Tuesday, August 14, 2018

பக்தர்கள் வெள்ளத்தில் ஆண்டாள் தேரோட்டம்

Added : ஆக 14, 2018 06:05

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.ஆக.5ல் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி இரவு 2:00 மணியளவில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, 3:30 மணிக்கு திருத்தேருக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பாலாஜிபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.காலை 7:20 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டது. கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகளையும் சுற்றி, காலை 9:46 மணியளவில் தேர் நிலை வந்தடைந்தது.விழாவில் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, டி.ஐ.ஜி. பிரதீப்குமார், தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள் ஜெகநாதன், ஹரிஹரன், நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாத்துளிகள்* ஆண்டாள் தேரோட்ட வரலாற்றில் முதல்முறையாக புறப்பட்ட 2 மணி நேரத்தில் தேர்நிலை வந்தடைந்தது.* கருணாநிதியின் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததால், அரசு பிரமுகர்கள் துவக்கி வைக்காத தேரோட்டமாக நேற்று அமைந்தது.* காலை 7:20 க்கு தேரோட்டம் அறிவிக்கபட்ட நிலையில் அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து தேர் இழுத்தனர்.
பல்கலை அதிகாரிகளிடம் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு அனுமதி

Added : ஆக 14, 2018 03:27

சென்னை: அண்ணா பல்கலை விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில், அதிகாரிகளிடம் நேரடி விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, விடை திருத்த மைய பொறுப்பாளர்கள் சிவகுமார், விஜயகுமார் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பேராசிரி யர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்த, பல்கலை மற்றும் உயர்கல்வி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.இதன்படி, பேராசிரியர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி, விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளனர். பேராசிரியர்கள் தரப்பில் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதால், முதலில் விசாரணை நடத்தவும், விசாரணை முடியும் போது, நீதிமன்ற வழக்கின் நிலையை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தாம்பரம் - செங்கோட்டை இடையே தினமும் அந்தியோதயா ரயில் அறிமுகம் : புதிய ரயில் கால அட்டவணையில் அறிவிப்பு

Added : ஆக 14, 2018 03:23

சென்னை: தாம்பரம் - செங்கோட்டை இடையே, தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது. புதிய ரயில் கால அட்டவணையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே, 2018 - 19க்கான புதிய ரயில்வே கால அட்டவணையை, இன்று இணையதளத்தில் வெளியிடுகிறது.

 இதன் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை, செய்திக்குறிப்பாக நேற்றிரவு வெளியிட்டது. அதன் விபரம்:சென்னை, சென்ட்ரலில் இருந்து புறப்படும், 14 ரயில்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்ட்ரல் வரும், 23 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 15 நிமிடங்கள் வரை மாற்றப்பட்டுள்ளது.எழும்பூரில் இருந்து புறப்படும், 14 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 30 நிமிடங்கள் வரையும், வெளியூர்களில் இருந்து எழும்பூர் வரும், 18 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 25 நிமிடங்கள் வரையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

.பகல் நேர புதிய ரயில்  தாம்பரம் - செங்கோட்டை இடையே, தினசரி அந்தியோதயா ரயில், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி வழியாக பகல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, காலை, 7:00க்கு புறப்பட்டு, இரவு, 10:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00க்கு புறப்பட்டு, இரவு, 10:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் போக்குவரத்து துவக்கம் மற்றும் வழியில் உள்ள நிறுத்தங்கள் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும்எக்ஸ்பிரஸ்கள் நீட்டிப்பு இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், இரண்டு பயணியர் ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே, நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளன. கவுஹாத்தி - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், திப்ரூகர் - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன கடலுார் - விருத்தாசலம் பயணியர் ரயில், திருப்பாதிரிபுலியூர் வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளனவேகம்

அதிகரிப்பு தாம்பரம் - நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் உட்பட, 18 ரயில்களின் வேகம், ஐந்து நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் முன்னதாக சென்றடையும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது மும்பை சி.எஸ்.டி., - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ், 45 நிமிடங்களும்; நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., இடையே, வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும், சி.எஸ்.டி., எக்ஸ்பிரஸ், 30 நிமிடங்களும் முன்னதாக சென்றடையும் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும், நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், 25 நிமிடங்கள் முன்னதாக செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - காச்சிக்குடா எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள், 15 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும்

கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், மும்பை சி.எஸ்.டி. - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கொல்லம் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் வேகமும், பயண நேரம், 10 நிமிடம் குறையும் வகையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சிலம்பு, திருச்செந்துார், நெல்லை மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சதாப்தி ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு ள்ளது.

சித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்

Added : ஆக 13, 2018 23:31

சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு, 396 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 916 இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம், சென்னை - அரும்பாக்கம், நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம், நாகர்கோவில் - கோட்டார் அரசு மருத்துவ கல்லுாரிகளில், இன்று துவங்குகிறது. செப்., 5, மாலை, 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5 மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ கவுன்சிலிங் இடங்கள், 'ஹவுஸ்புல்'

Added : ஆக 13, 2018 23:30

சென்னை: இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான, 3,501 இடங்களுக்கும், பி.டி.எஸ்., படிப்பிற்கான, 1,198 இடங்களுக்குமான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7ம் தேதி வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பின.இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாதவை மற்றும் கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று, கல்லுாரிகளில் சேராதோர் என, 268 இடங்கள் காலியாகின.இதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், ஆக., 11ல் துவங்கியது. இரண்டு நாட்களில், 192 இடங்கள் நிரம்பி, 76 இடங்கள் மீதமிருந்தன. மூன்றாம் நாளான நேற்று, 76 இடங்களும் நிரம்பின.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், 17ம் தேதிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும். தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், விரைவில் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நடை இன்று திறப்பு பக்தர்கள் வரவேண்டாம் என வேண்டுகோள்

Added : ஆக 14, 2018 06:06

சபரிமலை: நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. பம்பை ஆறு கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. நாளை காலை 6:00 முதல் 6:30 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது.மழை காரணமாக பம்பை கரைபுரண்டுஓடுகிறது. பக்தர்கள் பம்பையில் கடக்கும் இரண்டு பாலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பம்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தேவஸ்தான மண்டபங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.எனவே பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டாம் என்றும், மீறி வருபவர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.பக்தர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், சன்னிதானத்தில் நிறைபுத்தரிசி பூஜை வழக்கம் போல் நடைபெறும்.
முன்னாள் சபாநாயகர் சோம்நாத் காலமானார்

Added : ஆக 13, 2018 23:41



கோல்கட்டா: லோக்சபா முன்னாள் சபாநாயகரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான, சோம்நாத் சாட்டர்ஜி, 89, உடல் நலக் குறைவால், கோல்கட்டாவில் நேற்று காலமானார்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, சோம்நாத் சாட்டர்ஜி, 1968ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக பதவி வகித்துள்ள அவர், 10 முறை, லோக்சபா உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.கடந்த, 2004 - 2009ல், லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார். கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்ட சோம்நாத், மருத்துவமனையில், 40 நாட்கள் சிகிச்சை பெற்றார்.பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, சமீபத்தில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.இருப்பினும், 7ல், உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.அங்கு, சிறுநீரகம் உட்பட முக்கிய உறுப்புகள் செயல் இழந்ததால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.இறப்புக்கு பின், தன் உடலை தானம் செய்வதாக, சோம்நாத் சாட்டர்ஜி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, அவரது உடல், கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'இந்திய அரசியலில் மாபெரும் தலைவராக திகழ்ந்தவர், சோம்நாத் சாட்டர்ஜி; நம் பார்லிமென்ட் ஜனநாயகத்தை செம்மைப்படுத்தியவர்' என, கூறியுள்ளார்.
காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட செய்தியில், 'சிறந்த தலைவராக திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, கட்சி பேதமின்றி, அனைத்து அரசியல் தலைவர்களாலும் உயர்வாக மதிக்கப்பட்டவர்' என, தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'லோக்சபா சபாநாயகராக, 2004 ஜூன் முதல், 2009 மே வரை பதவி வகித்து, சபையை திறம்பட வழி நடத்தியவர். 'அவர் இறந்த செய்தி அறிந்து, மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என, கூறியுள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன் உட்பட பல்வேறு தலைவர்கள், சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


நேர்மை... துாய்மை... எளிமை!

சிறந்த பார்லிமென்ட் உறுப்பினராக திகழ்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, பொதுவாழ்வில் நேர்மை, துாய்மையை கடைபிடித்தார். சபாநாயகராக இருந்தபோது அரசு மாளிகையில் தங்கினார். அரசு நிதியை பயன்படுத்திக் கொள்ள சட்டத்தில் இடமிருந்தும், சொந்த தேவைகளை தன் செலவிலேயே நிறைவேற்றினார். வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்றபோது, குடும்பத்தினர் உடன் வந்தால், அவர்களுக்கான செலவை சொந்தப் பணத்திலிருந்து செலுத்தினார்.

முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அசாமின் தேஜ்பூரில், 1929 ஜூலை, 25ல் பிறந்தார். இவரது தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜி, அகில பாரதிய ஹிந்து மகா சபையின் நிறுவனர்களில் ஒருவர். கோல்கட்டாவில் கல்லுாரிப் படிப்பை முடித்த சோம்நாத், சட்டம் பயின்று சிறந்த சட்ட வல்லுனராக விளங்கினார். அரசியலில் நுழைவதற்கு முன், கோல்கட்டா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். எம்.பி.,யாக இருந்த இவரது தந்தை இறந்தவுடன், பர்தவான் தொகுதிக்கு, 1971ல் நடந்த லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் ஆதரவுடன், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு முதன்முறையாக லோக்சபா, எம்.பி., ஆனார். பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த அவர், மேற்கு வங்கத்தின், ஜாதவ்பூர் (இரண்டு முறை), போல்பூர் (ஏழு முறை) தொகுதிகளில் போட்டியிட்டு, 10 முறை லோக்சபாவுக்கு தேர்வானார்.கடந்த, 1989 - 2004 வரை லோக்சபாவில் மார்க்சிஸ்ட் தலைவராக இருந்தார். இவரின் சிறந்த செயல்பாட்டை பாராட்டி, 1996ல், சிறந்த பார்லிமென்ட் உறுப்பினர் விருது வழங்கப்பட்டது. 2004 - -2009 வரை, மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார். இவரே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல் சபாநாயகர். பதவிக்காலத்தில் லோக்சபாவை சிறப்பாக வழிநடத்தினார். மக்களின் வரிப்பணத்தில் பார்லிமென்ட் செயல்படுகிறது என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டிய இவர், சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து, மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது என, அறிவுறுத்தினார்.

கடந்த, 2008ல், காங்., அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கொண்டு வந்தது. ஆனால், சோம்நாத் சாட்டர்ஜி இதை ஆதரிக்கவில்லை. இதையடுத்து, மார்க்., கம்யூ., கட்சியிலிருந்து சாட்டர்ஜி நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 'என் வாழ்நாளில் மிக சோகமான நாள்' என, குறிப்பிட்டார்.

10 முறை எம்.பி., : மறைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 1971 - 2004 வரை மேற்கு வங்கத்தில் இருந்து, 10 முறை, எம்.பி.,யாக வெற்றி பெற்றார்.ஒருமுறை மட்டும், 1984ல் ஜாதவ்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். லோக்சபா வரலாற்றில் அதிகபட்சமாக, 11 முறை, எம்.பி.,யாக இருந்தவர், இ.கம்யூ., கட்சியை சேர்ந்த இந்திரஜித் குப்தா.இரண்டாவது இடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், காங்கிரசின் சயீத் ஆகியோருடன் சோம்நாத் சாட்டர்ஜியும் உள்ளார். மூவரும், 10 முறை, எம்.பி., யாக இருந்துள்ளனர்.

NEWS TODAY 28.06.2026