Monday, May 7, 2018

'நீட்' தேர்வு மாணவிக்கு உதவிய டிரைவர்

Added : மே 07, 2018 01:11




  மதுரை : மதுரையில் நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிக்கு உதவிய கார் டிரைவருக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

மேலுார் சூரக்குண்டை சேர்ந்த அழகர்சாமி மகள் டயானா. இவர் பசுமலையில் உள்ள சவுராஷ்டிரா கல்லுாரிக்கு நீட் தேர்வு எழுத வந்தார். ஹால் டிக்கெட்டை மறந்துவிட்டார். கல்லுாரி வளாகத்தில் அழுதார்.

இதை பார்த்த மதுரை கார் டிரைவர் மணி, டயானாவை தனது காரில் 35 கி.மீ., துாரத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று ஹால் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு 35 நிமிடத்தில் வந்தார். இதற்காக மாணவியின் பெற்றோரிடம் பணம் வாங்கவில்லை. அவர்கள் மணிக்கு கண்ணீர் மல்க நன்றிதெரிவித்தனர்.
NEET exam,medical entrance test,நீட்,கபட நாடகம்,கட்சியினர்,மூக்குடைப்பு
 07.05.2018

மாணவர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில், கபட நாடகம் ஆடிய கட்சியினரின் மூக்கு உடையும்படி, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தேர்வில் வினாத்தாள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்க, கட்சித் தலைவர்கள் வீண் பிடிவாதமாக போராட்டம் அறிவித்துள்ளனர்.





இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நீட் நுழைவுத்தேர்வை நடத்தியே, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கும், நீட் தேர்வு கட்டாயம் ஆகியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்கு கேட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பொருந்தும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே, தமிழகத்திலும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பல்கலை மற்றும் கல்லுாரிகளில், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. யூனியன் பிரதேசம் உட்பட, 36 மாநிலங்களில், 136 நகரங்களில், மொத்தம், 2,255 மையங்களில், தேர்வு நடந்தது. இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட, 13.27 லட்சம் பேரில், 96 சதவீதத்தினர், தேர்வு எழுதினர்.

காலை, 10:00 மணிக்கு, தேர்வு துவங்கியது. இதற்காக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள தேர்வு மையங்களுக்கு, தேர்வு எழுதுவோர், காலை, 6:30 மணிக்கே குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்களில், 'ஏ' பிரிவினர், 7:30 மணி முதலும், 'பி' பிரிவினர், 8:30 மணி முதலும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

பெரும்பாலானோர், தேர்வுக்கான கட்டுப்பாடுகளை பின்பற்றி, உடை அணிந்து வந்தனர். பல மாணவியர், கொலுசு மற்றும் செயின் மட்டும் அணிந்து வந்தனர். சில மாணவர்கள், கோவில்களில் வழங்கப்படும் கயிறுகளை கட்டி வந்தனர். அவை அனைத்தும், தேர்வு மைய வளாகத்தின் வாயிலில் அகற்றப்பட்டன.

தேர்வு மைய வளாகத்தில், போலீசாரும் சோதனையிட்டனர். சி.பி.எஸ்.இ.,யால் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்கள், 'மெட்டல் டிடெக்டர்' கருவியால் சோதனையிட்டு, மாணவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். பெரும்பாலான இடங்களில், மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததாக, போலீசாரும், சி.பி.எஸ்.இ., ஊழியர்களும் கூறினர்.

பிற்பகல், 1:00 மணிக்கு, தேர்வு முடிந்த பின், அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் வெளியே வந்தனர். தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்ததாகவும், எந்த பதற்றமும் இன்றி தேர்வை, ஆர்வத்துடன் எழுதியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் உற்சாகத்தால், பெற்றோரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதன்மூலம், மாணவர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில், நீட் தேர்வுக்கு எதிராக, கபட நாடகம் ஆடிய கட்சித் தலைவர்களின் மூக்கு உடைபட்டுள்ளது. அரசியல் ரீதியாக, நீட் தேர்வு விவகாரத்தில் கட்சியினர் நடத்திய போலி போராட்டங்கள், 'புஸ்' ஆன நிலையிலும், வீண் பிடிவாதமாக மீண்டும் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

கட்டுப்பாடு விதித்தது யார்?

நீட் தேர்வு, 2015ல் நடந்தபோது, மாணவர்கள் சிலர் உள்ளாடைகளிலும், ஆபரணங்களிலும், உலோக வகையான நுண்ணிய மின்னணு சாதனங்களை பொருத்தி வந்து, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டனர். இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நாடு முழுவதும் மறு தேர்வு நடத்தப்பட்டது. இது போன்ற பிரச்னைகளால், பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. இதன்படியே, சி.பி.எஸ்.இ., தரப்பில் முறைகேடுகளை களையும் வகையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கைக்குட்டை அனுமதியில்லை :

சென்னை, ஆவடியில் உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்த மாணவி ஒருவர், கைக்குட்டை எடுத்து சென்றார். அவருக்கு, கைக்குட்டை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அவர், 'ஜலதோஷம் இருப்பதால், முகம் துடைக்க, கைக்குட்டை தேவை' என்றார். அதற்கு, 'தேர்வறையில் உள்ள ஊழியர்களிடம் துணி பெற்றுக் கொள்ளலாம்' என, பணியில் இருந்தோர் தெரிவித்தனர். சிலர், பாட்டிலில் சுடுதண்ணீர் எடுத்து வந்தனர். அதை எடுத்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு வெளியில், மாணவர்களின் பெற்றோர் காத்திருந்தனர். தேர்வு முடிந்து வந்த பிள்ளைகளிடம், 'நன்றாக எழுதினீர்களா' என, ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

பிரார்த்தனையும், வாழ்த்தும்!

பெரும்பாலான மாணவர்கள், அதிகாலையிலேயே குளித்து, தங்கள் வீட்டிலும், அருகில் உள்ள கோவில்களுக்கும் சென்று, சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். சில பள்ளிகளும், பயிற்சி மையங்களும் தாங்களே பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி, மாணவ -- மாணவியரை தேர்வு மையங்களுக்கு அழைத்து வந்தன. தேர்வு மையத்திற்குள் நுழையும் தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர் கைகுலுக்கியும், நெற்றியில் முத்தமிட்டும் வாழ்த்து கூறி, அனுப்பி வைத்தனர்.

- நமது நிருபர் -
பூதாகரம்!

ரூபாய் நோட்டு பற்றாக்குறை பிரச்னை..அழுக்கான ரூ.100 நோட்டுகளால் அவதி 
07.05.2018

புதுடில்லி : நாடு முழுவதும் ரூபாய் நோட்டு பற்றாக்குறை, மக்களை அலைக்கழித்து வரும் நிலையில், அழுக்கான, 100 ரூபாய் நோட்டுகள் அதிகரித்திருப்பது, பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.



பிரதமர் நரேந்திர மோடி, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தார். செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, வேறு நோட்டுகளை பெற்றுக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டன. சில மாதங்களில், ரூபாய் நோட்டு பிரச்னை தீர்க்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியது.

திண்டாட்டம் :

இந்நிலையில், சமீப காலமாக, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. பல வட மாநிலங்களில், ஏ.டி.எம்.,களில், 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். உயர் மதிப்புடைய, 2,000 ரூபாய் நோட்டுகளை, ஊழல்வாதிகளும், பணக்காரர்களும், சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக யூகங்கள் உலவின.

இந்நிலையில், சமீப காலமாக, எங்கு பார்த்தாலும், பழைய, அழுக்கடைந்த, 100 ரூபாய் நோட்டுகளையே காண முடிவதாக, மக்கள் புகார் கூறுகின்றனர். 100 ரூபாய் நோட்டுகள், மிகவும் பழையதாக, அழுக்கடைந்து காணப்படுவதால், அவற்றை, ஏ.டி.எம்., இயந்திரங்களில் வைக்க முடியவில்லை என, வங்கியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அச்சம் :

'எல்லா தரப்பு மக்களும் அதிகம் வைத்திருக்கும், 100 ரூபாய் நோட்டுகளில், புதிய நோட்டுகளை எங்கும் பார்க்க முடியவில்லை' என, மக்களும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இதனால், ரூபாய் நோட்டு பற்றாக்குறை, பூதாகரமானதாக உருவெடுக்கும் என அஞ்சப்படுகிறது.

செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமலான பின், 100 ரூபாய் நோட்டுகளை, அதிகளவில், ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. ஆனால், 2,000 ரூபாய் நோட்டை மாற்ற, 500 ரூபாய் நோட்டுகள் எளிதில் கிடைக்காத பட்சத்தில், 100 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் தேவைப்படுவதாகவும், எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள, 100 ரூபாய் நோட்டுகள் போதாது என்றும், வங்கியாளர்கள் கூறுகின்றனர்.

தேவை:

இது தொடர்பாக, பொதுத்துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போதுள்ள பிரச்னைக்கு தீர்வாக, 100 ரூபாய் நோட்டுகளை புதிதாக, அதிகளவில் அச்சிட்டு, ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட வேண்டும்.

'இல்லாவிடில், 500 ரூபாய் நோட்டுகளுக்கு, அதிகளவில் தேவை ஏற்படும்' என்றார்.

தினசரி ரூ.3,000 கோடி!

தினசரி, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவதாக, பொருளாதார விவகாரங்கள் பிரிவு செயலர், சுபாஷ் சந்திரகார்க் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மக்கள், பொருட்களை எளிதில் வாங்க, 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் உகந்தவை. மக்கள் தேவையை கருதி, தினசரி, 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன. வங்கிகளில், ரூபாய் நோட்டு கையிருப்பு, போதுமானதாக உள்ளது. கூடுதல் தேவை, உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. நாட்டில், அளவுக்கு அதிகமான உற்பத்தியும், அதிக அளவிலான பணவீக்க விகித உயர்வும் காணப்படவில்லை. எனவே, வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. கடந்த வாரம், நாட்டின் பண இருப்பு நிலையை ஆய்வு செய்தேன். வங்கிகளில், 85 சதவீத, ஏ.டி.எம்.,கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில், பணத்தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

ரெயில் தாமதமாக வந்ததால் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் தவித்த கேரள மாணவி



சென்னைக்கு ரெயில் தாமதமாக வந்த காரணத்தால் கேரள மாணவி ஒருவர் ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல் தவித்தார்.

மே 07, 2018, 04:15 AM
சென்னை,

‘நீட்’ தேர்வு நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் மாணவர்கள் வரலாம் என்றும் 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும் அதன்பிறகு வரும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சென்னை நகரில் உள்ள பல தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் சிலர் தாமதமாக வந்தனர். தேர்வு மையத்தின் நுழைவு வாயில் 9.30 மணிக்கு பூட்டப்பட்டு விட்டதால் அதன்பிறகு வந்த மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் காலை 9.20 மணி முதல் 9.30 மணி வரை ஒலிபெருக்கி மூலம் மாணவ-மாணவிகளே விரைவாக வாருங்கள் என்று அறிவித்துக் கொண்டே இருந்தனர்.

சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி.பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மையத்திற்கு கேரளாவை சேர்ந்த மாணவி அஹியா தாமதமாக வந்தார். இதனால் அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஆனால், “காலை 10 மணிக்கு தானே தேர்வு தொடங்குகிறது. அனுமதியுங்கள்” என்று அங்கிருந்த பெற்றோர்கள் தெரிவித்தனர். 9.30 மணிக்கு தேர்வு மையத்தின் கேட் பூட்டப்பட்டு விட்டது.

இதனால் மாணவி அஹியா தேர்வு எழுத முடியால் கண் கலங்கினார். அங்கிருந்த போலீஸ் அதிகாரி உள்ளிட்ட போலீசாரும், பொதுமக்களும் அந்த மாணவிக்கு ஆறுதல் கூறினார்கள். “அடுத்த வருடம் நீட் தேர்வை எழுதலாம். ஏதாவது உதவி தேவை என்றால் தெரிவியுங்கள்” என்று போலீஸ் அதிகாரி அந்த மாணவியிடம் கூறி அனுப்பி வைத்தார். தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி அஹியாவின் தந்தை சாஜி கூறியதாவது.

நான் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம், தெரினல் மன்னா என்ற கிராமத்தை சேர்ந்தவன். 5-ந்தேதி மாலை 5 மணிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொர்ணூர் ரெயில் நிலையத்தில் என்மகளுடன் ஏறினேன். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு இன்று(நேற்று) அதிகாலை 5.25 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் காலை 9.30 மணிக்கு தான் வந்தது.

ரெயில் தாமதமாக வந்ததன் காரணமாக கோபாலபுரம் நீட் தேர்வு மையத்திற்கு சற்று கால தாமதமாகத்தான் வந்தோம். தாமதமாக வந்ததாக கூறி அஹியாவை நீட் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. எனது மகளின் கனவு எல்லாம் போய்விட்டது. எனது மகளுக்கு போலீஸ் அதிகாரி ஆறுதல் கூறினார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அடையாறைச் சேர்ந்த அர்ஷத் அகமது என்ற மாணவர் அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மையத்துக்கு தேர்வு எழுத சற்று தாமதமாக காலை 9.40-க்கு வந்தார். இதனால் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அங்கு கூடி இருந்த பெற்றோரும், போலீசாரும் தேர்வு மையத்துக்குள் செல்ல அவரை அனுமதிக்கும்படி கூறியும், விதிமுறைகளை காரணம் காட்டி அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
மாநில செய்திகள்

அரசியல் செய்யவேண்டாம்: ‘நீட்’ தேர்வை நரபலி என்று நாக்கு கூசாமல் பழி சொல்வதா?




‘நீட்’ தேர்வை நரபலி என்று நாக்கு கூசாமல் பழி சொல்வதா? என்று மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே 07, 2018, 04:30 AM
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக தன்னுடைய மகனை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அந்த குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறோம். அதேவேளை இதை வைத்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ‘நீட்’ தேர்வு ஆண்டுதோறும் நரபலி கேட்கிறது என்று நாக்கு கூசாமல் பழி சொல்வது அந்த தேர்வை எதிர்கொண்ட மாணவர்களின் தன்னம்பிக்கையை சீர்குலைக்கும் என்பதை உணரவேண்டும்.

கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் அனிதாவின் மரணம் நரபலி என குறிப்பிடும் மு.க. ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் மதுவை கொண்டுவந்ததால் இன்றும் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சாராயத்தினால் தினம் தினம் பல உயிர்கள் இழந்து இளம் தாய்மார்கள் விதவைகளாக நிற்பதற்கு யார் காரணம்? இதற்கு சமீபத்திய உதாரணம் நெல்லை தினேஷ் மரணம்.

சென்ற ஆண்டு ‘நீட்’ தேர்வால் தமிழகத்தில் 6,510 ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது நிதர்சனம். தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் ‘நீட்’ வருவதற்கு முன்பு 2 பேருக்கு மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு வந்ததற்கு பிறகு திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 28 கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு தான் கஸ்தூரி மகாலிங்கம் போன்றவர்கள் இன்று நம்பிக்கையோடு ‘நீட்’ தேர்வு எழுதினார்கள். ஆக மிக துயரமான இந்த நேரத்தில் இந்த மரணத்தையும் வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழக எதிர்க்கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உண்டு



வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

மே 07, 2018, 05:15 AM
புதுடெல்லி,

கேரள மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 20) என்ற வாலிபரும், துஷாரா (20) என்ற பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். துஷாராவுக்கு திருமண வயதான 18 வயது ஆகிவிட்டது. ஆனால், நந்தகுமாருக்கு திருமண வயதான 21 வயது ஆகவில்லை.

அதனால், இந்த திருமணத்தை எதிர்த்து துஷாராவின் தந்தை கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த திருமணம் செல்லாது என்றும், துஷாரா தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, நந்தகுமார், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. இதை சட்டம் இயற்றும் சபைகளும் அங்கீகரித்துள்ளன. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தில் இதுபற்றிய சட்டப்பிரிவு இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை, நந்தகுமாரும், துஷாராவும் ‘மேஜர்’ வயதை எட்டியவர்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது.

துஷாரா, தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என்ற கேரள ஐகோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தான் யாருடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்யும் உரிமை, துஷாராவுக்கு இருக்கிறது.

கேரள மாநிலத்தை சேர்ந்த, மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஹாதியா-ஷபின் ஜகான் திருமண வழக்கிலும், அவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்தவர்கள் என்பதால், அவர்களின் திருமணத்தை உறுதி செய்தோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Sunday, May 6, 2018

இதயம் 25 ஆண்டுகள்: சொல்லாத சொற்களின் சுமை!

Published : 09 Sep 2016 10:43 IST

ந.வினோத்குமார்
 



நான் சென்னைக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. சென்ட்ரல் செல்லும்போதெல்லாம், சென்னை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று வருவது வழக்கம். அங்கிருக்கும் மரங்கள், படிப்படியாக மேஜைகள் அடுக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகள், வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்புமாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள்... இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கப் பார்க்க, இனம் புரியாத சோகம் இதயத்தை மெல்ல அழுத்தும்.

‘இந்த இடத்தில்தானே ஹீராவுக்காக முரளி காத்திருப்பார்’, ‘இந்த வகுப்பறையில்தான் ஹீராவைப் பார்க்க, முரளி சிவப்பு கலர் இங்க் பாட்டிலைக் கீழே போட்டாரோ?’, ‘இதோ இந்த லிஃப்டில்தானே அவர்கள் இருவரும் பயணம் செய்திருப்பார்கள்?’ என்று பல கேள்விகளை எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு சில நிமிடங்கள் சிலாகித்திருப்பேன்.

இன்று முரளி நம்மிடையே இல்லை. ஆனால் அவர் நடித்த சிறந்த படங்களுள் ஒன்றான ‘இதயம்’ இன்றும் நம்மிடையே இருக்கிறது. 1991-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி வெளியான அந்தப் படத்துக்கு இந்த ஆண்டு 25 வயது!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் நான்கைந்து புதிய இயக்குநர்கள் வந்து சுணங்கிக் கிடக்கும் சினிமாவைக் கொஞ்சம் நிமிர வைப்பார்கள். அப்படி 90-களில் வந்த மிக முக்கியமான இயக்குநர் கதிர். ஓவியக் கல்லூரியில் முதுநிலை படித்துவிட்டு, டைட்டில் டிசைனராகப் பணியாற்றிய அவரின் இயக்கத்தில் வெளிவந்தது ‘இதயம்’.

கதை இதுதான். கிராமத்திலிருந்து சென்னைக்கு மருத்துவம் படிக்க வரும் ஒருவன், தன் காதலைச் சொல்ல முடியாமல், இதய நோயாளியாகிறான். அவன் நோயாளியான சமயத்தில்தான் நாயகிக்கு அவன் மேல் காதல் வருகிறது. ஆனால், அவன் குணமாகி வரும்வரை அவள் காத்திருக்க வேண்டும். மிகவும் எளிமையான இந்தக் கதையை, கவித்துவமான திரைக்கதையின் மூலம் நகர்த்திச் சென்றதில் கதிர் கவனம் ஈர்த்தார்.

கல்லூரியின் முதல் நாள், வகுப்பறையில் ஹீராவின் கவனத்தைத் திருப்புவதற்காக இங்க் பாட்டிலைக் கீழே போடுவது, பேருந்தில் பயணம் செய்யும்போது தன் பாக்கெட்டிலிருந்து ஹீராவின் காலடியில் விழும் சில்லறைகளை எடுக்க யோசிப்பது, ஹீராவின் கூந்தலிலிருந்து விழுந்த பூவை ‘டைரி’யில் சேகரித்து வைப்பது எனக் காதலில் கசிந்துருகிய ‘ராஜா’வாகவே முரளி மாறியிருந்திருந்தார். ‘இந்தப் பாதங்கள் மண்மீது நடக்க வேண்டியவை இல்லை... மலர்கள் மீது’ என்று அவர் சொல்லும்போது ரசிகர்களும் கூடவே ‘கோரஸ்’ பாடினார்கள்..!

படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் இளையராஜாவின் இசை. அன்றைக்கொல்லாம் இளைஞர்களிடம் கைபேசி இருந்திருந்தால், படத்தின் ‘டைட்டில்’ இசைதான் பலரின் ‘ரிங் டோன்’ ஆகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சின்ன‌ ப்ளாஸ்டிக் பொட்டும், காட்டன் புடவையும், போனிடெய்ல் கூந்தலும், ஒற்றை ரோஜாவுமாக வரும் ஹீரா, ஆர்ப்பாட்டமில்லாத அழகு! தான் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது அங்கு படித்த ஒரு பெண்ணை மனதில் வைத்துத்தான் இந்த கேரக்டரை உருவாக்கியதாக கதிர் ஏதோ ஒரு பேட்டியில் சொன்னதாக நினைவு.

இந்தப் படத்தைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தால், முரளிக்கும் ஹீராவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை ஒரு ஏ4 பக்கத் தாளின் ஒரு பக்கத்தில் எழுதிவிட முடியும். அவ்வளவு குறைவான வசனங்கள். ஆனால் காட்சியமைப்பில் அந்த வசனங்களுக்குக் கனம் ஏற்றியிருந்தார் கதிர்.

ஹீராவிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் முரளி தவித்து உருகும்போது நமக்கே கொஞ்சம் இதயம் வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். மார்க்ஸுக்கு ஜென்னி, லெனினுக்கு க்ரூப்ஸ்கயா, பாரதிக்குச் செல்லம்மா போன்று அந்த ராஜாவுக்கும் கீதா கிடைத்திருந்தால் அவனும் ஒரு கீட்ஸ், ஒரு ஷெல்லி ஆகியிருப்பான் இல்லையா?

‘மறுக்கப்படலாம்’என்கிற பயத்தில் ஊசலாடும் காதல்கள்தான் எத்தனை? காதலின் அழகு புரிந்துகொள்ளப்படுவதில் உள்ளது. அந்தப் புரிதலுக்கு மவுனம் சில நேரம் பயன்படும். சில நேரம் உரையாடல் உதவி செய்யும். சொல்லிய பிறகு நிராகரிக்கப்படும் காதல்களின் வலியை விட, சொல்லாத காதல்கள் தரும் சுமை மிகவும் அதிகம். தங்கள் காதலைச் சொல்லாமல் விட்ட அனைத்து ஆண்களுக்குள்ளும் ஒரு ‘ராஜா’இருக்கவே செய்கிறான். நிலைமை கைமீறிய பின் ஒருவர் மீது அன்பு பிறக்கிற பெண்களுக்குள் ஒரு ‘கீதா’வும் இருக்கவே செய்கிறாள். கொஞ்சம் தேடிப் பாருங்கள்... உங்களுக்குள்ளும் ராஜாவோ கீதாவோ இருக்கலாம்!

NEWS TODAY 24.4 2026