Wednesday, May 16, 2018

முதுநிலை மருத்துவம் : நாளை இறுதி கவுன்சிலிங்

Added : மே 15, 2018 22:37

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான, அகில இந்திய கவுன்சிலிங் நாளை நடக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள, முதுநிலை மருத்துவ இடங்களுக்கானகான கவுன்சிலிங், மார்ச், 27ல் துவங்கியது. இரண்டு கட்டங்களாக கவுன்சிலிங் நடந்தது. இதில், நிரம்பாத இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்பின.இந்நிலையில், சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங், 'ஆன்லைன்' வழியே, நாளை நடக்க உள்ளது.

இதற்கான முடிவுகள், நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இதில் நிரம்பாத இடங்கள், கல்லுாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.
அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாம் : 'இ- சேவை' மையங்களுக்கு அலைய வேண்டாம்

Added : மே 15, 2018 22:24

அரசின், 'இ - சேவை' மையங்களுக்கு செல்லாமல், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, அரசின் சேவைகளை பெறும் வசதி, விரைவில் நடைமுறைக்கு வருகிறது.மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பொதுமக்கள் பெற வசதியாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' வழியாக, இ - சேவை மையத்தை செயல்படுத்தி வருகிறது.
4.6 கோடி சேவைகள் : கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் மையங்கள் என, மொத்தம், 10 ஆயிரத்து, 420 சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்கள் வழியாக, 2017 - 18ல், 1.05 கோடி உட்பட, நான்கு ஆண்டுகளில், 4.6 கோடி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்கள், இ-சேவை மையங்களுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே, அரசு சேவைகளை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, அரசு கேபிள் 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசின் சேவைகளாக, வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உட்பட, 114 சேவைகள். மேலும், மத்திய அரசின் சேவைகளான, பாஸ்போர்ட் விண்ணப்பம், 'ஆதார்' சேவை போன்ற, 95 சேவைகள் என, மொத்தம், 209 சேவைகள், அரசு, இ - சேவை மையங்கள் வழியாக வழங்கப்படுகின்றன. இனி, பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, அரசின் இந்த சேவைகளை பெற முடியும்.இதற்காக, திறந்தவெளி, 'போர்டல்' உருவாக்கப்படு கிறது. அரசு இ - சேவை இணையதளப் பக்கத்தில், 'குடிமக்கள் நுழைவு எண்' பதிவு செய்ததும், மொபைல் போனுக்கு, ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் வரும்.
முதற்கட்டம் : அதன் வழியாக, தங்களுக்கு தேவையான அரசு சேவைகளை பெற முடியும். முதற்கட்டமாக, வருவாய் மற்றும் சமூக நலத்துறை சேவைகளை மட்டுமே பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக, இதர துறைகளின் சேவைகளை பொதுமக்கள் பெறலாம். இந்த திட்டம், விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
'ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் அவசியம் இல்லை'

Added : மே 15, 2018 22:54

புதுடில்லி: ''மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.தன்னார்வ ஏஜன்சிகளுக்கான நிலைக்குழு கூட்டத்தில், அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஜிதேந்திர சிங் நேற்று பேசியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அவசியம் கிடையாது. உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, வங்கிகளை அணுகாமல் சமர்ப்பிப்பதற்கான தொழில் நுட்பத்தை செயல்படுத்த, ஆதார், கூடுதல் அம்சமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆதார் இல்லாததால், சில ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெறுவதில் சிரமம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அமைச்சரின் பதில், முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.
நானே அடுத்த முதல்வர்: எடியூரப்பா - குமாரசாமியே அடுத்த முதல்வர்: சித்தராமையா

Added : மே 16, 2018 02:30 | 




 
பெங்களூரு: சட்டசபை கட்சி தலைவராக இன்று நான் தேர்வாகிறேன் என பா.ஜ. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறினார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பா.ஜ. 104 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கவர்னர் 7 நாள் கெடு விதித்துள்ளார்.இது குறித்து எடியூரப்பா கூறியது, இன்று பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்நடக்கிறது. இதில் நான் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளேன். பின்னர் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்துவேன். இனி கவர்னரின் முடிவுபடியே செயல்படுவோம். நிச்சயம் முதல்வராக பொறுப்பு ஏற்பேன் என்றார்.

குமாரசாமியே முதல்வர் : சித்தராமையா

இதற்கிடையே மத சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஆதரவு அளித்து குமாரசாமியை முதல்வராக்க தயார் என காங். அறிவித்தது. நேற்றுநடந்த ஓட்டு எண்ணிக்கையில் காங். 78 இடங்களில் வெற்றிபெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களில் வெற்றிபெற்றது. இது குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியது, மதசார்பாற்ற ஜனதா தள கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்துவோம். முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்பார். எங்களுக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது என்றார்..
விலை உயர்வால் செங்கலுக்கு மாற்றாக மானாமதுரையில் தயாரிக்கப்படும் பிளைஆஷ் கற்கள்



செங்கல் விலை உயர்வால், அதற்கு மாற்றாகவும், விலையை சமாளிக்கும் வகையிலும் மானாமதுரையில் தற்போது பிளைஆஷ் கற்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மே 14, 2018, 03:30 AM

மானாமதுரை,

மண்பானை தயாரிப்பதற்கு பெயர் பெற்ற நகரமாக மானாமதுரை திகழ்ந்து வருகிறது. இதுதவிர தற்போது கட்டுமான பணிகளுக்கும் முக்கியத்துவமாக இந்நகரம் திகழ்கிறது. இங்குள்ள செங்கல் சேம்பரில் செங்கலுக்கு மாற்றாக பிளைஆஷ் கற்கள் தயாரிப்பு தற்போது அதிகரித்துள்ளது. தற்போது கட்டுமான தொழிலில் செங்கல் விலை அதிகரித்து வருவதால் மக்கள் செங்கலுக்கு பதிலாக பிளைஆஷ் கற்களுக்கு மாறி வருகின்றனர். மானாமதுரையில் 30–க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது மணல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் செங்கல் உற்பத்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் அதற்கு மாற்றாக உற்பத்தி செலவு குறைந்த பிளைஆஷ் கற்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த கற்கள் தயாரிப்பின் போது நிலக்கரி சாம்பல் மற்றும் கிரசர் பொடி போன்ற கழிவுகள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும், இந்த கற்களால் கட்டப்படும் கட்டிடங்கள் கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்புடனும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறுகிறது.

செங்கலுடன் இந்த கல்லை ஒப்பிடும்போது அதன் விலை மற்றும் எடையும் குறைவு. இந்த கல்லை கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் போது அதற்கேற்ப சிமெண்டு தேவையும் மிக குறைவாக உள்ளது என்று கட்டிட வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் கற்களை இணைக்க மட்டுமே சிமெண்டு கலவை தேவை எனவும், மேல்பூச்சு தேவை இல்லை என்பதும் இதன் தனிச்சிறப்பாக உள்ளது. செங்கலைவிட பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ளதால் இந்த பிளைஆஷ் கற்களை கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் வீடு கட்டும் பொதுமக்கள் அதிக அளவு வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பிளைஆஷ் கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி போஸ் என்பவர் கூறும்போது, கட்டுமான பணிகளுக்கு பிளைஆஷ் கல்லை பயன்படுத்தும்போது அதன் செலவு குறைவாக இருக்கும். இதில் கிரசர் பொடி, நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் மற்றும் சிமெண்டு ஆகிய மூலப்பொருட்கள் சேர்ப்பதால் பிளைஆஷ் கற்களை சுலபமாக கட்டிட பணிக்கு பயன்படுத்தலாம். செங்கல் உற்பத்திக்கு விறகு அதிக அளவில் தேவைப்படுவது போல் இந்த கற்கள் தயாரிப்பதற்கு விறகு தேவை இல்லை. இந்த கற்களை வெயிலில் உலர வைப்பதால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தற்போது இந்த கல்லுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
தலையங்கம்

ரெயில் பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை





மக்களுக்கு போக்குவரத்து என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இதில், ரெயில்வே மிகமுக்கிய பங்காற்றுகிறது.

மே 16 2018, 03:00
மக்களுக்கு போக்குவரத்து என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இதில், ரெயில்வே மிகமுக்கிய பங்காற்றுகிறது. இந்தியா முழுவதும் 12 ஆயிரத்து 617 ரெயில்கள் தினமும் ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, 7 ஆயிரத்து 216 ரெயில் நிலையங்கள் வழியாக சென்றுகொண்டிருக்கின்றன. ரெயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்துகொண்டிருந்தாலும், பயணத்தின்போது பயணிகளில் யாருக்காவது திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகின்ற நேரத்தில் என்ன செய்வதென்று அவர்களும், அவர்களுடன் வரும் சக பயணிகளும் திக்குமுக்காடி போய்விடுகிறார்கள். விமானத்தில் ஏதாவது ஒரு பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் யாராவது டாக்டர்கள் பயணம் செய்கிறார்களா என்று ஒலிபெருக்கியில் கேட்டு ஏற்பாடு செய்வார்கள். பயணியின் உடல்நிலை மிகமோசமாக இருந்தால் அருகிலுள்ள விமானநிலையத்தில் இறக்கி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்கள்.


ஆனால் ரெயில்களை பொறுத்தமட்டில், பல பெட்டிகள் இருப்பதால் ஏதாவது ஒரு பெட்டியில் டாக்டர்கள் பயணம் செய்கிறார்களா? என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதிலும் மாரடைப்பு போன்ற உடனடியாக சிகிச்சை தேவைப்படும் பயணிகளுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால், பலநேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க, தற்போது ரெயிலில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகர்கள் மருத்துவ உதவி தேவைப்படும் பயணிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அவர்களுக்கு பொறுப்பு கடமையாக சுமத்தப்பட்டுள்ளது. யாராவது பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் குறிப்பாக மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது அடுத்த ரெயில்நிலைய ஸ்டே‌ஷன் மாஸ்டருக்கோ தகவல் தெரிவிக்கவேண்டும். ஒவ்வொரு ஸ்டே‌ஷன் மாஸ்டர்களும் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளோடு தொடர்புகொண்டு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இதுதவிர, எல்லா எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முதலுதவிபெட்டி இருக்கவேண்டும். டிக்கெட் பரிசோதகர்களுக்கும் முதலுதவி அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 138 என்ற ஹெல்ப் லைனிலும் பயணிகள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக வரவேற்கக்கூடியது. ஆனால், பல பயணிகளுக்கு இந்த வசதிகள் இருப்பதெல்லாம் தெரியாது என்பதால், ரெயில் பெட்டிகளிலும் இதை குறிப்பிடவேண்டும். முடிந்தால் ரெயில் டிக்கெட்களிலும் இந்த ஏற்பாடுகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு ரெயிலிலும் பயணம் செய்பவர்களில் டாக்டர்கள் யார்–யார், அவர்கள் எந்த பெட்டியில் பயணம் செய்கிறார்கள் என்ற விவரங்களை பதிவு விவரங்களில் இருந்து திரட்டி அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கும் தெரிவித்தால் அவசர சிகிச்சைக்கு அவர்கள் உதவியையும் பெற வசதியாக இருக்கும். இதுபோல, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் யாராவது பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அது வழக்கமாக நிற்கும் அடுத்த ரெயில் நிலையம்வரை காத்திருக்காமல், இடையில் மருத்துவ வசதி உள்ள ஊர்களில் ரெயிலை நிறுத்தி பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.
மாநில செய்திகள்

9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியீடு



9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. #ExamResult

மே 16, 2018, 06:53 AM

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இன்று (புதன் கிழமை) பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்.

NEWS TODAY 28.04.2026