Wednesday, September 26, 2018

மனைவி மீதான கோபத்தில் வளர்ப்பு நாயைக் கொன்ற கணவன் கைது

Published : 25 Sep 2018 16:12 IST

சென்னை



சித்தரிப்புப் படம்

வேளச்சேரியில் வளர்ப்பு நாயை அடித்துக் கொன்றதாக மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வேளச்சேரி சாரதி நகரில் வசித்து வருபவர் ஜெகன்னாத் (32). இவரது மனைவி செல்வி (32). ஜெகன்னாத் சொந்தமாக டிரை கிளீனிங் கடை நடத்தி வருகிறார். செல்வி தனது வீட்டிலேயே அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

செல்வியும், ஜெகன்னாத்தும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். காதல் வாழ்க்கையில் 5 ஆண்டுகள் பாசிட்டிவாக காட்டிக்கொண்ட ஜெகன்னாத் பின்னர் கடந்த 5 மாதங்களில் தினமும் குடித்துவிட்டு வருவது, மனைவியிடம் சண்டை போடுவது என நேர்மாறாக நடந்துள்ளார்.

செல்வி தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வருகிறார். 5 ஆண்டுகள் காதலித்த மனைவியை ஏற்றுக்கொண்ட அவரால் மனைவி வளர்த்துவரும் நாயை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனைவியுடன் தகராறு ஏற்படுவதற்கு நாயும் ஒரு காரணம் என்று நினைத்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியைக் கொடுமைப்படுத்துவதாக நினைத்து நாய் மேல் எரிந்து விழும் சம்பவமும் அடிக்கடி நடந்து வந்துள்ளது. மனைவி வளர்த்துவரும் நாயைக் கண்டால் ஜெகன்னாத்துக்குப் பிடிக்காது. அதனால் அதை அடிக்கடி அடித்து விரட்டுவாராம். ஆனால் மிருகங்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்துபவை. தனது எஜமானர் செல்வியைப் போலவே 5 மாதத்துக்கு முன் வந்த புது எஜமான் ஜெகன்னாத்தையும் அது ஏற்றுக்கொண்டது. ஆசையுடன் அவரிடம் அடிக்கடி செல்ல, ஜெகன்னாத்தால் செல்லப்பிராணி தாக்கப்படும் சம்பவமும் நடந்துள்ளது.

கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, கடந்த 22-ம் தேதி ஒரு சமபவம் நடந்துள்ளது. செல்வி மேடவாக்கத்தில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதைப் பார்ப்பதற்காக இரவு 8 மணி அளவில் தனது நாயுடன் அந்த வீட்டுக்குச் சென்று திரும்பியுள்ளார். இதில் செல்விக்கும் ஜெகன்னாத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் நள்ளிரவு முழுவதும் தொடர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் செல்வியின் கழுத்தில் துப்பட்டாவால் ஜெகன்னாத் இறுக்கியுள்ளார். அவரிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கணவரை தள்ளிவிட்டு தப்பித்து மயிலாப்பூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்குச் சென்றுள்ளார். காலை 10 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வளர்ப்பு நாய் கணவரால் தாக்கப்பட்டு மூச்சுத்திணறலுடன் கிடந்தது.

இதனால் பதறிப்போன செல்வி நாயைத் தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் சென்று காண்பித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நாய் உயிரிழந்தது. தன் மேல் உள்ள ஆத்திரத்தில் நாயைக் கொன்ற கணவன் ஜெகன்னாத் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீஸார் நாயைக் கொன்ற ஜெகன்னாத்தை கைது செய்தனர்.

அவர் மீது ஐபிசி பிரிவு 428 மற்றும் 429 (மிருகவதை, மிருகங்களைக் கொல்வது) ஆகிய பிரிவு மற்றும் 506(2) ஆயுதத்தை வைத்து கொலை செய்வதாக மிரட்டல், r/w TNHW பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...