Sunday, September 9, 2018

Education

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் டாக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரை அடுத்துள்ளது உத்தனப்பள்ளி என்னும் குக்கிராமம். இங்குள்ள அரசு பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சமீபகாலமாக பெரும் மரியாதையுடன் உச்சரிக்கும் ஒரு பெயர் ‘டாக்டர் சாரு’. யார் அந்த டாக்டர் சாரு? அவருக்கும் இந்த கிராமத்திற்கும் என்ன தொடர்பு என்றால், அங்கு வியப்பே மேலிடுகிறது.

மரியாதைக்குரிய அந்த டாக்டர் சாரின் பெயர் 24வயது நிரம்பிய கலையரசன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளி அடுத்துள்ளகோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டி லட்சுமியம்மாளின் அரவணைப்பில் வளர்ந்தவர். உத்தனப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆரம்ப கல்வியை பயின்ற கலையரசனுக்கு, தினமும் அங்கு கிடைத்த மதிய உணவுமட்டுமே பசியை போக்கியது. ஆனால் கல்வியின் மீதான பசியே அவருக்கு அதிகமாக இருந்தது. தொடக்க கல்வியை முடித்து, அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தவர், பொதுத்தேர்வில் 500க்கு 468 மதிப்பெண்கள் எடுத்தார். அவரது மேல்படிப்பை தொடர அரசுப்பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்களும் உதவிக்கரம் நீட்டினர்.

இதனால் ஓசூரிலுள்ள தனியார் பள்ளியில் மேல்நிலைக்கல்வியை தொடர்ந்த கலையரசன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1166 மதிப்பெண்கள் பெற்றார். கட்ஆப் 198.25 மதிப்பெண்கள் கிடைத்ததால் அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம்கிடைத்தது. திறம்பட படித்து டாக்டரான கலையரசன்,கடந்த மே மாதம் சொந்த ஊருக்கு திரும்பினார். லட்சம் சம்பளத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவமனைகளில் வேலை கிடைத்தும், கலையரசன் எதையும் ஏற்கவில்லை. குக்கிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு அருகிலேயே, கிளினிக் ஒன்றை தொடங்கியவர் ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறார்.

ஓய்வு கிடைக்கும் நேரத்தில், உத்தனப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். சமூக பணிக்கு அவர் துவக்கியுள்ள புதிய அத்தியாயமே அவரை, ஒட்டு மொத்த கிராமத்தையும் ‘‘டாக்டர் சாரு’’ என்று கொண்டாட வைத்திருக்கிறது.

‘‘ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த எனக்கு, எப்படியாவது ஆசிரியராக வேண்டும் என்பதே அதிகபட்ச லட்சியமாக இருந்தது. ஆசிரியர்கள் தான் கல்வி மட்டுமல்ல, மருத்துவமும் இந்த சமூகத்திற்கான அரிய தேவை என்று உணர வைத்தனர். ஓய்வு நேரங்களில், மனதில் கல்வெட்டாய் பதிந்து விட்ட ஆசிரியர் பணியையும் ஆத்மார்த்தமாய் செய்து வருகிறேன்’’ என்று நெகிழ்கிறார் டாக்டர் சார் கலையரசன்.

No comments:

Post a Comment

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps

Diabetes: Doctor says you can manage it, just stop falling for these traps  Diabetes management often feels like a battle due to common life...