Tuesday, June 12, 2018

மருத்துவ கல்லூரி தரம் உயர்த்தப்படும்'

Added : ஜூன் 11, 2018 23:23

சென்னை: ''அண்ணாமலை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை தரம் உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில், நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்.அமைச்சர் விஜயபாஸ்கர்: அண்ணாமலை மருத்துவ கல்லுாரி, உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, சி.டி., ஸ்கேன் வசதி செய்யப்பட உள்ளது. இந்த மருத்துவமனையை, மிகப்பெரிய மருத்துவமனையாக தரம் உயர்த்த, முதல்வரின் அனுமதி பெற்று, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.
வரலாற்று நிகழ்வு: கிம் ஜாங்- டிரம்ப் சந்தித்து கைகுலுக்கினர்

Updated : ஜூன் 12, 2018 06:56 | 

  சிங்கப்பூர்: வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து கைகுலுக்கினர். இச்சந்திப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக,பேச்சு நடத்துவதற்காக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், சிங்கப்பூர் வந்தடைந்தார்.ஆசிய நாடான, சிங்கப்பூரில், நாளை, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.அப்போது, அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

சிங்கப்பூரின், பிரபல சுற்றுலா தலமான, சென்ட்டோசா தீவில் உள்ள, கேபெல்லா ஓட்டலில் பேச்சு நடக்க உள்ளது. மாநாடு நடக்கும்போது, இந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி வழியாகச் செல்லும் பொது வாகனங்கள் மற்றும் தனிநபர்கள், கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டை, உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. வட கொரிய அதிபர் ஒருவர், அமெரிக்க அதிபரை சந்திப்பது, இதுவே முதன்முறை.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன், நேற்று காலை சிங்கப்பூர் வந்தார். இவரைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நேற்று மாலை வந்தார்.மாநாடு நடப்பதற்கு முன், இரு நாட்டு அதிபர்களும், சிங்கப்பூர் பிரதமர், லீ சியன் லுாங்கை சந்திக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
கே.எப்.சி.,யில் விரைவில் சைவ உணவு வகைகள்

Added : ஜூன் 11, 2018 20:40 



நியூயார்க் : சர்வதேச அளவில் சிக்கன் உணவு வகைகளுக்கு பிரபலமான கே.எப்.சி. (Kentucky Fried Chicken) நிறுவனம், விரைவில் சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் லூயிஸ்வில்லியை தலைமையகமாக கொண்டு சிக்கன் உணவு வகைகளில் தனக்கென்று ஓரு சாம்ராஜ்யத்தை கே.எப்.சி. நிறுவனம் நடத்திவருகிறது. இதனிடையே, விரைவில் சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு ஆய்வு நிலையிலேயே உள்ளது. என்னென்ன உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பதை இவ்வாண்டிற்குள் இறுதி செய்யப்பட உள்ளது.

2019ம் ஆண்டிலிருந்து சைவ உணவு வகைகள் என்றவொரு தனிப்பிரிவையே துவக்க திட்டமிட்டுள்ளோம். இந்த சைவ உணவு வகைகளை, முதலில் பிரிட்டனிலேயே அறிமுகப்படுத்த உள்ளதாகவும், பின் படிப்படியாக, சர்வதேச அளவில் உள்ள எல்லா கிளைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஏன் சைவ உணவு? :

பிரிட்டன் அரசு, அந்நாட்டு மக்கள், அதிகளவு கலோரி உள்ள உணவுகளை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. இதன் காரணமாகவே, கலோரிகள் அதிகமுள்ள அசைவ உணவுகளை தவிர்க்கும் வகையில், கே.எப்.சி. நிறுவனம், குறைந்த கலோரிகள் கொண்ட சைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கே.எப். சி. பிரிட்டன் நிறுவனம், அடுத்த 7 ஆண்டுகளில் கலோரி அளவை 20 சதவீத அளவிற்கு குறைக்க திட்டமிட்டுள்ளது.


இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு டாக்டர் பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்




வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

ஜூன் 12, 2018, 04:45 AM
தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இஸ்ரோ தலைவர் கே.சிவன், பாரதீய நபிக்கிய வித்யுட் நிகாம் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கல்லோல் ராய் ஆகியோருக்கு தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைக்கு நடிகர் பாண்டியராஜனுக்கும், பல்வேறு துறைகளில் ஆய்வு செய்த 69 பேருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 217 பேர் பட்டங்கள் பெற்றனர். விழாவில் பல்கலைக்கழக திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான துணைத்தலைவர் ஜோதி முருகன், கல்விக்கான துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், பதிவாளர் வீரமணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது



மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வுக்கு நேற்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது. கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது.

ஜூன் 12, 2018, 05:00 AM
சென்னை,

தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. மேலும் அரசு பல்மருத்துவ கல்லூரி மற்றும் சிதம்பரம் ராஜா பல்மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் 170 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் 1,020 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் வழங்கும் பணி அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல்மருத்துவ கல்லூரியிலும் நேற்று தொடங்கியது.

விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வழங்கி தொடங்கிவைத்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வர் டாக்டர் வசந்தாமணியும், சென்னை மருத்துவக்கல்லூரியில் முதல்வர் டாக்டர் ஜெயந்தியும், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் முதல்வர் டாக்டர் நாராயணபாபுவும் தொடங்கிவைத்தனர்.

ஏராளமான மாணவ-மாணவிகளும் பெற்றோர்களும் விண்ணப்பம் வாங்க வந்திருந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பம் பெறுவதை விட டி.டி. எடுக்க கூட்டம் அலை மோதியது. பின்னர் ஒவ்வொருவரும் விண்ணப்பம் பெற்றுச்சென்றனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த பிரிவினர் அல்லாத மாணவ-மாணவிகளுக்கு கட்டணம் ரூ.500 ஆகும். தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,000 ஆகும். இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.

விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்க கடைசி நாள் 18-ந்தேதி. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது.

முதல் நாளான நேற்று மட்டும் 11 ஆயிரத்து 967 விண்ணப்பங்களை மாணவ-மாணவிகள் வாங்கி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உள்பட 7 பேர் விடுதலையாக வாய்ப்பு?





ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேர் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருப்பதால், அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஜூன் 12, 2018, 05:45 AM

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார் கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் தரவில்லை.

இதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு ஏற்கனவே அனுப்பி உள்ள நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசு சட்டரீதியாக ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய மத்திய அரசின் முடிவு விரைவில் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
மாநில செய்திகள்

பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது



பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு இனிமேல் தமிழ், ஆங்கில பாடங்களுக்கு முதல் தாள், 2-வது தாள் என்று கிடையாது. இனிமேல் தமிழ், ஆங்கில பாடங்களுக்கு தலா ஒரு தேர்வுதான் நடைபெறும். இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 12, 2018, 05:00 AM சென்னை,

பிளஸ்-1 மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு நடைபெற்றது. தமிழ் முதல் தாள், தமிழ் 2-வது தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் 2-வது தாள் என்று ஒவ்வொரு தேர்வுகளுக்கும் தலா 100 மதிப்பெண் இருந்தது. தமிழ் முதல் மற்றும் 2-வது தேர்வில் எடுத்த மதிப்பெண்களை 100-க்கு கணக்கிட்டு வழங்கப்பட்டது. அதுபோலத்தான் ஆங்கிலம் தேர்வுக்கும் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இந்த வருடம் 800 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதை 600 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டனர்.

பிளஸ்-2 தேர்வு இதுவரை 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இனிமேல் பிளஸ்-2 மாணவர்களுக்கும் தலா 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இது 2018-2019ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் அமல்படுத்தப்படும்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது.

தமிழக மாணவர்களின் நலன் கருதி தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களைப் போன்றே இரண்டு தாள்களுக்கு பதிலாக ஒரு தாளாக மாற்ற வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மொழிப்பாடம் (தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்கள்) மற்றும் ஆங்கில பாடத்தில், பாடத்துக்கு இரண்டு தாள்கள் வீதம் தேர்வெழுதுவதால் இடைப் பருவத் தேர்வுகள், பருவத் தேர்வுகள், ஆயத்த தேர்வுகள் என தேர்வு, நாள்களுக்கென ஏறத்தாழ பத்து நாட்கள் செலவிடப்படுகின்றன. தேர்வு நாள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள 8 தேர்வுகளுக்கு பதிலாக 6 தேர்வுகளாக குறையும்போது மாணவர்களின் மன அழுத்தம் பெரிதும் குறையும்.

ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும்போது தற்போதுள்ள பாடப்பகுதிகளில் எந்த ஒரு பகுதியையும் நீக்கம் செய்யாமல் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு தாள் இருக்கும் வகையில் வினாத்தாள்களைத் தயாரிக்கலாம். இதனால் மாணவர்கள் எந்த பாடப் பகுதியையும் விட்டு விடாமல் கற்றுத் தேர்வு எழுதும் சூழல் ஏற்படும்.

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான மொழிப்பாடம், ஆங்கிலம் ஆகியவற்றின் இரு தாள்களை ஒரே தாள்களாக ஒருங்கிணைக்க பாடத்திட்டக் குழுவுக்கு உயர்நிலைக் குழுவின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றத்தை ஆசிரியர், பெற்றோர் அடங்கிய குழுக்கள் ஏற்றுக்கொண்டன.

இதையடுத்து கடந்த ஜூன் 4-ந் தேதி பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிகள் வாரிய கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குனர், அரசுத் தேர்வுகள் இயக்குனர், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆகியோரது கருத்துகளின் அடிப்படையில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள மொழிப்பாடம், ஆங்கிலப்பாடங்களில் உள்ள 2 தாள்களை 2 தேர்வுகளாக எழுதுவதற்கு பதில் ஒரே தாளாக தேர்வெழுத அனுமதித்தும், இதற்கான வினாத்தாள் கட்டமைப்பு, மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை உருவாக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NEWS TODAY 23.07.2026