Tuesday, August 7, 2018


அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே தேர்வு நடைமுறை: முறைகேடுகளைத் தடுக்க அதிரடி மாற்றம்

By DIN | Published on : 07th August 2018 02:09 AM


பல்கலைக்கழகத் தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நடைமுறையை அறிமுகப்படுத்த தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இப்புதிய நடைமுறை மூலம் ஒரு மாணவருடைய விடைத்தாள் எந்த மையத்துக்குச் சென்றுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதோடு, பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட ஒருசில அதிகாரிகளுக்கு மட்டுமே இதைக் கையாளும் அதிகாரம் கொடுக்கப்படும் என்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பிருக்காது என்கின்றனர் உயர் கல்வித் துறை அதிகாரிகள்.

விடைத்தாள் முறைகேடு காரணமாக... அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உண்மையில் தேர்ச்சியடையக் கூடிய மாணவர்களை தோல்வியடையச் செய்திருப்பதும், தகுதியில்லாத மாணவர்களை தேர்ச்சியடையச் செய்திருப்பதும் கல்வியாளர்கள், பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம் கொண்டுவர உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள்: இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு தேர்வு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தேர்வுத் தாளில் மறைமுக எண் (டம்மி' எண்) போடப்படும். அதாவது, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுத் தாள்கள், நேரடியாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஒவ்வொரு மாணவரின் தேர்வுத் தாளுக்கும் டம்மி' எண் போடப்பட்டு, தேர்வுத் தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த நடைமுறையில், ஒரு மாணவர் எளிதில் தனது விடைத்தாளைக் கண்டுபிடித்து முறைகேட்டில் ஈடுபட்டுவிட முடியும் என்பது, அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நடைமுறையை மாற்ற தமிழக உயர் கல்வித் துறை இப்போது முடிவு செய்துள்ளது.

பார் கோட்' நடைமுறை: அதாவது, விடைத்தாள்களில் பார் கோட்' நடைமுறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவருடைய விடைத்தாளின் முதல் பக்கம் பல்கலைக்கழகத்திலேயே வைத்துக்கொள்ளப்பட்டு, விடைகள் இடம்பெற்றிருக்கும் மற்ற பக்கங்கள் மட்டும் சிறப்புக் குறியீடு இடப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

முறைகேட்டுக்கு வாய்ப்பிருக்காது: இச்சிறப்புக் குறியீடு இடும் அதிகாரம் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்பட ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால், முறைகேடு நடைபெற்றால் அவர்கள் மட்டுமே பொறுப்பேற்கவேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும். மேலும், பருவத் தேர்வில் மட்டுமின்றி, விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் விண்ணப்பித்தலின்போதும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படும். எனவே, புதிய நடைமுறை மூலம் முறைகேட்டுக்கு வாய்ப்பிருக்காது என்கின்றனர் கல்வியாளர்கள்.

இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறியது: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு போன்று வரும் காலங்களில் முறைகேடுகள் நடைபெறாத வகையில், புதிய தேர்வு நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது விடைத்தாளில் பார் கோடு' போன்ற ரகசியக் குறியீடு இடம்பெறச் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் நடைமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
குழு அமைக்கப்படும்: இதற்காக உயர் கல்வித் துறை இணைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக பரீட்சார்த்த முறையில் சிறிய அளவில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும்.

இப்போது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு விதமான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியது: தேடும் பணி தீவிரம்
By DIN | Published on : 06th August 2018 11:42 PM

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியதையடுத்து அதை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூருலிருந்து 4 கழுதைப் புலிகள் கொண்டுவரப்பட்டு அவை ஒரு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒரு கழுதைப் புலி கூண்டிலிருந்து தப்பி ஓடியுள்ளது. இன்று மாலை கூண்டிலிருந்த 4 கழுதைப் புலிகளில் ஒரு கழுதைப் புலி காணாதது கண்டு உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை நேரில் பார்வையிட்டனர்.

பின் தப்பி ஓடிய கழுதைப் புலி வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது அதனை சுற்றுயுள்ள பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது எனவே அதை கண்டறிவதற்காக நாளை செவ்வாய்கிழமை உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலும் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளனர். எனவே நாளை காலை முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுதைப் புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.
ரயில்வே ஊழியர்கள் 'பாஸ்' பெற புது வசதி

Added : ஆக 07, 2018 05:01


சென்னை: ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணத்திற்கான, 'பாஸ்' பெற, இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை, தெற்கு ரயில்வே நேற்று அறிமுகம் செய்தது.ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ரயில் பயண, 'பாஸ்' வாங்கவும், அதை பயன்படுத்தி, டிக்கெட் வாங்கவும், ரயில்வே அலுவலகத்திற்கு, இரண்டு முறை வந்து செல்ல வேண்டியிருந்தது. அலைச்சலை தவிர்க்க, இணைய தளம் வாயிலாக, விண்ணப்பிக்கும் வசதி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.இந்த வசதியை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ் ரேஸ்தா, சென்னையில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.இதன்படி, ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே, ரயில் பயண, 'பாஸ்' பெற, ரயில்வே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 'பாஸ்' தயாரானதும், நிலையத்திற்கு வந்து, 'பாஸ்' பெற்று, டிக்கெட் கவுன்டரில், உரிய டிக்கெட்டை பெறலாம்.நேரில் வந்து, 'பாஸ்' பெற முடியாதவர்கள், அவர்களின் அனுமதி பெற்றவர்களை ரயில்வே அலுவலகத்திற்கு அனுப்பி, 'பாஸ்' பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருணை கொலைக்கு கதறிய ராணுவ வீரர்

Added : ஆக 07, 2018 01:10

சேலம்: உறவினர்கள் யாரும் கவனிக்க மறுப்பதால், தன்னை கருணைக் கொலை செய்யும் படி, போலீஸ் கமிஷனரிடம், முன்னாள் ராணுவ வீரர் கதறினார்.சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 85; முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து, கதறி அழுதார். கமிஷனர் சங்கர், அவரிடம் விசாரித்தார்.கிருஷ்ணன் கூறியதாவது:என் தந்தை, தாசில்தாராக பணியாற்றியவர். நான் ராணுவத்தில் சேர்ந்து, சீனாவுக்கு எதிராக போரிட்டுள்ளேன். காஷ்மீரில் கடும் குளிரில், இரவு, பகல் பாராமல் பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பின், மதுரை கலெக்டருக்கு, கார் டிரைவராக பணிபுரிந்தேன். அப்போது, எனக்கு நீரிழிவு நோயின் அறிகுறி தென்பட்டதால், சேலம் வந்து விட்டேன்.நோய்க்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வரும் நிலையில், உறவினர்கள், எனக்கு உணவு தர மறுக்கின்றனர். நோயின் பிடியில் சிக்கி, தினமும் அவதியை சந்திப்பதால், என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.அவருக்கு ஆறுதல் தெரிவித்து, போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது:உங்கள் உறவினர்களுக்கு, தகவல் தெரிவிக்கிறோம். அவர்கள் அளிக்கும் தகவல்படி, உங்களை காப்பகத்தில் சேர்த்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கிருஷ்ணனின் மகன் சுந்தருக்கு, போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் வந்து, தந்தையை அழைத்தார். அவர், செல்ல மறுத்ததால், போலீசார் சமாதானம் செய்து, மகனுடன் அனுப்பி வைத்தனர்.
'முக்கிய கோவில்களுக்கு சுற்றுலா பஸ் இயக்கம்'

Added : ஆக 06, 2018 23:34

திருச்சி: ''திருச்சியிலிருந்து, பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது,'' என்று அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்திருச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:உள்நாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாகவும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில், தற்போது, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டு சுற்றுலா தலங்களுக்கான மேம்பாட்டு நிதி அறிவிக்கப்படும் போது, திருச்சி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெற்று, முக்கொம்பு, கல்லணை போன்ற சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.சுற்றுலா துறை சார்பில், திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து, ஏழுமலையான் கோவில் தரிசனம், தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன், தினமும் 150 பேர் சென்று வரும் வகையில், சென்னையிலிருந்து குறைந்த கட்டணத்தில், சுற்றுலா பஸ் இயக்கப்படுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


அண்ணா பல்கலையில் மறுமதிப்பீடு பணி துவக்கம் : முறைகேட்டில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு அழைப்பு

Added : ஆக 06, 2018 23:27

அண்ணா பல்கலையில், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுத்தாள் மறுமதிப்பீடு பணி தற்போது துவங்கியுள்ளது. இந்த பணிக்கு, முறைகேட்டில் ஈடுபடாத பேராசிரியர்களை அனுப்பும்படி, இன்ஜி., கல்லுாரி களுக்கு பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.அண்ணா பல்கலையில், 2017 ஏப்ரல், மே மாதங்களில், இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்வுத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மறுமதிப்பீட்டில், 73 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாணவரிட மும், தலா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று, அதிக மதிப்பெண் வழங்கியதாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
'டம்மி எண்' : இந்த விவகாரத்தில், பல்கலையின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரியின் முன்னாள் முதல்வர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் இன்ஜி., கல்லுாரிகளை சேர்ந்த, ஏழு பேராசிரியர் களும் வழக்கில் சிக்கிஉள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுத் தாள் மறுமதிப்பீடு பணி, தற்போது துவங்கியுள்ளது. இந்த ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த முறை, சென்னை அண்ணா பல்கலை தேர்வுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், மறுமதிப்பீட்டு பணியை மேற்கொள்ள, துணைவேந்தர் சுரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு தொடர்பாக, கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, தேர்வுத் தாள்களுக்கு சரியான, 'டம்மி எண்' ஏற்படுத்தி, அந்த டம்மி எண்ணை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுத்தாள் திருத்துவதில், எந்த அதிகாரி மற்றும் மைய பொறுப்பாளர்களின் சிபாரிசுகளையும் ஏற்கக் கூடாது என, பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், அனைத்து, இன்ஜி., கல்லுாரிகளுக்கும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, வெங்கடேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களுக்கான தேர்வை நடத்துவது, விடைத்தாளை திருத்தி, முறையாக தேர்வு முடிவை வெளியிடுவது போன்ற நடவடிக்கையில், பல்கலை யின் உறுப்பு கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள் மற்றும் தனியார், இன்ஜி., கல்லுாரிகளின் பங்கு முக்கியமானது.பெரும்பாலான தனியார் கல்லுாரிகள், தங்களின், 70 சதவீத ஆசிரியர்களை, தேர்வுத்தாள் திருத்த பணிக்கு அனுப்பாததால், திருத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

சர்ச்சை : இந்த நிலை தொடர்ந்தால், பேராசிரியர்களை அனுப்பாத கல்லுாரி மாணவர்களின், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும்.மேலும், தேர்வுத்தாள் திருத்தும் நடவடிக்கைகளில், பேராசிரியர்களின் பங்கும், அவர்களுக்கான பொறுப்பும் மிகவும் முக்கியமானது. திருத்த பணிக்கு வரும் பேராசிரியர்கள் தங்களின் மனசாட்சிப்படி, திருத்த பணிகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் மட்டுமே, அந்த பணி அர்த்தமுள்ளதாக இருக்கும்.மாறாக, பொதுமக்கள் மத்தியில், பல்கலையின் தேர்வுத்தாள் திருத்தம் குறித்து, சர்ச்சை ஏற்படும் வகையில், நடந்து கொள்ளக்கூடாது. சமூகத்தில் கசப்பான மற்றும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், கல்லுாரிகளும், அனுபவம் மிக்க, திறமையான, மனசாட்சியுடன் தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்களை, பணிக்கு அனுப்ப வேண்டும்.இந்த ஆண்டுக்கான மறுமதிப்பீட்டில், எந்த பிரச்னைக்கும், சர்ச்சைக்கும் இடமின்றி, தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

போட்டோ வெளியிட கோர்ட் தடை


Added : ஆக 07, 2018 06:42

மதுரை: தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (பிரிஸ்ட் பல்கலை) டிரஸ்ட்மேலாண்மை அறங்காவலர் முருகேசன் மற்றும் அறங்காவலர்கள் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் இந்தியன் வங்கி கிளையில் கடன் வாங்கி, செலுத்தினோம். கடனை செலுத்தத் தவறியதாக போட்டோவுடன் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இது வங்கி விதிகளுக்கு முரணானது.போட்டோவுடன் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கவேண்டும். எங்கள் ஆறு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறுகுறிப்பிட்டனர்.நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு: மனுதாரர்களின் போட்டோக்களை வெளியிடக்கூடாது. கிளைமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக.,20க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றது.

NEWS TODAY 27.06.2026