Friday, June 15, 2018


‘3013-ம்ஆண்டுக்கு’ இப்போதே டிக்கெட் வழங்கிய ரயில்வே; பயணியை அவமானப்படுத்தியதால் அபராதம்

Published : 14 Jun 2018 18:25 IST

சஹாரான்பூர்



உத்தரப்பிரதேசம் சஹரான்பூரில் பயணி ஒருவருக்கு வழங்கிய டிக்கெட்டில் 3013-ம் ஆண்டு என்று தவறாக அச்சடித்துக் கொடுத்து, அவருக்கு அபராதம் விதித்து, நடுவழியில் இறக்கிவிட்டதால், ரயில்வேக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் சஹாரான்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்னு காந்த் சுக்லா(வயது73) என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சஹரான்பூரில் இருந்து ஜான்பூருக்கு ஹிம்கிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட்டுடன் பயணித்தார்.
 
அப்போது டிக்கெட் பரிசோதகர் சோதனையிட்ட போது, விஷ்னு காந்த் சுக்லா வைத்திருந்த ரயில் டிக்கெட்டை காண்பித்தார். அப்போது, அதில் 2013-ம் ஆண்டு என அச்சிடுவதற்குப் பதிலாக 3013-ம் ஆண்டு என்று தவறுதலாக அச்சிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் போலியான டிக்கெட்டில் பயணித்துள்ளீர்கள் என சுக்லாவிடம் கூறியுள்ளார். ஆனால், ரயில்வே அச்சடித்த டிக்கெட்டில் ஆண்டு தவறாக உள்ளது, அதற்கு நான் பொறுப்பா எனக்கேட்டு வாதிட்டுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர், சுக்லாவிடம் ரூ.800 அபராதமும் பெற்றுக் கொண்டு நடுவழியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.



3013-ம் ஆண்டு என்று அச்சடித்து கொடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்

ஆண்டை தவறாக அச்சிட்ட ரயில்வேயால் தான் தண்டனை அனுபவித்ததை எண்ணி சுக்லா வேதனை அடைந்தார். இது குறித்து சஹரான்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ரயில்வே மீது வழக்குத் தொடர்ந்தார். ஏறக்குறைய 5 ஆண்டுகள் வழக்கு நடந்து வந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், டிக்கெட்டில் உள்ள ஆண்டை மாற்றி அச்சிட்டது ரயில்வேயின் தவறு என்பது தெளிவாகிறது. ஆனால், அதற்குப் பொறுப்பு ஏற்காமல், சுக்லாவை டிக்கெட் பரிசோதகர் அவமானப்படுத்தி இருக்கிறார். அதற்கு சுக்லா அபராதமும் செலுத்தி இருக்கிறார். ஆதலால் கடந்த 5 ஆண்டுகள் மனுதாரர் அனுபவித்த மனஉளைச்சளுக்கு ரயில்வே ரூ. 10 ஆயிரமும், அவருக்கு இழப்பீடாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இது குறித்து சுக்லா ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், நான் ஓய்வு பெற்ற இந்தி பேராசிரியர். சஹாரான்பூரில் உள்ள ஜே.வி.ஜெயின் கல்லூரில் பணியாற்றினேன். ஒரு கவுரமான பணியில் இருந்த நான் எப்படி போலியான டிக்கெட் தயாரித்து பயணிக்க முடியும். என்னை அனைவரின் முன் அப்போது டிக்கெட் பரிசோதகர் அவமானப்படுத்திவிட்டார்.

ரூ.800 அபராதமும் பெற்றுக்கொண்டார். என் நண்பருடைய மனைவி இறந்துவிட்டதால், அவரைக் காணச் சென்று கொண்டு இருந்தேன்.இந்த சம்பவத்தால், என்னால் உரிய நேரத்துக்குச் செல்ல முடியவில்லை. இதையடுத்து மன உளைச்சல் அடைந்து, ரயில்வே மீது வழக்கு தொடர்ந்தேன். 5 ஆண்டுகளுக்குப் பின் இப்போது நீதி கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.
நாளை ரம்ஜான் பண்டிகை

Added : ஜூன் 15, 2018 04:28

சென்னை:'பிறை தென்படாததால், ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும்' என, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால், இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் காலண்டரின் படி, இன்று ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நேற்று இரவில், ஷவ்வால் மாத பிறை தென்படவில்லை என, இஸ்லாமியர்கள் தரப்பில், தமிழக அரசின் தலைமை காஜிக்கு, தகவல்கள் வந்தன.

தமிழகத்தின் பெரும்பகுதியில், வானம் மேக மூட்டமாக காணப்பட்டதால், பிறை தென்படவில்லை.இதையடுத்து, இன்று கொண்டாடப்படுவதாக இருந்த, ரம்ஜான் பண்டிகை, நாளை கொண்டாடப்படும் என, தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து, அரசுக்கும் அவர், கடிதம் எழுதினார்.

இதை தொடர்ந்து, இன்று அறிவிக்கப்பட்டுஇருந்த அரசு விடுமுறையை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.'ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால், நாளை அரசு விடுமுறை; இன்று, அரசின் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்' என, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு எப்போ வரும்; எப்படி வரும்? 'டென்ஷனில்' தவித்த வட்டாரங்கள்

Added : ஜூன் 15, 2018 02:21

அப்பப்பா... எவ்ளோ டென்ஷன்; 18 பேர், தங்களுடைய சுயலாபத்திற்காக செய்த காரியத்தால், நேற்று மாநிலமே, பரபரப்பின் உச்சத்துக்கு சென்று, இயல்புக்கு திரும்பியது.

சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கிளம்பி, அவரை மாற்றக் கோரி, கவர்னரிடம் மனு அளித்தனர். அவர்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
எதிர்பார்ப்பு

வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று, தீர்ப்பு வெளியாக உள்ளது என, நேற்று முன்தினமே தகவல் தெரிந்ததால், மக்களிடம் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்படுத்தி விட்டன, 'டிவி' சேனல்கள்.'தீர்ப்பு, யாருக்கு சாதகமாக இருக்கும்; சபாநாயகர் முடிவு செல்லும் என அறிவித்தால், என்ன நடக்கும்; செல்லாது என அறிவித்தால், என்ன நடக்கும்' என, சமூக வலைதளங்களிலும் விவாதம் சூடு பிடித்தது.ரயில், பஸ், டீக்கடை, மார்க்கெட் என, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம், இதே விவாதம். தீர்ப்பு இப்படித் தான் இருக்கும் என, ஆளாளுக்கு ஆரூடம் கூற, அனைவரிடமும் ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.

சபாநாயகர் தீர்ப்பு செல்லும் என அறிவித்தால், 18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும் என்பதால், அப்பகுதி மக்கள், மற்றவர்களை விட, மிகுந்த ஆவலுடன், தீர்ப்பை எதிர்நோக்கினர்.'சபாநாயகர் தீர்ப்பு செல்லும்' என்கிற மாதிரி, தீர்ப்பு வர வேண்டும் என, கடவுள்களை வேண்டினர். அவர்கள் மனக்கண்ணில், ஆர்.கே.நகர் கவனிப்பு வந்து சென்று, துாக்கத்தை கெடுத்தது.
சபாநாயகர் தீர்ப்பு செல்லாது என்றால், ஆட்சி கவிழும் அபாயம். இதனால், தீர்ப்பு எப்படி வருமோ என, ஆளும் கட்சி, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதற்றம்.'காக்கா தவற விடும் வடையை, கவ்வ தயாராக இருக்கும் நரி' போல, எதிர்க்கட்சியினர், ஆட்சி கவிழ்ப்பை எதிர்பார்த்திருப்பதால், அவர்களுக்கும் டென்ஷன்.

ஆலோசனை

தீர்ப்பு எப்படி அமையும் என, 'டிவி'க்களில் நடந்த விவாதம், அரசியல்வாதிகளை மட்டுமின்றி, சாதாரண மக்களின், 'பிபி'யையும் எகிற வைத்தது.காலை, 11:00 மணிக்கு தீர்ப்பு, என்றனர்; பின், மதியம், 1:00 மணிக்கு தீர்ப்பு, என்றனர். தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, தினகரன், தன் வீட்டில், நேற்று காலை, கூட்டத்தை கூட்டினார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களில் பலர் வரவில்லை. உடனே, 'ஆளும் கட்சிக்கு சாதகமாக, தீர்ப்பு வர உள்ளதால் தான், அவர்கள் வரவில்லை' என, அவரிடம் சிலர் சொல்ல, தினகரனுக்கும், பி.பி., எகிறியது.சட்டசபைக்கு வந்திருந்த முதல்வர், அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள், தீர்ப்பை அறிந்து கொள்ள, ஆர்வமுடன் இருந்தனர்.

இருக்கையில் இருப்பு கொள்ளாமல் தவித்தனர். எதிர்க்கட்சியினர், தீர்ப்பு அரசுக்கு எதிராக அமையும் எனக் கருதி, உற்சாக மூடில் இருந்தனர்.சட்டசபையில் இருந்து, திடீரென முதல்வர் வெளியேறினார். அதைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் மூத்த அமைச்சர்கள் வெளியேற, சட்டசபையில் இருந்த, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பார்வையாளர்களிடம், பரபரப்பு அதிகரித்தது.

முதல்வர், தன் அறைக்கு சென்று, தலைமைச் செயலர், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன், ஆலோசனை நடத்தினார்.ஒவ்வொருவரும் தீர்ப்பை எதிர்நோக்கினர். தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும், தங்கள் வேலையை மறந்து, தீர்ப்பை அறிய, 'டிவி' முன், தவம் கிடந்தனர்.
ஏமாற்றம்

உயர் நீதிமன்ற வளாகத்திலும் அதே பரபரப்பு; வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வந்தவர்கள், பத்திரிகையாளர்கள் என, அனைவரும் தீர்ப்பை அறிய ஆவலோடு காத்திருந்தனர்.மதியம், 1:00 மணிக்கு தீர்ப்பு என்ற நிலையில், 'ஏழாவதாகத் தான் இந்த வழக்கு வருகிறது' என்ற தகவல், சிலருக்கு கசப்பை தந்தது.பதவி இழந்த, எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு யுகம் போல் இருந்தது. பெரும்பாலானோர் உணவை மறந்து, விசாரித்தபடி இருந்தனர். மதியம், 1:35 மணிக்கு, தீர்ப்பு வெளியானது.
இரண்டு நீதிபதிகளும், வெவ்வேறு முடிவுகளை அறிவிக்க, தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், காற்று போன பலுான் போல், ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், டென்ஷன் குறைந்து, சகஜ நிலைக்கு திரும்பினர். தீர்ப்பை பொறுத்து, 'ஆளும் கட்சிக்கு போகலாமா; தினகரனுடன் இருக்கலாமா' என்பதை, முடிவு செய்ய காத்திருந்த, பதவி இழந்த எம்.எல்.ஏ.,க்கள், பாவம் நொந்து போயினர்.

இனி வழக்கு, மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு செல்லும்; அதில், எப்போது தீர்ப்பு வரும்; அதுவரை, ஆளும் கட்சியினர் மகிழ்ச்சியாக இருக்கலாம். தமிழக மக்கள், அடுத்த டென்ஷனுக்கு, இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
- நமது நிருபர் -
மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் நியமனம் ரத்து

Added : ஜூன் 15, 2018 04:45

சென்னை:மதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லதுரை நியமிக்கப்பட்ட உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லதுரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து, லயோனல் ஆண்டனிராஜ், 'டிராபிக்' ராமசாமி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே பொது நல வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, சுந்தர் அடங்கிய, முதல் பெஞ்ச், நேற்று பிறப்பித்த தீர்ப்பு:லயோனல் ஆண்டனிராஜ் தாக்கல் செய்த மனுவில், துணை வேந்தர் தகுதி குறித்து கேள்வி எழுப்பி, நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். டிராபிக் ராமசாமி மனுவில், விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், சென்னை பல்கலை துணை வேந்தராக துரைசாமியும், மதுரை பல்கலை துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.செல்லத்துரையின் நியமனம் குறித்து மட்டும், வழக்கில் வாதாடப்பட்டுள்ளது. அதில், 'தேடல் குழுவின் நடவடிக்கைகளில் விதிகள் பின்பற்றப்படவில்லை' என கூறியுள்ளார்.

தேடல் குழுவில், முருக தாஸ், ராமகிருஷ்ணன் மற்றும் ஹரிஷ் மேத்தா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில், முருகதாஸ், குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார். இந்த நியமனத்தில், அவரது கை ஓங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.கவர்னரின் செயலர், தலைமை செயலர் மற்றும் தேடல் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'துணை வேந்தர் ஆவதற்கான கல்வி தகுதி மற்றும் அனுபவம், செல்லதுரைக்கு உள்ளது.

'அவர் மீதான கிரிமினல் வழக்கு, போலீஸ் விசாரணைக்கு பின், முடிக்கப்பட்டு விட்டது' என கூறப்பட்டுள்ளது. பல்கலை பதிவாளரும், துணை வேந்தர் நியமனத்தை ஆதரித்து, பதில் மனு அளித்துள்ளார்.தேடல் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் அளித்த பதில் மனுவில், 'கவர்னரை சந்திக்கும் நாளான, 2017 மே, 19ல், தேடல் குழு ஒருங்கிணைப்பாளர், முருகதாஸ், குழு கூட்டத்தை, கவர்னர் மாளிகை அருகில் உள்ள, 'லெமன் ட்ரீ' ஓட்டலில் ஏற்பாடு செய்துள்ளார்.

'இரண்டு உறுப்பினர்களையும், 4:30 மணிக்கு வர சொல்லி விட்டு, இவர் தாமதமாக வந்துள்ளார். பின், உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல், அவசர அவசரமாக, கவர்னரை பார்க்க அழைத்து சென்றார்' என, தெரிவித்து உள்ளனர்.தேடல் குழு சார்பில், மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, அந்த பெயர்கள் அடங்கிய உறையை, கவர்னரிடம் அளித்துள்ளார். அப்போது, மற்றொரு மூடிய உறையையும், அவர் அளித்துள்ளார்.
தேடல் குழுவின் கை ஓங்கியுள்ளதாக, ஏற்கனவே அதில் உறுப்பினராக இருந்த, பேராசிரியர் ராமசாமி குற்றம் சாட்டி, குழுவில் இருந்து விலகிஇருக்கிறார். ஆனாலும், அடுத்த தேடல் குழுவிலும், ஒருங்கிணைப்பாளராக இருந்த, முருகதாசின் கை ஓங்கியிருந்தது. அவர், அரசு தரப்பு பிரதிநிதியாக செல்லத்துரை இருப்பதாக கூறி, அவரை முன்னிறுத்தியுள்ளார்.

தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அளித்த பட்டியலுக்கு, மற்ற இரண்டு உறுப்பினர்களும், எந்த பதிலும் இல்லாமல், வெறுமனே கையெழுத்து போட்டுள்ளனர். 'இந்த பிரச்னை, பின்னாளில் நீதிமன்றத்துக்கு வரும்; நீதிமன்றத்தில் ஆதாரம் கேட்பர்' என, அவர்கள் நினைக்கவில்லை போலும்.
துணை வேந்தர் என்பவர், பல்கலையின் வெறும் தலைமை அதிகாரி மட்டும் அல்ல. ஒட்டுமொத்த பல்கலையின், தலைமை செயல் அதிகாரியும் ஆவார். எனவே, கண்டிப்பாக, புதிய தேடல் குழு அமைத்து, புதிதாக துணை வேந்தரை நியமிக்கலாம் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது.கற்பித்தலுக்கான இடமாக பல்கலை திகழ்வதால், அதன் தலைமை இடம் என்பது, புனிதமானதாக இருக்க வேண்டும். இதற்கான தேர்வு என்பது, மிக சாதாரணமாக இருக்கக் கூடாது. மிகவும் கண்டிப்பான தேர்வு நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
பல்கலை என்பது, வெறும் அறிவை கற்று கொடுக்கும் இடம் மட்டும் அல்ல; கல்வியின் வழியாக, நாட்டை நல்ல முறையில் கட்டமைக்கும் இடமாக இருக்கிறது. எனவே, பல்கலையின் தலைமை பதவிக்கான, தேர்வு நடவடிக்கையில் விதிமீறல் என்பதை, ஏற்க முடியாது.எனவே, தேடல் குழுவின் தேர்வு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள, குளறுபடிகளின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தராக, செல்லத்துரையை நியமித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம், அவரது தகுதி குறித்து எதுவும் சொல்லவில்லை.

புதிய துணை வேந்தரை நியமிப்பது குறித்து, புதிய தேடல் குழு ஏற்படுத்த வேண்டும். அதில், பழைய தேடல் குழுவில் இடம்பெற்ற, முருகதாஸ், ராமகிருஷ்ணன் மற்றும் ஹரிஷ் மேத்தா ஆகியோர் இடம் பெறக் கூடாது. இந்த புதிய குழு, உரிய விதிகளின் படி, மூன்று மாதங்களுக்குள், புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வு நடவடிக்கையின்போது, செல்லத்துரை விண்ணப்பிப்பதை தடுக்கக் கூடாது.
அவரது விண்ணப்பத்தையும், எந்த சிபாரிசும், அதிகார துஷ்பிரயோகமும் இன்றி, உரிய விதிகளின்படி பரிசீலிக்கலாம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஜூன் 15) பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு

Updated : ஜூன் 15, 2018 00:03 | Added : ஜூன் 14, 2018 20:39




சென்னை : ரம்ஜானுக்காக இன்று (ஜூன் 15) பள்ளி, அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால், நாளை (ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் எனவும், பள்ளி, அலுவலகங்கள் இன்று இயங்கும் எனவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைப்பு?

Updated : ஜூன் 15, 2018 00:07 | Added : ஜூன் 15, 2018 00:05 |



 

புதுடில்லி : மொபைல் போன் முதல், வங்கி கணக்கு வரை, ஆதார் எண் இணைக்கப்பட்ட நிலையில், விரைவில், 'டிரைவிங் லைசென்சுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில், மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், போதையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிப்பது எளிதாகும். விபத்தை ஏற்படுத்தியவர், வாகனத்தை கைவிட்டு, தலைமறைவானாலும், அதில் உள்ள விரல் ரேகை மூலம், அவரை அடையாளம் காண முடியும்.

குற்றவாளிகள் பிடிபடும்போது, தங்கள் பெயரை மாற்றிக் கூறினாலும், விரல் ரேகை மாறாது என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு, டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என, மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிரைவிங் லைசென்சுடன், ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது.
மாவட்ட செய்திகள்

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் குறைக்கப்படுமா? - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை





தாம்பரம்-நெல்லை இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தை குறைக்கவும், முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஜூன் 15, 2018, 04:45 AM
விருதுநகர்,

மத்திய ரெயில்வே அமைச்சகம் முக்கிய நகரங்களுக்கு இடையே முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கி வருகின்றது. ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இந்த ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே ரெயில்வே அமைச்சகத்தின் நோக்கம் ஆகும்.

இதன்படி தாம்பரம்-நெல்லை இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 8-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12½ மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் மாலை 3½ மணி அளவில் நெல்லை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மாலை 5½ மணி அளவில் நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணி அளவில் தாம்பரம் சென்றடைகிறது.

முன்பதிவு இல்லாத 18 பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரெயில் முக்கிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. மதுரை-நெல்லை இடையே விருதுநகரில் மட்டும் நிறுத்தப்படுகிறது. திருமங்கலம், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை.

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ரூ.240 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விருதுநகரில் இருந்து ரூ.210-ம், மதுரையில் இருந்து ரூ.200-ம், திண்டுக்கல்லில் இருந்து ரூ.185-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக வரும் இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக நெல்லை செல்கிறது. எனவே தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு இந்த ரெயில் பயனுள்ளதாக அமையும்.

நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 12 மணி நேரம் முதல் 13 மணி நேரத்தில் சென்னை எழும்பூர் சென்றடையும் நிலையில் இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை-தாம்பரம் இடையே பயணநேரமாக 16 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதிலும் குறிப்பாக மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விருதுநகரில் இருந்து நெல்லைக்கு 2 மணி நேரத்துக்குள் சென்று விடும் நிலையில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் விருது நகரில் இருந்து நெல்லை செல்வதற்கு 3 மணி நேரம் ஆகிறது. அதிலும் விருதுநகர்-நெல்லை இடையே உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நிறுத்தப்படுவது இல்லை.

எனவே தெற்கு ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயிலின் பயண நேரத்தை குறைக்கவும், தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுத்தால் தான் இந்த ரெயில் விடப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறுவதுடன் தென்மாவட்ட மக்களும் பயன் அடையும் நிலை ஏற்படும்.

எனவே ரெயில்வே நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு ஏற்கனவே நிறுத்தப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலையும் தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் ரெயில் நிலையங்களில் தாம்பரம்-நெல்லை இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருவது குறித்து அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிட வேண்டியதும் அவசியம் ஆகும்.

3 BA pilots take ill on Hyd-London flight, airline mounts probe

3 BA pilots take ill on Hyd-London flight, airline mounts probe  24.07.2026 Hyderabad : Three British Airways pilots fell ill during a Hyder...