Monday, May 14, 2018

பதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு 

dinamalar 14.05.2018

'பணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அவற்றால் ஏற்பட்ட கூடுதல் செலவை, அவர்களிடமிருந்து திரும்ப வசூலிக்க வேண்டும்' என, நிதித்துறை உத்தரவிட்டு உள்ளது.

41 நிறுவனங்கள் :

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ், 74 பொதுத்துறை நிறுவனங்கள், கம்பெனிகள் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தற்போதைய நிலவரப்படி, 68 பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், 41 நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம், 2.91 லட்சம் பேர் பணியாளர்களாக உள்ளனர்.

இவர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இருப்பினும், பல நிறுவனங்களில், நிர்வாக நிலையில் நடக்கும் முறைகேடுகளால், சில அதிகாரிகளுக்கு, விதிகளை மீறி, கூடுதல் ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள் :

இதனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படுகிறது. இந்த முறைகேடுகளை சரி செய்யவும், மக்களின் வரி பணம் முறையாக செலவிடப்படுவதை உறுதி செய்யவும், சில நடவடிக்கைகளை எடுக்க, நிதித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, நிதித்துறையின் செலவுகள் பிரிவு செயலர், எம்.ஏ.சித்திக் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:
* பொதுத்துறை நிறுவனங்களில், அதிகாரிகளின் ஊதியம், பதவி உயர்வால் ஏற்பட்ட செலவு வகையில், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணியாளர் ஊதியம் என்ற வகையில் செலவிடப்பட்ட, கூடுதல் தொகைகளை திரும்ப வசூலிக்க வேண்டும்

* தவறுதலாக வழங்கப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இதற்கான நிர்வாக ஒப்புதல்களை ஆராய்ந்து, ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அளித்து. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* இந்த உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்காத, மறுக்கும் அதிகாரிகள் மீது, நிர்வாக மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

* இந்த விவகாரத்தில் சிக்கியோரை காப்பாற்றும் நோக்கில், அவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக குழுக்கள், சலுகை வழங்க கூடாது. நிர்வாக குழுக்களின் அடுத்த கூட்டத்தில், இந்த உத்தரவை தாக்கல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 25 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் : நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற தேவஸ்தானம் வேண்டுகோள்

2018-05-14@ 00:58:35



திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட நேரத்தில் கோயிலுக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் நேரம் ஒதுக்கீடு திட்டம்’’ கடந்த 2ம்தேதி முதல் முழு அளவில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 88 ஆயிரத்து 102 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை காண்பித்து டிக்கெட் பெற்ற 16 ஆயிரத்து 844 பக்தர்கள் 2மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால், தரிசனத்திற்கு 25 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். ரூ.300 மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் நேற்றுமுன்தினம் இரவு தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோயில் எதிரிலும் வெட்ட வெளியிலும் படுத்து உறங்கினர். எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்காமல் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
லாலு மகன் திருமணத்தில் சர்ச்சையை கிளப்பிய, 'பேனர்'

Added : மே 14, 2018 00:47 



பாட்னா : பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் மகன் திருமணத்தில் வைக்கப்பட்ட சிவன் - பார்வதி, 'பேனர்' கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

பரபரப்பு:

லாலு பிரசாத் மகன், தேஜ் பிரதாப் யாதவுக்கும், பீஹார், எம்.எல்.ஏ., சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பீஹாரில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உட்பட, பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த திருமணத்தை முன்னிட்டு, லாலு பிரசாத் வீட்டு வாசலில் வைக்கப்பட்ட பேனர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மணமகன் தேஜ் பிரதாப், சிவன் வேடத்திலும், மணமகள் ஐஸ்வர்யா ராய், பார்வதி வேடத்திலும் நிற்கின்றனர். அவர்களின் காலருகே அமர்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தள இளைஞர் அணி துணை தலைவர், பீம்லேஷ் யாதவ், சிவலிங்கத்துக்கு பூஜை செவது போல், பேனர் வைக்கப்பட்டு உள்ளது.

கண்டனம் :

அதில், மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேனரை வைத்த, பீம்லேஷின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் தொடர்பாக, சமூக வலைதளங்களில், கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. லாலு மகனை, சிவனை போல சித்தரித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மாசில்லா ராஜபாளையம் தேனீ வளர்ப்பிற்கு உதவும் விவசாயி

Added : மே 14, 2018 02:27

ரசாயன உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் மாற்றுமுறை விவசாயத்தில் விளைநிலங்களில் ஊடுபயிரிடுதல், அகத்தி மரம் வளர்த்தல் போன்றவற்றுடன் தற்போது தேனீ வளர்ப்பும் சேர்ந்து உள்ளது. இதன் மூலம் வருமானம் கிடைப்பதால், விவசாயிகளிடையே ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.பூக்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டால் தான் காய், கனி என விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். இந்த சேர்க்கைக்கு துணையாக இருக்கும் தேனீக்களை பெட்டிகள் மூலம் தோட்டத்தில் வளர்க்கின்றனர். இதன் மூலம் விளைபொருள் உற்பத்தி அதிகமாகும். தேன் கிடைக்கும். தோட்டத்தில் தேனீ வளர்ப்பு பெட்டி வைக்க ராஜபாளையம் வேலாயுதராஜா, பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உதவுகிறார்.வேலாயுதராஜா கூறுகையில், ''ஆர்வமுள்ள விவசாயிகளின் தோப்புகளில் தேனீ வளர்ப்பு பெட்டி அமைத்து தேன் சேகரித்து வருகிறேன். இதன் மூலம் விவசாயிகளுக்குவிளைச்சல் அதிகரிப்பதோடு, ரசாயன உரங்களின் பயன்பாடும் குறைகிறது.அயல்மகரந்த சேர்க்கையை அதிகரித்து காய்ப்புத்தன்மையை பெருக்கும் இம்முறையின் பலன்கள் தெரிந்ததும், பலர் தேனீ வளர்ப்பு பெட்டி அமைக்கின்றனர்'' என்றார். இவரிடம் 91595 22114 என்ற அலைபேசி எண்ணில் ஆலோசனை பெறலாம்.ரமேஷ், இயற்கை விவசாயி, ராஜபாளையம்: நிலத்தை பண்படுத்தும்முறை முதல் உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் ரசாயன உரங்கள் வரை, மண்ணின் தன்மையை மாற்றி விடுகின்றன. இது வரும் தலைமுறைக்கு உடலளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதிகவிளைச்சலுக்காக விவசாயிகள் ரசாயன உரம் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்றாக குறைந்த செலவில் தேனீ வளர்ப்பு முறையை தொடர வேண்டும்.
ஏழுமலையான் தரிசனம் : 25 மணி நேரம் காத்திருப்பு

Added : மே 14, 2018 02:30

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் நேற்று, 25 மணி நேரம் காத்திருந்தனர். கோடை விடுமுறையை தொடர்ந்து, ஆந்திராவில், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து, ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள், 25 மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்களின் வருகைக்கு தக்கபடி, தேவஸ்தானம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான, பவன் கல்யாண், நேற்று முன்தினம் இரவு, பாத யாத்திரையாக திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, சாதாரண பக்தர்களை போல், வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக சென்று, 300 ரூபாய் விரைவு தரிசனத்தில், ஏழுமலையானை தரிசித்தார்.சுவாமி தரிசனம் செய்த பின், பவன் கல்யாண் கூறுகையில், ''மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையை அருள வேண்டும் என, வேண்டிக் கொண்டேன். கோவிலையும், அதன் சுற்றுப்புறங்களையும் துாய்மையாக வைத்துக் கொள்வது அனைவரின் கடமை. திருமலையில் அரசியல் பேச விரும்பவில்லை,'' என்றார்.
தெற்கு ரெயில்வே அறிவிப்பு: கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும்



கொல்லம் தாம்பரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மே 14, 2018, 04:00 AM

விருதுநகர்,

தற்போது கொல்லம்– தாம்பரம் இடையே வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்தும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்தும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுகிறது.

இந்த ரெயிலை தினசரி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து வேளாங்கண்ணிக்கு கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து புனலூர் வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லைவரை நீட்டிக்கப்படும். கொல்லத்திலிருந்து தூத்துக்குடி வரை பயணிகள் ரெயில் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

கொல்லம்–தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி ரெயிலாக இயக்கப்படும் என அறிவித்துள்ள தெற்கு ரெயில்வே அதற்கான தேதி பற்றி குறிப்பிடவில்லை. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 27–ந்தேதி முதல் நெல்லை–தாம்பரம் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என அறிவித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம் தொழில்நுட்ப காரணங்களால் அதனை திடீரென ரத்து செய்வதாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள ரெயில்கள் எந்த தேதியிலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பதுடன் அதற்கான கால அட்டவணையையும் ரெயில்வே நிர்வாகம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் தற்போது அறிவித்துள்ளபடி இந்த ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வழக்கம்போல் இவற்றையும் ரத்து செய்துவிட கூடாது என வலியுற்த்தப்பட்டுள்ளது.
கோடை விழா- மலர் கண்காட்சி: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்



ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழா- மலர் கண்காட்சியை காண நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மே 14, 2018, 04:15 AM ஏற்காடு,

சேலம் மாவட்டத்தில் ‘ஏழைகளின் ஊட்டி‘ என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கோடை காலத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். மேலும் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு 43-வது கோடைவிழா-மலர் கண்காட்சி நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த கோடை விழாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஏற்காடு அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட பல வகையான வண்ண, வண்ண பூக்களுடன் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு மலர்களால் விமானம், தலைமை செயலகம், கிரிக்கெட் வீரர், டிராக்டர், நடன மங்கை மற்றும் கார்ட்டூன் உருவங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர காய்கறிகளால் மயில், பிள்ளையார், மீன், தெர்மாகோலில் அன்னபூரணி, பாதுகாவலர், பேரீட்சம்பழத்தில் டிராகன், வெண்ணையால் முயல், குரங்கு, நாய் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டிருந்தது மிகவும் அழகாக இருந்தது. அண்ணா பூங்காவை நேற்று முன்தினமும் ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர்.

இந்த நிலையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் 2-வது நாளான நேற்று ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்காவிற்குள் சென்று அங்கு வண்ண பூக்களையும், அதன் மூலம் வடிவமைக்கப்பட்ட உருவங்களையும் பார்த்து ரசித்தனர். குறிப்பாக வண்ண பூக்கள் அருகேயும், உருவங்கள் முன்பும் குடும்பத்தினருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். இதனால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அதிகமாக சுங்க கட்டணம் வசூலிப்பதாக கூறி வாகன ஓட்டிகள் பலர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மலைப்பாதையில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் பலர் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் பலர் ஏற்காடு படகு முகாமிற்கு சென்றனர். அங்கு குடும்பத்தினருடன் படகில் ஜாலியாக சவாரி செய்தனர். இதனால் அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுதவிர மான் பூங்கா, பக்கோடா பாயின்ட், சேர்வராயன்ஸ் மலைக்கோவில், தலைச்சோலை, கிளியூர் வீழ்ச்சி, ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடீஸ் பாயிண்ட் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து வாகன ஓட்டிகளை அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காட்டிற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோடை விழாவையொட்டி ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.8½ லட்சம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்திற்கு டிக்கெட் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ.15-ம், பெரியவர்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்பட்டன. மான் பூங்காவில் சிறுவர்களுக்கு ரூ.5-ம், பெரியவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 16-ந் தேதி நிறைவு பெறுகிறது.

NEWS TODAY 24.4 2026