Sunday, September 30, 2018

தேசிய செய்திகள்

சபரிமலையில் 18-ந் தேதி முதல் பெண்களுக்கு அனுமதி




சபரிமலையில் 18-ந் தேதி முதல் பெண்களுக்கு அனுமதியளிப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேரள முதல்-மந்திரியுடன் இன்று தேவஸ்தானம் ஆலோசனை நடத்த உள்ளது.

பதிவு: செப்டம்பர் 30, 2018 05:15 AM
திருவனந்தபுரம்,

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ந் தேதி முதல் பெண்கள் அனுமதிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்று முன்தினம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.

இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், ஏ.எம்.கன்வில்கர் ஆகிய 4 பேரும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

ஆனால், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, மத நம்பிக்கைகளில் கோர்ட்டு தலையிட கூடாது என்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். இருந்தபோதிலும், பெரும்பாலான நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இறுதி தீர்ப்பாக அமைந்தது.

இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை கேரள அரசு வரவேற்று உள்ளது. இதுபற்றி கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியதும், அங்கு வரும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டின் பொறுப்பு என்றும் கூறினார்.

தேவஸ்தானம் போர்டு தலைவர் கே.பத்மகுமார் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, சபரிமலையில் கோவிலுக்கு செல்ல பெண்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 22-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் கே.பத்மகுமார் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ந் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இது தொடர்பாக கே.பத்மகுமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசுகிறார். அப்போது, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றியும், அவர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பற்றியும் முதல்-மந்திரியுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...