Saturday, May 12, 2018


வதோராவில் ரயில்வே பல்கலை. யு.ஜி.சி. ஒப்புதல்


Added : மே 12, 2018 03:05



வதோதரா: ரயில்வே பல்லை. அமைக்க பல்கலை மானியக்குழு ஒப்புதல் வழங்கியது நாட்டின் வளர்ச்சிக்கு, ரயில்வே துறையை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, நாட்டின் முதல் ரயில்வே பல்கலை கழகத்தை, குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; விரைவில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து இன்ஸ்டியூட் அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளதை தொடர்ந்து ரயில்வே பல்கலை. க்கு யு.ஜி.சி. எனப்படும் பல்கலை. மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இந்த பல்லை. மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களை ஈர்க்கும் திறன் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 நிமிடத்திற்கு நம்புகிறேன்: கிரண்பேடி : நிரந்தரமாக நம்புகிறேன்: நாராயணசாமி

Added : மே 12, 2018 01:56



புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் விழாவில், தன் ஆங்கில உரையை, முதல்வர் நாராயணசாமியை அழைத்து, கவர்னர் மொழிபெயர்க்க வைத்தார். இருவரும், ஒருவரை ஒருவர் இன்முகத்துடன் கலாய்த்துக்கொண்டது, விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக, நேற்று முன்தினம், முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கோப்புகள் அனைத்தையும் திருப்பி அனுப்பி, புதுச்சேரி அமைச்சரவைக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளதாக கூறிவிட்டது. 'இதன் மூலம், மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த கவர்னர் கிரண் பேடி, பதவி விலக வேண்டும்' என்றார்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவர்னர் கிரண் பேடி, 'வேலையில் இருந்து தான் விலக முடியும். இலக்கில் இருந்து விலக முடியாது. புதுச்சேரியை வளமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன். 'புதுச்சேரியின் மீது விருப்பம் இருந்தால், என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்று, முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.கவர்னர், முதல்வர் இடையிலான உச்சகட்ட மோதல், நேற்று முன்தினம், தவளக்குப்பத்தில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழாவில் வெட்டவெளிச்சமானது. இரண்டு மணி நேரம் நடந்த விழாவில், முதல்வரும், கவர்னரும் அருகருகே அமர்ந்திருந்தும், ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.இந்நிலையில், கம்பன் கலையரங்கில், நேற்று காலை நடந்த கம்பன் விழா வில், கவர்னர், முதல்வர் இருவரும் பங்கேற்றனர். கவர்னர் கிரண்பேடி தொடக்க உரையாற்ற வந்தார். அப்போது, 'இங்கு எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும் கையை உயர்த்துங்கள்' என்றார். மிகக்குறைவான எண்ணிக்கையில், கையை உயர்த்தினர். பின், 'இங்கு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பிரெஞ்ச் என, பன்மொழி தெரிந்த முதல்வர் உள்ளார். அவர் மொழிமாற்றம் செய்ய வேண்டும்' என, அழைத்தார்.'கவர்னர் அழைக்கிறார் என்பதை விட, கம்பன் விழாவிற்காக மொழி மாற்றம் செய்கிறேன்' என, முதல்வர் நாராயணசாமியும், அதற்கு முன்வந்தார். அப்போது, கவர்னர், தான் கூறுவதை மட்டுமே மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்றும், 10 நிமிடத்திற்கு முதல்வரை நம்புவதாகவும் கூறினார்.உடனே, முதல்வர் நாராயணசாமி, தான் நிரந்தரமாகவே கவர்னர் கிரண்பேடியை நம்புவதாக தெரிவித்தார். இதையடுத்து, தானும் அவ்வாறு முதல்வரை நம்புவதாகவும், இந்த நட்பு காலம் முழுக்க நீடிக்க வேண் டும் என, விரும்புவதாகவும் கிரண் பேடி கூறினார்.

அதையடுத்து, கவர்னரின் ஆங்கில உரையை முதல்வர் மொழியாக்கம் செய்தார். விழா மேடையில் கவர்னருக்கும், முதல்வருக்கும் நடந்த இந்த உரையாடல், பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இன்று கர்நாடகா தேர்தல்: மும்முனை போட்டி நிலவுகிறது

Updated : மே 12, 2018 06:29 | Added : மே 12, 2018 04:41



 
பெங்களூரு : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது.. மாநிலம் முழுவதும், ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம், முடிவடைந்தது. கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா, ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது பா.ஜ.,வின் எடியூரப்பாவிடம், முதல்வர் நாற்காலியை பறிகொடுப்பாரா என்பது, வரும், 15 ல் தெரிந்து விடும்.

கர்நாடகாவில் சித்தராமையா அரசின் பதவிக் காலம், இம்மாதம், 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை, மார்ச், 27ல், வெளியிடப்பட்டது.ஜெயநகர் தொகுதி, பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், மாரடைப்பால் இறந்தார். அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள, 223 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. பா.ஜ., சார்பில், 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்., சார்பில், 221 பேரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், 200 பேரும் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் உட்பட, மொத்தம், 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் காங்கிரஸ் சார்பில், கட்சி தலைவர், ராகுல், மூத்த தலைவர், சோனியா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரத்தில் ஈடுபட்டார்

அனைத்து தொகுதிகளுக்கும், இன்று காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாநிலம் முழுவதும், 56 ஆயிரத்து 995 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ஐந்து கோடி வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.

இத்தேர்தலில் காங்., பா.ஜ. மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று கட்சிகள் தனிததனியே போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால் வெற்றி யாருக்கு என்பது குறித்து மே 15-ல் நடக்க உள்ள ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிவரும்.தேர்தல் பாதுகாப்புக்காக மாநில முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.25 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணிக்கான டெண்டர் வெளியீடு



காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.25 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டப்படுகிறது.

மே 12, 2018, 03:27 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான லாலாதோட்டம் என்ற இடத்தில் 5 ஏக்கரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்குவதற்காக ரூ.25 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி (யாத்திரை நிவாஸ்) கட்டப்படுகிறது.

மத்திய-மாநில அரசுகளின் சுற்றுலாத்துறை மூலம் அமைக்கப்படும் இந்த விடுதிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி செய்கிறது. 150 அறைகளுடன் நவீன முறையில் கட்டப்படும் இந்த விடுதியின் கட்டுமான பணிக்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், முன்னாள் மேலாளர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல தணிக்கை அதிகாரி சரோஜா, உதவி கோட்ட பொறியாளர் கல்யாணசுந்தரம், ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில செய்திகள்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது




ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர். #Bankstrike

மே 12, 2018, 05:15 AM

சென்னை,

வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

பெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இது கண்டனத்துக்குரியது.

இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும் கலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய செய்திகள்

பொதுப்பிரிவினர் “25 வயதுக்கு மேல் நீட் தேர்வு எழுத முடியாது”: சி.பி.எஸ்.இ. அறிவிக்கையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது






பொதுப்பிரிவினர் 25 வயதுக்கு மேல் நீட் தேர்வு எழுத முடியாது என்ற சி.பி.எஸ்.இ. அறிவிக்கையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது.

மே 12, 2018, 05:15 AM

புதுடெல்லி,

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை பொதுப்பிரிவினர் 25 வயது வரையும், இடஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரையும் மட்டுமே எழுத முடியும் என்று வயது உச்சவரம்பு நிர்ணயித்து கடந்த ஜனவரி 22-ந் தேதி சி.பி.எஸ்.இ. அறிவிக்கை வெளியிட்டது.

இந்த வயது உச்சவரம்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன.

விசாரணை முடிவடைந்த நிலையில், இம்மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். வயது உச்சவரம்பு நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை சட்டரீதியாக செல்லும் என்று உத்தரவிட்டனர். எனவே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவினரும், 30 வயதுக்கு மேற்பட்ட இடஒதுக்கீடு பிரிவினரும் நீட் தேர்வு எழுத முடியாது.

அதே சமயத்தில், திறந்தவெளி பள்ளிகளிலும், தனியாகவும் படித்தவர்கள் நீட் தேர்வு எழுத தடை விதிக்கும் உட்பிரிவு செல்லாது என்று கூறி, அதை நீதிபதிகள் ரத்து செய்தனர். அம்மாணவர்களின் தேர்வு முடிவுகளை மற்ற மாணவர்களின் தேர்வு முடிவுகளுடன் சேர்த்து வெளியிடலாம் என்றும் கூறினர்.
மாநில செய்திகள்

அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்




அக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது.

மே 12, 2018, 04:45 AM

சென்னை,

அக்னி நட்சத்திர உக்கிரம் காரணமாக தற்போது சென்னையில் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் செல்வோர் வாடி வதங்குகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த காலகட்டத்தில் கோடை மழை பெய்தால் வெப்பம் சற்று தணியும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தபோதும் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை மழை எட்டிப்பார்க்கவில்லை. இதன்காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் இந்த கோடையில் 102 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்த பின்பு மாலை நேரங்களில் அருகில் உள்ள திறந்தவெளி பூங்கா மற்றும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் குழந்தைகளுடன் படையெடுக்கின்றனர். இதனால் பூங்காக்களில் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அதிக வெப்பம் காரணமாக பகல் மற்றும் இரவு முழுவதும் மின்விசிறி இல்லாமல் வீட்டுக்குள் இருக்க முடியாது என்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதால் இரவு நேரங்களில் தூங்கமுடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

வெயிலின் உக்கிரம் காரணமாக மதிய நேரங்களில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் குறைவாகவே செல்கின்றன. பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பஸ், ரெயில்களிலும் பயணம் செய்ய முடியாத அளவுக்கு வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குளிர்சாதன வசதி(ஏ.சி.) இல்லாத பஸ்களில் பயணம் செய்வது சிரமமாக உள்ளது.

இதன்காரணமாக கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று கூறி பலர் பகல், இரவு எந்த நேரமானாலும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களையே வெளியூர் பயணத்துக்கு தேர்வு செய்கின்றனர்.

வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கரும்புச் சாறு, பழச்சாறு மற்றும் குளிர்பான கடைகள் திடீரென முளைத்துள்ளன. இதுதவிர மோர், இளநீர், பனை நுங்கு, வெள்ளரி பிஞ்சு வியாபாரமும் சூடுபிடித்துள்ளன.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூலிங் பீருக்கு கிராக்கி அதிகரித்து உள்ளது. கூலிங் பீர் குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது பீரை கூலிங் செய்து கொடுக்கமுடியாமல் பணியாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பல டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் கிடைப்பது இல்லை.

சென்னை நகரில் கடற்கரையை ஒட்டியுள்ள சில பகுதிகளில் மட்டும் பகல் நேரங்களில் கடற்காற்று வீசுவதால் வெப்பம் அதிகமாக தெரியவில்லை.

NEWS TODAY 24.4 2026