Saturday, June 16, 2018

கயத்தாறு - ஒட்டியம்பாக்கம் வழித்தடம் அதிகளவில் மின்சாரம் வருவது எப்போது

Added : ஜூன் 16, 2018 01:32

காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டியம்பாக்கம் - தரமணி இடையேயான, மின் வழித்தட பணி முடியாததால், துாத்துக்குடி, கயத்தாறில் இருந்து, சென்னைக்கு அதிக மின்சாரம் எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில், காற்றாலை, சூரிய சக்தி மின் நிலையங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, சென்னைக்கு எடுத்து வரவும்; 'ஓவர் லோடு' பிரச்னைக்கு தீர்வு காணவும், துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு முதல், காஞ்சிபுரத்தில் உள்ள கலிவந்தப்பட்டு, ஒட்டியம்பாக்கம் வரை, 748 கி.மீ., துாரத்திற்கு, 400 கிலோ வோல்ட் திறன் மின் வழித்தடத்தை, மின் வாரியம் அமைத்துள்ளது; திட்ட செலவு, 2,300 கோடி ரூபாய்.மேற்கண்ட வழித்தடம், 2,000 மெகாவாட் மின்சாரம் எடுத்து செல்லும் திறன் உடையது. கயத்தாறில் இருந்து, ஒட்டியம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு வரும் மின்சாரம், சிறுசேரி, சோழிங்கநல்லுார், 230 கி.வோ., துணை மின் நிலையங்கள் வாயிலாக, தென் சென்னை புறநகர் பகுதிகளுக்கு, 'சப்ளை' செய்யப்படுகிறது.ஒட்டியம்பாக்கம் மின் நிலையத்தை, தரமணியில் உள்ள, 230 கி.வோ., துணை மின் நிலையத்துடன் இணைக்க, மின் வாரியம் முடிவு செய்தது. இதற்காக, 40 கி.மீ., துாரத்திற்கு, 110 மின் கோபுரங்கள் உள்ள வழித்தடம் அமைக்கும் பணி நடக்கிறது. அந்த பணி முடியாததால், கயத்தாறில் இருந்து, அதிக மின்சாரத்தை எடுத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒட்டியம்பாக்கம் - தரமணி வழித்தடத்தில், சோழிங்கநல்லுார், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், நான்கு மின் கோபுரங்கள் அமைக்க, வனத் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. மாநில சதுப்பு நில ஆணையத்திடம் அனுமதி பெறுமாறு, வனத்துறை அறிவுறுத்தியது. தலைமைச் செயலர் தலைமையின் கீழ் செயல்படும், அந்த ஆணையத்திடம், அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அது கிடைத்ததும், மின் கோபுரம் நிறுவும் பணி துவங்கி, வழித்தடம் அமைக்கப்படும்.அந்த பணி முடிந்ததும், ஒட்டியம்பாக்கம், தரமணி வழியாக, ஆர்.ஏ.புரம், மயிலாப்பூரில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு, மின்சாரம் எடுத்து செல்லப்பட உள்ளது.

இதனால், ஒட்டியம்பாக்கம் - தரமணி வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்ததும், கயத்தாறில் இருந்து, சென்னைக்கு, தற்போது வரும், 500 மெகாவாட்டை விட, அதிக மின்சாரம் எடுத்து வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
கோவில், சர்ச்களுக்கு சுற்றுலா சிறப்பு ரயில்

Added : ஜூன் 16, 2018 01:23

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., - கோவில்கள், சர்ச்சுகளுக்கு சென்று வரும் வகையில், கோவா மற்றும் கர்நாடகாவுக்கான சுற்றுலா ரயிலை இயக்குகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து ஜூலை 5ல் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், எழும்பூர், சேலம், ஈரோடு, கோவை போத்தனுார் வழியாக செல்கிறது.கோவில் சுற்றுலாவில் கர்நாடகாவில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோவில், முருடேஸ்வரர், கொல்லுார் மூகாம்பிகை கோவில், சிருங்கேரி சாரதாபீடம், ஹோரநாடு அன்னபூரணி, தர்மசாலா, மஞ்சுநாதர் மற்றும் குக்கே சுப்பிரமணிய கோவில்களுக்கு சென்று வரலாம். ஐந்து நாள் சுற்றுலாவிற்கு ஒருவருக்கு 6,930 ரூபாய் கட்டணம். கோவா சுற்றுலாவில், பிரசித்தி பெற்ற சர்ச்கள், கடற்கரைகளுக்கு சென்று வரலாம். ஒருவருக்கு 4,725 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்தை 90031 40681, 90031 40673 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
சிவகங்கையில் டாக்டரை தேடிய அமைச்சர்

Added : ஜூன் 16, 2018 00:55

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் அமைச்சர் பாஸ்கரன் அதிருப்தி அடைந்தார். அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து டாக்டர், 10 பணியாளர்கள் பணிபுரிய வேண்டும். முப்பது படுக்கைகள், அவசரகால ஊர்தி, எக்ஸ்ரே, இ.சி.ஜி., அல்ட்ரா சோனாகிராம் ஸ்கேன் போன்ற வசதி இருக்க வேண்டும்.சிவகங்கை அருகே மறவமங்கலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோதிலும், அதற்கான வசதி இல்லை. மேலும் இரண்டு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவரே பணிக்கு வருவதாகவும், இரவில் இருப்பதில்லை எனவும் புகார் எழுந்தது.நேற்று அமைச்சர் பாஸ்கரன் சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். ஒவ்வொரு அறையாக தேடியும் டாக்டர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.ஊழியர்கள் கூறும்போது, 'தற்போது தான் சிவகங்கை 'மீட்டிங்கிற்கு' டாக்டர்கள் சென்றனர். தினமும் 2 டாக்டர்களும் பணிக்கு வருகின்றனர். மூன்று செவிலியர்களில் ஒருவர் இரவிலும், மற்றவர்கள் பகலிலும் வருகிறோம்,' என தெரிவித்தனர். பொய் சொன்னால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.தொடர்ந்து 1.25 கோடி ரூபாயில் கட்டி 6 மாதங்களாக திறக்காத 30 படுக்கைகள் கொண்ட கட்டடத்தையும் பார்வையிட்டார். கடந்த மாதம் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபோதும் டாக்டர்கள் இல்லை.அமைச்சர் கூறுகையில், ' சுகாதார அமைச்சரிடம் கூறி, கட்டடம் விரைவில் திறக்கப்படும். 24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்க சுகாதார துணை இயக்குனரிடம்   தெரிவித்தேன்,' என்றார்.
மாவட்ட செய்திகள்

ஐ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் வெளி மாநில டாக்டரை நியமிப்பதால் சிக்கல்: இந்திய கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்



ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூன் 16, 2018, 04:30 AM

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி. மில் தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமசாமி ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் படுக்கை வசதி, அறுவை சிகிச்சை வசதிகள் கொண்ட முழுநேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும். உள்ளூர் மருத்துவமனையில் இதுவரை இல்லாத வகையில் மொழி தெரியாத வெளி மாநில டாக்டர்ர்களை பணியமர்த்துவதால் நோய் குறித்து அவர்களிடம் தெரியப்படுத்த நோயாளிகள் சிரமமாக உள்ளதாகவும் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் நகர துணைச்செயலாளர் முருகன், மாவட்டகுழு தர்மசாஸ்தா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்திகள்

சென்னையில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை மைய அதிகாரி தகவல்



சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

ஜூன் 16, 2018, 04:30 AM
சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை மழை பெய்தது. அதன் காரணமாக சற்று வெப்பம் தணிந்து காணப்பட்டது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வெப்பத்தின் காரணமாக சென்னையில் நேற்று மாலையில் மழை பெய்தது. இன்னும் 3 நாட்களுக்கு மாலையில் மழை பெய்யும். இந்த மழை தென்மேற்கு பருவ மழை இல்லை.

இது வெப்பச்சலனம் காரணமாக பெய்த மழை. கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை 32 மி.மீ. பெய்துள்ளது. சராசரியாக பெய்ய வேண்டிய மழை 27 மி.மீ.

தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

தென் மாவட்டங்களிலும், சில வட மாவட்டங்களிலும் காற்றின் வேகம் கடலில் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். அதன் காரணமாக மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேசிய செய்திகள்

2020–ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு நகரங்களில் நிலத்தடி நீர் காலியாகும் அபாயம்




2020–ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் காலியாகும் அபாயம் இருப்பதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 16, 2018, 05:15 AM

புதுடெல்லி,
இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவை மற்றும் மாநிலங்களின் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதன் முதலாக நிதிஆயோக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. மத்திய நீர்வளத்துறை மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் அமைச்சகங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ‘ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு’ என்ற அந்த அறிக்கையை நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று வெளியிட்டார்.

நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை இந்திய மாநிலங்களின் நீர் மேலாண்மை குறைபாட்டை அப்பட்டமாக விளக்கி இருப்பதுடன், குடிநீர் தட்டுப்பாட்டால் இந்தியா சந்திக்கப்போகும் இன்னல்களையும் அதிர்ச்சிகரமாக எடுத்துரைத்து உள்ளது. இதில் முக்கியமாக 2030–ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தண்ணீர் தேவை 2 மடங்கு அதிகரிக்கும் எனவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 2020–ம் ஆண்டுக்குள் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்துவிடும். இதனால் அந்த நகரங்களில் வசிக்கும் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் 2050–ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும்’ என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் 60 கோடி பேர் கடும் குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், நாட்டின் 70 சதவீத நீர் நிலைகள் மாசடைந்து இருப்பதாகவும் கூறியுள்ள நிதி ஆயோக், பாதுகாப்பான குடிநீர் இல்லாததால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மரணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளது. நீர் மேலாண்மை விவகாரத்தில் இந்திய மாநிலங்களை, பொது மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் என இரண்டாக நிதி ஆயோக் பிரித்துள்ளது. இதில் பொது மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா முதலிடத்திலும், இமாசல பிரதேசம், சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. ஜார்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் மிகவும் மோசமான நீர் மேலாண்மையை கொண்டிருப்பதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு மூலம் நடவடிக்கை



ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துவிட்டதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக சுப்ரீம் கோர்ட்டு மூலம் முயற்சி செய்ய இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

ஜூன் 16, 2018, 05:45 AM
சென்னை,

ராஜீவ்காந்தி கொலை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதால், அதை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இதற்கிடையே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக் கும் தங்களை விடுதலை செய்யக்கோரி இவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்களுடைய கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு இரு கடிதங் களை எழுதியது.

இந்த நிலையில், தமிழக அரசின் மறுஆய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிப்பது குறித்த கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்குமாறு கடந்த ஜனவரி 23-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் உடல்நிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்ப சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. அதன்பேரில் அந்த விவரங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதனால் அவர்கள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் மனிதநேயத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.

இதுபோன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஜனாதிபதி முடிவை எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து உள்ளார்.

மேலும் அவர்களை விடுதலை செய்யக்கோரும் மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என்று தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்களை எந்த காரணத்தைகொண்டும் சுதந்திரமாக நடமாட விடமுடியாது என்று உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்தது பற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து, மத்திய அரசு அந்த தீர்மானத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. அந்த வழக்கிலே சில தெளிவுரைகள் வழங்கப்பட்டு, நிலுவையில் இருக்கிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய மனுவை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நிராகரித்ததாக செய்திகள் வந்து இருக்கின்றன.

இருந்தாலும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசு சார்பில் விளக் கத்தை தெரிவித்து அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...