Sunday, September 9, 2018

அரவணைப்பே தற்கொலைக்கான தடுப்பு மருந்து!

Published : 08 Sep 2018 11:30 IST

நீரை.மகேந்திரன்





உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் - செப்டம்பர் 10

‘தற்கொலை மிகவும் தனிப்பட்ட விஷயம். புரிந்துகொள்ளவே முடியாதது’ என்கிறார் உளவியல் மருத்துவர் கே. ரெட்ஃபீல்டு ஜேமிசன். உலகில், சாதாரண மனிதர்கள் முதல் சாதனை நிகழ்த்தியவர்கள் வரை தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியல் நீளமானது.

தற்கொலை எண்ணம் உருவாவதற்கான காரணங்கள், நபர்களைப் பொறுத்து வேறுபட்டாலும், நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாகவே தற்கொலை முடிவுகள் நம்பப்படுகின்றன என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தம் தற்கொலைக்குக் காரணமாக இருக்கிறது என்றால், வேலையில்லாத விரக்தி இன்னொருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைகிறது.

சமீபகாலமாக, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, விபத்து, விவாகரத்து எனக் குடும்ப அமைப்புகளின் சிதைவால் ஏற்படும் குழப்பம், காதல் பிரச்சினைகளில் ஏற்படும் கோபம், பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அது அவர்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தை முடிவு செய்வதாக அமைகிறது. இளைஞர்கள் மிக எளிதாக மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

ஆனால், தற்கொலை செய்துகொள்ள முனைபவர்கள் சாக விரும்புகிறார்கள் என்ற தவறான எண்ணம்தான் நம்மிடம் இருக்கிறது. உண்மையில், ‘அவ்வாறு முயல்பவர்கள் அந்தச் சூழலில் இருந்து தங்களைக் காப்பாற்ற யாருமில்லையே, தங்களை அரவணைக்க யாருமில்லையே’ என்ற அழுத்தத்தில்தான் அப்படியான முடிவைத் தேடுகிறார்கள் என்கிறார் வெ. இறையன்பு.

தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் நூல்களை எழுதி வந்தவர், தற்போது தற்கொலை எண்ணத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க, ‘உச்சியிலிருந்து தொடங்கு’ என்ற தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி நூலைக்கொண்டு வந்திருக்கிறார். ‘உலகத் தற்கொலைத் தடுப்பு நாளை’ முன்னிட்டு அவருடன் உரையாடியதிலிருந்து ...

இன்றெல்லாம் மிக இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்களே. என்ன காரணம்?

சிறு வயதில் பாலியல்தொல்லை களை அனுபவித்தவர்கள் வளர்ந்த பிறகு, அவர்களிடையே தற்கொலை எண்ணம் தலைதூக்குவதற்கு ஐந்து மடங்கு சாத்தியம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சின்ன வயதில் ஒரு குழந்தை எப்படி நடத்தப்படுகிறது என்பதுதான், அதன் தன்னம்பிக்கைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


ஒரு முறை தற்கொலைக்கு முயன்றவர், தற்கொலையில்தான் சாவார் என்பது உண்மையா?

தற்கொலை குறித்து நிறைய கற்பிதங்கள் இருக்கின்றன. தற்கொலை பற்றி நிறையப் பேசுகிறவன் செய்ய மாட்டான், ஒரு முறை தோற்றவன் மறுபடி முயல மாட்டான், சோர்ந்திருந்தவன் மகிழ்ச்சியடைந்தால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவிட்டான், தற்கொலை செய்யத் தீர்மானித்து விட்டவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பன போன்ற பல பொய்யான தகவல்கள் நம்மிடம் இருக்கின்றன.

எப்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

சாதாரணமாக நம்மிடம் பழகுபவர்கள் சாப்பிடுவதிலும், தூங்குவதிலும் பெரிய வித்தியாசம் இருப்பது, நண்பர்களிடமிருந்தும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் விலகியிருப்பது, போதைப்பொருள் உட்கொள்வது, தோற்றத்தில் அக்கறையில்லாமலிருப்பது, பள்ளிப் பாடங்களைப் புறக்கணிப்பது, விரும்பும் செயல்களைச் செய்யாமலிருப்பது, மற்றவர்கள் பாராட்டைப் பொருட்படுத்தாம லிருப்பது, வன்மத்துடன் செயல்படுவது, வாகனங்களைத் தாறுமாறாக ஓட்டுவது, பழக்கவழக்கங்களில் மாற்றம், சாவு குறித்த புத்தகங்களை அதிகம் வாசிப்பது போன்றவை எச்சரிக்கைக்குரிய நடவடிக்கைகள்.

வன்மத்தின் அடிப்படையில் நிகழும் தற்கொலைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

வன்மத்தை மற்ற வர்கள் மீது திருப்பினால் அது கொலை. தன் மீதே திருப்பிக்கொண்டால் அது தற்கொலை. திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் மரணங்களை நான் சார் ஆட்சியராக இருந்தபோது விசாரித்திருக்கிறேன். அவர்களில் பலர் சின்ன மனஸ்தாபத்தில் மடிந்து போனவர்கள். தன் சாவால் கணவனோ மாமியாரோ வருத்தமடைய வேண்டும் என்ற நோக்கமே அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது.

தற்கொலை தவறு என்ற புரிதல்கொண்ட படித்தவர்கள்கூட தற்கொலைதான் தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதேன்?

பணியிடத்தில் கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட காயங்கள், அது ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை காரணமாக இத்தகைய தற்கொலைகள் நடப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் அதிக அளவில் நடைபெறுகிறது.

தற்கொலைகளைத் தடுக்க, ஒரு நிர்வாகியாக நீங்கள் சொல்லும் தீர்வு என்ன…?

வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டிய வேலை இது. மதிப் பெண்களோ பணமோ முக்கியமல்ல என்பதைக் குழந்தைகளிடம் பெற்றோர் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். குழந்தைகளின் போக்கை அறிந்து அதற்கேற்றவாறு ஆலோசனை, மனநல மருத்துவம் போன்றவற்றால் சரி செய்ய முயல வேண்டும். நண்பர்களும் பதின்ம வயதில் வித்தியாசமான போக்குடைய மாணவர்களை அறிந்து, பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதற்கடுத்து, போதைப் பொருட்களை உட்கொள்கிறவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. முதியவர்களின் தனிமையைப் போக்கும் சூழலும் அவசியம். இவற்றை ஒரே நாளில் மேற்கொண்டுவிட முடியாது. ஆனால், இவை குறித்த விழிப்புணர்வு அவசியம்.
சேலம்: விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் - கலெக்டர் அறிவிப்பு



சேலம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை கலெக்டர் ரோகிணி அறிவித்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 09, 2018 05:00 AM

சேலம்,

நாடு முழுவதும் வருகிற 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். அவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (ஆறு, ஏரி மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. சேலம் மாநகராட்சியில் உள்ள அம்மாப்பேட்டை ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி மற்றும் மாவட்டத்தில் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆறு மற்றும் மேட்டூர் காவிரி ஆற்றில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

குரூப்-4 தேர்ச்சி, அசல் சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம்



குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அசல் சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளாா்.

பதிவு: செப்டம்பர் 09, 2018 03:45 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கடந்த மாதம் வெளிவந்த குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி இணையம் வாயிலாக மேற்கொள்ள இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களது அசல் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது,

அதையொட்டி. குரூப் -4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கு அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

எனவே, கடந்த மாதம் வெளிவந்த குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வருகிற 18-ந்தேதி வரை அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கிரெடிட் கார்டு லிமிட்’... சில விவரங்கள்



கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான்.

பதிவு: செப்டம்பர் 08, 2018 15:09 PM

கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது.

அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது.

சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.

இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.

உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...

முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.

உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.

ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.

கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.

கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.

பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
'யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாத எம்.பில்., படிப்பு ஊக்க ஊதியம் ரத்து செய்யப்பட்டது சரியே'

Added : செப் 09, 2018 03:19

சென்னை:'பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., ஒப்புதல் வழங்காத படிப்பை, நிகர்நிலை பல்கலையில் படித்தவர்கள், ஊக்க ஊதியம் பெற உரிமையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, சிவன் தாக்கல் செய்த மனு:பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்; ௨௦௦௯ல், சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலையில், எம்.பில்., பட்டம் பெற்றேன். அதன் அடிப்படையில், எனக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. 

ஊக்க ஊதியம்

பல்கலை மானிய குழு சட்டப்படி, இந்த, எம்.பில்., பட்டம் செல்லாது என்பதால், ஊக்க ஊதியம் வழங்க, தணிக்கை அதிகாரி ஆட்சேபனை தெரிவித்தார்.இதையடுத்து, ஊக்க ஊதியத்தை ரத்து செய்து, கோவையில் உள்ள தணிக்கை அதிகாரி உத்தரவிட்டார். அவரின் உத்தரவை ரத்து செய்து, தொடர்ந்து ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இவரைப் போல, மேலும், ௧௨ பேரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர், கே.கார்த்திகேயன், யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர், பி.ஆர்.கோபிநாதன் ஆஜராகினர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஆசிரியர்கள், உயர் கல்வி பெறுவதன் வாயிலாக, மாணவர்கள் பயன் அடைய வேண்டும். அந்த நோக்கத்துக்காக தான், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஆசிரியர்கள் பெறும் பட்டங்கள், செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.திறந்தவெளி பல்கலைகள், அங்கீகாரமில்லாத பல்கலைகளில் பெறும் பட்டங்கள் மற்றும் அங்கீகாரமில்லாத படிப்புகளை, ஊக்க ஊதியம் பெற, பரிசீலிக்க முடியாது. சட்டப்படியாக வழங்கப்படும் படிப்புகளுக்கு மட்டுமே, ஊக்க ஊதியம் வழங்க முடியும்.

எனவே, யு.ஜி.சி., ஒப்புதல் அளிக்கும் பட்டங்கள் மட்டுமே, வேலை வாய்ப்புக்கும், அரசு சலுகைகள் பெறுவதற்கும், செல்லத்தக்கதாக கருத முடியும். மனுதாரர்கள் பெற்ற, எம்.பில்., பட்டங்கள், சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.

நடவடிக்கை

ஏனென்றால், தொலைதுார கல்வி வழியாக வகுப்புகள் நடத்த, விநாயகா மிஷன் பல்கலைக்கு, அனுமதி வழங்கப்படவில்லை. யு.ஜி.சி.,யின் சுற்றறிக்கையை மீறி, வகுப்புகளை நடத்துபவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.நிகர்நிலை அந்தஸ்தை ரத்து செய்யவும், யு.ஜி.சி.,க்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அபூர்வமாக தான் இத்தகைய நடவடிக்கைகளை, யு.ஜி.சி., எடுக்கிறது.

பல்கலைகளின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணித்து, மாணவர்களின் நலன் பாதிக்கப்படாமல் இருப்பதை, யு.ஜி.சி., உறுதி செய்ய வேண்டும். யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லாத பாடங்கள் பற்றி, மாணவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.படிப்பை முடித்த பின் தான், அவர்களுக்கு, அந்த விபரம் தெரிய வரும். அதனால், அனுமதி இல்லாத வகுப்புகளை நடத்துபவர்களுக்கு எதிராக, தகுந்த நடவடிக்கை எடுக்கும் கடமை, யு.ஜி.சி.,க்கு உள்ளது.

எனவே, மனுதாரர்கள் பெற்ற, எம்.பில்., பட்டத்துக்கு, ஊக்க ஊதியம் பெற உரிமை இல்லை. அவர்கள் பெற்ற ஊக்க ஊதியத்தை வசூலிப்பது குறித்து, ௧௨ வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை, அரசு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆசிரியை மீது, 'ஜொள்ளு' : பள்ளி மாணவன் அடாவடி

Added : செப் 09, 2018 01:11 |




குடியாத்தம்: ஆசிரியைக்கு, காதல் குறுந்தகவல்களை அனுப்பி, தொல்லை கொடுத்து வந்த பள்ளி மாணவனிடம், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின், ஆங்கில பாட ஆசிரியை மாலா, 24. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் மீது, பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவன் ஒருவன், காதல் கொண்டான்.இதையறிந்த ஆசிரியை,புத்திமதி கூறி, அவனை திருத்தப் பார்த்தார். அதை பொருட்படுத்தாத மாணவன், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, காதல் ரசம்சொட்டும் குறுந்தகவல்களை, அனுப்பிக் கொண்டே இருந்தான்.பள்ளிச் சுவரில், ஆசிரியை குறித்து காதல் கவிதைகளை எழுதினான்.கடந்த, 6ம் தேதி, ஒரே நாளில், ஆசிரியையின் மொபைல் போனுக்கு, 160 காதல் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான்.இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், ஆசிரியை புகார் செய்தார். அதிகாரிகள் விசாரணையில், புகார் உறுதிப்படுத்தப்பட்டது.'இது குறித்த விசாரணைஅறிக்கை, கல்வித்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேலுார் மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.
5 'டீன்' பதவிக்கு 10 பேர் பரிந்துரை

Added : செப் 09, 2018 01:55


சென்னை:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, ஐந்து, 'டீன்' பணியிடங்களுக்கு, 10 பேரை, மருத்துவ கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில், 22 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளன. அதில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, தேனி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், ஐந்து மாதங்களுக்கும் மேலாக, டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு, மூத்த டாக்டர்கள், பொறுப்பு டீன்களாக பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், காலியாக உள்ள, ஐந்து பணியிடங்களுக்கு, 10 சீனியர் டாக்டர்களின் பெயர்களை, மருத்துவ கல்வி இயக்ககம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, ஐந்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், ஓரிரு நாட்களில் பணியிடங்கள் நிரப்பப்படும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...