Monday, May 14, 2018

முதுநிலை மருத்துவம்: 117 இடங்கள் தமிழகத்துக்கு ஒப்படைப்பு

By DIN  |   Published on : 12th May 2018 02:14 AM  | 
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வில் நிரம்பாத 117 இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்காக மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ் ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கும், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்குமான அகில இந்தியக் கலந்தாய்வு மார்ச் 27-இம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
இறுதிக்கட்டக் கலந்தாய்வு மே 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் மீண்டும் தமிழக ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1,646 முதுநிலை இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத இடங்கள், அதாவது 823 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. கலந்தாய்வு முடிவில் 117 இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். கடந்த ஆண்டு 335 இடங்கள் தமிழகத்துக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்வு தாமதம்: முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்குச் சலுகை மதிப்பெண் வழங்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இந்த வழக்குகள் காரணமாக மார்ச் மாதம் தொடங்க வேண்டிய தமிழக இடங்களுக்கான முதுநிலை கலந்தாய்வு இதுவரை தொடங்கவில்லை. 
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய மற்றும் மாநிலங்களின் கலந்தாய்வு மே 30-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும்.
இந்நிலையில், அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் இடங்களை வழங்கும் நோக்கில் சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வதந்திகளை நம்பாதீர்கள்!


By ஆசிரியர்  |   Published on : 14th May 2018 02:03 AM  |
தமிழினம் எப்போது மனிதாபிமானமற்ற இனமாக மாறியது என்கிற கேள்வியை எழுப்புகிறது, கடந்த இரண்டு மாதங்களாக வட தமிழகத்தில் நடந்ததாகக் கேள்விப்படும் நிகழ்வுகள். திருடனையோ, கொலைகாரனையோ, ஏன், சமூக விரோதிகளையோகூட யாராவது அடித்தாலோ துன்புறுத்தினாலோ அதைத் தாங்கிக் கொள்ளாமல் அனுதாபம் காட்டும் சமூகமாக இருந்த நாம், இப்போது கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பெறப்படும் தகவல்களை நம்பி, அப்பாவிகளை அடித்துக் கொல்லும் வக்கிரத்தனத்தில், வெறியின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறோம் என்பது வருங்காலம் குறித்த அச்சத்தையல்லவா மேலெழச் செய்கிறது.
கடந்த மாதம் வேலூரில் பிழைப்புத்தேடித் தமிழகம் வந்திருந்த 30 வயது அப்பாவி வடநாட்டு இளைஞர் ஒருவரை திருடன் என்று யாரோ சொல்ல, பொங்கியெழுந்த அந்தப் பகுதி மக்கள் கும்பலாகப்போய் அவரை அடித்து துவம்சம் செய்துவிட்டிருக்கிறார்கள். 
குற்றுயிரும் குலையுயிருமாக அந்த இளைஞர் காப்பாற்றப்பட்டது கடவுளின் கருணையால்தானே தவிர, நமது மக்களின் ஈர நெஞ்சத்தால் அல்ல.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன் சத்திரத்தில் கடந்த ஏப்ரல் 21}ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று. இந்த நிகழ்விலும் பாதிக்கப்பட்டது பஞ்சம் பிழைக்க வடநாட்டிலிருந்து வந்த ஒருவர்தான். அவரைக் குழந்தைத் திருடன் என்று சந்தேகப்பட்ட ஒரு கும்பல், அவரை அடித்தே கொன்றிருக்கிறது. ஒருவர் மீது சந்தேகம் வந்தால் விசாரிக்கலாம்; காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்கலாம். கும்பலாகக் கூடி ஒருவரை அடித்துக் கொல்வதென்றால், எந்த அளவுக்குக் கண்மூடித்தனமான வெறியும், வக்கிரத்தனமும் இருந்திருக்க வேண்டும்.
அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குத் தனது உறவினர்களுடன் காரில் சென்றிருக்கிறார் 
65 வயது ருக்மிணி என்கிற பெண்மணி. அவர் தரிசிக்க விரும்பிய கோயிலுக்கு ஒருவரிடம் வழி கேட்டிருக்கிறார். அப்போது அங்கே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. காரில் வைத்திருந்த சாக்லெட்டுகளை எடுத்து அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் அவர். இவ்வளவுதான் நடந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அவர் சென்று கொண்டிருந்த காரைத் துரத்திப் பிடித்து, அவரை வண்டியிலிருந்து இறக்கி அந்தக் கும்பல் தாக்கியிருக்கிறது. ருக்மிணி அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் வந்த உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 9}ஆம் தேதி பழவேற்காட்டில் நடந்த சம்பவம் இவற்றையெல்லாம்விடக் கொடுமையானது. பழவேற்காடு பாலத்தில் கந்தலாடையுடனும் அழுக்கு மூட்டையுடனும் ஒரு பிச்சைக்காரர் (மனநோயாளி?) ஓரமாகப் படுத்துக் கொண்டிருந்தார். அங்கு குடிபோதையில் வந்த இருவர் அவரிடம் ஏதோ விசாரித்திருக்கிறார்கள். தமிழ் தெரியாததால் அவர் ஹிந்தியில் பதிலளித்திருக்கிறார்.
குடிபோதையில் இருந்தவர்கள் அவரைத் தமிழில் பேசு என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். அவர் மீண்டும் ஹிந்தியில் பதிலளிக்க, குடிபோதையில் இருந்தவர்களுக்குக் கோபம் அதிகரித்திருக்கிறது. அவரை அடித்துத் தள்ள, அவரது மூட்டையிலிருந்த சிறிய பேனாக்கத்தி கீழே விழுந்திருக்கிறது. உடனேயே அவரை வடநாட்டிலிருந்து வந்திருக்கும் குழந்தைத் திருடன் என்று முடிவு கட்டி அடிக்கத் தொடங்கினார்கள். அந்த வழியாக வருவோர் போவோரும் சேர்ந்து கொண்டு கும்பலாக அவருக்கு தர்ம அடி கொடுக்க முற்பட்டனர். இறந்துவிட்ட அவரை அந்தப் பாலத்திலேயே தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அவர், கடந்த பத்து மாதமாக பழவேற்காடு கடைத்தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தவர் என்பது பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம், கட்செவி அஞ்சல் மூலம் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகள்தான் என்று தெரியவந்திருக்கிறது. வடநாட்டிலிருந்து குழந்தைகளைக் கடத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும் பரப்பப்பட்ட ஆதாரமற்ற வதந்திகளை நம்பி, பெற்றோர் பீதியடைந்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே பனிரெண்டுக்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கட்செவி அஞ்சலில் பரப்பப்படும் வதந்தி ஒருபுறம், குடிபோதையில் என்ன செய்கிறோம் என்கிற சிந்தனையே இல்லாமல் வெறிபிடித்து அலையும் கூட்டம் இன்னொருபுறம். இவற்றுக்குப் பலியாவது தமிழகத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்திருக்கும் வடநாட்டு அப்பாவிகள் அல்லது நாதியற்ற பிச்சைக்காரர்கள்.
காவல்துறை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்திருக்கிறது. வதந்திகளைப் பரப்பியவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனாலும்கூட, வக்கிரத்தனமான இந்தக் கும்பல் மனோநிலை குறைவதாகத் தெரியவில்லை.
சமூக வலைதளங்கள் எந்தவிதத் தணிக்கையோ, கட்டுப்பாடோ இல்லாமல் செய்திகளைப் பரப்புவதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் உலகமே திகைத்துப்போய் நிற்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்துக்குக் கும்பல் மனோபாவம் வந்திருப்பதுதான் அதைவிடக் கவலை அளிப்பதாக இருக்கிறது. வள்ளுவரையும், வள்ளலாரையும் வழிகாட்டிகளாகக் கொண்ட தமிழ்ச் சமுதாயம் வன்முறைக்கும், வக்கிரத்தனத்துக்கும், வதந்திக் கலாசாரத்துக்கும் பலியாகி விடலாகாது!
கருந்துளை எல்லாவற்றையும் இழுக்கும்... வெளியே தள்ளும் வெண்துளை தெரியுமா?
மு.பிரசன்ன வெங்கடேஷ்   vikatan 09.05.2018

அண்டத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினால் நம் ஆயுள் போதாது. இவ்வண்டத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான். அந்த அளவிற்குக் கோடிக்கணக்கான விஷயங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது பேரண்டம். கருந்துளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றால், நல்லா தெரியுமே என்று பதில் வரும். அந்தளவுக்குச் சாமானியன் வரை கருந்துளையைக் கொண்டு சேர்த்திருக்கிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். சரி, வெண்துளையை (White hole) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? "என்ன ப்ரோ புது ஐட்டமா கேக்குறீங்க" என்கிறீர்களா? கருந்துளை, வெண்துளை எல்லாம் அண்ணன் தம்பிகளைப் போலத்தான்.

தன் அருகில் இருக்கும் எந்தவொரு பொருளையும் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்வதைத்தான் கருந்துளை என்கிறோம். கருந்துளையினுள் ஈர்க்கப்பட்ட பொருளால் மறுபடியும் வெளியேற முடியாது, அது ஒளியாக இருந்தாலும் சரி. அந்த அளவிற்கு வலிமையானது கருந்துளையின் ஈர்ப்புவிசை. இப்போது வெண்துளை என்பது கருந்துளையின் அப்படியே நேரெதிர். வெண்துளை தன்னுள் இருக்கும் பொருளை வெளியே கக்கிக் கொண்டே இருக்கும். வெளியில் இருக்கும் எந்தவொரு பொருளாலும் வெண்துளையினுள் செல்ல முடியாது. ஏனெனில் வெண்துளையின் வெளியேற்று திசைவேகம் அதிகமாக இருக்கும். ஆனால், வெண்துளை என்பது இன்றும் ஒரு கோட்பாடாக மட்டுமே உள்ளது. அது இவ்வண்டத்தில் உள்ளது என்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.



எனினும் வெண்துளைக்கான தேடுதல் வேட்டையும் ஆய்வுகளும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெண்துளை இருப்பதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். கண்டறிந்த கோட்பாட்டின் படியே வெண்துளையின் இயக்கம் வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) இரண்டாம் விதியினை சுக்கு நூறாக உடைக்கிறது. அதாவது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின்படி எந்த ஒரு பொருளின் இயல்பாற்றலும் (Entropy) அதிகரித்த வண்ணமே இருக்கும். ஆனால், வெண்துளையின் இயக்கப்படி அதன் அருகில் இருக்கும் பொருட்களுக்கு இயல்பாற்றல் குறைய வாய்ப்பிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டின்படி பார்த்தால் தெளிவாகப் புரியும். ஒரு பழத்தை இரண்டு வாரங்கள் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். இதுதான் பொதுவாக இயல்பாற்றல் அதிகரிப்பால் நடக்கும். அதே பழம் மீண்டும் கெட்டுப் போனதில் இருந்து நல்ல பழமாக மாறும் சாத்தியக்கூறுகள் உண்டா? உண்டு, அது இயல்பாற்றல் குறைந்தால் நடக்கும். ஆனால், அது பூமியில் நடக்காது. எனவே வெண்துளை, இயல்பாற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கானது மட்டுமே, மொத்த அண்டத்திற்குமானது அல்ல என உரைக்கிறது.

வெண்துளை எப்படி உருவாகின்றது?

வெண்துளை என்பது கருந்துளையின் அடுத்த கட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு நட்சத்திரம் தன் அந்திம காலத்தில் சூப்பர் நோவா என்னும் பெருவெடிப்பிற்கு உள்ளாகும் போது கருந்துளைகள் தோன்றுகின்றன. கருந்துளைக்கென்று தனியாக நிகழ்வு பரப்பெல்லை உண்டு. அவை தன் அருகில் இருக்கும் பொருட்ளை ஈர்ப்பதோடு நில்லாமல் அதீத ஈர்ப்புவிசை காரணமாக தன் பரப்பையும் சேர்த்து ஈர்க்கும். இதன் காரணமாக தன் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே வரும். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் சுருங்கமுடியாது என்ற நிலை வரும்போது அது ஒரு வெண்துளையின் பிறப்பிற்கு வழிவகுக்கிறது. அதுவரை தான் ஈர்த்த அத்தனை பொருட்களையும் வெண்துளையான பின் வெளியேற்றுகிறது. அப்படியே அது மாறினாலும் பல அடிப்படை இயற்பியல் கோட்பாடுகளின் மடியில் கைவைக்கியது இதன் இயக்கம். எப்படி இருந்தாலும் வெண்துளையை பற்றி கூறப்படும் அனைத்தும் அனுமானக் கோட்பாடுகளே.

கருந்துளை மற்றும் வெண்துளை இடையேயான பந்தம்

கருந்துளையையும் வெண்துளையையும் தனித்தனியாகப் பார்க்காமல் சேர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமான கோட்பாடுகள் கிடைக்கும். கருந்துளை அனைத்தையும் ஈர்த்துக்கொள்கிறது எனவே அதை நுழைவு வாயில் என்று வைத்துக் கொள்வோம், வெண்துளை அதனுள் இருக்கின்ற அனைத்தையும் வெளியேற்றுகிறது எனவே இதை வெளியேற்று வாயில் என வைத்துக் கொள்வோம். இதனை வைத்து கருந்துளையில் நுழைந்து வெண்துளையின் வழி வெளிவருவதன் மூலம் காலத்தையோ, தூரத்தையோ கடக்க முடிந்தால்? பால்வீதியில் உள்ள கருந்துளையில் நுழைந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலையில் அமைந்திருக்கும் வெண்துளையின் மூலம் வெளிவருவதால் தூரத்தையோ அல்லது இதே பால்வீதியில் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும் வெண்துளையில் இருந்து வெளிவருவதன் மூலம் நேரத்தையோ கடக்க முடிந்தால்? இந்த இடத்தில் நாம் கடப்பதற்கான ஆற்றலையும், பாதையையும் வார்ம் ஃஹோல் நமக்குத் தந்தால்? இவை அனைத்தும் அனுமானங்களே. வார்ம் ஃகோல் என்பது வெளியும்-நேரமும் கலந்த அமைப்பாக இருந்து வெவ்வேறு இரண்டு அண்டத்திலோ அல்லது நேரத்திலோ இருக்கும் கருந்துளை மற்றும் வெண்துளைக்கு பாலமாகச் செயல்படும். எனவே தான் அது பரவெளி 'அனுமான' இணைப்பு (Warm hole) என்று அழைக்கப்படுகிறது. இது மட்டும் சாத்தியமானால் நாம் மெட்ரோ ரயிலில் செல்வது போல் காலப்பயணம் செய்ய முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெண்துளையும், வார்ம் ஃகோலும் அனுமானமாக, கோட்பாடாக மட்டுமே உள்ளன. இன்னும் அவை இருப்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் தென்படவில்லை.

வெண்துளையும் பிங்பேங் தியரியும்:

எல்லா இடத்திலும் வெண்துளை என்பது வெறும் கோட்பாடு மட்டுமே. நிஜத்தில் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சொல்லப்பட்டு வந்தது. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க இதோ பிக்பேங் தியரி (இதுவும் அனுமானம் தான்). வெண்துளை என்பது கருந்துளை மேலும் சுருங்கமுடியாத நிலைக்குச் சென்றதும் வெடித்து உருவாவது என்று கூறப்பட்டது அல்லவா? பிக்பேங் தியரி என்பது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது இப்பேரண்டம். ஒருவேளை இப்பேரண்டமே ஒரு கருந்துளையால் ஈர்க்கப்பட்டு அது ஒரு கட்டத்திற்கு மேல் சுருங்க முடியாமல் வெண்துளையாக மாறி தன்னுள் ஈர்க்கப்பட்ட அனைத்தையும் வெளியேற்றியதையே நாம் பிக்பேங் என்று கூறுகிறோமோ? இது அனுமானமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருக்கிறதல்லவா?



இன்றுவரை வெண்துளை எங்காவது கண்டறியப்பட்டுள்ளதா?

2006 ஜூன் 14, நாசாவின் 'ஸ்விப்ட்' (Swift) செயற்கைக்கோள் ஒரு மிக வலிமையான சக்திவாய்ந்த காமா கதிர் வெடிப்பைப் பதிவு செய்கிறது. ஆனால் அது வந்த திசை அதிகமாக நட்சத்திரங்கள் இல்லாத ஒன்று. இது இதற்குமுன் கண்டறியப்பட்ட அல்லது நிகழ்ந்த எந்தவொரு நிகழ்வுடனும் ஒத்துப்போகவில்லை. இந்த நிகழ்வை 'ஜி.ஆர்.பி 060614' (GRB 060614) என்றழைக்கிறது நாசா. இதற்கு முன் பல காமா கதிர் வெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அவை எல்லாம் ஓரிண்டு நொடிகள் நிலைப்பதே அதிகம். ஆனால் இந்தக் காமா கதிர் வெடிப்பு 102 நொடிகள் வரை நிலைத்திருந்தது. அதோடு அதன் சக்தி நம் சூரியனை விட 'ட்ரில்லியன்' (Trillion) மடங்கு அதிகமாக இருந்தது. இது ஒரு சாதாரண நட்சத்திரப் பெருவெடிப்பால் இருந்து நிகழவில்லை. இது நாம் வெண்துளையினைப் பற்றிச் செய்து வைத்திருக்கும் அனுமானங்களோடு ஒத்துப் போகிறது. இது வெண்துளை இருக்கிறது என்று உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வலுசேர்க்கிறது.

வெண்துளையும், ஹாலிவுட்டும்

இருக்கா இல்லையானு நீங்க சண்ட போடுங்க, என வெண்துளையை தங்கள் படங்களில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் ஹாலிவுட்டார். இப்போது அல்ல 1980'களிலே. The Hitch Hiker's Guide to the Galaxy என்ற படத்தில் வேறு ஒரு உலகத்தில் வாழும் ஏலியன்கள். தங்கள் கிரகத்துக்கு அருகில் இருக்கும் வெண்துளையில் இருந்து வரும் பொருட்களை பயன்படுத்தியே தங்கள் உலகைக் கட்டமைக்கிறார்கள். Transformersல் கூட ஒரு எபிஸோடில் சில ட்ரான்ஸ்பார்மர் கேரக்டர்கள் கருந்துளையில் உள்ளே உள்ள ஒரு நெகடிவ் யுனிவர்சில் மாட்டிக் கொள்வார்கள். பின்னர், ஒரு வெண்துளையை கண்டறிந்து அதன் வழி மீண்டும் தங்கள் பழைய யுனிவர்சுக்கே வந்து சேர்வார்கள். 1979ல் வெளிவந்த The Black Hole என்ற படத்திலும் ஒரு 'ஸ்பேஸ் கிராஃப்ட்' கருந்துளையினால் உள்ளிழுக்கப்பட்டு வெண்துளையில் வழி வெளிவரும் ஆனால் அவர்கள் வேறொரு அண்டத்தில் இருப்பார்கள். இப்படி தங்கள் கற்பனைக் குதிரைகளை இஷ்டத்துக்குத் தட்டிவிட்டு படம் இயக்கியிருக்கின்றனர்.



வெறும் கோட்பாடுகளை வைத்து வெண்துளை இருக்கிறது என்று அடித்துக் கூற முடியாது, அதே நேரம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கருந்துளையும் ஒருநாள் கோட்பாடாகத்தான் இருந்தது. இன்று நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பல அறிவியல், மற்றும் புவியியல் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு காலத்தில் கோட்பாடாக இருந்தவைதான். அதை மறந்துவிட வேண்டாம்.
வாட்ஸ் அப்தான் காரணமா? திருவண்ணாமலை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?

இரா.கலைச் செல்வன்  vikatan 12.05.2018

"ம்மா... இங்க ரேணுகாம்பாள் கோயிலுக்குப் போற வழி எது?" காரிலிருந்தபடி அந்த டிரைவர் கேட்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். காரிலிருந்து 65 வயது அந்த அம்மா கீழே இறங்குகிறார்.

``ஏப்பா...மோகன்...மலேசியாவுலருந்து சாக்லேட் வாங்கிட்டு வந்திருந்தீங்களே. அத எடுப்பா, இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்..."

தன் பையிலிருந்த சாக்லேட்களை எடுத்துக் கொடுக்கிறார் மோகன். அதை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கப் போகிறார் அந்த அம்மா. அவ்வளவுதான்.

``ஐயோ...குழந்தைங்கள கடத்துற கும்பல் வந்திருக்கு. எல்லோரும் ஓடிவாங்க...``அந்த ஊரிலிருந்த ஒரு பெண், பெரும் குரலெடுத்துக் கத்துகிறார்.



அதன்பின்னர் அங்கு நடந்த அத்தனையுமே அராஜகம்...அநியாயம்...அபத்தம்... ஆபத்து... அசிங்கம்... அநீதி... கும்பலாக ஓடி வந்தவர்களில் ஒருவர் கூட...இவர்களை யார்? என்ன? என்பது குறித்து எதையுமே விசாரிக்கவில்லை. இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கினர்.

அவர்களிடமிருந்து தப்பி, காரை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவர்களைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் அடித்து, உதைத்து கடைசியில்... 65 வயதான ருக்மணியைக் கொன்றே விட்டார்கள்.

இதைச் செய்தவர்கள் யாரும் அதிகார பலம் கொண்டவர்கள் கிடையாது. இவர்கள் யாரும் ரவுடிகளோ, கூலிப்படையோ கிடையாது. சாதாரணமான மக்கள்.

சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணியும், மலேசியாவிலிருந்து வந்திருந்த அவரின் உறவினர்களும் திருவண்ணாமலை மாவட்டத்தின் அத்திமூர் கிராம மக்களால் மிகக் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகினர். அதில் ருக்மணி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற நால்வரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் நடந்த பல சம்பவங்களில் இதுவும் ஒன்று அவ்வளவே. ஆனால், நல்லவேளையாக இந்தச் சம்பவம்தான் இன்று தமிழகத்தையே இந்தப் பிரச்னை பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.



இந்தப் பிரச்னைகளுக்கான ஆரம்பமாக பெரும்பாலானவர்கள் கைகாட்டுவது "வாட்ஸ் அப்". கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்படி ஒரு வாட்ஸ் அப் செய்தி பரவி வந்தது...

``வட இந்தியாவிலிருந்து ஒரு கும்பல் தமிழகத்திற்கு வந்துள்ளது. அவர்கள் குறிப்பாக வட தமிழ்நாட்டிலிருந்து பல குழந்தைகளைக் கடத்திக்கொண்டு போகப் போகிறார்கள்."

இது கன்னாபின்னாவென்று பகிரப்பட்டது. உச்சமாக, தவறான தகவல்களை அடிப்படையாக வைத்து உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டார் செய்யாறு பகுதி இளைஞர் ஒருவர். (அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்).

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடதமிழகத்தில் இது போன்ற 15 க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பல பேர் கொலை செய்யவும் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும்.

ஆம்பூர் பக்கத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து, அடி பின்னியெடுத்தது ஒரு கும்பல். வலிப்பது கூட தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். குடியாத்தம் அருகே தவறாக ரயில் நிலையத்தில் இறங்குகிறார் ஒரு வடமாநிலத்தவர். மொழி தெரியாமல், இடம் புரியாமல் வழி கேட்க கிராமத்திற்குள் நடக்கிறார். தாகமாக இருக்க... ஒரு வீட்டில் தண்ணீர் கேட்கிறார். அவ்வளவுதான் அடித்தே கொலை செய்யப்படுகிறார்.

இப்படியாக பல சம்பவங்கள். பல மரணங்கள்.



ருக்மணி

இதில் யார் மேல் தவறு? யார் செய்தது குற்றம்? யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இறந்தவர்களோ, இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களோ எந்தத் தவற்றையும் செய்திடவில்லை என்பது மட்டும் உண்மை.

கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தோமானால் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் இருக்கும் மனோநிலையை அறிந்துகொள்ளலாம்.

இது ஒரு "Mob Lynching Psychology". அதாவது, மக்கள் ஒன்றுகூடி ஒரு கொலையை நிகழ்த்தும் மனோநிலை. உலகின் மிக முக்கிய உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃப்ராய்டு (Sigmund Freud) இதை ஒரு ``மந்தை மனநிலை" (Herd Beahiour) என்று குறிப்பிடுகிறார். இது போன்ற சம்பவங்களில் மக்கள் மந்தைகளாகக் கூடும்போது "உக்கிரமான பைத்தியங்களாக" மாறிவிடுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார் ஃப்ராய்டு.

இது போன்ற சம்பவங்களில் நாம் பலரின் உளவியலையும் அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு செய்தி. பொய்யான செய்தி...மக்களின் உணர்வுகளை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பரப்பப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ``குழந்தைகள் கடத்தப்படும்" என்பது. இந்தச் செய்தி அவர்களுக்கு ஒரு வித பயத்தை, பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சந்தேகிக்கும் மனப்பான்மையை அதிகரிக்கச் செய்கிறது. தவறான முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது.

அந்தத் தவறான முன்முடிவுகள் அவர்களுக்கு ஓர் எளிய இலக்கைக் (Easy Target) காட்டுகிறது. வலிமையற்ற அந்த இலக்கைத் தாக்க தயாராகிறார்கள். கூட்டம் கொடுக்கும் தைரியத்தில் முதலாமவன் தன் கையை ஓங்குகிறான். அவனோடு சேர்ந்து முதல் குழு தாக்குதலைத் தொடங்குகிறது. அங்கு எழும் அந்த உணர்ச்சிப் பேரலை...மக்களை ஃபிராய்டு சொன்னபடி மந்தைக் கூட்டமாக மாற்றுகிறது. மந்தை மனநிலைக்கு மக்கள் மாறுகிறார்கள். இவனை அடித்தால் நமக்கு எந்தப் பாதகமும் இல்லை என்பதை உணர, உணர அங்கு வேகம் கூடுகிறது.



ஒரு கட்டத்தில் அந்த வேகம், அவனைக் கொல்வது ஒன்றே முக்கியம் என்ற மனநிலையை எட்டவைக்கிறது. எல்லாவித நியாய, தர்ம கோட்பாடுகளையும் கடந்து... அவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற ஒற்றை மனநிலை ஏற்படுகிறது. இதை உளவியலாளர்கள் ``Feline Instinct" என்று சொல்கிறார்கள். அதாவது ஒரு புலியோ, சிங்கமோ வேட்டையாடும் போது ... தன் இரை ஒன்றை மட்டுமே இலக்காக வைத்திருக்கும். சுற்றியிருக்கும் வேறு எந்தச் சூழலும் அதை பாதிக்காது. அப்படியான ஒரு நிலைக்கு மக்கள் எட்டுகிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் இந்தத் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு... ஒரு கொலையே செய்துவிட்ட பின்னரும் கூட எந்தக் குற்ற உணர்ச்சியும் எழாது. தங்கள் செயலை நியாயப்படுத்தும் கற்பிதங்களை அவர்களுக்கு அவர்களே சொல்லிக் கொள்வார்கள்.

அடுத்ததாகப் பாதிக்கப்படும் நபர்களுடைய மனநிலை. முதல் அடி வாங்கும் போதே அவர்கள் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகிவிடுவார்கள். அதிகபட்சமாக முதல் அடி அடிப்பவனுடைய முகம் மட்டும் அவர்கள் மனதில் பதியலாம். மற்றபடி வேறு எந்த விஷயமும் அவர்களால் உணர முடியாது, வலியைத் தவிர. அந்தச் சமயத்தில், அந்த வலியிலிருந்து தப்ப அவர்கள் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள். கைகள் இரண்டையும் குவித்து மன்னிப்புக் கேட்கும் வகையில், தன்னிச்சையாக அவர்கள் கைகள் நகரும்.

அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிராக இந்த ``Mob Lynching" ஒரு காலத்தில் மிக அதிகமாக இருந்தன. 1877 லிருந்து 1950 வரையிலான காலகட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கறுப்பினத்தவர் மற்ற இனத்தவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இது அல்லாமல், அந்தக் கூட்டத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், அதே சமயம் இதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா, தடுப்பதா என்று எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தோடு நின்று பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
இப்படியாக அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள்.

மக்களின் மனநிலை குறித்தும், உளவியல் குறித்தும் இன்னும் இன்னும் கூட பேசலாம்தான். எனில், இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் அரசு இயந்திரங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா? என்று கேட்டால்... நிச்சயம் இருக்கிறது. அவர்கள்தாம் இதைத் தடுத்திருக்க வேண்டும்.

கடந்த ஒரு மாத காலமாகவே வாட்ஸ் அப்பில் இது மாதிரியான பொய் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த உடனேயே, காவல்துறை ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு பிரசாரங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை... ``சாமி பேர்ல... முதல்வர் பழனிசாமி பேர்ல அர்ச்சனை பண்ணுங்க" என்பது போன்ற காவிய விளம்பரங்களில் மூழ்கியிருந்ததால் இந்த விழிப்புஉணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க நேரமில்லாமல் போய்விட்டதோ என்னவோ?!

ஒரு மாதத்தில் 15ற்கும் அதிகமான சம்பவங்கள், பல கொலைகள் நடந்த பின்னர், இப்போது தெருத்தெருவாக மைக்கைப் பிடித்துக் கொண்டு விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் காவல்துறை இதை முன்னரே செய்திருக்க வேண்டும்.

ஆனால், எல்லாம் முடிந்து இதையெல்லாம் பேசி இப்போது என்ன பயன்?



இதை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை ருக்மணி கொல்லப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

அவர் கொடுத்த சாக்லேட்டை குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கி ருசித்திருப்பார்கள். யாராவது ருக்மணிக்கு கோயிலுக்கான வழியைச் சொல்லியிருப்பார்கள். நல்லபடியாக தரிசனத்தை முடித்திருப்பார்கள். உறவினர்கள் திருப்தியாக மலேசியா கிளம்பிப் போயிருப்பார்கள். இந்நேரம் ருக்மணி சிரித்துப் பேசி மகிழ்ச்சியோடு இருந்திருப்பார்.

ஆனால், ருக்மணி இப்போது உயிரோடு இல்லை!!!
அதிரடி ஆஃபரால் குவிந்த கூட்டம்; தடியடி மூலம் விரட்டிய போலீஸார்..!

நவீன் இளங்கோவன் ரமேஷ் கந்தசாமி  vikatan 13.05.2018

Erode:

ஈரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடை ஒன்று வெளியிட்ட அதிரடி தள்ளுபடியால், ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

ஈரோடு பிரப் சாலையில், பெரிய மாரியம்மன் கோவில் எதிரில் ஆண்களுக்கான ஒரு பிரத்தியேக புதிய துணிக்கடை நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக டி-சர்ட் 30 ரூபாய்க்கும், சர்ட் 99 ரூபாய்க்கும் பேன்ட் 149 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவித்தனர். இந்தச் சிறப்பு ஆஃபர் குறித்து ஈரோடு நகர் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள், லோக்கல் சேனல்களில் விளம்பரங்கள் மற்றும் செய்தித்தாள்களில் கால்பக்க விளம்பரங்கள் எனத் துணிக்கடை நிர்வாகம் பயங்கரமாக விளம்பரம் செய்திருந்தனர். அதனையடுத்து, இன்று காலை முதலே கடையின் முன்பு கூட்டம் குவியத் தொடங்கியது. நேரம் ஆக ஆக பிரப் சாலையில் வாகனங்கள் கடக்க முடியாத அளவிற்கு, அந்தத் துணிக்கடையின் முன்பு கூட்டம் களைக்கட்டியது.



மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், துணிக்கடை நிர்வாகத்தினர் அவர்களுடைய ஆட்களைக் கடையின் முன்பு நிறுத்தி வைத்து பத்து பத்து ஆட்களாகக் கடையினுள் அனுப்பி வைக்கும் திட்டத்தை கையிலெடுத்தனர். ஆனால், ’உள்ள விடுங்கய்யா...’ என மக்கள் முண்டியடித்து கடையினுள் நுழைய முயற்சிக்க, துணிக்கடை நிர்வாகத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் கடையினுடைய ஷட்டரை இழுத்துப் பூட்டினர். இந்தத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த 10-க்கும் மேற்பட்ட போலீஸார்கள், கடையின் முன்பு கூடியிருந்த கூட்டத்தை நோக்கி லத்தியைச் சுழற்ற ஆரம்பித்தனர். போலீஸாரின் தடியடிக்குப் பயந்த பொதுமக்கள் மற்றும் இளசுகள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.



இருந்தும் கடையை இன்னும் கொஞ்ச நேரத்தில் திறந்துவிடுவார்கள் என ஒரு கூட்டம் அந்தக் கடையைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இதனைப் பார்த்த போலீஸார், ஒரு பெரிய பூட்டை எடுத்து கடையைப் பூட்டி அதற்கு முன் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்தார்கள். அதன்பிறகு தான் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

ஒரு துணிக்கடையை பாதுகாக்க இத்தனை போலீஸா என சாலையைக் கடந்தவர்கள், நக்கலாக சிரித்துச் சென்றனர்.
`தம்பிதுரை நிகழ்ச்சிக்குள் புகுந்த 6 அடி நீளப் பாம்பு' - பதறிய மக்கள்!

துரை.வேம்பையன்

RAJAMURUGAN N   vikatan

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 6 அடி நீளப் பாம்பு புகுந்ததால், பொதுமக்கள் பதறிப் போனார்கள்.



கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை மாரியம்மன் கோயில் அருகில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெறும் விதமாக 'மக்களைத் தேடி' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஆயத்தமான நிலையில், குறைந்த அளவு மக்களே வந்திருந்தனர். இதனால், டென்ஷனில் இருந்த அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் மேலும் டென்ஷனாக்கியது அங்கே வந்த 6 அடி நீளப் பாம்பு ஒன்று.

நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தை நோக்கி வந்த அந்தப் பாம்பைப் பார்த்த ஒரு அதிகாரி அண்ணாமலை படத்தில் ரஜினி சொல்வதைப்போல 'பா...பா..' எனப் பதற அங்கே வந்திருந்த ஒரு சில மக்களும், மற்ற அதிகாரிகளும் அதைப் பார்த்துவிட்டு `பாம்பு' என்றபடி அலறி ஓடினர். விஷயம் தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள், அந்தப் பாம்பு இரண்டு ரவுண்டுகள் அடித்துவிட்டு, அருகில் ஓடிய சாக்கடைக்குள் புகுந்துவிட்டது. 6 அடி பாம்பு என்பதால், மக்கள் அனைவரும் பதறி போனார்கள். அங்கே வந்த தீயணைப்புத்துறையினர், சாக்கடைக்குள் புகுந்த பாம்பைச் சல்லடை போட்டுத் தேடினர். குச்சிகளை வைத்துக் குத்திப் பார்த்தனர்; பிரத்யேகக் கிடுக்கியை வைத்து, துழாவிப் பார்த்தனர்.





ஆரம்பத்தில், அவர்களின் கைகளில் சிக்காமல் டிமிக்கி கொடுத்தது அந்த 6 அடி பாம்பு. இருந்தாலும் தீயணைப்புத் துறையினரின் விடாமுயற்சிக்குப் பரிசாக சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு அவர்கள் வசம் சிக்கியது. அதன் பிறகே, அந்தப் பாம்பு எந்தவித அபாயமும் இல்லாத சாரை பாம்பு என்பது தெரியவந்தது. பாம்பு பிடிபட்ட பின்னர்தான் அதிகாரிகளும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதன்பின்னர் தான் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வசம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்துவிட்டு,அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
மலேசியாவில் மீண்டும் மகாதீர் முகமது... ஒரு ரியல் 'கபாலி'யின் கதை!

ச.அ.ராஜ்குமார்
14.05.2018  vikatan



15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனக்கு பரிச்சயமான இடத்தில் வந்து அமர்கிறார் 92 வயது மகாதீர் முகமது. மலேசியாவின் புதிய பிரதமராக அமர இருக்கும் இவருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான மலேசிய அரசு சிக்கியதால் எதிர்க்கட்சியுடன் கூட்டணி மேற்கொண்டு, ஆட்சியில் இருந்த பரிசன் தேசிய கூட்டணியை வீழ்த்தியுளார் மகாதீர்.

இதன்மூலம் 60 ஆண்டு காலமாக பாரிசன் தேசிய கூட்டணி நடத்தி வந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்படும் முதல் ஆட்சி மாற்றம் இது. 'தனது பலத்தை அறிந்து வைப்பதைவிட எதிரியின் பலவீனத்தை நன்கு அறிந்தால் வெற்றி உறுதி' என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக மகதிர் கூட்டணி விளங்கியுள்ளது. நஜீப் ரசாக்கின் கடந்த ஆட்சியில், 4700 ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடந்துள்ளதாக வந்த குற்றச்சாட்டுதான் மகாதீர் ஆட்சியமைக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

மகாதீர் முகமதுக்கு எதிராக பா.தே. கூட்டணியில் வேட்பாளராக இருந்தது நஜீப் ரசாக். ஆனால், ரசாக்கின் அரசியல் குருவாக விளங்கியவர் மகாதீர். எனவே, இந்தத் தேர்தலை அரசியலையும் விட தன்மானப் பிரச்னையாகவும் பார்க்கப்பட்டது. தடைகளைத் தாண்டி மகாதீர் வெற்றிபெற்றதன் மூலம் நஜீப் ரசாக் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இத்தனைக்கும் தனது வயது முதிர்வு காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகியவர் மகாதீர். கட்டுக்கோப்பான அவரது ஆட்சிக்கு மலேசிய மக்கள் அத்தனை ஆதரவை அளித்திருந்தார்கள்.

பொதுவாக 92 வயது நிரம்பிய ஒருவர், தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடும் உடல்நிலையில் இருந்தாலே அரிதாக பார்க்கப்படும். ஆனால், 92 வயதில் தனது நாட்டில் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் மகாதீர். இவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, கூட்டணி கட்சிகளுடன் இவர் மேற்கொண்ட ஒப்பந்தம்தான். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தான் பிரதமராக இருப்பேன் என்று அவர் செய்த ஒப்பந்தத்தைக் கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டன.



1981 முதல் 2003-ம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக இருந்தவர் மகாதீர். தெற்காசிய நாடுகளில் மலேசியாவை பொருளாதார ரீதியில் முன்னேற்றியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் ஆட்சியமைப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரத்திற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய மலாய் நாடுகள் அமைப்பின் முதன்மை உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பின்னர், ஏற்பட்ட மலேசிய - சீன கலவரத்தில், மலேசியாவின் முதல் பிரதமர் அப்துல் ரஹ்மானை விமர்சித்ததால் அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் 1970-ல் கட்சியில் சேர்ந்து 1981-ல் அக்கட்சியின் தலைவரானார். தனது காட்டமான நடவடிக்கைக்கு பெயர் போன மகாதீர், தனது துணைப் பிரதமரைக்கூட பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்.

வயாதானபின்னரும் முன்பு செய்த ஆட்சியைப்போல தற்போதும் அவரால் ஆட்சிபுரிய முடியுமா என்று சிலர் சந்தேகித்தாலும், 92 என்பது வெறும் வயது மட்டுமே, எனது உடல் வலிமையையும் மன வலிமையையும் அது பிரதிபலிக்கவில்லை என்கிறார் மகதிர். 'பதவியில் இருந்து விலகி 14 ஆண்டுகள் ஆனாலும் தினமும் அவர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்' என்கின்றனர் கட்சி அலுவலகத்தினர்.

மகாதீரின் இந்த வாழ்க்கை உலக மக்களுக்கு புதிதாக இருந்தாலும் தமிழக மக்களுக்கு சற்று கேள்விப்பட்ட கதையாகவேத் தோன்றும். 'கபாலி' படத்தில் ரஜினி கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் மகாதீருடன் ஒத்துப்போகிறது. சிறுவயதில் கட்சியில் சேர்ந்து நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக புரட்சி செய்து, பின்னர் மக்களின் செல்வனாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, மீண்டும் வயதான காலத்தில் ஸ்டைலாக, கெத்தாக ரீ-என்ட்ரி குடுத்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளார் மகாதீர்.




'90 வயதிற்கு மேல் ஒருவர் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.. பெரிதாக என்ன செய்துவிடப்போகிறார்' என்ற தொனியில் ஏச்சுகள் வந்துகொண்டிருந்த நேரத்தில், 4700 ஆயிரம் கோடி ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்திருக்கிறது மகாதீர் தலைமையிலான மலேசிய அரசு.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...