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்து   உள்ளது.

ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி, வாட்ச் அணிய தடை : 'நீட்' தேர்வு மாணவர்களுக்கு கட்டுப்பாடு

Added : மே 04, 2018 22:44

நீட் தேர்வு எழுதுவோருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம்:• தேர்வு மையத்திற்குள், புத்தகம், காகிதம், பேனா, சிறு குறிப்பு காகிதம், கணித உபகரண பெட்டி, கால்குலேட்டர், பென்சில், பிளாஸ்டிக் பவுச், ஸ்கேல், எழுதும் அட்டை, பென் டிரைவ், அழி ரப்பர், லாக் அட்டவணை, எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனர் என, எந்த வித பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது.• மொபைல் போன், 'ப்ளூடூத்' கருவி, காதில் பொருத்தும் ஸ்பீக்கர், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட், பர்ஸ், தோள்பை, கைப்பை, பெல்ட், தொப்பி, கேமரா, வாட்ச் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை• மோதிரம், காது வளையம், ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி, செயின், நெக்லஸ், தொங்கட்டான், பேட்ஜ் மற்றும் உடல் அலங்கார ஆபரணங்கள் அணிந்து வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது• தண்ணீர் பாட்டில், ஜூஸ், ஸ்நாக்ஸ், நொறுக்கு தீவனங்கள் உள்ளிட்ட எந்த உணவு பொருளுக்கும் அனுமதி இல்லை. தேர்வு மையத்தில் குடிநீர் வசதி உண்டு. நீரிழிவு பிரச்னை இருப்பவர்களுக்கு, வசதிகள் செய்து தரப்படும்.

- நமது நிருபர் -
நீட்' தேர்வுக்கான வழிமுறைகள் என்ன?
மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுரை







 மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை நடக்க உள்ளது. இதில், பங்கேற்க வேண்டிய மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் வர வேண்டிய நேரம், தேர்வு எழுதும் முறைகளை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், கூறப்பட்டு உள்ளதாவது:

• காலை, 9:30 மணிக்கு பின், தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. 9:30க்கு, தேர்வுக்கான அறிவுரை வழங்குதல், ஹால் டிக்கெட் ஆய்வு போன்ற நடவடிக்கைகள் துவங்கும். 10:00 மணிக்கு தேர்வை எழுத துவங்க வேண்டும்; பகல் 1:00க்கு தேர்வு முடியும் தேர்வு மையத்தின் நேரம் என்பது, சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, கடிகார நேரத்தின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும்

• தேர்வு மையம், காலை, 7:00 மணிக்கே திறக்கப்படும். தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை நகல் எடுத்து, அதை தேர்வறைக்கு எடுத்து வர வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாதவர்கள், தேர்வு மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அளித்த புகைப்படத்தை பின்பற்றி, அதேபோன்ற இரண்டு புகைப்படங்களை, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்

• ஓ.எம்.ஆர்., எனப்படும், கணினி திருத்த விடைத்தாளில், சரியான விடையை எழுத, கறுப்பு அல்லது நீல நிற மை பேனா, தேர்வு மையத்திலேயே வழங்கப்படும். தேர்வர்கள் யாரும், பேனா எடுத்து செல்ல அனுமதியில்லை

• தேர்வறையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, தேர்வர்கள் அமர வேண்டும். வேறு இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதினால், அந்த தேர்வரின் விடைத்தாள் ரத்து செய்யப்படும்

கடைபிடிக்க வேண்டியவை:

• தேர்வு துவங்க உள்ள, 15 நிமிடங்களுக்கு முன், மூடி முத்திரையிட்ட உறையில், தேர்வுக்கான விடை எழுத வேண்டிய தாள் வழங்கப்படும். அதை வாங்கியவுடன், கவரின் மேல் பகுதியில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, தேர்வு மையத்தில், பந்து முனை பால் பாயின்ட் பேனா வழங்கப்படும். அதேநேரம், கண்காணிப்பாளர் கூறும் வரை, கவரை திறக்க கூடாது

• தேர்வு துவங்குவதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன், கவரை பிரிக்க, கண்காணிப்பாளர் அறிவுறுத்துவார். விடை எழுத வேண்டிய தாளில், இரண்டாம் பக்கத்தில், குறியீட்டு எண் இருக்கும். அந்த எண், தேர்வருக்கு வழங்கப்பட்ட உறையில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மாறியிருந்தால், கண்காணிப்பாளிரிடம் காட்டி, இரண்டு எண்ணும் சரியாக உள்ளதை பெற்று கொள்ள வேண்டும்

• கண்காணிப்பாளர் சொன்ன பிறகே, தேர்வு எழுத துவங்க வேண்டும்; அவர் அறிவுறுத்தியதும், தேர்வு எழுதுவதை முடித்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில், கண்காணிப்பாளர் கையெழுத்திட்டிருப்பதை, தேர்வு முடிந்ததும் உறுதி செய்ய வேண்டும்

• விடைத்தாளின் ஒரு பக்கத்தில், பதிவு எண், தேர்வரின் பெயர், தந்தை பெயர், தேர்வு மையத்தின் எண், தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விபரங்களை, அதற்காக குறிப்பிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும்.

தேர்வரின் கையெழுத்தையும் பதிவு செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில், பதிவு எண், தேர்வு மைய எண், விடைத்தாள் உறை எண், வினாத்தாள் குறியீடு ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இவ்வாறு தகவல் தொகுப்பில் கூறப்பட்டு உள்ளது.

'அடுத்தாண்டு சிக்கல் இருக்காது'

''தமிழக மாணவர்கள், நீட் தேர்வுக்காக, அடுத்த ஆண்டில், வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை இருக்காது,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 147 பொருட்கள் மீதான வரியை குறைக்க வலியுறுத்தினோம்; 95 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. இன்னும், 48 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட வேண்டும்.

'நீட்' தேர்வு என்பது, அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நாங்கள் கடைசி வரை, நீட் தேர்வுக்கு உடன்படவில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும் என்பதில், மாற்று கருத்து இல்லை. சில மாவட்ட மாணவர்கள், இம்முறை, நீட் தேர்வு எழுத, வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, இந்த பிரச்னை இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மைனஸ் மார்க்: கவனம் தேவை

இந்த தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து, கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில், 180 கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடையை தேர்வு செய்தால், ஒவ்வொரு தவறான விடைக்கும், மொத்த மதிப்பெண்ணில், தலா ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

இரட்டை விடைக்கு, 'கட்' :

ஒவ்வொரு வினா எண்ணிற்கு முன், நான்கு வட்டங்கள் இருக்கும். அதில், அந்த வினாவுக்கு சரியான விடையை, அதற்கான வட்டத்தில், 'மார்க்' செய்ய வேண்டும். விடையை மார்க் செய்யும் முன், ஒரு முறைக்கு, இரு முறை யோசித்து கொள்ள வேண்டும். ஏனென்றால், தவறான விடையை தேர்வு செய்தால், அதை மீண்டும் மாற்ற முடியாது. ஒரு கேள்விக்கு, ஒரு விடை மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். இரண்டு விடைகளை தேர்வு செய்திருந்தால், அதற்கு, எந்த மதிப்பெண்ணும் கிடையாது. ஒயிட்னர், அழிப்பான் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. பயன்படுத்தினாலும், அதை கணினி வழி திருத்தும் கருவி கண்டறிந்து, அந்த கேள்விக்கு மதிப்பெண் வழங்காது. சில கணக்கு மற்றும் சூத்திரங்கள் அடங்கிய கேள்விக்கு, 'ரப் ஒர்க்' தேவைப்பட்டால், விடைத்தாளின் இறுதியில், அதற்காக வழங்கப்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

எத்தனை மொழிகளில் தேர்வு?

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, அனைத்து நகரங்களிலும் இடம் ஒதுக்கப்படும். மாநில மொழிகளாக, உருது, அஸ்ஸாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, தமிழ் மொழிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, அந்தந்த மாநில தேர்வு மையங்களிலேயே இடம் ஒதுக்கப்படும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வெளிமாநிலங்களில், இடம் ஒதுக்கப்பட்டுள்ள தால், அவர்களுக்கு, வேறு மாநிலங்களில், தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா என்பது, தேர்வு நாளில் தான் தெரிய வரும்.

- நமது நிருபர் -
முதல்வரின் ரூ 1,000 உதவித்தொகை; தனியார் பள்ளி மாணவர்கள் விரக்தி

Added : மே 04, 2018 20:14 |



  திருநெல்வேலி : முதல்வர் அறிவித்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடையாது என்ற அறிவிப்பால், மாணவ, மாணவிகள் மனமுடைந்து திரும்பிச்சென்றனர்.

மருத்துவ நுழைவு நீட் தேர்வு வரும் 6ம் தேதி நடக்கிறது. நெல்லை உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அங்கு செல்வதில் சிரமம் குறித்து அறிந்த நெல்லை கலெக்டர், அந்த மாணவர்களுக்காக தனியாக அரசு பஸ் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கேரளாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்கிச்செல்லலாம் என அறிவிப்பு செய்தார். இன்று மாலையில் தகவல் அறிந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் வந்தனர்.

ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அத்தகைய உதவித்தொகை கிடையாது எனவும், அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை ஆயிரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த மாணவ, மாணவிகள் மனமுடைந்து கிளம்பிச்சென்றனர்.
நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 தமிழக அரசு உதவி



‘நீட்’ தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 வழங்கப்படும். உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக சமூக வலைத் தளங்களில் பலர் அறிவித்து உள்ளனர்.

மே 05, 2018, 05:45 AM

சென்னை,

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர் களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நடத்தும் இந்த தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டிலும் ஏராளமான பேர் எழுதுகிறார்கள். இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, நாமக்கல், சேலம், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக இதுபோன்ற நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, விண்ணப்பத்தில் அவர்கள் குறிப்பிடும் தேர்வு மையங்களே ஒதுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு கேரளா, மராட்டியம், ஆந்திரா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதை அறிந்ததும் அந்த மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ததோடு, தமிழக மாணவர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வெளிமாநில மையங்களில்தான் நீட் தேர்வை எழுத வேண்டும் என்றும், தேர்வு மையங்களை மாற்ற முடியாது என்றும் தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தேர்வு தேதி நெருங்கி விட்டதால் வெளி மாநிலங்களுக்கு எப்படி செல்வது? எங்கு தங்குவது? பணத்தேவையை எப்படி சமாளிப்பது? என்ற தவிப்புக்கு ஆளானார்கள்.

இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு முன்வந்தது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

எதிர்வரும் நீட் தேர்வுக்காக ஒரு சில தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிரமங்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இதன் அடிப்படையில், இந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக கீழ்க்கண்டவாறு நான் ஆணையிட்டு உள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வெளி மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கும் பயணப்படியாக இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணமும், (பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணத்திற்கு மிகாமலும்), இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா 1,000 ரூபாய் வீதமும் வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.

இதை அவர்கள் கல்வி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து முன்பணமாகவே பெற்றுக்கொள்ளலாம் அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகு பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளை கொடுத்து மேற்படி தொகையை பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் பெற்றவர்கள் தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

நீட் போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டின் நகல் மற்றும் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் சிரமம் ஏற்படின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல்- ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளை பெறலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

இதேபோல் சமூக ஆர்வலர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர் கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்து இருக்கிறார்கள். சேவை மனப்பான்மை கொண்ட ஏராளமான பேர் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து உள்ளனர்.

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் 20 மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானும், தனது நண்பரும் தயாரிப்பாளருமான டில்லிபாபுவும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் அருள்நிதி அறிவித்து உள்ளார். இதேபோல் நடிகர் பிரசன்னா 2 மாணவர்கள் வெளி மாநிலத்துக்கு விமானத்தில் சென்று வர தேவையான செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறி இருக்கிறார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ.யுமான தமிமுன் அன்சாரி, வெளி மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தனது தொகுதியைச் சேர்ந்த 4 ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். கூடுதல் செலவு ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 250 மாணவர்களுக்கும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்கள் நேற்று பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். சிலர் கார்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோல் தஞ்சையில் இருந்து சுமார் 50 மாணவ- மாணவிகள் பஸ், ரெயில், கார், வேன்கள் மூலம் எர்ணாகுளம் புறப்பட்டு சென்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத தங்கள் ஊருக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் தேவையான உதவிகளை செய்ய முன்வந்து இருக்கின்றன. அந்த நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சிலரும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவ தயாராக இருப்பதாக கூறி உள்ளனர்.

நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக் கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.
இதேபோல், தமிழக மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக, கோட்டயம் இந்து நாடார் உறவின்முறை செயலாளர் வெ.கலைச்செல்வன் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து இருக்கிறார்.


Friday, May 4, 2018

நலம் தரும் நான்கெழுத்து 19: சேகரிப்பா? குப்பையா?

நலம் தரும் நான்கெழுத்து 19: சேகரிப்பா? குப்பையா?

Published : 27 Jan 2018 10:14 IST
 
டாக்டர் ஜி. ராமானுஜம்

“ஒவ்வொரு நாளையும் உன் வாழ்நாளின் கடைசி நாள்போல் அனுபவித்து வாழ். என்றாவது ஒருநாள் அது உண்மையாகக் கூடும்”

– ஸ்டீவ் ஜாப்ஸ்

ஒரு துறவியிடம் ‘மனிதர்களின் வாழ்வில் நீங்கள் பெரிதும் அதிசயிக்கும் பண்பு எது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அந்தத் துறவி அளித்த பதில் “இவ்வுலகில் பிறக்கும் எல்லா உயிரினமும் ஒரு நாள் கட்டாயம் இறக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை என்றபோதும் மனிதர்கள் பெரும்பாலும் என்னவோ என்றென்றைக்கும் சாகாமல் வாழ்ந்துகொண்டே இருப்பவர்கள்போல் வாழ்வதுதான் நான் மிகவும் அதிசயிக்கும் பண்பு” என்றார்.

‘என்றென்றைக்கும்’ வாழப்போவதாக நினைத்துக்கொள்ளும் இந்தப் பண்பால்தான் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடங்குகிறது. உயிரினங்களில் சிலவற்றில் எதிர்காலத்துக்கான உணவுத் தேவைக்காகச் சேர்த்து வைக்கும் பண்பு உள்ளது. ஆனால், சிந்தனைத்திறன் பெருகத் தொடங்கிய மனித இனம்தான் முக்காலத்தையும் ஆராயும் பெரும் திறன் பெற்ற இனம். அதுவே கடந்தகால அனுபவங்களை ஆராய்ந்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களுக்காக நிகழ்காலத்தில் திட்டமிட்டு சேர்ப்பது என்ற பண்பைத் திறமையாகக் கைக்கொள்கிறது. பரிணாம இயல், உயிரியல் ரீதியில் இந்த சேமிக்கும் பண்பு அத்தியாவசமான ஒன்றாக ஆகிறது.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என வருமுன் காக்காமல் இருப்பவன் வாழ்க்கை தீ மூண்ட வைக்கோல்போர் போல் அழியும் என்கிறது குறள்.

அளவுக்கு மீறினால்…

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பஞ்சங்களுக்குப் பழகிய நம்முடைய உடல்கூட எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என நினைத்தே நாம் உண்ணும் உணவின் மிச்ச கலோரிகளைக் கொழுப்பாகச் சேர்த்து வைத்துக்கொள்கிறது. ஆனால், தேவைக்கு அதிகமாகும்போது கொழுப்பே எமனாகவும் ஆகிறதல்லவா?

எதிர்காலத்துக்குத் தேவைப்படுமே என்ற அச்சம் அளவை மீறும்போது நிகழ்காலத்தைத் தொலைத்துவிடுகிறோம். விளைவு தம்மிடம் உள்ளது போதாதோ என நினைத்து இருப்பதைச் செலவழிக்க அஞ்சத் தொடங்குகிறோம். அது மட்டுமல்ல பொருட்களை மேலும் மேலும் வாங்கிக் குவித்துவிட்டு, அதை அனுபவிக்காமல் இன்னும் இன்னும் என ஓடும் மனப்பான்மையும் இது போன்றதே.

எப்படி அளவுக்கு மீறிய நுகர்வு எனும் பெரும்வெறியில் செலவழிக்கும் மனப்பான்மை பாதகமாகிறதோ, அதுபோன்றே அளவுக்கு மிஞ்சிய சிக்கனமும் கஞ்சத்தனமாகிப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டால் நகைச்சுவையாகச் சொல்வார்கள் “மழை பெய்யும்போது அதிலே குளித்துத் தண்ணீரை மிச்சம் பிடித்தால் சிக்கனம். கோடைக் காலத்திலும் மழை வரட்டும் எனக் காத்திருந்து குளிக்காமல் கப்படித்தால் அது கஞ்சத்தனம்” என.

இன்னும் சிலரைக் கஞ்சன் என அழைத்தால் கடும் கோபம் கொள்வார்கள். தங்களைத் தவறாகச் சொல்லிவிட்டதற்காக அல்ல. கருமி என்ற மூன்றெழுத்துச் சொல் இருக்கையில் கஞ்சன் என நான்கெழுத்துச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு எழுத்தை வீணாக்கியதற்காக.

 கண் கெட்ட பின்

நம்மில் பலரும் மகிழ்ச்சியாக இருப்பதற்குச் சில வரையறைகள் வைக்கிறோம். முதுநிலைப் படிப்பு , ஆறு இலக்கச் சம்பளம், எட்டு இலக்கச் சேமிப்பு, அயல்நாட்டுக் குடியுரிமை எனப் பலவாகவும் இது இருக்கலாம். இவையெல்லாம் அடைந்தபிறகுதான் நான் வாழ்க்கையில் சிரிப்பேன் என நமக்கு நாமே நிபந்தனைகள் விதித்துக்கொண்டு, நிர்ப்பந்தப்படுத்திக்கொள்கிறோம். உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் எதுவும் பெரிதாகத் தேவையில்லை.

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அதி பயங்கரக் கஞ்சன் .. மன்னிக்கவும் கருமி ஒருவர் வாழ்ந்து வந்தாராம். அவர் ஒருமுறை மொட்டை மாடிக்குச் சென்றிருந்தபோது தவறிக் கீழே விழுந்து விட்டாராம். விழும்போது அவரது வீட்டு பால்கனியைத் தாண்டும்போது அங்கு நின்றிருந்த மனைவியைப் பார்த்து “எனக்குக் காலை உணவு தேவைப்படாது. வீணாக்காதே” எனக் கத்திக்கொண்டே கீழே விழுந்து இறந்தாராம்.

இதுபோல் இறுதி மூச்சுவரையும் கஞ்சர்களாக இருப்பவர்கள் இருந்தாலும் மரணப் படுக்கையின்போது யாருமே இன்னும் கொஞ்சம் பணமோ பொருளோ ஈட்டியிருக்கலாம் என வருந்துவதில்லை. இன்னும் நன்றாக வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம். இன்னும் கூடுதலாகக் குடும்பத்தோடு நேரம் ஒதுக்கி இருந்திருக்கலாம் என்றே வருத்தப்படுவார்கள்.

குப்பை சேகரிப்பு நோய்

சிலர் தேவையற்ற முக்கியமற்ற பொருட்களைக் கூடத் தூர எறியாமல் சேர்த்து வைப்பார்கள். இவ்வாறு அளவுக்கு மீறிச் சேர்த்து வைப்பதும் ஒரு மனநல பாதிப்பாக அறியப்படுகிறது. பழைய செய்தித்தாள்கள், முக்கியமற்ற தபால்கள், முடிந்துபோன நாட்காட்டிகள், எப்போதோ ஏதோ பொருட்கள் வாங்கிய ரசீதுகள் என எதையுமே வெளியே எறியாமல் குவிண்டால் கணக்கில் குவித்து வைத்திருப்பார்கள். இதை ஆங்கிலத்தில் ‘ஹோர்டிங் டிஸ்ஆர்டர்’ என அழைக்கிறார்கள். உயிரினங்கள் எதிர்காலத்துக்காகச் சேர்த்து வைக்கும் பண்பு அதீதமாவதால் இந்நோய் வருவதாகக் கூறப்படுகிறது. மனித மூளையில் சில பகுதிகளில் ஏற்படும் பாதிப்பினாலும் சிலர் இவ்வாறு குப்பை குவிப்புப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

‘தேவைக்கு அதிகமாகச் சேர்ப்பவன் திருடன்’ என்று சொல்வார்கள். அவ்வாறு பிறருக்குக் கிடைக்காமல் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் வெறும் குப்பையே. அதீத நுகர்வுக்கும் அதீத சேமிப்புக்கும் இடையில் உள்ள சமநிலையே நமக்கெல்லாம் நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

NEWS TODAY 23.04.2026