Friday, May 11, 2018

  • மே 28 (தி) அக்னி நட்சத்திரம் முடிவு
  • மே 28 (தி) வைகாசி விசாகம்
  • மே 29 (செ) காஞ்சி பெரியவர் பிறந்த தினம்
  • ஜூன் 15 (வெ) ரம்ஜான் பண்டிகை
  • ஜூன் 21 (வி) ஆனி உத்திரம்
  • ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
தேசிய செய்திகள்

நீட் அவலம்; தேர்வறையில் கண்காணிப்பாளர் மோசமாக பார்த்தார் - மாணவி வேதனை



தேர்வறையில் கண்காணிப்பாளர் மோசமாக பார்த்தார், கேள்வித்தாளால் மறைத்து எழுதினேன் என பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #NEET

மே 10, 2018, 06:40 PM

திருவனந்தபுரம்,


நீட் தேர்வின் போது மாணவர்களிடம் சோதனை என்ற பெயரில் அவர்கள் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களிடம் நடந்துக்கொண்ட முறை தொடர்பாக சிபிஎஸ்இ, தமிழக அரசுக்கு ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் மாணவி நடத்தப்பட்ட விதம் தொடர்பான செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்காடு மாவட்டம் கோப்பாவில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி, தேர்வின் போது உள்ளாடையை கழற்ற வற்புறுத்தப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்து உள்ளார். போலீஸ் மாணவியின் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ளது.

சோதனையின்போது மேல் உள்ளாடைகளை கழற்றுமாறு சோதனையாளர்கள் கூறினார்கள். எனது ஆடையில் மெட்டல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தார்கள். எனக்கு உள்ளாடையை கழற்ற ஒருமாதிரியாக இருந்தது. பின்னர் கழற்றினேன். உள்ளாடையை கழட்ட நேர்ந்த போது மிகவும் அவமானமாக உணர்ந்ததாகவும், தன்னுடன் சேர்த்து மேலும் 25 மாணவிகளின் மேல் உள்ளாடைகளை சோதனையின் போது கழற்ற வைத்தார்கள் என்றும் மாணவி புகாரில் கூறினார். மேலும் தேர்வு அறையில் கண்காணிப்பாளர் தன்னை மிகவும் மோசமான முறையில் பார்த்தார் எனவும் மாணவி தெரிவித்து உள்ளார்.

உள்ளாடையை கழற்றசெய்த பின்னர் தேர்வறைக்கு தேர்வு எழுத சென்றேன், அங்கு ஆண் கண்காணிப்பாளர் என்னை மிகவும் மோசமான முறையில் பார்த்துக்கொண்டு இருந்தார், என்னால் தேர்வின் மீது கவனம் செலுத்த முடியவில்லை எனவும் மாணவி குறிப்பிட்டு உள்ளார்.

மாணவின் சகோதரி மீடியாக்களிடம் பேசுகையில், “கண்காணிப்பாளர் பல்வேறு முறை என்னுடைய சகோதரியின் முன்னால் வந்து நின்று உள்ளார். அவர் என்னுடைய சகோதரின் முகத்தை பார்க்கவில்லை, மாறாக அவருடைய மார்பையே பார்த்து உள்ளார். என்னுடைய சகோதரி கேள்வித்தாளை கொண்டு மறைத்து தேர்வை எழுதி உள்ளார். என்னுடைய சகோதரி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார். கண்காணிப்பாளர் அடிக்கடி பக்கத்தில் வந்து நின்றதால் அவளால் முறையாக தேர்வை எழுத முடியவில்லை,” என கூறிஉள்ளார். இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கி முன்னெடுத்து வருகிறது, அதே பள்ளியில் தேர்வு எழுத வந்த பிற மாணவிகளிடம் பேசுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலை பெற முயற்சிக்கிறோம் எனவும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்தஒரு புகாரும் வரவில்லை என பிராந்திய சிபிஎஸ்இ அதிகாரி தருண் குமார் கூறிஉள்ளார்.
கடந்த வருடம் கண்ணூரில் இதுபோன்று மாணவி ஒருவர் உள்ளாடையை கழட்ட செய்ததாக புகார் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்திகள்

இப்படியும் வாழ்கிறார்கள்: பேத்திகளுக்காக தள்ளாத வயதிலும் சுமை தூக்கும் தொழிலாளி




தள்ளாடும் வயதிலும் இன்றளவும் குடும்பத்துக்காக ஓடி உழைத்து கொண்டு இருக்கிறார் உலகநாதன்.

மே 11, 2018, 05:00 AM

வயதானவர்களின் ஆலோசனை எப்போதும் நல்லதுக்காக தான் இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. வீட்டில் வயதான பெற்றோர்கள் இருந்தால் அது பாரமாகவே இருப்பதாக சிலர் கருதும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

வயதான காலத்தில் ஒரு ஓரமாக இருக்கமாட்டிங்களா? ஏன் தொண தொணனு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க... உங்க வேலைய பாருங்க... என்ற சத்தம் பலருடைய வீட்டில் கேட்கும்.

இப்படிப்பட்ட சொற்களுக்கு சொந்தக்காரர்களான வயதானவர்கள், தங்களுடைய இளமை பருவத்தில் குடும்பத்துக்காக ஓடி தேய்ந்து, தளர்ந்து போன நேரத்தில் இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டு மனம் நொந்து போகிறார்கள்.

ஆனாலும் சிலர் தங்களுடைய வயதான பெற்றோரை கடவுளாக பார்க்கும் குடும்பங்களும் உண்டு. இன்றளவும் வீட்டில் பெரியவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் குடும்பங்களும் உண்டு.

அதேபோல், இளமை பருவத்தில் உழைக்கத்தொடங்கியவர்களில் பலர், வயதான காலத்திலும் இன்று வரை ஓயாமல் உழைத்து குடும்பத்தை தூக்கி நிறுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த உலகநாதன் (வயது 65) என்பவர் தள்ளாடும் வயதிலும் இன்றளவும் குடும்பத்துக்காக ஓடி உழைத்து கொண்டு இருக்கிறார்.

ரெயில் நிலையங்களில் ‘அம்மா, அய்யா, சார், மேடம்..... லக்கேஜ் தூக்கணுமா?’ என்ற வார்த்தையை சுமந்தபடி, உடைமைகளை தூக்கி சுமப்பதற்காக குரல் கொடுக்கும் ‘போர்ட்டர்’களை(சுமை தூக்கும் தொழிலாளிகள்) ரெயில் பயணத்தின் போது நாம் பார்த்து இருப்போம்.

அந்த தொழிலை தான் உலகநாதன், 1979-ம் ஆண்டில் இருந்து கடந்த 39 ஆண்டுகளாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செய்து வருகிறார்.

இளமை பருவத்தில் ஓடிய வேகம் தற்போது இல்லை என்றாலும், மனம் தளராமல் தன்னுடைய பேரக்குழந்தைகளுக்காக உத்வேகத்துடன் ஒவ்வொரு நாளும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் சுமைகளை ஓடோடி தூக்கி அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்.

இதுகுறித்து உலகநாதன் கூறியதாவது:-

பேத்திகள்

என்னுடைய மனைவி பெயர் புஷ்பா. எனக்கு 3 பெண் குழந்தைகள். என்னுடைய உழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து 3 பேருக்கும் திருமணம் நடத்திவைத்தேன். இதில் முதல் மகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரு பக்கம் அதிர்ஷ்டம் என்று சொன்னாலும், மற்றொரு புறம் துரதிருஷ்டவசமாக என்னுடைய மகள் பிரசவத்தின் போது இறந்துவிட்டாள்.

மகள் இறந்ததும், அவளுடைய கணவரும் குழந்தைகளை பற்றி கண்டுகொள்ளவில்லை. குழந்தைகளின் அழுகை சத்தம் என் மகள் இறப்பை விட அதிக வேதனையை தந்தது. நானும், என்னுடைய மனைவி புஷ்பாவும் எங்களின் பேத்திகளை எடுத்து வளர்க்க முடிவு செய்தோம்.

1979-ம் ஆண்டில் இருந்து நான் சென்னை சென்டிரலில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணி செய்து வருகிறேன். இளமை காலத்தில் நன்றாக ஓடி ஓடி உழைத்தேன். பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்ததும், ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்த நேரத்தில், மீண்டும் உழைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

மனவலிமை

முதலில் என்னுடைய மகள்களுக்காக உழைத்த நான், இப்போது என்னுடைய பேத்திகளுக்காக தள்ளாடும் காலத்திலும் உழைத்து வருகிறேன். இந்த தொழிலில் உடல் வலிமை மிகவும் அவசியம். பயணிகளின் உடைமைகளை பத்திரமாக கீழே விழாமல் கொண்டு வந்து சேர்த்தால் தான் பணம் தருவார்கள்.

அந்தவகையில் என்னுடை உடல் வலிமை இப்போது கொஞ்சம் தளர்ந்துவிட்டது. இருந்தாலும் மனவலிமையுடன் இந்த தொழிலை என்னுடைய பேத்திகளுக்காக செய்கிறேன். முடிந்தவரை உழைத்து அவர்களை கரைசேர்க்க முயற்சிக்கிறேன். எனக்கு அன்றாடம் சொற்ப அளவிலான வருமானம் தான் கிடைக்கிறது. இருந்தாலும் அதன் மூலம் என்னுடைய குடும்பத்தை நடத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவி

உலகநாதன் சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், அங்குள்ள கடைக்காரர்கள் என அனைவருக்கும் நன்கு பழக்கமானவர். பேட்டி எடுத்து கொண்டு இருக்கும்போதே, சில ஊழியர்கள் அவரிடம் விளையாட்டாக பேசி மகிழ்ந்ததை பார்க்கும்போது அது நன்றாக தெரிந்தது. ‘சாமி இதனால எனக்கு எதுவும் பிரச்சினை வராதுல?’ என்று அப்பாவித்தனமாக அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தார்.

உழைக்கும் நோக்கில் உலகநாதன் ஓடினாலும், ரெயில் வராத நேரங்களில் சென்டிரலுக்கு வரும் சில பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாதை காட் உதவி செய்து, மனிதநேயத்திலும் வெற்றி பெறுகிறார்.

இறுதியில் நான் அடுத்த ரெயில் வருவதற்குள் ‘டீ’ சாப்பிட்டுவிட்டு வருகிறேன் தம்பி... என்று கூறி அங்கிருந்து விறு விறுவென்று உலகநாதன் நடந்து சென்றார்.
தலையங்கம்

ரஜினிகாந்தின் முதல் வாக்குறுதி




ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா?, வந்தால் எப்போது வருவார்?, தனிக்கட்சி தொடங்குவாரா?, ஏதாவது கட்சியோடு கூட்டணி சேருவாரா?, எந்த கட்சியோடு கூட்டணி வைப்பார்? என்ற கேள்விக்கெல்லாம் விடைகாண முடியாமல், 1996–ம் ஆண்டு முதல் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மே 11 2018, 03:00

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா?, வந்தால் எப்போது வருவார்?, தனிக்கட்சி தொடங்குவாரா?, ஏதாவது கட்சியோடு கூட்டணி சேருவாரா?, எந்த கட்சியோடு கூட்டணி வைப்பார்? என்ற கேள்விக்கெல்லாம் விடைகாண முடியாமல், 1996–ம் ஆண்டு முதல் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள். பலகட்டங்களில் அவர் சூசகமாக சொல்லிக்கொண்டிருந்தாலும், கடந்த டிசம்பர் 31–ந்தேதி ரசிகர்களை சந்திக்கும்போது உறுதிபட சொல்லிவிட்டார். ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம்’’ என்று உறுதியாக தெரிவித்துவிட்டார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அவரது 164–வது படமான ‘காலா’ ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் அவர் நிச்சயமாக தன் கட்சியின் பெயர், போகும்பாதையை அறிவித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இந்த நிகழ்ச்சியில், ‘நீங்கள் கட்சியின் பெயரையெல்லாம் அறிவிப்பீர்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்களே’ என்று ‘தினத்தந்தி’ செய்தியாளர் கேட்டபோது, ‘அரசியல் பிரவேசம், கட்சிப்பெயரை அறிவிப்பதற்கான மேடை இது அல்லவே, இது ஆடியோ வெளியிடுவதற்கான மேடை’ என்று பதில் அளித்தார். ஆனால் அவரது 30 நிமிட பேச்சின்போது, வெளிப்படையாக எதையும் சொல்லாவிட்டாலும், வழக்கம்போல சூசகமாக பல கருத்துகளை தெரிவித்துவிட்டார். அடிக்கடி வெளிவரும் ‘காலா’ படத்தில் உள்ள அவரது வசனமான, ‘‘வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன்... தில் இருந்தா மொத்தமா வாங்கல...’’ என்பதை இந்த மேடையிலும் சொன்னார். இதன் பொருளை அரசியல் நோக்கர்கள், அவர் தனியாகத்தான் தேர்தலில் நிற்கப்போகிறார். ஏற்கனவே டிசம்பர் 31–ந்தேதி பேசும்போதுகூட, 234 தொகுதிகளிலும் நிற்போம் என்றுதான் சொல்லியிருக்கிறார் என்று விளக்கம் கூறுகிறார்கள்.

பேச்சின் இறுதியில், ‘‘நதிகள் இணைப்பு என்பது என் வாழ்க்கையின் ஒரே கனவு, தென்னிந்திய நதிகளை இணைத்துவிட்டால், அதன்பிறகு மறுநாளே நான் கண்மூடினாலும் எனக்கு கவலையில்லை’’ என்று தனது அரசியலின் முதல் வாக்குறுதியை அறிவித்துவிட்டார். நதிநீர் இணைப்பு என்பது ரஜினிகாந்த் உள்ளத்தில் வெகுகாலமாகவே அசைவாடிக்கொண்டிருக்கும் ஒரு அழுத்தமான உணர்வு ஆகும். 13–10–2002 அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்றுகோரி, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், கங்கை–காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்தவேண்டும். அப்படி கங்கை நதியை இணைக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்கவேண்டும். எவ்வளவு பணம் என்று கவலைப்படாதீர்கள், நாளைக்கே அறிவித்தால்கூட, நாளையே ரூ.1 கோடி தருகிறேன், எனது பாக்கெட்டிலிருந்து தருகிறேன். பணம் வேண்டும் என்றால் மக்களிடம், எங்களிடம் விடுங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியது இன்னும் பசுமையாக எல்லோருக்கும் நினைவில் இருக்கலாம். ஆக, அவரது முதல் இலக்கு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான். நதிநீர் இணைப்பு என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கண்ட கனவு. மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் கண்ட கனவு. இப்போது ரஜினிகாந்த் அறிவித்த முதல் வாக்குறுதி. தென்னிந்திய நதிகள் இணைக்கப்படவேண்டும் என்றால், தென் மாநிலங்களோடு நல்லிணக்கம் வேண்டும். அதை உருவாக்க அனைவரும் பாடுபடவேண்டும்.
மாநில செய்திகள்

குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் பலி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு ஜெயில்





குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். #BabyKidnapgang

மே 11, 2018, 05:45 AM

சென்னை,

காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.

‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங் கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலர் உயிர் இழந்தும் இருக்கிறார்கள்.

மலேசியாவில் இருந்து வந்த உறவினர்களுடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் கிராமவாசிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். அவருடன் சென்ற 4 பேர் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் அமீர் என்றும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோன்ற குழந்தை கடத்தல் பீதியால் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.

இந்த கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் நடந்தது. அங்கு நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று கருதிய கிராம மக்கள் பிடித்து விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தார். பின்னர் அவரது உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரித்ததில், அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. கிராம மக்களின் சந்தேகத்தால் அப்பாவி ஒருவர் உயிர் இழக்க நேரிட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே, அந்த பெண்ணை போலீசார் மீட்டுச்சென்றபோது, அவர்களுடன் கிராமவாசிகள் சிலர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

இதுபோன்ற குழந்தை கடத்தல் புரளி காரணமாக அப்பாவிகள் தாக்கப்படுவதும், அதில் சிலர் உயிர் இழப்பதும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் பற்றிய வதந்தியால் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க, இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகளில் போலீசார் ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் அதுபற்றி போலீசுக்கு தெரிவிக்குமாறும் கூறி வருகிறார்கள்.

குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Thursday, May 10, 2018

 
குணச்சித்திர நடிகர் நீலகண்டன் உடல் நலக்குறைவால் மரணம்!
 
விகடன் 3 hrs ago

 

`பம்மல் கே சம்பந்தம்', 'அந்நியன்', 'கல்யாணம் சமையல் சாதம்' உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் நீலகண்டன். தமிழில் அதிகப் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்திருக்கிறார். எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாடக மேடைகளிலும் நடித்திருக்கிறார் நீலகண்டன். திரைத்துறையினர் இவரை சுருக்கமாக `நீலு’ என்று அழைப்பார்கள். 83 வயதான நீலு, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலகண்டன் இன்று காலமானார். இவரது இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட் நகரிலுள்ள வீட்டில், நாளை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. சினிமா துறையைச் சேர்ந்த பலரும் இவரது இறப்புக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
அரசுப் பேருந்தில் பயணிகளின் தாகத்தைத் தீர்க்கும் டிரைவர் கண்டக்டர்!
 
விகடன் 2 hrs ago




அரசுப் பேருந்து ஒன்றில் தண்ணீர் கேன்கள் மூலம் பயணிகளின் தாகத்தைத் தீர்த்து வருகிறார்கள் பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும். இருவரையும் பயணிகளும் பொதுமக்களும் பாராட்டுவதோடு வாழ்த்திவிட்டும் செல்கிறார்கள்.

கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி எடுப்பதோடு மக்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களை குஷிப்படுத்தி குளிர்ச்சிப் படுத்தினாலும் காவிரியில் நீர் இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோடைக்கான தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறார்கள். அரசுப் பேருந்தில் இதேபோல் தண்ணீர் கேன் வைத்து பயணிகளின் தாகத்தைத் தீர்த்து வருகிறார்கள் டிரைவரும் கண்டக்டரும். இதை அனைத்துப் பேருந்துகளிலும் பின்பற்றலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியிலிருந்து கல்லணைக்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் செங்கிப்பட்டியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகச் சுரக்குப்பட்டி என்ற ஊருக்கும் செல்கிறது 88 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து. இதில் டிரைவராக செல்வராஜ் என்பவரும் கண்டக்டராக முத்தமிழ் செல்வன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த செலவில் தினமும் இரண்டு மினரல் வாட்டர் கேன்கள் வாங்கி டிரைவர் சீட்டுக்கு அருகில் உட்கார்வதற்கு பயன்படுத்தக்கூடிய சிறிய அளவிளான பிளாஸ்டிக் சேரின் மேல் தண்ணீர் கேனை வைத்து பஸ் வேகமாகச் செல்லும்போது கவிழ்ந்துவிடாத அளவுக்கு கயிறு கொண்டு கட்டியிருக்கின்றனர்.

அந்தத் தண்ணீர் கேன் முகப்பில் தன்ணீரை எடுப்பதற்கு பம்ப் வைத்துள்ளனர். அதன் ஒரு டம்ளர் கவிழ்த்து வைத்துள்ளனர். அந்தப் பம்பின் மேல் அழுத்தினால் தண்ணீர் கொட்டுகிறது. இதைப் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் பயன்படுத்துவதற்காக இப்படி ஓர் ஏற்பாட்டை நாங்கள் செய்திருக்கிறோம் என்கிறார்கள். இருவரின் இந்த முயற்சியை அனைவரும் மனமார பாராட்டி செல்கின்றனர். நாமும் பாராட்டிவிட்டு பேசினோம்.

''தினமும் நாங்கள் பணிக்குச் செல்லும்போது வாட்டர் பாட்டிலில் எங்களின் தேவைக்காகத் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வோம். இப்போது கடுமையான வெயில் வாட்டுகிறது. ஒரு நடைக்கு குறைந்தது 1.30 மணி நேரத்துக்கு மேல் பல குக்கிராமங்கள் வழியாக எங்கள் பேருந்து செல்லும். எல்லா கிராமத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களும் அரசுப் பேருந்தில் பயணிப்பார்கள். அவர்கள் எல்லாம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது. பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது இடையில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்கவும் முடியாது.

அதனால் பல நாள்கள் பலபேர் தாகத்தில் தவித்திருக்கிறார்கள். நாங்கள் பாட்டில்களில் வைத்துள்ள தண்ணீரை எடுத்து குடிக்கும்போது சார் எங்களுக்கும் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என அப்பாவியாகக் கேட்பார்கள். நாங்களும் கொடுப்போம். அப்போதுதான் எங்களுக்கு இந்த யோசனை வந்தது. எல்லோரும் தண்ணீர் குடிக்கும் வகையில் பேருந்திலேயே தண்ணீர் வைக்க முடிவு செய்தோம். இருவரும் எங்கள் துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று பயணிகள் குடிக்க தண்ணீர் வைத்து வருகிறோம்.

நாங்களும் அந்தத் தண்ணீரை பயன்படுத்திய மாதிரி ஆச்சு; நாலு பேருக்கு நல்லது செஞ்ச மாதிரியும் ஆச்சு'' என்றவர்கள் தொடர்ந்தனர். ''கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இப்படி செய்து வருகிறோம். இனி கோடை காலம் மட்டும் இல்லாமல் எப்போதும் குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம்'' எனப் புன்னகையுடன் சொல்கிறார்கள் செல்வராஜும் முத்தமிழ் செல்வனும்.

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், ''காவிரி தவழ்ந்து செல்லும் தஞ்சாவூரிலேயே கடுமையான வறட்சி நிலவி வருகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடை வெயில் இந்தப் பகுதியில் அனல் காற்றாக வீசி வெப்பத்தைக் கக்குகிறது. காவிரி செல்லும் திசையில் பயணிக்கும் இந்தப் பேருந்தில் சில நேரங்களில் பிடித்து வைப்பதற்குத் தண்ணீர் இல்லாததால் தங்கள் கைகாசை கொடுத்துதான் இருவரும் தண்ணீர் வாங்கி வைத்து எல்லோரது தாகத்தையும் தீர்க்கிறார்கள் என்பது ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இப்போதே குடிதண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் அவலநிலையில் இருக்கிறார்கள் காவிரி ஆற்றின் ஒரத்தில் வாழும் மக்கள். இனி போகப் போக என்ன ஆகுமோ என நினைக்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது'' என்கிறார்.

NEWS TODAY 24.4 2026