Saturday, August 11, 2018

முன்னோர் ஆசி பெற இன்று தான் நல்லநாள்

Added : ஆக 11, 2018 05:18



ஆடிஅமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவது குறித்து காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் மகத்துவம் புரியும்.

மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். முன்னோர்களை திருவள்ளுவர், 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகிறார். இவர்களை வழிபடுவது நம் கடமை என்கிறது திருக்குறள். பிதுர்களான தாய், தந்தையர், மூதாதையர் ஆகியோருக்குரிய கடமையை நாம் செய்தாக வேண்டும். 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ' என்று வேத மாதாவும் பெற்றோரை வழிபட நமக்கு வழிகாட்டுகிறாள். அவ்வைப்பாட்டியும், 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று வேத சாரத்தை பிழிந்து கொடுத்திருக்கிறார்.

வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். அவர்களின் காலம் முடிந்த பிறகு செய்யும் 'பித்ரு காரியம்' செய்வதில் தான் அனேகம் பேருக்கு சந்தேகம் எழுகிறது. இதில் இடம் பெறும் எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே தான் இருக்கின்றன.

முன்னோர்கள் மறுபிறவி எடுத்து விட்டதாக சொல்கிறார்கள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றலாம். சாஸ்திரம் விதித்த சட்டப்படி கொடுக்கும் தர்ப்பணத்தை முன்னோரிடம் சேர்ப்பது பிதுர்தேவதைகளின் பொறுப்பு. சிராத்தம் என்பதற்கே 'சிரத்தையோடு செய்வது' என்பது பொருள். முன்னோர் மீது நன்றியுணர்வும், சாஸ்திரத்தின் மீது அக்கறையும் கொண்டு தர்ப்பணம் செய்தால் அவர்களின் நல்லாசியால் நம் வாழ்வு செழிக்கும்......
தமிழகத்தில் கனமழை நீடிக்கும்

Added : ஆக 11, 2018 04:09

சென்னை:'தென் மாநிலங்களில், வரும், 15ம் தேதி வரை கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பருவழை வரும் 15ம் தேதி வரை தென் மாநிலங்களில் நீடிக்கும், படிப்படியாக, வட மாநிலங்களுக்கும் பரவும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றிய பகுதிகளில், இன்று கனமழை பெய்யும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை, வால்பாறையில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு, சின்ன கல்லார், பெரியார், 3; ஜெயங்கொண்டம், மரக்காணம், சென்னை அண்ணா பல்கலை, தேவகோட்டை, குளச்சல், தென்காசி, செங்குன்றம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
டிஜி லாக்கர்' ஆவணங்களை ஏற்பதில் போலீசுக்கு சிக்கல்

Added : ஆக 11, 2018 01:00

சென்னை:'ஒரிஜினல் லைசென் சுக்கு பதிலாக, டிஜிட்டல் வடிவில் காட்டும், 'டிஜி லாக்கர்' முறைக்கு மாறுவதில் சட்ட சிக்கல் உள்ளது' என, போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், சாலை விபத்துகள் அதிகரித்த நிலையில், அவற்றை கட்டுப்படுத்தும்படி, மத்திய சாலை பாதுகாப்பு ஆணையமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டன.இதையடுத்து, தமிழக அரசு, டிரைவிங் லைசென்ஸ், வாகன உரிமைக்கான, ஆர்.சி., புத்தகம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என, உத்தரவிட்டது.

'இதனால், சாலை விபத்துகள் மட்டுமின்றி, வாகன திருட்டுகள், குற்றச்செயலில் ஈடுபடுவோர் திருட்டு வாகனங்களை பயன்படுத்துவது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது போன்ற நடைமுறை சிக்கல்களையும் களைய முடியும்' என, போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு, 'ஒரிஜினல் டிரைவில் லைசென்சை வைத்திருப்பதில் என்ன பிரச்னை உள்ளது; அதை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தது.

இதனால், ஒரிஜினல் உரிமமின்றி வாகனம் ஓட்டுவோர், 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாத் சிறை தண்டனை பெறும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், 'லைெசன்ஸ், ஆர்.சி.புத்தகம் உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான ஆவணங்களை, இனி, மத்திய அரசின் செயலியான, டிஜி லாக்கர் என்னும், மொபைல் ஆப் வழியாக காண்பித்தால், ஏற்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒரிஜினல் லைசென்ஸ் உத்தரவை எதிர்த்து, டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடுத்த போது, தமிழக போக்குவரத்து துறை சார்பில், எதிர் வாக்குமூலமாக பல ஆவணங்களை அளித்துள்ளது. இதை வைத்துதான், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது, 'டிஜிலாக்கர்' செயலியில், அசல் ஆவணங்களை ஏற்பதில் சட்ட சிக்கல் உள்ளது. மேலும், மத்திய அரசு, டிஜிட்டல் ஆவணம் குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக, ஆலோசனை மட்டுமே வழங்கி உள்ளது. இதுகுறித்து, பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
268 மருத்துவ, 'சீட்' இன்று, 'கவுன்சிலிங்'

Added : ஆக 11, 2018 00:44

சென்னை:இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், 268 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இன்று நடைபெற உள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 4,699 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7 வரை நடந்தது; அனைத்து இடங்களும் நிரம்பின.

இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று முதல், 13 வரை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதில், எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைத்து, கல்லுாரிகளில் சேராதவர்களின், 241 இடங்கள், பி.டி.எஸ்., படிப்பில் சேராதவர்கள், 27 என, மொத்தம், 268 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இது குறித்து, மருத்துவ தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியவது:அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 98 இடங்கள்; அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்கள் சேராத, 30 இடங்கள்; தனியார் கல்லுாரிகளில் சேராத, 113 இடங்கள்; அரசு பல் மருத்துவ கல்லுாரியின், 27 என, 268 இடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மேலும், இடங்களை பெற்று கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், காலியாக இருக்கும் கல்லுாரிகளில் சேர விரும்பினாலும், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

பி.ஆர்க்., படிப்பில் 900 இடங்கள் காலி

Added : ஆக 10, 2018 23:32


சென்னை:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, கட்டடவியல் படிப்புக்கான கவுன்சிலிங், சென்னையில் நேற்று நடந்தது.

இதற்கு, 1,604 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 1,408 பேர் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்; 1,122 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 2,000 இடங்களில், 900 இடங்கள் காலியாக உள்ளன. பி.ஆர்க்., படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களில், 'நாட்டா' என்ற, தேசிய நுழைவு தேர்வு எழுதாதவர்களுக்கு, அரசின் சார்பில், தனி நுழைவு தேர்வு இன்று நடத்தப்படுகிறது.

மீண்டும் தூசி தட்டப்படும் ஆருஷி வழக்கு: தல்வார் தம்பதிக்கு சிக்கல்

Added : ஆக 11, 2018 06:44



புதுடில்லி: உ.பி., மாநிலம், நொய்டாவை சேர்ந்த டாக்டர் தம்பதி, ராஜேஷ், நுபுர் தல்வார். 2008ல், தங்கள், 14 வயது மகள், ஆருஷியும், வீட்டு வேலைக்காரர் ஹேமராஜும், ரகசிய உறவு வைத்திருந்ததாக, ராஜேஷ், நுபுர் தல்வார் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், 2008, மே மாதம், தன் வீட்டு அறையில், ஆருஷி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்;
அந்த வீட்டு மொட்டை மாடியில், ஹேம்ராஜ் இறந்து கிடந்தார்.இந்த வழக்கை, உ.பி., போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்ததால், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2013ல், ராஜேஷ் மற்றும் நுபுருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இருவரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். 2017ல், ராஜேஷ், நுபுர் தல்வாரை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, ஹேம்ராஜின் மனைவி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.இந்நிலையில், ராஜேஷ், நுபுர் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ.,யும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது.'ஹேம்ராஜ் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவுடன், சி.பி.ஐ.,யின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும்' என, நீதிபதி, ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்
தேசிய செய்திகள்

2 முறைக்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு?




பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2018 04:45 AM

புதுடெல்லி,

‘நீட்’ தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஒருமுறைக்கு பதிலாக 2 முறை நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.

பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்படும் எனக்கூறிய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இந்த தேர்வுடன் என்ஜினீயரிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறினார். இந்த தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறனாய்வு நிறுவனம், இந்த தேர்வுகளை நடத்தும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த இருமுறை வாய்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சகம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நீட் தேர்வை இருமுறை நடத்துவதால், இந்த தேர்வு கால அட்டவணை மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

மேலும் ஆன்லைனில் தேர்வு நடத்துவதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் சுகாதார அமைச்சகம் தனது கடிதத்தில் கவலை வெளியிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து ‘நீட்’ தேர்வை ஆண்டுக்கு இருமுறை என்பதற்கு பதிலாக ஒருமுறையே நடத்துவது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனினும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

NEWS TODAY 28.06.2026