Wednesday, May 9, 2018

நுழைவுத் தேர்வு அலைக்கழிப்புக்குப் பின்னுள்ள சந்தை

Published : 08 May 2018 09:23 IST
 
ஜி.ஆர்.இரவீந்திரநாத்









நாடு முழுவதற்குமான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு’ பெரிய களேபரங்களோடு நடந்து முடிந்திருக்கிறது. இத்தேர்வின் அடிப்படையில்தான் 2018 கல்வி ஆண்டில், 65,000 மருத்துவப் படிப்புகளும் 25,000-க்கும் மேற்பட்ட பல் மருத்துவப் படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி, வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டுமென்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இத்தேர்வை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 31%-க்கும் மேலாக அதிகரிக்க இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான காரணம்.

எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்?

இந்தத் தேர்வு தேவையா, இல்லையா; இந்தத் தேர்வுக் கான விதிகள் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கின்றன என்கிற விவாதங்களை எல்லாம் தாண்டி, தேர்வை நியாயப்படுத்துபவர்களேகூட நியாயப்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக நிர்வகிக்கப்படுகிறது இத்தேர்வு. தமிழக மாணவர்கள் எதிர்கொண்ட அலைக்கழிப்பை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.

தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப இங்கு தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படவில்லை. விளைவாக, தமிழகத்தைச் சேர்ந்த 5,700 மாணவர்களுக்கு கேரளம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. உரிய நேரத்தில் இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டி தகவல் தரப்படவில்லை என்பதும் கடைசி நேர அலைச்சல் எவ்வளவு கடுமையான மன - உடல் உளைச்சல், பணச் செலவை உண்டாக்கும் என்பதும் பொருட்படுத்தப்படவே இல்லை.தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் இது உருவாக்கியது. மொழிப் பிரச்சினையாலும் மாணவர்கள் சிரமங்களுக்கு உள்ளானார்கள். தேர்வுகளை மன அமைதியுடன் எழுதும் வாய்ப்பை இது சீர்குலைத்தது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இதற்கு முக்கியமான காரணம்.

மாணவர்கள் பேருந்து, ரயில் போன்றவற்றுக்கு டிக்கெட் கிடைக்காமல் அல்லலுற்றனர். பல மாணவ - மாணவியர் ரயில் மற்றும் பேருந்துகளில் நின்றுகொண்டே பயணித் தனர். தங்கும் வசதி, கழிப்பறை வசதி போன்றவை இல்லாமல் அவதிக்கு உள்ளாகினர். மாணவர்கள் மட்டும் பாதிப்புக்கு உள்ளாகிவில்லை. அவர்களின் பெற்றோர்களும் அலைக்கழிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் தேர்வு மையங்களே இல்லையா? அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லையா? ஏன் இந்த நிலை? தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 45-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், ஏராளமான சிறந்த பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கெல் லாம் தேர்வு எழுதுவதற்கான சிறந்த கூடங்களும் உள்ளன. சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து,பேருந்து வசதிகள், விமானப் போக்குவரத்து வசதிகளும் தமிழகத் தில் மிகச் சிறப்பாகவே உள்ளன.

மேலும், இந்த இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட் தேர்வு’ இணையத்தின் வழி நடத்தப்படும் தேர்வல்ல. இது ‘ஓஎம்ஆர்’ எனப்படும் கம்யூட்டர் கோடிங் தாளில் நடத்தப்படும் தேர்வுதான். இதை எந்த மையத்தில் வேண்டுமென்றாலும் நடத்த முடியும். ஏராளமான கணினிகள் உட்பட தொழில்நுட்ப வசதிகள் உள்ள கூடங்கள் இத்தேர்வுக்குத் தேவையில்லை. ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தேர்வு நடத்தும் வசதிகள் தமிழகத்தில் உள்ளன. இப்படியெல்லாம் இருந்தும் ஏன் தமிழக மாணவர் கள் 2,000 கி.மீ. வரை அலைக்கழிக்கப்படுகின்றனர்?

தேர்வுக்குப் பின்னுள்ள வணிகம்

இதற்கான மிக முக்கியமான பதில்: தேர்வுகள் வணிகமயமாக்கப்பட்டதே ஆகும். நுழைவுத் தேர்வுகளையும், தேர்வு களையும் நடத்துவதன் மூலமே இன்று கல்வி நிறுவனங்கள் பல கோடிகளைக் குவிக்கின்றன. இதற்கு சிபிஎஸ்இ அமைப்பும் விலக்கல்ல. அது நீண்டகாலமாக அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்திவந்ததன் மூலம், கோடிக்கணக்கான ரூபாயை வருவாயாக ஈட்டிவந்தது. தற்போது நீட் தேர்வின் மூலமும் வருவாய் ஈட்டிவருகிறது. தவிர, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரத்துக்கான பெரிய லாபியும் இதன் பின்னணியில் உள்ளது.

விளைவாகவே, நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களின் வசதி கணக்கில் கொள்ளப்படாமல், நிறுவனங்களின் லாபம் பிரதானமாகக் கொள்ளப்படுகிறது. இதை இப்படிப் பார்க்கலாம்: ‘கூடுதல் மையங்கள் = கூடுதல் செலவு. குறைந்த மையங்கள் = கூடுதல் லாபம்.’

தமிழக மாணவர்கள் வெளியே செல்ல நேர்ந்ததன் விளைவாக இந்த விஷயம் வெளிப்பட்டிருக்கிறது. ஒருவேளை, தமிழகத்துக்குள்ளேயே வெளிமாநிலத்துக் கான மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், இந்தப் பிரச்சினை வெளியிலேயே வந்திருக்காது. மையங்களில் முடிந்த அளவுக்கு மாணவர்களை அடைப்பதே இன்றைய வழக்கம். ஒவ்வொரு இடத்திலும் அதிகமான ஆட்களை அடைப்பதன் வாயிலாகவே கண்காணிப்பு என்ற பெயரில் அதீதமான கட்டுப்பாடுகளும் உள்ளே நுழைகின்றன.

நுழைவுத் தேர்வுக்குப் பின்னுள்ள வணிகம்

சேவைத் துறையில் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதார நடவடிக்கைகள் கோலோச்சும் நிலையில், இன்று நுழைவுத் தேர்வுகளை நடத்துவது, அதற்கான பயிற்சிகளை வழங்குவது, பயிற்சிகளுக்கான குறிப்பேடுகளை, மென்பொருட்களை உருவாக்குவது போன்றவை சர்வதேச வர்த்தகம் ஆகிவிட்டன. அதன் காரணமாகவே புதுப் புது தேர்வுகள் புகுத்தப்படுகின்றன.

முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு’ நடத்தும் பொறுப்பு, ஒரு அமெரிக்க நிறுவனத்திடமும், பல தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்டலாம். தேர்வுகள் நடத்துவதில் இன்று ஏகபோக அமைப்புகள் உருவாகிவருகின்றன. அரசு நிறுவனங்கள், பல சிறிய தனியார் நிறுவனங்கள் நடத்திவந்த தேர்வுகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்படுகின்றன.

இந்த நோக்கத்துக்காகவே, மத்திய அரசு தேசியத் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்க முயல்கிறது. அந்த அமைப்பு செயல்படத் தொடங்கினால், அந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் பேருக்கு வெவ்வேறு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பும் சிபிஎஸ்இயிடமிருந்து பறிக்கப்படும்.

புயல் வெளிப்படுத்திய லாப வேட்கை

சென்ற ஆண்டு வர்தா புயல் வீசியது. அதற்கு முதல் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தது. ஆனாலும் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகளைத் தள்ளிவைக்க அத்தேர்வுகளை நடத்திய அமெரிக்க நிறுவனம் மறுத்துவிட்டது. காரணம், மீண்டும் மையங்களைப் பிடிப்பதால் அதற்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதே!

ஆனால், புயலால் ஏற்பட்ட மின்வெட்டு, இணைய சேவை துண்டிப்பால் தேர்வை நடத்த முடியாத நிலை அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டவுடன், நமது மருத்துவர்களுக்கான மையத்தை அது வேறு நகரங்களுக்கு மாற்றியது. ஆக, அந்நிறுவனத்துக்கு இழப்பு இல்லை. ஆனால், தேர்வெழுதச் சென்றவர்கள் போக்குவரத்து - தங்கும் செலவோடு, உடல் மற்றும் உள உளைச்சலையும் எதிர்கொண்டார்கள்.

மாநிலங்களுக்கு வெளியே ஏன்?

அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் தமிழகம் போன்ற மாநிலத்தில் இப்படி ஒரு சிறு தொகுதி மாணவர்களை வெளியே அனுப்புவதன் மூலம், இத்தேர்வு தொடர்பிலான அச்சத்தை உண்டாக்குவது! அதாவது, ‘இத்தேர்வு எப்படியான விரிந்த அளவில் நடக்கிறது; அதற்கு எவ்வளவு பெரிய பயிற்சிகள் எல்லாம் வேண்டும்?’ என்ற உளவியல் மாற்றத்தை ஒட்டுமொத்த மாணவர்களிடமும் உருவாக்குவது. அதாவது, நுழைவுத் தேர்வுக்கான நெருக்கடியை மாணவர்களிடம் உண்டாக்குவது!

நமது தமிழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களுக்கு டி.எம், எம்.சி.ஹெச். படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு அசாமிலும் வேறு சில மாநிலங்களிலும் மையங்கள் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதை இங்கே சுட்டிக்காட்டலாம்.

இவையெல்லாம் விவாதிக்கப்படாமல் அரசு நடத்தும் தேர்வு என்ற பெயரில் சகலமும் நியாயப்படுத்தப்படுவது இன்று பெரும் சமூக அவலம். கல்வி என்பது மக்களின் உரிமையாக வேண்டும். அது வணிகத்திலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். அதற்கான அரசியல் அழுத்தங்களை நாம் உருவாக்க வேண்டும்!

ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

பொதுச் செயலாளர்,

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.

தொடர்புக்கு: daseindia2011@gmail.com
கோவை எக்ஸ்பிரசை கோட்டைவிட்ட பயணியர் : ரயில்வே நிர்வாக அலட்சியத்தால் பரிதவிப்பு

Added : மே 09, 2018 01:30 

  பராமரிப்பு பணியால், ரயில்கள் ரத்து செய்யப்படும் விபரத்தை, உரிய கால அவகாசத்தில், ரயில்வே நிர்வாகம், பயணியருக்கு தெரிவிக்காததால், நேற்று, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, பயணியர் கோட்டை விட்டனர். சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவைக்கு, காலை, 6:10 மணிக்கு இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், மதியம், 1:45 மணிக்கு, கோவை சென்றடையும்.இந்த ரயில், சென்ட்ரலில் புறப்பட்டால், அரக்கோணத்தில் தான் நிற்கும். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தோர், அதிகாலையில், திருவள்ளூரில் இருந்து, அரக்கோணத்திற்கு, மின்சார ரயிலில் சென்று, அங்கிருந்து, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வது, வழக்கமாக உள்ளது.
ரயில்கள் ரத்து : அரக்கோணத்தில், ரயில்வே பணிமனை விரிவாக்கப்பணி நடப்பதால், சென்ட்ரல் - அரக்கோணம் பயணியர் ரயில், நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த தகவலை, ரயில்வே நிர்வாகம், உரிய கால அவகாசத்தில், பயணியருக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டியோர், திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்வதற்காக, திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். திருவள்ளூர் நிலையத்திற்கு வந்த பின் தான், ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விபரம், பயணியருக்கு தெரியவந்தது.

முன்பதிவு : இதனால், நிலைய அதிகாரியை அணுகி, 'நாங்கள், டிக்கெட் முன்பதிவும் செய்திருக்கிறோம். மின்சார ரயில்கள், ரத்து செய்யப்பட்டிருப்பதால், இனிமேல், பஸ் பிடித்து, அரக்கோணம் செல்ல முடியாது. 'எனவே, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, இன்று மட்டும், நின்று செல்ல ஏற்பாடு செய்து, எங்களுக்கு உதவுங்கள்' என கோரினர்.நிலைய அதிகாரி, 'என்னால், நிறுத்த முடியாது' என, கறாராக கூறினார். இதனால், பயணியர், அவருடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், பயணி ஒருவர் மயங்கி விழுந்ததால், நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்னை அதிகமாக, ரயில்வே பாதுகாப்பு படையினர், அங்கு வந்து, பயணியரை விரட்டினர். இந்த களேபரத்திற்கு இடையே, திருவள்ளூர் நிலையத்தை கடந்து, கோவை எக்ஸ்பிரஸ் சென்றது. ரயிலை கோட்டைவிட்ட பயணியர், பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியரின் இக்கட்டான நிலையை, திருவள்ளூர் நிலைய அதிகாரி, ரயில் இயக்கப்பிரிவு உயர் அதிகாரிக்கு, முன்கூட்டியே தெரிவித்து, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, 30 விநாடிகளாவது, நின்று செல்ல ஏற்பாடு செய்திருக்கலாம். இனி, சென்ட்ரல் - அரக்கோணம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் போது, சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவள்ளூரில், நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாஸ்கர், திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணியர் சங்க செயலர்
- நமது நிருபர் -
போலி ரயில் டிக்கெட் மோசடி : பயணிகள் நடுவழியில் தவிப்பு

Added : மே 09, 2018 00:19 | 

வேலுார்: போலி ரயில் டிக்கெட்டுகளால், பயணியர் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த, கல்புதுாரைச் சேர்ந்தவர் ஆபிரகாம், 70; நெல்லைக்கு செல்வதற்காக, கடந்த, 2ல், வேலுார் சைதாப்பேட்டையில் உள்ள, இ - டிக்கெட் புக்கிங் சென்டரில், 960 ரூபாய் கொடுத்து, டிக்கெட் முன் பதிவு செய்தார்.பி.என்.ஆர்., நம்பர், முன்பதிவு பெட்டி, இருக்கை எண், ரயில் புறப்படும் நேரம் அடங்கிய விவரங்கள், அவரது, மொபைலுக்கு, எஸ்.எம்.எஸ்., வந்தது. மே, 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில், ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, பி.என்.ஆர்., நம்பரை காட்டி விசாரித்த போது, டிக்கெட் போலியானது என தெரியவந்தது.இதுகுறித்து, காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். பின், வேறு வழியின்றி, சாதாரண டிக்கெட் வாங்கி, நெல்லை சென்றார்.கடந்த, சில மாதங்களாக, வேலுாரில், சைதாப்பேட்டை, காந்தி ரோடு, பாபுராவ் ரோடு, தோட்டப்பாளையம், ஆற்காடு ரோடு ஆகிய, பகுதிகளில் நுாற்றுக்கணக்கான, இ - டிக்கெட் புக்கிங் மையங்கள் முளைத்துள்ளன. இதில், பல மையங்களில் வழங்கப்படும், டிக்கெட்டுகள் போலியானதாக இருப்பதால், பயணியர் நடுவழியில் தவிக்கும் நிலையுள்ளது.இதுகுறித்து, காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறியதாவது:இ - டிக்கெட் சேவை மையத்தில், முன் பதிவு செய்த பின், வரும் குறுந்தகவல்களை, ஐ.ஆர்.டி.சி., இணைய தளத்தில் சென்று, சரி பார்க்க வேண்டும். இந்த தளத்தில், பி.என்.ஆர்., நம்பரை பதிவு செய்தாலே, அது ஒரிஜினலா, போலியா என தெரிய வரும். போலியானது என, தெரியவந்தால், எங்களிடம் புகார் செய்ததால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினர்.
அரசு ஊழியர் பேரணி: போக்குவரத்து நெரிசல்

Added : மே 08, 2018 23:42 

சென்னை: சென்னையில், கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், கைது செய்யப்பட்டனர். போராட்டத்தால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வுக்கான, 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ --ஜியோ சார்பில், சென்னையில், நேற்று கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அவர்களை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.போராட்டத்தில் பங்கேற்க வந்த பலர், முன்னெச்சரிக்கையாக, இரண்டு நாட்களுக்கு முன்னரே, சென்னைக்கு வரும் வழியிலும் கைது செய்யப்பட்டனர். சென்னையில், நேற்று போராட்டத்துக்கு வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சில போலீசாருக்கு அடி, உதை விழுந்தது.இதனால், அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அலுவலகங்கள், வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். போராட்டத்தை இன்றும் தொடர, ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக்குழு முடிவு செய்தது.இந்நிலையில் போராட்டம் தற்காலிக மாக வாபஸ் பெறப் படுவதாக, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பு 20ல் வெளியாகும் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு

Added : மே 09, 2018 01:18

'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம் பெற்றதால், பிளஸ் 1க்கு முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும், மே, 6ல் நடந்தது. விண்ணப்பித்திருந்த, 13.27 லட்சம் மாணவர்களில், 96 சதவீதமான, 12.73 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர். மூன்று மணி நேரம் நடந்த தேர்வில், மூன்று பாடங்களில் இருந்து, 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. இதில், வேதியியல் மற்றும் உயிரியல் கேள்விகள் எளிதாகவும், இயற்பியல் கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தவறான விடைக்கு, 'மைனஸ் மார்க்' உண்டு என்பதால், தங்களுக்கு நன்கு தெரிந்த விடைகளை மட்டும், மாணவர்கள் எழுதியுள்ளனர். இயற்பியலில் பெரும்பாலான கேள்விகள் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் இருந்ததால், அவற்றுக்கு தவறான விடை எழுதி, மதிப்பெண் குறைந்து விடக்கூடாது என, மாணவர்கள் பதில் எழுதாமல் விட்டுள்ளனர்.

இந்நிலையில், நீட் வினாத்தாள் குறித்து, பல்வேறு பயிற்சி மையங்கள், ஆய்வு நடத்தியுள்ளன. அதன்படி, வினாத்தாளில், பிளஸ் 2வுக்கு நிகராக, பிளஸ் 1 கேள்விகள் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, 'டாப்பர் டாட் காம்' இணைய பயிற்சி நிறுவனத்தின், துணை தலைவர் ராஜசேகர் ராட்ரே வெளியிட்ட ஆய்வில், 'இந்தாண்டு, நீட் தேர்வு வினாத்தாள் கொஞ்சம் எளிதாக இருந்தது. 'மற்ற பாடங்களை விட, இயற்பியல் பாடம் மிக கடினமாக இருந்தது' என, குறிப்பிட்டுள்ளார்.

பிளஸ் 2 பாடத்திட்டத்தில், இயற்பியலில், 24 கேள்விகள்; வேதியியலில், 20; உயிரியலில், 46 கேள்விகள் என, மொத்தம், 90 கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றுள்ளன. இதற்கு நிகராக, பிளஸ் 1 பாடத்திட்டத்திலும், இயற்பியலில், 21; வேதியியலில், 25 மற்றும் உயிரியலில், 44 கேள்விகள் என, 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இயற்பியலில், 34; வேதியியலில், 24 மற்றும் உயிரியலில், 48 கேள்விகள் எளிதாக இருந்துள்ளன. மூன்று பாடங்களிலும் சேர்த்து, 12 கேள்விகள், மிக கடினமாகவும்; 62 கேள்விகள் சமாளிக்கும் வகையிலும் இருந்ததாக, பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில், பிளஸ் 2 பாடத்துக்கு நிகராக, பிளஸ் 1 பாட அம்சங்கள் இடம் பெற்றதால், பிளஸ் 1 பாடத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

- நமது நிருபர் -
எம்.ஜி.ஆர்., பல்கலையில் டாக்டர்களுக்கு புதிய படிப்பு

Added : மே 08, 2018 23:38

சென்னை,: டாக்டர்களின் நிர்வாக திறனை மேம்படுத்தும், புதிய படிப்பை துவக்க, ஆஸ்திரேலியா நாட்டின் சுகாதார துறையுடன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதார துறை ஒத்துழைப்புடன், 'பெலோஷிப்' என்ற, புதிய படிப்பு துவக்கப்பட உள்ளது. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம், பல்கலையில், நேற்று கையெழுத்தானது.பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னிலையில், பதிவாளர் பாலசுப்ரமணியன், ஆஸ்திரேலியா சுகாதார சேவை மைய தலைவர் நீல்பாங் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த படிப்பு, சுகாதார துறையிலும், மருத்துவமனைகளிலும், நிர்வாக பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், தங்கள் மேலாண்மை திறனையும், தலைமை பண்பையும் மேம்படுத்தி கொள்ள வழிவகை செய்யும் என, பல்கலை தெரிவித்துள்ளது.


241 டாக்டர்களுக்கு விருது

Added : மே 08, 2018 23:37

சென்னை: குடும்ப நலத்துறையில், சிறப்பாக பணியாற்றிய, 241 டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், விருதுகள் வழங்கி கவுரவித்தார்.தமிழக குடும்ப நல பிரிவில், மூன்று ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய, டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு, விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில், நேற்று நடந்தது. இதில், 241 டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகள் வழங்கினார்.

பின், அமைச்சர் பேசியதாவது: தமிழகம் முழுவதும், 13 ஆயிரத்து, 882 மருத்துவ மையங்களில், குடும்ப நல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில், ஏழு ஆண்டுகளில், 21.60 லட்சம் பேருக்கு, குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 26.17 லட்சம் பெண்கள், கருத்தடை வளையங்கள் பொருத்தி உள்ளனர். இதன் காரணமாக, மூன்று கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.மூன்று மாதத்துக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும், 'மெட்ரோக்சி புரொஜெஸ்ட்ரோன் அசிடேட்' என்ற கருத்தடை ஊசியால், 3,078 பேர் பயனடைந்துள்ளனர்.'சாயா' என்ற கருத்தடை மாத்திரையால், 4,446 பேர் பயனடைந்துள்ளனர். குடும்ப நல துறையில் சிறப்பாக செயல்படும் டாக்டர்களுக்கு, தொடர்ந்து விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 24.4 2026