Sunday, September 9, 2018

Education

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் டாக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரை அடுத்துள்ளது உத்தனப்பள்ளி என்னும் குக்கிராமம். இங்குள்ள அரசு பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சமீபகாலமாக பெரும் மரியாதையுடன் உச்சரிக்கும் ஒரு பெயர் ‘டாக்டர் சாரு’. யார் அந்த டாக்டர் சாரு? அவருக்கும் இந்த கிராமத்திற்கும் என்ன தொடர்பு என்றால், அங்கு வியப்பே மேலிடுகிறது.

மரியாதைக்குரிய அந்த டாக்டர் சாரின் பெயர் 24வயது நிரம்பிய கலையரசன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி அடுத்துள்ளகோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டி லட்சுமியம்மாளின் அரவணைப்பில் வளர்ந்தவர். உத்தனப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆரம்ப கல்வியை பயின்ற கலையரசனுக்கு, தினமும் அங்கு கிடைத்த மதிய உணவுமட்டுமே பசியை போக்கியது. ஆனால் கல்வியின் மீதான பசியே அவருக்கு அதிகமாக இருந்தது. தொடக்க கல்வியை முடித்து, அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தவர், பொதுத்தேர்வில் 500க்கு 468 மதிப்பெண்கள் எடுத்தார். அவரது மேல்படிப்பை தொடர அரசுப்பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்களும் உதவிக்கரம் நீட்டினர்.

இதனால் ஓசூரிலுள்ள தனியார் பள்ளியில் மேல்நிலைக்கல்வியை தொடர்ந்த கலையரசன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1166 மதிப்பெண்கள் பெற்றார். கட்ஆப் 198.25 மதிப்பெண்கள் கிடைத்ததால் அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம்கிடைத்தது. திறம்பட படித்து டாக்டரான கலையரசன்,கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு திரும்பினார். லட்சம் சம்பளத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவமனைகளில் வேலை கிடைத்தும், கலையரசன் எதையும் ஏற்கவில்லை. குக்கிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு அருகிலேயே, கிளினிக் ஒன்றை தொடங்கியவர் ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறார்.

ஓய்வு கிடைக்கும் நேரத்தில், உத்தனப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். சமூக பணிக்கு அவர் துவக்கியுள்ள புதிய அத்தியாயமே அவரை, ஒட்டு மொத்த கிராமத்தையும் ‘‘டாக்டர் சாரு’’ என்று கொண்டாட வைத்திருக்கிறது.

‘‘ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த எனக்கு, எப்படியாவது ஆசிரியராக வேண்டும் என்பதே அதிகபட்ச லட்சியமாக இருந்தது. ஆசிரியர்கள் தான் கல்வி மட்டுமல்ல, மருத்துவமும் இந்த சமூகத்திற்கான அரிய தேவை என்று உணர வைத்தனர். ஓய்வு நேரங்களில், மனதில் கல்வெட்டாய் பதிந்து விட்ட ஆசிரியர் பணியையும் ஆத்மார்த்தமாய் செய்து வருகிறேன்’’ என்று நெகிழ்கிறார் டாக்டர் சார் கலையரசன்.

Med 2018

''தேர்வுவைக்க புத்திசாலித்தனம் தேவையா?''

''ஒரு மனநோய் மருத்துவமனையைப் பார்வையிட இரண்டு பத்திரிகையாளர்கள் வந்து இருந்தார்கள். 'மனநோய் சரியாகிவிட் டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?' என்று தலைமை மருத்துவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், 'மருத்துவமனைக் குழாயின் அடியில் ஒரு அண்டாவை வைப்போம். பின்பு குழாயைத் திறந்துவிடுவோம். நோயாளிகளிடம் ஒரு வாளியைக் கொடுத்து, அண்டாவில் உள்ள நீரைக் காலி செய்யச் சொல்வோம்' என்றார். குழம்பிய பத்திரிகையாளர்கள், 'இதிலிருந்து அவருக்கு மனநோய் சரியாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?' என்று கேட்டார்கள். 'மனநோய் சரியாகி இருந்தால் முதலில் அவர்கள் குழாயை மூடிவிடுவார்கள்' என்றார்!''

கட்டுரைகள்

கொடூர ‘அபிராமி’கள் உருவாவதற்கான காரணங்களைக் களைய வேண்டாமா?

By கார்த்திகா வாசுதேவன்  

|   Published on : 07th September 2018 02:56 PM  

தான் பெற்ற குழந்தைகளையே கொல்லக் கூடிய மனநிலை ஒரு தாய்க்கோ, தந்தைக்கோ வந்தால் அம்மாதிரியான மனநிலையை மருத்துவ மொழியில் Filicide என்கிறார்கள். 

இந்த மனநிலை உருவாக 2 விதமான காரணங்கள் இருக்கலாம் என்கிறார் சைக்காலஜிஸ்ட் லதா ஜானகி; அவை

1. Emotional Disconnectedness(கணவரிடத்திலும், குடும்பத்திற்குள்ளும், பெற்ற குழந்தைகளிடத்திலும் உணர்வுப் பூர்வமான பிணைப்பு இல்லாமை),
2. சிறு வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாதிக்கப்பட்டவராகவோ (victim)அல்லது சாட்சியாகவோ(Witness) இருந்திருந்து அதனால் உளப்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம். அதனால் கூட மனநலப் பிறழ்வு ஏற்பட்டிருக்கலாம்.

அபிராமி விஷயத்தில் அந்தப் பெண் தன் கணவரை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தவர் என்ற போதும் கூட கணவரை விடுத்து இன்னொரு ஆணை நாடக் காரணமாக அமைந்தது கூட உணர்ச்சிகளைச் சரியாகக் கையாளத் தெரியாமலும், தன்னுடைய உணர்வுகளுக்கு கணவரிடத்தில் சரியான பதில் கிடைக்காமல் போனதாலுமாக இருக்கலாம். ஏனெனில் கணவர்களில் பெரும்பாலானோர், காதலிக்கும் போது காதலியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயல்வது போல கல்யாணத்திற்குப் பிறகு முயல்வதே இல்லை. இது கணவன், மனைவி உறவுக்குள் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அத்தகைய புரிதல் வெளியில் கிடைக்கும்படியாகத் தெரிந்தால் அதை நம்பி அவர்கள் மோசம் போகும் படியாகிறது. குடும்ப அமைப்புக்குள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடையே க்வாலிட்டி டைம் செலவழித்தல், குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு புரிதல் கணவன், மனைவி இருபாலருக்கும் அவசியம். அது இல்லாத பட்சத்தில் தான் மேற்கண்ட அவலங்கள் நேர்ந்து விடுகின்றன.

இப்படியானவர்கள் குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு ஆரம்ப நிலையிலேயே சைக்கியாட்ரிஸ்டுகளிடம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்க வாய்ப்பிருந்திருக்குமா? என்றால் அப்படி இல்லை என்கிறார் சைக்காலஜிஸ்ட் லதா ஜானகி. இவரது யூ டியூப் நேர்காணலைக் காணும் போது இந்த உண்மை தெரிய வந்தது.

சைக்கியாட்ரிஸ்டுகள் பொதுவாக தங்களிடம் வரும் மனநல நோயாளிகளிடம் பிரச்னைகளைக் கேட்டு விட்டு உடனே அதற்கான மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு அனுப்பி விடுகிறார்கள். நிஜத்தில் பிரச்னைகள் மருந்துகளால் தீர்வதைக் காட்டிலும் பேசிப் பேசி மனதைக் கரைத்துத்தான் பல பிரச்னைகளைத் தீர்க்க முடியும். அது சைக்காலஜிஸ்டுகளின் வேலை. 1 மணி நேரமானாலும் சரி 2 மணி நேரமானாலும் சரி உளவியல் பிரச்னைகளுடன் எங்களை நாடுபவர்களை அமர வைத்து அவர்களது பிரச்னைகளுக்கான ஆணி வேரைக் கண்டடைந்து அதைக் களைய முயல வேண்டும். அப்போது தான் அவர்களை அந்தப் பிரச்னையில் இருந்து மீட்க முடியும்.

வாழ்க்கைப் பிரச்னை எல்லாக் குடும்பங்களிலும் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம் என்பதில் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றி. இன்றைய இளைஞர், இளம்பெண்களில் 60% க்கும் அதிகமானோர் கணவன், மனைவிக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பல பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வாழ்க்கையை ஆனந்த மயமாகவே வாழ ஆசைப்படுகின்றனர். ஆனால் அந்த ஆனந்தம் என்பது உடனடி நிகழ்வாக நிகழ்ந்தாக வேண்டும் என்ற பிடிவாதம் தான் அவர்களுக்கிடையிலான பிரச்னையின் ஆழத்தை மேலும் அதிகரிக்கச் செய்து அபிராமி விவகாரம் போன்று சிலரது வாழ்வைப் படுகுழியில் தள்ளி விடுகிறது. உளவியல் கவுன்சிலிங் என்பது மிக நிதானமானதொரு நடைமுறை. அதற்கு பொறுமையும், புரிதலும் மிக மிக அவசியமாகிறது. திடீர் சாம்பார், திடீர் ரசம் போல அதை அணுகினால் பலன் கிடைக்காது.

உலக அளவில் ஒரு பழமொழி உண்டு. கணவன், மனைவி பந்தத்தில் 7 ஆண்டுகள் ஒரு தம்பதியால் சேர்ந்து வாழ்ந்து விட முடிகிறதென்றால் அதன் பின் அவர்களுக்குள் பிரிவென்பதே நேராது என்பதே அது. ஆனால், இதில் விதிவிலக்குகள் உண்டு. இன்றைய இந்தியாவில் இது பெரும்பாலும் தற்போது சாத்தியப்படுவது இல்லை. சிலர் வயோதிக காலத்தில் கூட விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிவதும் இந்தியாவில் நிகழத்தான் செய்கிறது. காரணம் கணவன், மனைவிக்கிடையே எந்த வயதில் வேண்டுமானாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றங்களினால் பிரிவுகள் நேர்ந்து விடுவதுண்டு. உறவுகளின் எதிர்பார்ப்பை குறிப்பாக கணவனின் எதிர்பார்ப்புகளை மனைவியும், மனைவியின் எதிர்பார்ப்பைக் கணவரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை சிக்கல் தான். அதை சிடுக்கு எடுக்காமல் நெடுங்காலம் அப்படியே விடும் போது ஏமாற்றத்துடன் இருப்பவர்களுக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டது போலாகி விடுகிறது.

சதா ஏமாற்றத்தில் உழல்பவர்கள் தாங்கள் பிறரால் தனிமைப் படுத்தப் பட்டதாக உணரத் தொடங்கி விடுகிறார்கள். இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு சுயநலமும், சுயபட்சாதாபமும், தன்னை மட்டுமே பிரதானமென்று நினைக்கும் குறுகிய மனப்பான்மை வந்துவிடுகிறது. அதனால் தான் அபிராமி போன்றோர் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது, எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையின்றி பெற்ற குழந்தைகளைக் கொல்வது மாதிரியான விபரீதங்களில் ஈடுபட்டு மொத்த வாழ்க்கையையும் தொலைத்துக் குட்டிச் சுவராக்கி விடுகிறார்கள். இவர்களுக்கு விமோஷனமே இல்லை.

தங்களுடைய சுயநலங்களுக்காகத்  திட்டமிட்டு கொஞ்சமும் ஈவு, இரக்கம் இன்றி பெற்ற குழந்தைகளைக் கொல்வது, கணவரைக் கொல்வது, காதலனைக் கொல்வது, காதலியின் மீது ஆசிட் வீசுவது, முறைகேடான காதலை நிலைக்கச் செய்வதற்காக முன்னரே திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் நபரின் மீதான வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள அவனது குழந்தையைக் கடத்தி கொலை செய்வது என்று விதம் விதமான சைக்கோத்தனங்களில் ஈடுபட்டு தங்களது வாழ்வை தாங்களே மேலும் நரகமாக்கிக் கொள்ள இப்படியானவர்கள் தயங்குவதே இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பூங்கொடி என்ற இளம்பெண், தனது அலுவலக சக பணியாளர் ஒருவருடன் முறையற்ற உறவைத் தொடர்ந்து வந்தார். அந்த நபர் முன்பே திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவர். அவரைத் தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆத்திரத்திலும், தன்னையும் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளச் சொல்லி மிரட்டுவதற்காகவும் இந்தப் பெண் அவனுடைய மகனைக் கடத்தி விடுகிறாள். கடத்தியவள் தனது மிரட்டல் பலிக்காது போனதும் அச்சிறுவனை நன்கு அறிந்தவளாக அவன் மீது பாசம் காட்டியவளாக முந்தைய காலங்களில் இருந்த போதும் கூட தனது எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆத்திரம் புத்தியை மறைக்க  நெஞ்சில் ஈரமின்றி அச்சிறுவனைக் கொன்று சடலத்தை ஒரு பெரிய டிராவல் சூட்கேஸில் வைத்து மூடி பேருந்து நிலையத்தில் அநாதரவாக விட்டுச் சென்று விட்டாள். சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார்  தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது கொலைக்கான காரணம் முறைகேடான உறவால் கிட்டிய ஏமாற்றம் என்று தெரிய வருகிறது.

அந்தப் பெண் பூங்கொடி புழல் சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கிருந்த பெண் கைதிகளால் கடும் தாக்குதலுக்கு உள்ளானதாக அப்போதைய நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இன்று இந்த அபிராமிக்கும் கூட இந்தக் கதி நேரலாம்.

அபிராமிக்குத் தன் கணவனிடத்தில் எதிர்பார்ப்பு வளர்த்துக் கொண்டு ஏமாந்திருக்கலாம். அது அவளுக்கும், அவளது கணவருக்குமிடையிலான பிரச்னை. ஆனால், இங்கு பழி, பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகள் இரண்டு பெற்ற தாயாலேயே விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தான் வேதனையிலும் வேதனை. அவர்களை ஏன் கொல்ல வேண்டும்? என்பது தான் புரியாத புதிர்?! அபிராமி தன் கடமைகளில் இருந்து விடுபட நினைத்திருக்கலாம். ஆனால், அதற்கு கொலை தான் தீர்வு என்று முடிவு செய்தது அவளது வக்கிர மனதைக் காட்டுவதோடு அவளை சமூகத்தின் முன் இரக்கமற்ற அரக்கியாகவும் ஆக்கியிருக்கிறது.

இப்போது அரசும், சட்டங்களும் என்ன செய்ய வேண்டும்? அபிராமிகள் உருவாகாமல் இருக்க காரணங்களைத் தேடிக் களைய வேண்டுமா? அல்லது அபிராமிகள் மாதிரியான அம்மாக்களைத் தேடிக் கண்டடைந்து  அவர்களது குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமா?  நாட்டின் தீர்க்க முடியாத பல பிரச்னைகளில் இதுவும் ஒன்றாகி இருக்கிறது இப்போது.


பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு யாராலும் இனி எந்த காரணமும் கூற முடியாது” -தாயார் அற்புதம்மாள்

Published : 08 Sep 2018 17:22 IST

the hindu tamil



அற்புதம்மாள்: கோப்புப்படம்

பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அற்புதம்மாள். கடந்த 27 ஆண்டுகளாக சிறை வாழ்வை அனுபவித்து 28-வது ஆண்டாகவும் அதனை தொடர்ந்து கொண்டிருக்கும் தன் மகன் பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு யாராலும் இனி எந்த காரணமும் கூற முடியாது என தீர்க்கமாக நம்புகிறார். தன் மகனின் விடுதலை குறித்து வரும் எதிர்மறை கருத்துகளை அவர் மென்மையாக புறந்தள்ளுகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம், அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, எனவே இதுதொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டது. தீர்ப்பின் நகல் 8 -ம் தேதி வெளியானது.

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தன் மகன் விரைவிலேயே விடுதலையாகி விடுவான் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் அற்புதம்மாளை தொடர்பு கொண்டோம்.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் அவர் இருக்கிறார் என அவரது குரலிலேயே தெரிந்தது. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

”உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இனி இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என யாரும் காரணம் சொல்ல முடியாது. பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு கால நிர்ணயம் ஏதும் இருக்கிறதா என ஒன்னும் விளங்கல.

ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்றாங்க. நமக்கு ஒன்னும் புரியல. அதனால குழப்பமா இருக்கு. உத்தரவு நகல் இப்போதுதான் வந்திருக்கிறது. அதனடிப்படையில் முதல்வரை நேரில் சந்தித்து என் கோரிக்கையை வலியுறுத்துவேன். அது என் கடமை. இந்த நடைமுறைகளையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகு அதனை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

அதனால் அறிவு விடுதலையாவான் என எல்லோரும் நம்பிக்கையா இருக்கோம். எங்க நம்பிக்கை உண்மையாகனும். 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதுக்குப் பிறகு வெளியில் வந்திருந்தாலே என் மகன் வெளியில் வந்து 4 ஆண்டுகள் ஆகியிருக்கும்” என்கிறார் அற்புதம்மாள்.

தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்தால் அதை கண்டிப்பாக ஆளுநர் ஏற்றுக்கொண்டு விடுதலை செய்ய வேண்டும். இதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதைத்தாண்டி அவர் இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

“சட்ட நிபுணர்கள் சொல்வது போன்று சீக்கிரம் என் மகன் என்னுடன் வந்துவிட வேண்டும் என்றுதான் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். எல்லாருக்கும் காலம் கடந்துகொண்டே இருக்கிறது. 28 ஆண்டுகள் சிறை என்பது சாதாரணம் இல்லை. தமிழக அரசு இதனை விரைந்து கையிலெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்” என்பதுதான் அற்புதம்மாளின் 28 ஆண்டு கால கோரிக்கையாக இருக்கிறது.

“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்து நான்கு ஆண்டு காலம் கடந்துவிட்டது. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் அதிமுக அரசு தாமதம் இல்லாமல் ஏழு பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் அற்புதம்மாள்.

“அம்மா ஆட்சி நடத்துறோம்னு சொல்றாங்க. ஜெயலலிதா இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இரண்டு முறை முயற்சி எடுத்தாங்க. இரண்டு தடவையும் மத்திய அரசு தடுத்தது. அம்மாவின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று சொல்பவர்கள் அவர் நிறைவேற்றிய சட்டப்பேரவை தீர்மானத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தாமதம் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் இவர்கள் விடுதலையாவதில் தடையில்லை தானே”, என்று எதிர்பார்ப்புடன் கேட்கிறார் அற்புதம்மாள்.

உடல் நலம் குன்றிய தன் தந்தையை காண்பதற்காக கடந்தாண்டு பேரறிவாளனுக்கு செப்டம்பர் மாத வாக்கில் 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அப்போது, பேரறிவாளனும் தங்கள் குடும்பமும் எப்படி சந்தோஷமாக இருந்தோம் என்பதையும் அற்புதம்மாள் பகிர்ந்துகொண்டார்.


பேரறிவாளன்: கோப்புப்படம்

“என் மகன் பரோலில் வந்து சரியாக ஓராண்டாகி விட்டது. சொந்தபந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் பார்த்து மகிழ்ச்சியாக இருந்து, திரும்பவும் அவன் சிறைக்கு சென்றபோது எனக்கு வேதனையாக இருந்தது. 60 நாட்கள் போனதே எங்களுக்கு தெரியவில்லை. எல்லோரும் அவனை சந்திக்க தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். ஒரு சிறைவாசியை இப்படி வரவேற்பார்கள் என யாரும் கற்பனை கூட செய்து பார்க்க மாட்டார்கள்.

தலைவர்கள் வந்தாங்க. அவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. அந்த 60 நாட்கள் எங்கள் வீடு கல்யாண வீடு போல் இருந்தது. விருந்து அது, இதுன்னு மகிழ்ச்சியா இருந்தோம். அவ்ளோ மகிழ்ச்சியா எப்படியிருந்துதுன்னு எனக்கு சொல்லத் தெரியல. சிறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடவில்லையென்றால் மறுநாள் தலைவலி, உடல்வலி வரும், ஆனால் இங்கே நேரம் கடந்து செய்தாலும் எனக்கு ஒன்றும் ஆகவில்லைனு அவனே சொன்னான்.

மனம்தானே எல்லாத்துக்கும் காரணம். ஆனால், 60 நாட்கள் 60 நொடியாக போய்விட்டது. அந்த சமயத்தில் அவன் உடனே விடுதலை செய்யப்பட்டு விடுவான் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால், அது இவ்வளவு நாட்கள் ஆகும் என நினைக்கவில்லை” என சொல்கிறார் அற்புதம்மாள்.

தன் மகன் நிச்சயம் இம்முறை விடுதலையாகிவிடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கும் அற்புதம் அம்மாளுக்கு தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசையாக இருக்கிறது.

“அவன் மீண்டும் இங்கே வந்து அனைவருடன் ஒன்று கலந்து வாழ வேண்டும். இயல்பான வாழ்க்கை அமைய வேண்டும். முதலில் வந்தவுடன் அவன் விருப்பப்படி பெண் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். என் குழந்தை அமைதியாக வாழ வேண்டும். நிரந்தரமாக விடுதலையானவுடன் கல்யாணம் செய்யலாம் என்று கூறியிருந்தான். ஏனென்றால், அவசர அவசரமாக திருமணம் செய்திருந்தால் அந்த பெண்ணும் தானே சிறைக்கு அலைய வேண்டும். அதனால்தான் ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுத்தான்” என்கிறார்.

“இதற்கு மேலும் மத்திய அரசு இதனை எதிர்க்கும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆளுநருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும்போது அதனைதான் அவர் பயன்படுத்தப் பார்ப்பாரே தவிர மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பாரா என தெரியவில்லை. நாம் எதிர்மறையாக எதையும் நினைக்க வேண்டாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எல்லோரும் வணங்கிதானே ஆக வேண்டும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

தன் மகன் விடுதலையானாலும் மரண தண்டனை, மனித உரிமைகளுக்கான தனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்கிறார் அற்புதம்மாள்.

“எனது போராட்டம் நிச்சயமாக தொடரும். நம்மால் சும்மா இருக்க முடியாது. இப்போது நடத்தும் போராட்டமே வருங்காலத்தில் யாருக்கும் இப்படி ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தானே. வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காக எந்த அப்பாவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஏதோவொரு நல்லது செய்ததாக இருக்க வேண்டும்” என்கிறார் அற்புதம்மாள்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
முகப்பேரில் திருமண நிகழ்ச்சியில் மோதல்: கத்திக்குத்தில் காயம்பட்ட இளைஞர் 3 நாட்களுக்குப் பின் உயிரிழப்பு: 3 பேர் கைது

Published : 08 Sep 2018 15:58 IST



சித்தரிப்புப்படம்

முகப்பேர், ஜெஜெ நகரில் திருமண விழாவில் சாதாரணமாக ஏற்பட்ட மோதலை மனதில் வைத்து வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (28 ) இவர் தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்த மதனுக்கும் (24 ) ஜெயக்குமாருக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துக்கொண்டனர். அப்போது மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அக்கம் பக்கத்தினர் திட்டி விலக்கி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மதனுக்கு இது கவுரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. இதை விடக்கூடாது, தன்னை தாக்கிய ஜெயக்குமாரை பழிவாங்கவேண்டும் என்று துடித்துள்ளார். அன்று நள்ளிரவில் மதன் தனது நண்பர்கள் கிருஷ்ணன் (24), அமீர் (24) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிலிருந்த ஜெயக்குமாரை வெளியே அழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண வாக்குவாதம் என்று ஜெயக்குமார் சாதாரணமாக பேசிய நிலையில் மதன் தன்னிடம் இருந்த கத்தியால் ஜெயக்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த ஜெயக்குமாரை விட்டுவிட்டு மூவரும் ஓடிவிட்டனர்.

ஜெயக்குமார் கத்தியால் குத்தப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜெஜெ நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் ஆபத்தான நிலையில் ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சையில் இருந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை முயற்சி வழக்கிலிருந்து (307) கொலை வழக்காக (302) போலீஸார் மாற்றினர். கொலை செய்த வழக்கில் மதன், அமீர், கிருஷ்ணன் மூவரையும் கைது செய்தனர்.

உலகிலேயே யார் சுறுசுறுப்பான மக்கள்; உலக சுகாதார நிறுவனம் அறிக்கை: இந்தியாவுக்கு எந்த இடம்?

Published : 08 Sep 2018 17:38 IST





உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது

உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் மக்கள் அதிகம் கொண்ட நாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. 168 நாடுகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் சுறுசுறுப்புத் தன்மை, உடற்பயிற்சி, வேலை, விழித்திருக்கும் தன்மை, காலையில் எழுதல், உள்ளிட்ட விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து தரவரிசையை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. தி லான்சட் என்ற மருத்து இதழில் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலகளவில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டு மக்கள்தான் அதிகம் சுறுசுறுப்பானவர்கள். அங்குள்ள மக்களில் 5.5 சதவீதம் பேர் மட்டுமே போதுமான அளவில் உடற்பயிற்சியில்லாமல், சுறுசுறுப்பில்லாமல் இருக்கிறார்கள்.

கடைசி இடத்தில் வளைகுடா நாடான குவைத் நாட்டு மக்கள்தான் சுறுசுறுப்பற்றவர்கள், சோம்பேறிகள். இந்த நாட்டு மக்களில் 67 சதவீதம் பேர், போதுமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

இதில் இந்தியா 117-வது இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 34 சதவீத மக்களுக்குச் சுறுசுறுப்பு போதுமானதாக இல்லை, சோம்பேறிகளாகவும், உடற்பயிற்சியும், நடைப்பயிற்சி இன்றியும் இருக்கிறார்கள். அதாவது 30 கோடிக்கும் மேலான மக்களுக்குச் சுறுசுறுப்பு போதாது.

குவைத் தவிர்த்து அமெரிக்காவின் தீவுப்பகுதியான அமெரிக்கன் சமோ, சவூதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்குச் சுறுசுறுப்பு போதாது. முறையான உடற்பயிற்சி எடுத்துக்கொள்வதில்லை.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 168 நாடுகளில் 32 சதவீதம் அதாவது 55 நாடுகளைச் சேர்ந்த மக்களில் மூன்று பங்குக்கு மேலானவர்கள் போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை.

168 நாடுகளில் 159 நாடுகளில் உள்ள பெண்களுக்கு போதுமான சுறுசுறுப்பு இல்லை, உடற்பயிற்சி இல்லை, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 168 நாடுகளில் வசிக்கும் மக்களில் நான்கில் ஒருபகுதி மக்கள் நாள்தோறும் போதுமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. இதனால், உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் உருவாகக்கூடும்.

குறிப்பாக இதய நோய், நீரழிவு நோய், உடல்பருமன், மனநிலை பாதிப்பு, வாழ்க்கைத் தரம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

Published : 08 Sep 2018 20:31 IST




சேதமடைந்த 2000 ரூபாய் நோட்டு: கோப்புப்படம்


ரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்துவிட்டால் அல்லது அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா, மாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளில் ஒவ்வொரு வகையான சேதத்துக்கு ஏற்றாற்போல் பணம் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறைகளை வகுத்துள்ளது.

இப்போது வரை ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ. 50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது குறித்த விதிமுறைகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆனால், புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளுக்கு எந்தவிதிமுறையும் இல்லை.

இதன் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ஏதேனும் மை கறை, அழுத்து, மஞ்சள் , ஏதேனும் ஓரத்தில் கிழிந்துவிடுதல் போன்ற சேதங்கள் ஏற்பட்டால், ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களும் ஏற்பதில்லை. வங்கிகளும் ஏற்கயோசித்து வந்தன.

இந்நிலையில் சிறிய வடிவத்தில் மகாத்மா காந்தி சீரிஸில் கொண்டு வந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி புதிய விதிமுறைகள் குறித்து அனுப்பி இருந்தது.. நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த நிலையில் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


2009-ம் ஆண்டு பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி, சிறிய அளவிலும், வடிவத்திலும் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி சீரிஸ் வகை ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரூ.2000 நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ. இதில் 88 சதுரசெ.மீ வரை ரூ.2 ஆயிரம் நோட்டு கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் அதற்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது 44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே அளிக்கப்படும். அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், பணம் வழங்கப்படாது.

அதேபோல ரூ.200 நோட்டுகள் 78 சதுர செமீ வரை இருந்து அதை வங்கியில் அளித்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும், 39 சதுரசெமீ வரை இருந்தால் பாதி பணம் திருப்பி அளிக்கப்படும். அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்படாது. மேலும் ரூ.2000, ரூ.200 நோட்டுகள் சேதம் அடைந்திருக்கும் அளவைப் பொறுத்து பணம் அளிப்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...